தள்ளாடும் திருப்பூர்... டாலர் நகரம் டல்லடிக்கும் கதை!



தமிழகத்தின் சிற்றூர்களில் ஒன்றாக இருந்து இந்தியாவுக்கே அந்நியச் செலாவணியை அள்ளித் தரும் பெரும் நகரமாக உச்சத்துக்குப் போய் கொடிகட்டிப் பறந்தது திருப்பூர். ‘திருப்பதி போனா திருப்பம்’ என்பது பழமொழி. அதுபோலவே, திருப்பூர் போனால் திருப்பம் என்று ஒரு காலத்தில் சொல்வார்கள். கெட்டும் பட்டணம் போகும் பஞ்சப் பிழைப்பு ஏழைகள், திருப்பூருக்கு வெறும் மஞ்சள் பையுடன் போய் இறங்கி, வீடு, மனை, தோப்பு, துரவென எட்டடுக்கு மாளிகை கட்டி ஏற்றம் பெற்ற கதைகள் எல்லாம் திருப்பூரில் சாதாரணம்.

ஆனால், இதெல்லாம் ஒரு காலம் என்று சொன்னால் நம்ப சிரமமாக இருக்கும். இன்று காலங்காலமாக திருப்பூரில் வாழ்ந்துவரும் மண்ணின் மைந்தர்களுக்கே ஒருநாள் பொழப்பு ஓடுவதென்பது அத்தனை சிரமமாக இருக்கிறது. இதை நாம் ஒன்றும் வெறுமனே சொல்லவில்லை. திருப்பூர் பற்றிய புள்ளிவிவரங்கள் நமக்கு அதைத்தான் சொல்கிறது. டாலர் நகரம் டல்லடிக்கத் தொடங்கி வருடங்கள் ஆகிவிட்டன. மத்திய, மாநில அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், வரி விதிப்புகள், தொழில் கொள்கைகள் ஆகியவற்றால் திருப்பூர் நகரம் இன்று நசிந்து கொண்டிருக்கிறது.

பின்னலாடைத் தொழிலில் திருப்பூர் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே முன்னோடியாக இருந்த காலம் ஒன்றிருந்தது. தொண்ணூறுகளில் இந்தியாவுக்கு உலகமயப் பொருளாதாரக் கொள்கைகள் வந்தபோதுகூட அதை எதிர்கொண்டு வெற்றிகரமாக இயங்கியது திருப்பூரின் பின்னலாடைத் தொழில். ஒருபுறம் அப்போது இருந்த கலால் வரி தொல்லைகள் (இன்று அது ஜிஎஸ்டி என்ற பெயரில் தொடரத்தான் செய்கிறது), சாயப்பட்டறை சிக்கல்கள் ஆகியவை எல்லாம் இந்தத் தொழிலையே கபளீகரம் செய்துவிட... இன்றைய தேதிக்கு இங்கு சுமார் 1,200 ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள், 3,000 உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜாப் ஆர்டர் எனப்படும் ஒப்பந்தப் பணி நிறுவனங்கள் உள்ளன.

850 பின்னலாடை நிறுவனங்கள், 400 சாய ஆலைகள், 50 ப்ளீச்சிங் நிறுவனங்கள், 600 ப்ரிண்ட்டிங் நிறுவனங்கள், 400 எம்ப்ராய்டரி நிறுவனங்கள், 750 கம்போடிங் நிறுவனங்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட பின்னலாடை சார்பு நிறுவனங்கள் உட்பட சுமார் 8,350 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான சிறுநிறுவனங்களும் திருப்பூரில் இன்று இயங்குகின்றன.

இவற்றில் இன்று சுமார் ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை செய்துவருகிறார்கள். இன்றும் நாட்டின் மொத்த ரெடிமேட் ஆடை ஏற்றுமதியில் முப்பது சதவீதமும்; டீ சர்ட், பனியன் ஏற்றுமதியில் 46 சதவீதமும் இங்கிருந்துதான் செல்கின்றன. இவற்றின் மூலம் கிடைக்கும் வரி வருவாய் மற்றும் அந்நியச் செலாவணி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டது.

ஏற்கெனவே, குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த பின்னலாடைத் தொழிலை மத்திய அரசின் பண மதிப்பிழப்பும் ஜிஎஸ்டி வரி விதிப்பும் மிக மோசமாக நொறுக்கியிருக்கின்றன. பண மதிப்பிழப்பால் நாட்டுக்கு பெரிய பாதிப்பில்லை என்று இன்றும் ஆளும் தரப்பினர் புளுகிக் கொண்டிருக்கிறார்கள். திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் அது ஏற்படுத்திய ஆழமான பாதிப்புகள் நீண்ட கால அளவில் இன்றும் கடுமையாகத் தொடர்கின்றன.
திருப்பூரின் பலமே சிறுதொழில் நிறுவனங்கள்தான். இவற்றில் மிகப் பெரும்பான்மையானவை முழுதுமே வங்கி நடைமுறையைவிடவும் ரொக்கப் பட்டுவாடா முறையிலேயே தங்கள் வணிக நடவடிக்கைகளைக் கொண்டிருக்கின்றன.

மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு இப்படியான சிறுதொழில் நிறுவனங்களைத்தான் கடுமையாகத் தாக்கியது.
அன்று நிறுவனங்களை விட்டுப் போனவர்களுக்கு சர்வதேச, உள்ளூர் சந்தையில் ஆர்டர்கள் கிடைக்காமல் போனதால் பலரும் இந்தத் தொழிலைவிட்டே வெளியேறினர். இதனால், ஜிடிபி என்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமாகக் குறைந்ததோடு, வரி வருவாய், அந்நியச் செலாவணி வருவாயும் குறைந்துவிட்டது என்கிறார்கள் நிபுணர்கள்.

இன்றும் ஏற்றுமதிக்கான வரிவிகிதங்களால் நமது உற்பத்திப் பொருளுக்குக் கூடுதல் விலை வைக்க நேரிடுகிறது. இதனால், ஏற்கெனவே ஜிஎஸ்டியால் நமது வேலை வாய்ப்புகளை இலங்கை, வங்காளதேசம், எத்தியோப்பியா போன்ற வளரும் நாடுகளுக்கு தாரை வார்த்த நாம், இப்போது மேலும் கணிசமாக இழந்து கொண்டிருக்கிறோம்.வலுவான சீனப் பொருளாதாரம் பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் ஆதரவாக இருக்கிறது.

இன்று பங்களாதேஷ் எல்லாவகையிலும் திருப்பூருக்குக் கடும் சவாலாக மாறியிருக்கிறது. அவர்களோடு போட்டியிட்டு தொழில் செய்வதென்பது நம் திருப்பூர் மக்களுக்கு இயலாததாக இருக்கிறது. இதன் ஒரே காரணம் நம் அரசின் வரி உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைகளும், தொழில் கொள்கைகளும்தான்.

பின்னலாடையின் முக்கிய சந்தை ஐரோப்பாவும் அமெரிக்காவும். இந்தக்  கண்டங்களுக்கு  இப்போது இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகள் பெருமளவு ஏற்றுமதி செய்கின்றன. இதற்காக தத்தம் நாட்டு அரசுகளிடம் சிறப்புச் சலுகைகளைப் பெற்றுள்ளன. அந்தந்த நாட்டு அரசும் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகளை வழங்கி ஊக்குவித்துவருகிறது.

ஆனால், நம் இந்திய அரசு..? ஏற்றுமதிக்கு என்று வழங்கப்பட்டு வந்த நான்கு சதவீத ஊக்கத் தொகையையும் சமீபத்தில் தள்ளுபடி செய்துவிட்டது. விளைவு... இப்போது, பின்னலாடைத் தொழிலாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். முன் தேதியிட்டே இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இதனால், சுமார் ஆயிரத்து முந்நூறு கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி ஊக்கத் தொகை நிலுவையில் இருப்பதாக திருப்பூர் தொழில் முனைவோர் தெரிவிக்கிறார்கள்.

திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி கடந்த 2016 - 17ல் இருபத்தாறாயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது 2017 - 18ல் இருபத்தி நான்காயிரம் கோடி ரூபாயாகக் குறைந்து இந்த ஆண்டு மேலும் சரிந்திருக்கிறது என்கிறார்கள். இப்படி நாளுக்கு நாள் திருப்பூரின் ஏற்றுமதி குறைந்து கொண்டே இருக்கும் நிலையில், ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண்டிய அரசு, கொடுத்துக் கொண்டிருந்த உதவித்தொகையையும் பறித்திருப்பது அநீதி என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

இப்போதே திருப்பூரில் இயங்கி வந்த பல பெரிய நிறுவனங்கள் தங்கள் தொழிலை இலங்கை, பங்களாதேஷ், கம்போடியா ஆகிய நாடுகளுக்கு மாற்றிவிட்டன. இனிவரும் காலங்களிலும் மத்திய அரசு இதேபோன்று பாராமுகம் காட்டினால் எஞ்சிய தொழில் முனைவோரும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த திருப்பூரும் நலிவடைந்துவிடும் என மக்கள் அஞ்சுகிறார்கள்.

இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. சமீபத்தில் தமிழக முதல்வர் காவிரி டெல்டாவைப் பாதுகாக்க வேளாண் சிறப்பு மண்டலம் ஒன்றை அமைக்க முடிவு செய்திருப்பதைப் போல எதிர்காலத் தலைமுறைக்கு இந்தப் பின்னலாடைத் தொழிலை உறுதி செய்வதற்கு பின்னலாடை சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றையும் தொடங்க வேண்டும் என்கிறார்கள்.

ஆனால், ஏற்கெனவே இப்படிச் செயல்படும் மண்டலங்கள் பெரிய அளவில் பங்காற்றவில்லை என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.
எனவே, வரிச்சலுகையைக் குறைப்பது உட்பட அனைத்து அடிப்படை கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதே பின்னலாடைத் தொழிலைக் கரையேற்ற உதவும்.

இளங்கோ கிருஷ்ணன்