வெடித்துச் சிதறப்போகிறது திருவாதிரை நட்சத்திரம்...



இனி அந்த நட்சத்திரக்காரர்கள் என்ன செய்வார்கள்..?

Orion constellation

இந்தியக் ஜோதிடக் குறிப்புகளில் முக்கிய நட்சத்திரமாக கருதப்படும் திருவாதிரை நட்சத்திரம், விரைவில் வெடித்துச் சிதறப் போகிறது என்ற தகவல்தான் இப்போது ஹாட்டாக்.ஆம். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் திருவாதிரை நட்சத்திரம் குறித்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் விண்வெளி ஆய்வாளர் சரஃபினா நான்ஸ், “திருவாதிரை தனது வழக்கமான பிரகாசத்திலிருந்து 36% குறைந்துள்ளதாக...” குறிப்பிட்டுள்ளார்.

அப்படி திருவாதிரை வெடித்துச் சிதறினால், பூமிக்கும், ஜோதிட ரீதியாக அந்த நட்சத்திரத்தைக் கொண்டவர்களுக்கும் என்ன ஆகும்... என்ற கேள்விகளோடு ‘நியூட்டன் அறிவியல் மன்ற’த்தின் இயக்குநர் பி.இளங்கோ சுப்பிரமணியனை சந்தித்தோம்.‘‘இதுகுறித்து இப்போது மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருவாதிரை வெடித்துச் சிதறும். அறிவியலில் இப்படி நட்சத்திரம் வெடித்துச் சிதறுவதை சூப்பர் நோவா என்பார்கள்.

உண்மையில் ஒவ்வொரு நட்சத்திரமும் நம் பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். இதுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கக் கூடியது. தமிழர் மரபில் ஆறாவது நட்சத்திரமான திருவாதிரை, மிதுன ராசியில் வரும். மேற்கத்திய நாடுகளில் இந்த நட்சத்திரத்தை கடகத்தில் சேர்ப்பார்கள். வானியல் படி திருவாதிரை Orion constellationஇல் வருகிறது.

கோள வடிவில் (celestial sphere) உள்ள ஒட்டுமொத்த வானத்தில் 88 நட்சத்திர மண்டலங்கள் (constellations) இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன...’’ என்று கூறும் இளங்கோ, ‘திருவாதிரை நட்சத்திரத்தை மனிதனால் வெறுங்கண்ணால் பார்க்க முடியும்’ என்கிறார். ‘‘Orion என்பது கிரேக்க புராணத்தில் வரும் வேட்டைக்காரன். அந்த நட்சத்திரத்தைப் பார்த்தால் இந்தத் தோரணையில் இருக்கும். இதேபோல் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் அதன் வடிவத்தை வைத்து மக்கள் வகைப்படுத்தியுள்ளனர்.    

பூமிக்கும் திருவாதிரைக்கும் உள்ள தொலைவு ஒவ்வொரு ஆண்டும் நட்சத்திரங்களை அளப்பார்கள். ஏனெனில் ஆண்டுதோறும் அதன் அளவு மாறிக்கொண்டே இருக்கிறது. அளக்கும் கருவியும் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் துல்லியமாகியபடியே வருகிறது.பொதுவாக இந்த அளவீடு இரு வகைகளில் நடைபெறுகிறது. ஒன்று பூமியின் உயரமான பகுதியிலிருந்து நடப்பது; மற்றொன்று ஸ்பேஸ் டெலஸ்கோப் (space telescope) வழியே அளப்பது. இது நகர்விலேயே இருக்கும்.

ESA (European Space Agency) ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் ஆராய்ந்ததில் 724 ஒளியாண்டு என்று முடிவுக்கு வந்துள்ளது. அதாவது 613 ஒளியாண்டு முதல் 881 ஒளியாண்டு வரையிலான ரேஞ்சில் 724 ஒளியாண்டு என்று வரையறுத்துள்ளனர்.

ஒளியாண்டு

ஓர் ஒளிஆண்டு என்பது 9.5 X 1012 கிலோமீட்டர். அதாவது, 9.5 டிரில்லியன் கிலோமீட்டர்.
ஒளியானது ஒரு வருடத்தில் எவ்வளவு தூரம் போகும் என்பதை பார்க்கும் முன் ஒரு நொடிக்கு எவ்வளவு தூரம் போகும் என்பதை ஆராய வேண்டும்.
ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 3 லட்சம் கிமீ. ஒரு நிமிடத்தில் செல்லும் தூரம் ஒரு கோடியே 80 லட்சம் கிமீ. ஒரு மணி நேரத்தில் செல்லும் தூரம் 108 கோடி கிமீ.

இந்த அடிப்படையில் திருவாதிரை நட்சத்திரத்தின் ஒளி நம்மை வந்தடைய எவ்வளவு காலம் ஆகும்? கற்பனையே செய்ய முடியாது. தோராயமாக இங்கு வந்தடைய 724 ஒளி ஆண்டுகள் ஆகும்.

மங்கிய ஒளி

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் மனிதர்களைப் போலவே பிறப்பு - இறப்பு உண்டு. மனிதனுக்கு எவ்வாறு டார்வின் சொன்ன பரிணாமம் (evolution) இருக்கிறதோ அப்படி நட்சத்திரங்களுக்கு Stellar evolution உண்டு. ஆரம்பம், வளர்ச்சி, உச்சம், சரிவு என்பது நட்சத்திரங்கள் உட்பட எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

ஒளி மங்குவது ஒவ்வொரு நட்சத்திரத்தின் நிறையைப் பொறுத்து மாறும். ஒரு நட்சத்திரம் தன் இறுதிக் காலத்துக்கு வருவதை - அதன் நிறையைப் பொறுத்து - வெள்ளை குள்ளன், நியூட்ரான் ஸ்டார், சிவப்பு ராட்சஷன், கருந்துளை… என வகைப்படுத்தியுள்ளனர். சூரியனின் நிறை = 2 X 1030 கிலோகிராம். இதைக் கொண்டு பார்க்கும்போது, சூரியன் வெள்ளை குள்ளனாக மாற வாய்ப்பிருக்கிறது.

சுருங்கி விரியும் தன்மையுடைய திருவாதிரையின் ஆரம், சூரியனுடைய ஆரத்தைப் போல 550 முதல் 920 மடங்கு பெரியது. போலவே சூரியனின் நிறையை விட திருவாதிரை 20 மடங்கு அதிகமாக இருப்பதால், நியூட்ரான் ஸ்டாராக மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

வெடிப்பு நடக்குமானால், திருவாதிரை நட்சத்திரம் பலகோடி சூரியன்களின் ஆற்றலை வெளிப்படுத்தும். நிலவின் அளவுக்கு வானத்தில் இந்த விண்மீன் பெரிதாவதை பூமியில் இருந்து வெறும் கண்ணால் பார்க்கலாம் என்பது மட்டுமல்ல, அதனைப் பகலில் கூட காணலாம்.

சூப்பர் நோவா எனப்படும் இந்த வெடிப்பு நிகழ்வு மூன்று கட்டங்களில் நடக்கும். இது ஒருவேளை 50 ஒளியாண்டு தூரத்தில் நடக்குமானால், பூமியில் உயிர்கள் அழியும். ஆனால், 724 ஒளியாண்டு தூரத்தில் திருவாதிரை வெடித்துச் சிதறும் என்பதால் புவிக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது.
திருவாதிரை நட்சத்திரம் என்பது M type வகையைச் சேர்ந்த சிவப்பு ராட்சஷன் (Red giant super). இது கரும் புள்ளியாக மாறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

கடந்த ஓராண்டாக திருவாதிரை மங்கி வருகிறது என்றால் அது வீங்கிப் பெருத்து வருகிறது என்று பொருள். குறிப்பிட்ட அளவுக்கு மேல் பெரிதாக இது வீங்கிப் பெருக்கும்போது, இதன் புறப்பரப்பு, உட்கருவின் ஈர்ப்பு விசைக்கு அடங்காமல் போய் உடைந்து சிதறும். இது நிகழ எப்படியும் குறைந்தது பல்லாயிரம் ஆண்டுகள் ஆகலாம்...’’ என்று சொல்லும் இளங்கோ, இப்போது இது ஹாட் டாப்பிக்காக இருப்பதற்கான காரணத்தையும் விளக்கினார்.
‘‘பூமத்திய ரேகை பகுதியில் திருவாதிரை வருகிறது. இதனால் உலகம் முழுவதும் இந்த நட்சத்திரத்தைப் பார்க்கலாம். சமூக வலைத்தளங்கள் பெருகி இருப்பதால் திருவாதிரையைப் பார்த்தவர்கள், ஃபேஸ்புக், டுவிட்டரில் அதைப் பகிர்கிறார்கள்.

2015ம் ஆண்டிலிருந்து அதன் ஒளி மங்கி வருகிறது. எதனால் என்பது ஆராய்ச்சிக்குப் பிறகே தெரியும். வானத்தை ஆராயாமல் வாழ்க்கை கிடையாது. கண்டுபிடிப்பு என்பது தேவையில் இருந்து பிறக்கிறது. மிருகங்களோடு வாழ்ந்து வந்தவன், நிலைத்த குடியிருப்புக்கு வருகிறான். அதுவரை நாடோடியாகவும், மிருகம் போலும் திரிந்தவன், ஓர் இடத்தில் தங்கி இருப்பதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு உணவு உபரியாக இருக்க வேண்டும்.

எல்லா நேரத்திலும் உணவு கிடைக்க வேண்டும். அப்போது வானியல் தெரிந்தால்தான் எப்போது மழை பெய்யும், வெயில் அடிக்கும், வெள்ளம் வரும் என்பதைத் தெரிந்து அதற்கேற்ப உற்பத்தியில் ஈடுபட முடியும். எனவே, வானத்தைப் படித்தான். அதுவும் வெறும் கண்ணால் இரவில் பார்த்து ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்தான்.

பூமி முழுக்க எப்படி 27 நட்சத்திரங்களை வைத்துள்ளனர். பூமி சூரியனைச் சுற்றி வரக்கூடிய அந்தப் பாதையில் (ஆர்பிட்) இருக்கக் கூடிய நட்சத்திரங்கள்தான் இவை. கோடானு கோடி நட்சத்திரங்கள் இருக்கையில், 27ஐக் கண்டுபிடித்து, 12 ராசியாகப் போட்டான். டாலமி 48 நட்சத்திரங்களைக் கண்டுபிடித்தார். இன்று அறிவியல் வளர்ச்சியில் 88 மண்டலங்களாக உள்ளது. காலம் தோறும் இந்த அறிவு முன்னேறிக்கொண்டே போகிறது.  

அந்தந்த காலம் பற்றிய அறிவு, அறிவியல் வளர்ச்சி அடிப்படையில் பிரபஞ்சம் பற்றிய புரிதல் நமக்கு இருக்கிறது. அன்றைக்கு சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு விஞ்ஞானி. இன்று அறிவியல் படித்தவன் - படிக்காதவன் என்று பிரிவுகள் உள்ளன. 10ம் வகுப்பு வரை கணிதம், இயற்பியல் கட்டாயம் படிக்க வேண்டும்.

11ம் வகுப்பில் இது மாறும் போது வாழ்க்கை முழுதும் அறிவியலிலிருந்து துண்டிக்கப்படுகிறான். மனிதனின் வானியல் அறிவு தொன்மையானது. இன்றும் அதில் பல விஷயங்கள் சரியாக இருக்கின்றன. வானை நாம் கவனித்தால் பல அற்புதங்களை உணரலாம்...’’ என்கிறார் இளங்கோ. l

அன்னம் அரசு