நான்...அந்தோணி தாசன்



வறுமை வழிநடத்தின வாழ்க்கையிலே நேர்மையும், உண்மையும் தவறாம இப்போ வரை வாழ்ந்துட்டு இருக்கேன். அதன் பலனாதான் சினிமாவில் பாடகரா அறிமுகமாகி இப்ப சசிகுமார் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கேன். பல நட்புகள் ஒண்ணு சேர்ந்து என்னை மேலே கூட்டிக்கிட்டு போறாக.

எனக்கு பாட்ஷா பாய் மாதிரி ஃபோர்க் மார்லின்னு இன்னொரு பெயரும் இருக்கு. பிறந்தது வளர்ந்தது எல்லாம் ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடி பக்கத்துல வடக்கு கீரனுர் கிராமத்துல. அப்பா ஞானமுத்து, நாதஸ்வரக் கலைஞர். அம்மா இந்திரா பிறந்தது மானாமதுரை கேப்பனூர்ல.

1977ல் பிறந்தேன். அப்பா கலைஞர் என்கிறதால தஞ்சாவூர் ரெட்டிப்பாளையத்திலேதான் பிழைப்புக்கு குடியேறினோம். அப்பா வழியிலேயே இசை என்னையும் தத்தெடுத்துக்கிச்சு. ஏழெட்டு வயசிருக்கும். வீட்டு வாசல்ல இருந்த சர்ச்சுல சண்டே க்ளாஸ். அப்ப சினிமா பாட்டுகளை ஏசப்பா பாட்டா மாத்தி பாடிகிட்டு இருந்தேன். 10 வயசிருக்கும்போது நாட்டுப்புறக் கலைகள் என்னை ஏத்துக்கிடுச்சு.
 
ஆறாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். அப்பா வருமானம் பத்தாம இன்னொரு வருமானம் தேவைப்பட்டிச்சு. நான் அரிதாரம் பூசிக்கிட்டு கிளம்ப ஆரம்பிச்சேன். அப்பா நாதவஸ்ரம்னா நான் ஸ்ருதி பெட்டி, தாளம் போடன்னு கிளம்பினேன். தென் மாவட்டம் முழுக்க போகாத திருவிழாக்கள் கிடையாது. இந்த பபூன் வேஷம்னு சொல்வாங்களே... அதுதான் முதல்ல போட ஆரம்பிச்சேன்.

பத்து வயசப்போ வேலைக்குச் சேர்ந்தேன். அக்கா படிப்பு, வீட்டுச்செலவு எல்லாம் நான் பொறுப்பெடுத்து பார்க்க வேண்டியதா இருந்துச்சு. அப்பா, அம்மா ரெண்டு பேருமே உடல்நிலை சரியில்லாம போனாங்க. மொத்தமா குடும்பப் பொறுப்பை ஏத்துக்கிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா
பபூன் நடிப்பிலே இருந்து குறவன், குறத்தி ஆட்டம் ஆடற அளவுக்கு முன்னேறினேன். கிட்டத்தட்ட ஹீரோ, ஹீரோயின் மாதிரி.
அதிலே எனக்கு ஹீரோயினா கூட ஆடின பொண்ணுதான் ரீதா. வேலை நிமித்தமா சேர்ந்தே இருக்க வேண்டிய கட்டாயம். அப்படியே நட்பு காதலாச்சு, கல்யாணமும் ஆச்சு.

ரொம்பச் சின்ன வயசிலே திருமணம் செய்துகிட்டோம். அருமையான மனைவி. திருமணம் ஆகும்போது எனக்கு 16 வயசு, அவங்களுக்கு 15 வயசு. எனக்கு மூணு பிள்ளைகள். ஒரு பையன் - லெனின். ரெண்டு பொண்ணுங்க - ஜான்சி, தெரசா. பையனையும் கட்டிக் கொடுத்தாச்சு. ஆமா, எனக்கு மருமகளே வந்துட்டாங்க! என் பொண்ணையும் கட்டிக் கொடுத்தாச்சு. மூணாவது பொண்ணு கல்லூரி யிலே படிச்சுக்கிட்டு இருக்கு. சீக்கிரம் மகன் வயித்து பேரனோ பேத்தியோ பார்க்கப் போறேன். சொந்த வாழ்க்கை இதுதான். கட்டுச் செட்டான குடும்பம். எங்கே போனாலும் வேலை உண்டு நான் உண்டுன்னு இருந்துக்கறது.

குறவன் குறத்தி ஆட்டம் கல்யாணம் வரைக்கும் வந்துச்சு, அடுத்து திருவிழாக்கள்ல மறைந்த தலைவர்கள் பத்தி பாடச் சொன்னாக. சர்ச்கள்ல பாடின அனுபவம் கை கொடுத்துச்சு. நாட்டுப்புறப் பாடல்கள் மெட்டுல தலைவர்கள், திருவிழாவுக்குப் போகிற ஊர்கள் பத்தி பாடத் துவங்கினேன்.
அப்பதான் ஏன் நாம பாட்டெழுதிப் பாடக் கூடாதுன்னு தோணுச்சு. 18 வயசுல ‘ஆத்தோர அஞ்சலையே’னு முதல் ஆல்பம் வெளியிட்டேன். அதுல இடம்பெற்ற ‘ஓடக்கரை ஓரத்திலே…’ பாட்டு செம ஹிட்டாச்சு. ஆனாலும் கரகாட்டக் கலைஞர் என்கிறதால மேடைக் கச்சேரிகளுக்கு பெருசா கூப்பிட மாட்டாக. சினிமா வாய்ப்புகளும் கிடைக்காது.

சின்னப்பொண்ணு அக்காவும், அவுக வீட்டுக்காரரும் நமக்கு தூரத்துச் சொந்தம். அவக மூலமா சில கச்சேரிகள் கிடைச்சது. அங்கேதான் கருணாஸ் அண்ணன் பழக்கம் கிடைச்சு தொடர்ந்து ஒரு வருஷம் கருணாஸ் அண்ணன் கிட்ட சான்ஸ் கேட்டு பேசிக்கிட்டே இருந்தேன். ‘திண்டுக்கல் சாரதி’ படத்திலே எனக்கும் என் மனைவிக்கும் சேர்த்து ஒரு வாய்ப்புக் கிடைச்சது.

அப்படியே ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியிலே வாய்ப்பு. சினிமா வாய்ப்பு தேடி அலைந்த மாதிரியே இண்டிபெண்டன்ட் மியூசிக் செய்யவும் முயற்சி செய்யத் துவங்கினேன். ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியிலே டிரம்ஸ் வாசிச்சுட்டு இருந்தவர்தான் தர்புகா சிவா. அவருடைய நட்பு கிடைச்சது. அடுத்தடுத்து மியூசிக் பேண்ட் மூலமா மியூசிக் செய்தோம், ‘அந்தோணியின் பார்ட்டி’னு ஒரு மியூசிக் குரூப் ஆரம்பிச்சேன். ‘திண்டுக்கல் சாரதி’ படத்துக்குப் பிறகு நாலு வருஷம் கழிச்சு ‘சூது கவ்வும்’ படத்துல ‘காசு பணம் துட்டு மணி மணி...’ பாட்டு கிடைச்சது. இடைப்பட்ட காலத்துல தர்புகா சிவா, சந்தோஷ் நாராயணன் அண்ணன் எல்லாம் ஒரே குழுவா வேலை செய்து பழக்கம் ஆனதால கிடைச்ச சான்ஸ் இது. அப்புறம்தான் கொஞ்சம் வாழ்க்கை மேலே ஏற ஆரம்பிச்சது.

வறுமை என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுச்சுன்னுதான் சொல்லணும். நிறைய போராட்டங்கள், நிறைய சவால்கள். ‘திண்டுக்கல் சாரதி’ பட பாட்டு கருணாஸ் அண்ணண் பாடினதாவே எல்லாரும் நினைச்சாங்க. அதனாலேயே வாய்ப்புகள் கதவைத் தட்டலை. ‘சூது கவ்வும்’ என் முகத்தைத் தெரிய வெச்சது. ‘வருத்தப் படாத வாலிபர் சங்கம்’ படத்திலே சிவகார்த்திகேயன் கூட சேர்ந்து பாடினேன்.

இதுக்கு அப்புறம் சசிகுமார் அண்ணனுடைய ‘கிடாரி’ படத்திலே ‘வண்டியிலே நெல்லு வரும்...’ பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் நம்ம குரல் பரவிச்சு. தம்பி அனிருத், ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துல ‘சொடக்கு மேல...’ பாட்டு கொடுத்து அப்படியே ‘பேட்ட’ல பாட வைச்சு நம்மை உசரத்துல தூக்கி விட்டது.

அடுத்தடுத்து மலையாளத்திலே ரெண்டு பாடல்கள், கன்னடத்திலே சிவராஜ் சாருடைய ‘டகரு’ படத்திலே ஒரு பாடல்னு தமிழ் தாண்டியும் என் குரல் ஒலிக்க ஆரம்பிச்சது. சினிமாவிலே ஐம்பதுக்கும் மேல பாடல்கள் பாடியாச்சு. தெலுங்கு பக்கமும் கால் பதிச்சேன். தனுஷ் சார் நடிச்ச ‘பக்கிரி’ படம் மூலம் ஆங்கிலப் படத்திலேயும் கால் பதிச்சேன். அந்தப் பட இசையமைப்பாளர் அமித் திரிவேதி சார், இந்தியிலேயும் ஒரு பாட்டு கொடுத்திருக்கார்.
எழுதப் படிக்கத் தெரியாது. ஆனா, என் குரல் எல்லா மொழிகள்லயும் கேட்கணும்னு ரொம்ப ஆசை.

ஜேம்ஸ் ஐயா கிட்ட முறைப்படி ஆட்டம் கத்துக்கிட்டு இருந்த வேளை... பக்கத்துத் தெருவிலே ஒரு கேதம். அங்கே ஆடுறதுக்கு சம்பளம் பேசிட்டு வந்தாங்க. என்னுடைய முதல் சம்பளம் 15 ரூபா. என்னையும் இன்னொரு பொண்ணையும் சேர்த்து ஒப்பந்தம் செய்தாங்க. ரெண்டு பேருக்கும் சேர்த்து 30ரூபா சம்பளம்.  

அதே நேரம் பள்ளிக்கூடத்திலே படிச்சுட்டு இருந்த என் அக்கா ஆளாகிடுச்சு. நான் வாங்கிட்டு வந்த அந்தக் காசை வெச்சுத்தான் எங்க அம்மா என் அக்காவுக்கு ஆளான முறைகள் எல்லாம் செய்தாங்க. அன்னைக்கு குடும்பப் பொறுப்பு கைக்கு வந்தது. அம்மா சித்தாள் வேலை செய்தாங்க.
அன்றாடங்காச்சி நாங்க. அக்கா பெயர் அருள்மேரி. சென்னையிலேதான் கட்டிக் கொடுத்திருக்கோம்.

ரீதா என் மனைவி… மிகப்பெரிய ஆட்டக்காரர் கொளத்தூர் கலியன் மகள். திருச்சி, பெரம்பலூர் பக்கம் ரொம்ப ஃபேமஸ். அவருடைய மூணு மகள்கள்ல கடைசி மகதான் ரீதா. என் மாமனார் நினைச்சிருந்தா எனக்கு பொண்ணு கொடுக்காம போயிருக்கலாம். ஆனா, என்னை நம்பினார். என் மனைவி மாதிரி ஒரு தைரியசாலிய பார்க்கவே முடியாது. நான் கூட சில இடங்களிலே தயங்குவேன். அவுக கொடுத்த தைரியம்தான் இன்னைக்கு நான் ஒரு மனுஷனா நிக்கிறேன்.

ஆனாலும் அவுகளும் ஒரு கலைஞர் என்கிற வகையிலே வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்கோமேன்னு நினைப்பாக, அதைக் கூடுமான அளவு குறைக்க முயற்சி செய்துட்டு இருக்கேன். ‘கிடாரி’ல சசிகுமார் அண்ணனோட ஏற்பட்ட பழக்கம் இப்ப அவர் நடிக்கிற ‘எம்ஜிஆர் மகன்’ படத்துக்கு இசை அமைக்கும் அளவுக்கு கொண்டு வந்திருக்கு.

சினிமாவுல முதல் சினிமா வாய்ப்பு ‘மகளிர்க்காக’. அந்தப் படத்திலே கோவை சரளாவுக்குத் தம்பியா வந்திருப்பேன். அடுத்துதான் ‘திண்டுக்கல் சாரதி’.
இப்போ நானும் என் நண்பர்களும் இணைஞ்சு ஒரு படம் செய்துட்டு இருக்கோம். ஆமா தயாரிப்பு. சின்னப் படம். முழுக்க குழந்தைகள் நடிக்கற படம்.200க்கும் மேலான என் பாடல்கள் வெளியாக ரெடியா இருக்கு. அதிலே 25 பாடல்கள் சோனிக்கு செய்திருக்கேன்.

வேலை... வேலை... இதைத் தாண்டி எதையும் யோசிச்சதில்லை. மக்களை சந்தோஷப் படுத்தற கலைக்கு எவ்வளவு நேர்மையா இருக்கணுமோ அந்தளவு நேர்மையா இப்ப வரைக்கும் இருக்கேன். என்னைய மாதிரி நிறைய இளைஞர்களுக்கு இசை சொல்லிக் கொடுத்துட்டும் இருக்கேன். நிறைய பழங்கால இசைக்கருவிகளையும் தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்து அதையும் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கோம்.

உண்மையா உழைச்சா அதற்கான பலன் நிச்சயம் உண்டு. தாமதமானாலும் பலன் தேடி வரும். என் வாழ்க்கை வழியா இதைத்தான் கத்துக்கிட்டேன்.  

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள் : ஆ.வின்சென்ட் பால்