நேற்றைய கனவுக் கன்னிகள் இன்று...



தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் ஹோம்லியாக, மாடர்னாக கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள்; கோலோச்சியிருக்கிறார்கள்; ட்ரீம் கேர்ள்ஸ் லிஸ்ட்டில் சிறகடித்திருக்கிறார்கள். எல்லாமே ஒரு டாப் அப் காலம்தான். அதன்பின், சட்டென ஸ்கிரீனில் இருந்து மிஸ் ஆகி, ‘மிஸஸ்’ களாகி விடுவார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

விவரம் அறிய தொடர்பு கொண்டாலோ தேடினாலோ கிடைக்கும் பதில், நாட் ரீச்சபிள்தான்.  அந்த வகையில் கோலிவுட்டில் சில ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர்கள் சிலர் இங்கே ‘ஆல் இஸ் வெல்’ என்கிறார்கள் செம கூலாக! செம ஃப்ரெஷ்ஷாக!

ரீமா சென்

‘மின்னலே’, ‘தூள்’, ‘பகவதி’யில் இருந்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ வரை க்ளாமர் ஹீரோயினாக அசத்தியவர் இவர். மும்பை நடிகைகளில் தமிழில் பல டஜன் கணக்கில் நடித்து விட்டுப் போனாலும் இன்னமும் தமிழைக் கற்றுக்கொள்ளாத நடிகைகளில் ரீமாவுக்கும் தனி இடம் உண்டு. இங்கே மார்க்கெட்டில் இருக்கும்போதே, அதாவது 2012லேயே மும்பை தொழிலபதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கும் முழுக்கு போட்டார்.

கணவர் ஷிவ் கரன்சிங், கார்மென்ட் பிசினஸில் கொடிகட்டிப் பறக்கிறார். வெற்றிகரமாக எட்டாவது திருமண ஆண்டை கொண்டாடும் ரீமாவுக்கு ருத்ரவீர் சிங் என்ற மகன் இருக்கிறார். ருத்ரவீர், இப்போது ஸ்கூல் படிக்கிறார். பொறுப்பான ஹோம் மேக்கராக மாறிவிட்ட ரீமாவின் லன்ச் டேட்களில் மாளவிகாவும் இடம் பெறுகிறார்.

காம்னா

ஜெயம் ரவி நடித்த ‘இதயத் திருடன்’ ஹீரோயின். மும்பை வாலா. மில்கி ஸ்கின்னும், ஹர்லிங் ஹேர் ஸ்டைலுமாக சிலுசிலுத்தவர். தமிழில் அறிமுகமானபின், டோலிவுட், சாண்டல்வுட்டுக்கு தாவினார். அங்கிருந்து சில வருட இடைவெளிக்குப் பின் ‘மச்சக்காரன்’ தமிழுக்கு அழைத்து வந்தான். லாரன்ஸுடன் ‘ராஜாதி ராஜா’, ‘காசேதான் கடவுளடா’ என தடதடத்தார்.

2015ல் கன்னடத்தில் படம் பண்ணும்போதே, சுராஜ் நக்பாலை கைப்பிடித்தார். இப்போது பெங்களூருவில் வசித்து வரும் காம்னா, இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மா. இல்லத்தரசியான பின்னரும், இப்போதுள்ள நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் ஃபிட்னஸில் கலக்குகிறார். ‘‘என்னோட மகள்களைக் கவனிக்க வேண்டியிருந்ததால், நடிப்புக்கு பிரேக் விட்டேன். அவங்களுக்கு கேரியர் தொடங்கும்போது, நான் சினிமாவுக்கு மறுபடியும் வருவேன்...’’ என கலகலக்கிறார்.

மாளவிகா

அஜித்தின் ‘உன்னைத் தேடி’யில் அறிமுகமான பெங்களூர் சிட்டு. இவரது ரியல் நேம், ஷ்வேதா கொன்னூர் மேனன். சேரனின் ‘வெற்றிக்கொடி கட்டு’வில் ‘கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு...’ பாடலில் ஓவர் ரீச் ஆனார். தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் மாளவிகாவின் ஆட்டமும் பாட்டும் தெறித்தன. ‘திருட்டுப் பயலே’வில் இன்னும் கிக் ஏற்றினார். ‘மாயக்கண்ணாடி’, ‘குருவி’ என மாளவிகா, கெஸ்ட் அப்பியரன்ஸில் அசத்தின படங்களே அதிகம்.

அதன்பிறகு மும்பை தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்து அங்கேயே செட்டில் ஆனார். இப்போது பையன் ஒண்ணு, பொண்ணு ஒண்ணு என இரண்டு அழகான குழந்தைகளுக்கு அம்மாவாக புன்னகைக்கிறார். மும்பையில் அவரது தோழிகளில் ரீமாசென்னும் ஒருவர். அங்கே சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் ரீமாவை மீட் செய்து, கோலிவுட் ஞாபகங்களில் கரைகிறார் மாளவிகா.

ரியா சென்

பாரதிராஜா - மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மானின் காம்பினேஷனில் உருவான ‘தாஜ்மஹாலி’ல் அறிமுகமான பெங்காலி பேபி. இவரது முன்னோர்கள் ஜெய்ப்பூர் மகராணி வம்சத்தினர்கள் என்றாலும், ரியாவின் அம்மா மூன்மூன் சென், (‘12பி’யில் ஜோதிகாவின் அம்மாவாக நடித்தவர்) பாலிவுட்டில் கலக்கியவர்.

இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரியாவை, தமிழுக்கு அழைத்து வந்தவர் இமயம்தான். இவரது ஒரிஜினல் பெயரான தேவ் வர்மாவை, ரியா ஆக்கியவரும் இமயம்தான். ‘தாஜ்மஹா’லுக்குப் பிறகு பாலிவுட், பெங்காலி என பிசியானார். அதன்பிறகு பெரிய இடைவெளிக்குப் பின் ரியாவை இங்கே அழைத்து வந்தவர் அர்ஜுன்.  

இப்போது வெப்சீரீஸ் பக்கம் கவனம் செலுத்தும் ரியா, அங்கே டாப்லெஸ் ரேஞ்சில் ஜொலிக்கிறார். ‘ராகினி எம்.எம்.எஸ். ரிட்டர்ன்’, ‘பாய்சன்’, ‘மிஸ்மேட்ச் 2’, ‘பட்னி பட்னி அவுர் ஓஹ்’ என ஏராளமான வெப்சீரீஸில் க்ளாமர் டாலாக ‘டால்’ அடிக்கிறார் ரியா.

அசின்

இவரை நினைத்தாலே அவரது துறுதுறு முகம் சட்டென நம்முன் வந்து போகும். ‘எம்.குமரன்’, ‘போக்கிரி’, ‘கஜினி’, ‘காவலன்’ என டாப் கியரில் பரபரத்தவர், அதே ஸ்பீடில் பாலிவுட் போனார். அங்கே அக்‌ஷய்குமாரின் நண்பரான தொழிலதிபர் ராகுல் சர்மாவை கரம் பிடித்தார். மைக்ரோமேக்ஸ் மொபைல் கம்பெனியின் சிஇஓ அவர்.

கல்யாணமான சூட்டோடு இத்தாலிக்கும், மாலத் தீவிற்கும் ஹனி மூன் போனார்கள். அதன்பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார் அசின். இப்போது அழகான ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக தில்லியில் வசித்து வருகிறார்.

மகள் அரின் ரேனுக்கு சமீபத்தில் மூன்றாவது பிறந்தநாளை கொச்சியில் உள்ள தன் வீட்டில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். வருடத்திற்கு ஒரு முறை கேரளா வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அசின்.

சமிக்‌ஷா

முகத்தைப் பார்த்ததும் ‘தீப்பிடிக்க... தீப்பிடிக்க...’ என ‘அறிந்தும் அறியாமலே’ படத்தின் பாடலை ஹம் பண்ண ஆரம்பித்துவிட்டால், நீங்கள் 2கே கிட்ஸ் என்று அர்த்தம்!சமிக்‌ஷாவின் பூர்வீகம் பஞ்சாபி. ஒரிஜினல் நேம் சமிக்‌ஷா சிங். தமிழில் ‘பஞ்சாமிர்தம்’, ‘தி நகர்’, ‘மெர்க்குரிப் பூக்கள்’, ‘மனதோடு மழைக்காலம்’ என ஒரு நேரத்தில் இங்கே ஜொலிஜொலித்தார். அதன்பிறகு தெலுங்கில் பறந்தார்.

2004லேயே சிங்கப்பூர் தொழிலதி பரான ஷாயல் ஆஸ்வலை மணந்து கொண்டு அங்கேயே செட்டில் ஆனார். காதல் பரிசாக 11 வயதில் மகன் இருக்கிறார். ‘‘ஒவ்வொரு நாள் காலையிலும் என் பையன் முகத்தைப் பார்த்தே கண்விழிப்பேன். தாயாக இருக்கறதுல சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிரம்பி வழியுது...’’ என ஹேப்பி ஃபீலாகிறார் சமிக்‌ஷா.

மை.பாரதிராஜா