வலைப்பேச்சு



@Gokul Prasad - தொடர்ச்சியாக நான்கு நபர்களை அலைபேசியில் அழைக்க முயன்று, அந்த நால்வருமே பிசியாக இருப்பதால் அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் ஒருகணம் திகைத்து, முகநூலுக்கே திரும்புவதற்குப் பெயர்தான் வெறுமை.

@Sasikal27089 - உன் அன்பு என்னை எப்பொழுதும் மீளமுடியாத ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகிறது...

@pradeepbala23 - மனசு எப்பவுமே இல்லாததை மட்டுமே தேடுவதால், இருப்பதின் மீது அலட்சியமா என்றால் இல்லை, அதற்குப் பெயர்தான் நிம்மதி!

@mazhaimugil - பெரிய கருத்துக்களை பேசறவங்களை விட சின்னச் சின்ன விஷயங்களைக் கூட புரிஞ்சிக்க முடிஞ்சவங்கதான் பிரியத்துக்குரியவங்களா இருக்காங்க.

@Pa Raghavan - சிறு வயது முதல் கனவுகளைத் தின்றே உடல் பருத்துப் போனவன் நான். ஒப்பிட்டால், வயிற்றுக்குத் தின்றதெல்லாம் வெகு சொற்பம்.
இந்தக் கனவுகள்தாம் நெருக்கடிப் பொழுதுகளில் சோர்வடையாமல் செயலாற்ற வைக்கின்றன. தூக்கிச் சுமப்பது பெரும்பாடு என்றாலும் அந்தச் சுமை அத்தியாவசியமாகிப் போய்விட்டது. யாருக்கு இருக்காது? கனவற்ற ஒரு பிறவி அரிது. கனவுதான் ஒரு புத்தனை உருவாக்கியது. கனவுதான் ஒரு காந்தியைக் கொடுத்தது. கனவின் கர்ப்பம்தான் காலத்தின் அத்தனை பாய்ச்சல்களையும் பிரசவித்து வருகிறது.

@Kurumbukkaari- எதைப்பற்றியும் நம் தேவைக்கு அதிகமா தெரிஞ்சுக்காம இருக்கறதே நம் நிம்மதிக்கான ஒரே வழி...

@RAJvp94 - உங்களுக்கு என்ன நடக்கின்றது என்பது அனுபவமல்ல; நடக்கும் விஷயங்களுக்கான உங்களுடைய செயல்பாடு என்ன என்பதே அனுபவம்.

@Aravind01431 - தான், எந்த நிலையில் இருந்தாலும், குழந்தைகளை இளவரசனாகவே வளர்த்து விடுகிறார்கள் ஒவ்வொரு பெற்றோர்களும்.

@Ashok___04 - வெற்றி தோல்வி வீரனுக்குதான் சகஜம். வேடிக்கை பார்ப்பவருக்கு அல்ல... முடியும் முடியாது என்பதை முயற்சி செய்தே முடிவு செய்து கொள்.

@Malarko65562105 - அதிகமான அன்பை விட அதிகமாக புரிந்துகொண்ட உறவுகள் மட்டுமே ஆயுள் வரை நீடிக்கும்.

@இந்திரா கிறுக்கல்கள் - கழுத்துல விழுற குழியும், புடைச்சுகிட்டு நிக்குற நெஞ்சும் சொல்லிடுது, தொப்பையை எவ்ளோ தம்கட்டி உள்ள இழுத்துருக்காங்கனு!

@Vihashini13 - அதிக பாரம் ஏற்றிய பேருந்து பழுதாகவும்; அதிகம் அன்பு செலுத்திய இதயம் பரிதவிக்கவும் வாய்ப்புள்ளது.

@Paadhasaari Vishwanathan - நானே எண்ணம் எனும்போது, என்னுடையது எனத் தனியே ஒரு எண்ணம் இருப்பதாகப் பேணி, பிளவுப் பள்ளத்தில் வீழ்ந்து எழுவது வாடிக்கை.

@KR Athiyaman - முகநூலில் கெத்தாக வலம் வருவது எப்படி?

1. நெருங்கிய நண்பர்கள் உட்பட யாருடைய பதிவுக்கும், எப்போதும் லைக், பின்னூட்டம் இடக் கூடாது. ஆனால், பிறரின் பதிவுகளை தேடிப் பிடித்து ரகசியமாக படிக்க வேண்டும். யாருடைய பதிவையும் ஷேர் செய்தல் கூடாது.

2. நம்முடைய பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் கூறுவது, லைக் இடுவது கூடாது. கெத்தாக இருக்க வேண்டும்.

3. நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்வதானாலும் பொதுவெளியில் சொல்லாமல், உள்டப்பி மூலம் மட்டுமே சொல்ல
வேண்டும்.

4. வேறு ஒரு ‘பெரிய மனிதரின்’ பதிவுக்கு எதிர்வினையாற்ற விரும்பினால், அவரின் பெயரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிட்டு, நம் சுவற்றில் தனிப் பதிவு எழுத வேண்டும். பேட்டை தாதாக்கள் ‘எதிராளியின்’ ஏரியாவிற்கு செல்லாமல், தம் கோட்டையில் இருந்தே சவுண்ட்
விடுவதைப் போல!

@Sathish Kumar - வாதம், பித்தம், நஞ்சு, மனக்கலக்கம், உடல் வறட்சி, முகத்தில் தெளிவின்மை, காய்ச்சல் ஆகியவற்றை நெய் நீக்கும். நெய் இத்தனை நல்ல குணங்களையுடையது. இவ்வளவு சிறந்ததோர் உணவை, இன்றைய மக்கள், இது ஒரு கொழுப்பு, குண்டாகிடுவோம் என  ஒதுக்கி விட்டனர். நெய்யில் பல ரகம் இருக்கு. பசு நெய், எருமை நெய் என தரமான கடைகளில் விற்கிறார்கள்.

இது தவிர பூஜைக்கு என கடைகளில் விற்கப்படும் நெய், நெய்யே அல்ல. அது மெழுகு மாதிரியான பெட்ரோலிய கழிவுப் பொருள் என நினைக்கிறேன். இதில் எல்லாம் தீபம் ஏற்றினால் காற்று மாசடைவது உறுதி. இதற்கு பதிலாக இலுப்பை எண்ணெய் விலை குறைவுதான். ஒரு லிட்டரே 150 ரூபாய்தான் வரும். அதில் விளக்கேற்றுவது உத்தமம். பிரபலமான கோயிலில் விற்கப்படும் ரெடிமேட் தீபம் எல்லாம் மெழுகுதான்.

அதே போல தீப எண்ணெய் என விற்கிறார்கள். இதை விட மோசடி எதுவும் இல்லை. முக்கால்வாசி பாமாயில்தான். அழுக்கு எண்ணெய், கீழே சிந்திய எண்ணெயை வழித்துத் தருவது போல இருக்கும். பஞ்ச தீப எண்ணெய், முக்கூட்டு எண்ணெய் எல்லாம் நீங்களே தயாரிக்க முடியாவிட்டால் அதை ரெடிமேடாக கடையில் வாங்காதீர்கள்.

நாட்டு மாடுதான் காராம்பசு. அதாவது கறுப்பு மடி இருக்கும் பசு. அதன் நெய்தான் முதல் தரம். அதுதான் கோயிலில் தீபம் ஏற்ற உகந்தது. விலை அதிகம்தான். அதற்காக கடமைக்கு செய்யக்கூடாது. கொஞ்சம் சிரமப்பட்டுதான் வாங்கி தீபம் ஏற்ற வேண்டும். மெழுகு நெய் வாங்கி தீபம் போடுவதற்கு பதில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயில் தீபம் ஏற்றுங்கள். மிக நல்லது!

@urs_venbaa - உனக்காக நீ உணவருந்த வேண்டும்; பிறருக்காக நீ உடை தரிக்க வேண்டும்.

@sankariofficial - தன்னிடம் எது இல்லையோ அதைப் பற்றியே சதாகாலமும் சிந்திக்க வைப்பதன் பெயரே ‘ஏக்கம்’.

@azam_twitz - நம் இலட்சிய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரே இடம் கனவுகள் மட்டுமே!

@Kannan_Twitz - ஓர் உறவை தக்கவைக்கும் பிரயத்தனங்களில் நம்மை நாம் இழக்காதிருத்தல் உத்தமம்!

@Sasikala - தோல்விகளை எளிதாகக் கடக்கும் பெண்கள்தான் ஆண்களின் டார்கெட்டாக உள்ளனர். என்னைப்போல் உன்னையும் புலம்ப வைக்காம விட மாட்டேன் மொமண்ட்.

@Raja Sundararajan - அறிவும் மனமும் ஒன்றுதான். இரண்டுமே மூளைச் செயல்பாடுகள். ராமன் அறிவென்றால் ஜானகிபுருஷன் மனம். அதாவது சஞ்சல புத்தியே மனம்.

@Meenakshi Sundaram - கொரோனா 2ம் சுற்றை விட பயமாருக்கு, இந்த திடீர் கொரோனா சயின்டிஸ்ட்களின் 2ம் சுற்று பதிவுகளை நெனச்சு...

@asdbharathi - தோல்வி யில் முடிந்த முயற்சிகள் வலி மட்டும் தருவதில்லை. வலிமையும் தரும்.

@Gowshhh - தேடும் போது கிடைக்காத அனைத்தும்... தேடாதபோது பொக்கிஷமாய் பார்க்கப்படுகின்றது!

@Ramanujam Govindan - உடலைக் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால், அளவுக்கு மீறி கவனிக்கக் கூடாது.  உடலில் உள்ள சிறு சிறு தொந்தரவுகளைக்கூட பெரிய பெரிய வியாதியாக நினைத்து அடிக்கடி மருத்துவர்களிடம் சென்றால் தேவையில்லாத பரிசோதனைகள், மருந்துகள் எனப் பிரச்னைகள் கூடிக் கொண்டேதான் போகும்.

ஒன்று, மருத்துவரும் பயந்து போய் பரிசோதனைகள் எல்லாம் செய்து பார்ப்பார் அல்லது பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையாக இருந்தால் உங்களை வைத்து ஒரு ரூம் அல்லது குறைந்த பட்சம் ஒரு சுவராவது கட்டி விடுவார்கள்.முக்கியமாக, இணையத்தில் நோய் அறிகுறிகளை வைத்துத் தேடிப் படித்தால் கட்டாயம் பெரிதாக பீதி அடையத்தான் செய்வீர்கள். இதுபோல் விபரீதமாகக் கற்பனை செய்வதற்கு Hypochondriasis என்று பெயர். இப்போது Illness anxiety என அழைக்கப்படுகிறது (உடனே எனக்கு illness anxiety இருக்குமோ என பயப்படாதீர்கள்).

பாதிக்கு மேற்பட்ட உடல் பிரச்னைகளை முறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, உறக்கம், உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலமே சரி செய்ய முடியும். நான்கு ‘உ’க்கள்!(இருகைகளிலும் பெரிய பைகள் நிறைய மருத்துவ பைல்களோடு இன்று வந்த ஒருவரைப் பார்த்தபின் தோன்றியது)

- டாக்டர் ஜி.ராமானுஜம்.