மருத்துவமனைகள் கார்ப்ப ரேட் வசம் செல்வதற்கான முதல் அடிதான் மினி கிளினிக்!



தமிழகத்தின் மருத்துவத்துறையில் புதிய திட்டமாக ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம் கடந்த 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் கிளினிக் என்றால் என்ன..? ஒரேயொரு மருத்துவரின் தலைமையில் நடைபெறும் மருத்துவமனை என்று எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இங்கு உதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட செவிலியர்களும், பணியாளர்களும் இருப்பர்.

அரசு உருவாக்கியிருக்கும் இந்த மினி கிளினிக்குகளும் அப்படியானதே. ஆனால், இங்கு படுக்கை வசதிகள் இருக்காது. ஆலோசனைகளும், சிறு சிறு நோய்களுக்கான மருத்துவமும் கிடைக்கும். காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் இது செயல்படும்.

இப்படி தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருக்கும் அரசு, அதற்கான முன் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை என்பதுதான்ஹைலைட்.

“இந்த திட்டம் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஒரு பகுதி. இத்திட்டத்தில் இரண்டு கூறுகள் இருக்கிறது. ஒன்று, பிரதமர் காப்பீடு; மற்றொன்று, நாடு முழுவதும் இருக்கக் கூடிய 1,50,000 துணை சுகாதார நிலையங்களை ஹெல்த் & வெல்த் சென்டராக மாற்றுவது...’’ என்று ஆரம்பித்தார் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்.

‘‘இதுகுறித்த அறிவிப்பை அருண்ஜெட்லி நிதி அமைச்சராக இருக்கும்போது வெளியிட்டார். அப்போது, ‘துணை சுகாதார நிலையங்களை ஹெல்த் & வெல்த் என்று பெயர் மாற்றி அதை கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி அடிப்படையில் கார்ப்பரேட்டுகள் ஏற்று நடத்த வேண்டும்’ என்றார். அதற்காக மத்திய அரசு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கியது.

அந்த திட்டத்தைத்தான் தமிழக அரசு இப்போது மினி கிளினிக் என்கிறது. 5,000 மக்கள் தொகைக்கு நாடு முழுவதும் ஒரு சப்சென்டர் இருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அதை கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டியாக ஏற்படுத்துவது தவறு. இதை மத்திய, மாநில அரசுகளே நிதி ஒதுக்கீடு செய்து நடத்த வேண்டும்.

அவ்வாறு புதிதாக ஆரம்பிக்கும் போது ஏற்கனவே இருக்கும் மருத்துவர்களை வைத்து நடத்துவதும் சரியில்லை. இப்போதே மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கிறது என்பதை பல முறை எடுத்துச் சொல்லிவிட்டோம். அதனால் இந்த சென்டர்களில் புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமான அடிப்படையில் எடுக்க வேண்டும்.

மினி கிளினிக்கின் நேரத்தை இப்போதுள்ளதை விட அதிகப்படுத்த வேண்டும். காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் என இரண்டு ஷிஃப்டுகளாக பிரித்து, அதற்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் கிராமப்புற மக்களுக்கு உபயோகமாக இருக்கும். கூலித் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவிட்டு  வந்து பார்க்கவும் சரியாக இருக்கும்.      
மினி கிளினிக்கை ரெஃபரன்ஸ் சென்டராகவும், டெலி மெடிஷன் முறையாகவும் மாற்றி மாவட்ட மருத்துவமனையின் சில பிரிவுகளை தனியாருக்குக் கொடுக்க மத்திய அரசு முனைகிறது. அந்த சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்.

தவிர ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தினால் மினி ஹாஸ்பிடல் போல் மாற்றலாம். இதனால் அரசு மருத்துவமனைகள் தனியார்மயமாவதைத் தடுக்க முடியும். இப்போது தமிழக அரசு இத்திட்டத்தினை அவசர அவசரமாக ஆரம்பிப்பதற்கான காரணம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல்தான். போதிய ஊழியர்களை எடுக்காமல் அவசரமாக இத்திட்டத்தை ஆரம்பித்துவிட்டு ஏற்கனவே இருப்பவர்களை பயன்படுத்துவது முழுக்க முழுக்க இந்த மினி கிளினிக்குகளை கார்ப்பரேட் வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைதான்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் ரவீந்திரநாத்.

இத்திட்டம் குறித்து கோட்டை வட்டாரத்தில் துறை சார்ந்தவர்களிடம் பேசியபோது, “மாலை நேரத்தில் வைப்பதாகத் தான் சொல்லி இருக்காங்க. இடம் எல்லாம் வாடகைக்கு பார்த்துக்கோங்கனு சொல்றாங்க. இப்போது பள்ளி விடுமுறையாக இருப்பதால் ஸ்கூல் ஹெல்த் டீமிலிருக்கும் 770 பேரையும், மொபைல் மெடிக்கல் டீமில் இருப்போரையும்தான் இதற்கு யூஸ் பண்றாங்க.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருக்கும் செகண்ட் மெடிக்கல் ஆபீசரை இதில் போடுவதாக சொல்லப்படுகிறது. தற்காலிக திட்டமான இதில் ஜனவரிக்குள் பாதியாவது ஓப்பன் பண்ணணும். அதேநேரம் எமர்ஜென்சிக்கான மருந்துகள் மட்டும்தான் கொண்டு போக முடியுமே தவிர, எல்லா மருந்துகளையும் வாடகை கட்டடத்தில் வைக்கவும் முடியாது...’’ என்கிறார்கள்.  

அன்னம் அரசு