12,638 வைரக் கற்கள் பதித்த மோதிரம்!



உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் ஹர்ஷித் பன்சால். இவரது நகைக்கடையில் 12,638 வைரக் கற்களைப் பதித்து உருவாக்கப்பட்டுள்ள மோதிரத்துக்கு கின்னஸ் சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளது. ‘‘இந்தச் சாதனையை படைக்க மூன்று வருடங்கள் திட்டமிட்டோம். சாமந்திப் பூ வடிவம், உருவாக்கம் ஆகியவை மீரட்டில் மேற்கொண்டாலும், அதனுடைய உற்பத்தி சூரத்தில்தான் நடைபெற்றது. எங்களுடைய 28 கைவினைக் கலைஞர்கள் சூரத்திலுள்ள வைர குடோனில் (hub) தங்கி இதனைச் செய்தார்கள்...’’ என்கிறார் ஹர்ஷத் பன்சால்.

மனைவி மிரட்டுவதாக விடுமுறைக் கடிதம் எழுதிய காவலர்!

மத்தியப் பிரதேசம் போபாலைச் சேர்ந்தவர் கான்ஸ்டபிள் திலிப் குமார் அஹிர்வார். இவர் தனது மனைவியின் சகோதரர் திருமணத்திற்கு செல்ல விடுப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார். இந்தியில் எழுதியுள்ள அந்த கடிதத்தில், திருமணத்திற்கு வராவிட்டால், மோசமான விளைவுகளைச் சந்திக்கநேரிடும் என மனைவி தன்னை மிரட்டுவதாகக் குறிப்பிட்டு, எனவே வருகிற டிசம்பர் 11ஆம் தேதி தனக்கு விடுப்பு அளிக்குமாறு அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார். “காவல்துறையில் விடுமுறை எடுக்க கீழ்நிலையில் உள்ள பணியாளர்கள் பொதுவாக பல்வேறு காரணங்களைக் கூறுவதுண்டு. ஆனால், இந்த கான்ஸ்டபிள் கூறிய காரணம் வித்தியாசமாக உள்ளது...” என்கிறார் டிஐஜி.

அன்னம் அரசு