சேலம் டூ சென்னை எட்டு வழிச்சாலை உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு விவசாயிகளின் நிலை...



சமீபத்தில் சேலம் டூ சென்னை எட்டுவழி பசுமை சாலைக்கான வழக்கில், திட்டத்திற்குத் தடையில்லை என்றும், புதிய அரசாணை வெளியிட்டும், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளிடம் முறையான அனுமதி பெற்றும் திட்டத்தைத் தொடங்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. முந்தைய அறிக்கையின்படி, கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடமே திருப்பித் தரவேண்டும் என்றும், உரிய வழிமுறைகளைப் பின்பற்றி திட்டத்தைத் தொடரலாம் என்றும் கூறியது.  

ஆனால், விவசாயிகள் இந்தத் திட்டமே வேண்டாம் என உறுதியாக நிற்கின்றனர். இதனை எதிர்த்து ஐந்து மாவட்ட விவசாயிகளும் தொடர்ந்து போராட முடிவெடுத்துள்ளனர். சென்னை தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் பகுதியிலிருந்து தொடங்கும் இந்தப் பசுமைவழிச் சாலை சேலம் அரியானூர் பகுதியில் முடிவடைகிறது. மத்திய அரசின் ‘பாரத்மாலா பரியோஜ்னா’ திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தச் சாலை போடப்பட இருக்கிறது.

மொத்தம் 277 கிமீ தூரம். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் ஊடே போடவிருக்கும் இந்தச் சாலையால் பல்வேறு விளைநிலங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றன. தவிர, ஏரிகள், குளங்கள், மலைகள், காடுகள் எல்லாம் இந்தத் திட்டத்திற்காக அழிக்கப்பட இருக்கின்றன. இதனால்தான் விவசாயிகள் கொதித்தெழுந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலரிடம் பேசினோம்.  

சேலம் மாவட்டம் குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன், ‘‘குப்பனூர் கிராமம் சேலத்துல இருந்து 18 கி.மீ தூரத்துல இருக்கு. இங்க என்னுடைய நிலம் நாலரை ஏக்கர் பாதிக்கப்படுது. இதுல நானூறு தென்னை மரங்கள் நிற்குது. இதை நம்பித்தான் என் வாழ்வாதாரமே இருக்கு.

இங்க நிலத்தின் சந்தை மதிப்பு ஏக்கருக்கு 50 லட்சம் போகுது. இவங்க கொடுக்குற வழிகாட்டி மதிப்பு மூணு, நாலு லட்சம்னு சொல்றாங்க. வழிகாட்டி மதிப்பை மூணு மடங்கா உயர்த்திக் கொடுத்தாலும் எங்களால நிலத்தை கொடுக்கமுடியாது. சேலம் மாவட்டத்துல மட்டும் 36 கி.மீ தூரம் இந்தச் சாலை அமைக்கப்படுது. கிட்டத்தட்ட 2000 ஏக்கர் வரை பட்டாநிலம் பாதிக்குது.

இதனால, நான் உட்பட சேலம் மாவட்ட விவசாயிகள் நாற்பது பேர் வழக்குத் தொடர்ந்தோம். அப்ப சுற்றுச்சூழலைக் காரணம் காட்டியும், திட்ட அறிக்கையில் குளறுபடி இருக்குன்னும் சொன்னோம். உயர்நீதிமன்றத்துல அரசாணைைய ரத்து செய்தாங்க. பிறகு இந்திய நெடுஞ்சாலை ஆணையம் மேல் முறையீட்டுக்கு போனாங்க. இப்ப உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அளிச்சிருக்கு.

முதல்ல நிலத்தைக் கையகப்படுத்தத் தடைனு சொன்னதும் சந்தோஷமானோம். ஆனா, புதுசா அரசாணை போட்டு திட்டம் தொடரலாம்னதும் கஷ்டமாகிடுச்சு.  இதுல விவசாயிகளான எங்களுக்கு மனஆறுதல் என்னன்னா, சுற்றுச்சூழல் அனுமதி வாங்கி, விவசாயிகளிடம் கருத்து கேட்கணும்னு சொல்லி யிருக்கிறதுதான். அதனால், சுற்றுச்சூழல் அனுமதி தராமல் நியாயமா இருப்பாங்கனு நம்புறோம். ஆனா, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் வந்தால் அனுமதி வாங்க வேண்டியது இருக்காது. அதனாலதான் அந்தச் சட்டத்தைக் கொண்டு வர முயற்சி செய்றாங்க.

நாங்க வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. எங்களுக்கும் சாலைகள் ேதவைதான். ஆனா, ஏற்கனவே சேலம் - உளுந்தூர்பேட்டை சாலை, சேலம் - கிருஷ்ணகிரி தொப்பூர் கணவாய் சாலை, சேலம் - அரூர் - சென்னை சாலைனு மூணு சாலைகள் இருக்கு. இதை விரிவுபடுத்தினாலே போதும். ஆனா, பிடிவாதமா நாங்க இந்தச் சாலையைத்தான் போடுவோம்னா அது சந்தேகத்தைத் தருது.

இந்த பசுமைவழிச் சாலையை ரெண்டு பக்கமும் தடுப்புப் போட்டு அமைக்கப் போறாங்க. அதாவது, நடுவுல சாலை வருமாம். இரண்டுபுறமும் தடுப்பு இருக்குமாம். இது திருட்டுக்கு வழிவகுக்குற மாதிரி இருக்குது. ஏன்னா, இந்தச் சாலை கஞ்சன் மலை, சேர்வராயன் மலை, கவுத்தி மலை, வேடியப்பன் மலைனு மலைகளைக் கடந்துதான் போகுது. இதெல்லாம் கனிம வளங்கள் மிகுந்த மலைகள்.

அப்புறம், எட்டு குன்றுகள் தகர்க்கப்படுது. 20 ஆறுகள், 9 ஏரிகள் தடுக்கப்படுது. சின்னச் சின்ன கண்மாய்கள், குளம், குட்டைகள் எல்லாம் அடிபடுது. லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுது. இயற்கை வளங்கள் பாதிக்கப்படுது. இதப்பத்தியெல்லாம்  கவலைப்படாமல் புதிய சாலை போட்டு இருபது சதவீதம் கமிஷனா 2 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தைப் பார்க்கணும்னு நினைக்கிறாங்க...’’ என்கிறார் நாராயணன் வருத்தமாக.

திருவண்ணாமலை மாவட்டம் பெலசூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், விவசாயத்தைத் தவிர வேறு தொழில் தெரியாது என்கிறார். ‘‘எனக்கு மொத்தமா 9 ஏக்கர் இருக்குது. இதுல முதல் தடவை இடம் பார்த்தப்ப ஏழு ஏக்கர் போச்சு. இப்ப, 2 ஏக்கர் போறமாதிரி இருக்கு. முதல்ல 300 மீட்டர் வச்சு திட்டம் போட்டாங்க. இதுல சில அரசியல்வாதிகளின் இடம் போகுதுனு சொன்னதும் திட்டத்தை மாத்தி அமைச்சாங்க. அதனால, இப்பவரை என்னுடைய நிலம் எவ்வளவு போகுதுனு சரியான விவரம் தெரியல. ஆனா, அதிகாரிகள் இதுவரை எந்த விவசாயிகளையும் சந்திக்கல. குறைகளை கேட்கவும் இல்ல.

எங்க ஊர்ல பருவமழை நல்லா பெய்ஞ்சால் கரும்பு போடுவோம். சுமாரா இருந்தா நெல் போடுவோம். இந்த மண்ணுல தங்கத்தைத் தவிர எல்லாமே நல்லா விளையும். அப்படியான நிலம். நான் விவசாயத்தை நம்பிதான் வாழ்றேன். எங்க அப்பா அஞ்சு மாடு வச்சிருக்கார். நான் அஞ்சு மாடு வச்சிருக்கேன். அதனால, இந்தத் தொழிலைவிட்டு எங்களால வேற தொழிலுக்கு மாறமுடியாது. இப்பவே எனக்கு ஐம்பது வயசாகிடுச்சு. எங்களுக்கு தெரிஞ்சது விவசாயம் மட்டும்தான். எங்க ஊர்ல 20 விவசாயிகள் வரை பாதிக்கப்படுறாங்க.

ராந்தம் கிராமத்துல சிலர் வெளிநாட்டுல வேலை செய்றாங்க. அவங்க கடன்பட்டு வீடு கட்டியிருக்காங்க. அதெல்லாம் போகுது. இதுமாதிரி நிறைய வீடுகள் இந்தத் திட்டத்துல அடிபடுது. இந்தத் திட்டத்தை எப்ப போட்டாங்களோ அப்பவே எங்க நிலங்கள் எல்லாம் அரசுகிட்ட போயிடுச்சு. எங்களால நிலத்தை வச்சு கடன் வாங்கவோ, பாகம் பிரிக்கவோ முடியாது. எங்க நிலங்கள் எல்லாம் தரிசு நிலம்னு அரசு ஆவணத்துல காட்டுது. அதனால, எப்ப வேணாலும் எங்களை வெளியேற்றலாம். ஆனா, நாங்க விடமாட்டோம்...’’ என்கிறார் ரமேஷ் வருத்தம்பொங்க.

தர்மபுரி மாவட்டம் இருளப்பட்டியைச் சேர்ந்த வேலவன், ‘‘எனக்கு நாலு ஏக்கர் போகுது... இதுல மரவள்ளிக் கிழங்கும், கரும்பும் போட்டிருக்கேன். பாரம்பரியமா நாங்க விவசாயம் பண்ணிட்டு இருக்கோம். இப்ப இந்தத் திட்டத்துக்காக எடுத்தது போக கையில் 20 சென்ட் இடம்தான் நிற்குது. என்னை மாதிரி எங்க பஞ்சாயத்துல 15 விவசாயிகள் பாதிக்கப்படுறாங்க.

தர்மபுரி மாவட்டத்துல 56 கிமீ தூரம் இந்தச் சாலை வருது. மொத்தமா முப்பது பஞ்சாயத்து பாதிக்கப்படுது. கிராமம்னு எடுத்தா, நாற்பது கிராமங்கள் வரை பாதிக்கப்படுது. ஒரு கிராமத்துல 17 விவசாயிகள் வரை இருக்காங்க. ஆக, 500 விவசாயிகளுக்கு மேல் பாதிக்கப்படுறோம். எல்லோருக்குமே விவசாயம்தான் வாழ்க்கை. நில மதிப்புனு பார்த்தா ரொம்ப அதிகம். சில இடங்கள் ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வரை வரும். எங்க இடமே ஏக்கர் 70 லட்சம் ரூபாய் வரை போகுது. எங்களுக்கு இதே பணத்தை தந்தால் கூட எங்களால் நிலத்தை தரமுடியாது. ஏன்னா, வாழ்வாதாரமே இதுதான்.

இதுல சிலர், கூலி வேலைக்குப் போய் கஷ்டப்பட்டு வீடு கட்டியிருக்காங்க. அவங்க வீடுகள் போகுது. அவங்க இனி எங்க போய் குடியிருப்பாங்க சொல்லுங்க?’’ எனக் கொதிக்கிறார் வேலவன். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்திலுள்ள சீதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மோகன், ‘‘எங்க ஊர்ல 13 வீடுகள் போகுது சார். நிறைய வீடுகள் என்பதால் இதை மாத்திக்கிடலாம்னு மாவட்ட கலெக்டர் சொல்றார். ஆனா, அது சாத்தியமாகுமானு தெரியல. ஏன்னா, அப்படி மாத்தும்போது ரைஸ்மில்லும், கூட்டுறவு வேளாண் வங்கியும் அடிபடுது.

ஆக, எதுக்கு முன்னுரிமை தருவாங்கனு தெரியல. பழவேரி கிராமத்துல ஏழு கிணறுகள் போகுது. அதை நம்பிதான் அங்குள்ள மக்கள் விவசாயம்
பண்ணிட்டு இருக்காங்க. எனக்கு ஏறக்குறைய 50 சென்ட் போகுது. எங்க பகுதி முழுவதும் கரும்பும் நெல்லும் நல்லா விளையிற பகுதி. நான் என் நிலத்துல நெல் போட்டிருக்கேன். இப்ப இந்தப்பகுதியில் மட்டும் 25 குடும்பங்கள் பாதிக்கப்படுது. ஏக்கருக்கு இவ்வளவு பணம் தர்றோம்னு சொல்றாங்க. ஆனா, வாழ்வாதாரத்திற்கான கிணறே போனபிறகு பணத்தை வைச்சு நாங்க என்ன செய்ய? அதனால, எட்டுவழிச்சாலை போட மாட்டோம்னு அரசு திட்டவட்டமா சொல்றவரை விடமாட்டோம்’’ என்கிறார் மோகன் அழுத்தமாக!

கனிமங்களை சூறையாடத்தான் இந்த எட்டு வழிச் சாலை

‘‘ஐந்து மாவட்டத்திலும் சேர்த்து அரசு கணக்குப்படி ஏழாயிரத்து 900 ஏக்கர் போகுதுங்க. ஆனா, விவசாயிகள் கொடுக்குற இடங்கள் அதிகமா இருக்கு. ஏன்னா, சில இடங்கள்ல கற்களை கொஞ்சம் தள்ளி நட்டு வச்சிருக்காங்க. அதன்படி 9,800 ஏக்கர் வருது. இதுல கொஞ்ச இடங்கள் அரசு புறம்போக்கு. மத்தபடி எல்லாமே விவசாய நிலங்கள்தான்.

அந்த நிலங்கள்ல அதிகாரிகள் கல்நட்டு அரசாங்க பெயருக்கு மாத்திட்டாங்க. ஆனா, இதுசம்பந்தமா எந்த அறிவிப்பும் தரல. கேட்டாலும் தகவல் தரமாட்டேங்குறாங்க. அதுமாதிரியான ஒரு மாறுதல் இருந்ததாலதான் உச்சநீதிமன்றத் தீர்ப்புல கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்கணும்னு சொன்னது. இப்ப எட்டுவழிச்சாலைக்காக இவங்க கையகப்படுத்தின நிலங்களை விவசாயிகள் யாரும் அடமானம் வைக்கவோ கடன்பெறவோ முடியாது. அரசு கட்டுப்பாட்டுலதான் எல்லாமே இருக்கு...’’ என்கிற எட்டு வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு களின் கூடுதல் ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் அபிராமன், இந்தச் சாலையின் பாதகங்களை அடுக்கினார்.

‘‘இந்தச் சாலையின் இரண்டு பக்கமும் 11 அடி சுவர் எழுப்புறாங்க. நடுவுல சாலை போகும். சேலம் டூ வண்டலூர் வரை இரண்டா பிரிச்சிடுறாங்க.
பொதுவா, தேசிய நெடுஞ்சாலைகள்ல சர்வீஸ் ரோடு நிறைய இருக்கும். எங்கிருந்து வந்தாலும் நெடுஞ்சாலையில் ஏறமுடியும். ஆனா, இங்க 277 கிமீ நீளத்துல ஏழு இடங்கள்லதான் சர்வீஸ் ரோடே போடுறாங்க. இந்த ஏழு இடங்கள் வழியாதான் சாலையில் ஏறமுடியும்.

அதனால, போறவழியில் இருக்கிற கிராம சாலைகள், மாநில சாலைகள் எல்லாம் மூடப்படுது. இதுல ஒன்பது இடங்கள்ல மட்டும் இந்தப் பக்கத்துல இருந்து அந்தப் பக்கம் போக திறந்து விடுறாங்க. சில விவசாயிகளுக்கு இந்தப் பக்கம் கொஞ்சம் நிலமும், அந்தப் பக்கம் கொஞ்சம் நிலமும் இருக்குனு வையுங்க. அவர் தன்னுடைய நிலத்துக்குப் போகவோ, சொந்தக்காரங்கள பார்க்கவோ, பசங்களை பள்ளியில் விடவோ ஒன்பது இடத்துல வைக்கிற திறப்பு வழியாதான் போகமுடியும். அப்ப குறைந்தபட்சம் 15 முதல் 30 கி.மீ சுற்றிதான் போக வேண்டிவருது.

அடுத்து, இந்தச் சாலையில் 120 கி.மீ வேகத்துக்கு குறைவா வண்டிகள் செல்ல முடியாது. அதிவேக கனரக மற்றும் கார்களை மட்டுமே அனுமதிக்கிறாங்க. டிராக்டரோ, மூன்று சக்கர வண்டிகளோ, அறுவடை இயந்திரமோ செல்ல அனுமதியில்ல. அதேபோல டூவீலர் போவது பற்றி சொல்லல. அரசுப் பேருந்துக்கும் அனுமதியில்ல. அதனால, எள்ளளவும் மக்களுக்கு பயனில்லாத திட்டம் இது.

இந்தச் சாலையை நேரா எடுத்திட்டுப் போய் எண்ணூர் துறைமுகத்துல சேர்க்கிறாங்க. இன்னொரு பக்கம் திருவனந்தபுரம் போன்ற துறைமுகத்துல இணைக்கிறாங்க. அப்புறம்,  திருவண்ணாமலை மாவட்டத்துல கவுத்தி, வேடியப்பன்னு ரெண்டு மலைகள் இருக்குது. இதுல இரும்புத்தாது இருக்குனு 70 வருஷத்துக்கு முன்னாடியே கண்டுபிடிச்சிட்டாங்க. இந்த வளத்தை எடுத்து துறைமுகங்கள்ல சேர்க்கணும். அதுக்காக போடப்படுற சாலைதான் இது. இதனால, இயற்கை வளங்கள் எல்லாம் அழிக்கப்படுது.

அடுத்து, இந்தச் சாலையின் இருமருங்கிலும் ராணுவ தளவாடங்களுக்கான குடோன்கள் கட்டப்போறாங்க. சில இடங்கள்ல விமானங்கள் ஏறி இறங்க வழிகள் செய்றாங்க. இதெல்லாம் திட்டத்துல வருது. அதேபோல இந்தச் சாலைகள் போட்டால் ரெண்டு பக்கமும் இருக்குற நிலங்களின் மதிப்பு அதிகரிக்கும்னு சொல்றாங்க. இது அப்பட்டமான பொய். ஏன்னா, சர்வீஸ் ரோடு இருந்தால்தான் ஒவ்வொரு கிராமமும் ஊரும் இணையும். வணிகம் பெருகும். நிலங்களின் மதிப்பும் உயரும்.

ஆனா, இந்த எட்டுவழிச்சாலையில் 11 அடி சுவர் எழுப்பும்போது கிராமங்களுக்கு இடையே தொடர்பு அறுந்துபோயிடுது. ஆக, நிலத்தின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்பில்ல. இது மக்களின் பயன்பாட்டுக்கான சாலையே கிடையாது. இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க போடப்படும் சாலை.

இதை வலியுறுத்தித்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னாடி குடும்பத்துடன் பெருந்திரளா கூடி ஆர்ப்பாட்டம் பண்ணப் போறோம். அப்புறம், அடுத்தாண்டு ஜனவரி 13ம் தேதி போகிப் பண்டிகை அன்னைக்கு கருப்புக் கொடி ஏத்தி கருப்பு பொங்கலா கொண்டாடப் போறோம்.

பிறகு, பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத் தொடருக்காக சட்டசபை கூடும்போது விவசாயிகள் எல்லாம் பயணமா போய் முற்றுகையிடலாம்னு இருக்கோம்...’’ என்கிறார் அபிராமன்.

பேராச்சி கண்ணன்