ரத்த மகுடம்-130பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘என்ன... பல்லவ நாட்டின் சக ஒற்றனால் வாய் அடைக்கப்பட்டு; கை, கால்கள் கட்டப்பட்டு; மரத்தின் கிளையில் சிறை வைக்கப்பட்டாயா..?’’
நிதானமாகக் கேட்ட கரிகாலனை பிரமிப்புடன் பார்த்தான் அந்த மனிதன்.தான், எதுவும் சொல்லாமல் நடந்த அனைத்தையும் ஏதோ நேரில் பார்த்தது போல் சொல்லும் திறமைசாலி, பல்லவப் படையின் உபசேனாதிபதியாக இருக்கும் வரை சாளுக்கியர்கள் மட்டுமல்ல... வேறு எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களாலும் பல்லவ நாட்டைக் கைப்பற்ற முடியாது...மனதுக்குள் சொல்லிக் கொண்டவன், வாயைத் திறந்து ‘‘ஆம்...’’ என்றான்.

‘‘வந்தவன் யார்..?’’
‘‘எனது தம்பி...’’
‘‘பொன்னனா..?’’
அந்த மனிதனின் கண்கள் விரிந்தன. ‘‘ம்...’’
‘‘நீங்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள் என்பது நமக்கு சாதகமான அம்சம்...’’
‘‘...’’
‘‘உன் சகோதரன் விநயாதித்தனிடம் என்ன சொன்னான்..?’’
‘‘மரத்தின் கிளையில் என்னை அடைத்ததால் அவர்கள் உரையாடல் துல்லியமாக என் செவியில் விழவில்லை...’’
‘‘விழுந்தவரை சொல்...’’சொன்னான்.

கரிகாலனின் நயனங்கள் சிந்தனையில் ஆழ்ந்தன. சில கணங்கள்தான். பிறகு சட்டென ஒளிர்ந்தன. ‘‘உத்தமா...’’
‘‘கட்டளையிடுங்கள் கரிகாலரே...’’

‘‘இரட்டைப் பிறவிகள் என்பதால் பொன்னனும் நீயும் அச்சு அசலாக ஒரே உருவமாக இருப்பீர்கள்...’’
கரிகாலன் முடிப்பதற்குள் உத்தமன் இடைமறித்தான். ‘‘நாசியின் அளவு மட்டுமே வேறுபடும்... அது கூட சிறிய அளவில்தான்...’’
‘‘அதாவது யார் உத்தமன்... யார் பொன்னன் என்பதை சட்டென கண்டுபிடிக்க முடியாது... அப்படித்தானே..?’’
‘‘எங்கள் உறவினர்களே பல நேரம் குழம்பியிருக்கிறார்கள்...’’

கரிகாலன் புன்னகைத்தான். ‘‘இது போதும். அடுத்த ஆட்டத்தைத் தொடங்கலாம்... உத்தமா நேராக காஞ்சிக்கும் மல்லைக்கும் இடையில் இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு செல்... அங்குதான் இப்பொழுது விநயாதித்தன் இருக்கிறான். அவன் மட்டுமல்ல...’’
உத்தமன் இமைக்காமல் கரிகாலனைப் பார்த்தான்.

‘‘கடிகை பாலகனும், காபாலிகனும், சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் சகோதரரான அனந்தவர்மரும்கூட அங்குதான் இருக்கிறார்கள்...இதே பறவை சித்தராக அங்கு செல்... விநயாதித்தனைச் சந்தித்து...’’ என்றபடி உத்தமனை நெருங்கி அவன் செவியில் சிலவற்றை கரிகாலன் முணுமுணுத்தான்.
உத்தமனின் வதனம் மலர்ந்தது. ‘‘இம்முறை வெற்றியுடன் திரும்புகிறேன் கரிகாலரே...’’கரிகாலன் புன்னகைத்தான்.

‘‘சொல்லாமல் கொள்ளாமல் எங்கு சென்றீர்கள் மன்னா..?’’ கேட்டபடியே ராமபுண்ய வல்லபர் வந்தார்.
விக்கிரமாதித்தர் அலட்சியமாக அவரைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டார்.
‘‘செல்ல வேண்டிய இடத்துக்கு...’’
‘‘கணிகையர் இல்லத்துக்கா..?’’
சாளுக்கிய மன்னரின் நயனங்கள் தீயைக் கக்கின. ‘‘யாரிடம் உரையாடுகிறீர்கள் என்று தெரிந்துதான் பேசுகிறீர்களா..?’’
‘‘எங்கள் மன்னரிடம் பேசுகிறோம் என்று தெரிந்துதான் உரையாடுகிறேன்...’’

‘‘அறிந்துமா இப்படியொரு வினாவைத் தொடுத்தீர்கள்..?’’
‘‘தொடுத்ததற்கு உரிய பதில் வராதபோது, இதுவாக இருக்கலாமோ என்று இன்னொரு கேள்வியை எழுப்பினேன்...’’
‘‘எழுப்பப்பட்ட வினா தவறானது...’’
‘‘எனில் சரியான விடையைப் பகிரலாமே...’’
‘‘பதில் சொல்ல விருப்பமில்லை... நீங்கள் செல்லலாம்...’’
‘‘அறிந்து கொள்ளாமல் செல்ல முடியாது மன்னா...’’
‘‘நான் மன்னன்...’’

‘‘அதனால்தான் எங்கு சென்றீர்கள் என்று கேட்கிறேன்...’’
ராமபுண்ய வல்லபரை உற்றுப் பார்த்தார் சாளுக்கிய மன்னர்.
அப்பார்வையை எதிர்கொண்டு அசையாமல் நின்றார் சாளுக்கிய போர் அமைச்சர்.
‘‘ஒரு மன்னனுக்கு இந்த உரிமை கூட இல்லையா..?’’
‘‘இல்லை மன்னா...’’

‘‘காரணம்..?’’
‘‘நாம் எதிரி நாட்டில் இருப்பதால்...’’
இதைக் கேட்டு கடகடவெனச் சிரித்தார் விக்கிரமாதித்தர். ‘‘இந்த காஞ்சி மாநகரம் இப்பொழுது சாளுக்கியர்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது... இன்று பல்லவ நாட்டின் மன்னனும்் நான்தான்...’’
‘‘பெயர் அளவுக்கு...’’

‘‘என்ன சொன்னீர்கள்..?’’
‘‘பெயர் அளவுக்கு பல்லவ நாட்டை நாம் ஆள்கிறோம் என்று சொன்னேன்...’’
‘‘இப்படிச் சொல்பவர் எனக்கு
அமைச்சராக இருக்கிறார்...’’

‘‘சின்ன திருத்தம் மன்னா... ஏதோ ஒரு துறையின் அமைச்சராக அல்ல... போர் அமைச்சராக பதவி வகிக்கிறார்...’’
‘‘எனில் சாளுக்கியர்கள் கோழைகள் என்கிறீர்கள்...’’
‘‘பல்லவப் படை இன்னும் அழிக்கப்படவில்லை என நினைவுபடுத்துகிறேன்...’’
‘‘எனவே எங்கு சென்றாலும் உங்களிடம் உத்தரவு பெற்றுவிட்டுச் செல்லவேண்டும் என கட்டளையிடுகிறீர்கள்...’’
‘‘மன்னரின் உயிரைக் காக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்கிறேன்...’’

‘‘தனியாக வருபவனைக் கொல்லும் அளவுக்கு பல்லவர்களின் நிலை தாழ்ந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா..?’’
‘‘யுத்தத்தில் தரம் தாழ்தல்... அறம்... தர்மம்... என எதுவும் கிடையாது மன்னா... சொல்லப்போனால் போர்க்களத்தில் பொது விதி என்றே எதுவும் இல்லை... எது எப்படி எந்த விதத்தில் நடந்தாலும் சகலமும் ராஜதந்திரமாகவே கருதப்படும்...’’
‘‘... என்கிறதா சாஸ்திரம்...’’
‘‘... என்கிறது அனுபவம்...’’

‘‘எனவே, ஒரு நாட்டின் மன்னன் தன் போர் அமைச்சருக்கு கட்டுப்பட்டவன்... அப்படித்தானே?’’
‘‘தன் படைகளுக்கு கட்டுப்பட்டவன்...’’ தலை நிமிர்ந்து சொன்னார் ராமபுண்ய வல்லபர். ‘‘மன்னருக்காகத்தான் படைகள்... மன்னரால்தான் படைகள்... மன்னரைச் சுற்றித்தான் படைகள்... படைகளின் அச்சாணியே மன்னர்தான் என்னும்போது அச்சாணியைப் பாதுகாக்க வேண்டியது படைகளின்... படைவீரர்களின் கடமை... அப்படைகளின்... படை வீரர்களின் தலைவனான போர் அமைச்சரின் பொறுப்பு...’’
‘‘அந்தப் பொறுப்பின் பொருட்டுதான் என்னை நிற்கவைத்து விசாரணை நடத்துகிறீர்களா..?’’
‘‘வழிநடத்துகிறேன் என்று சொல்வது சரியாக இருக்கும் மன்னா...’’


‘‘எப்படி..? தன் மன்னரையே வேவு பார்ப்பதன் வழியாகவா..?’’ கேட்டபடியே ராமபுண்ய வல்லபரை நெருங்கி வந்தார் விக்கிரமாதித்தர். ‘‘உங்களால் பணியமர்த்தப்பட்ட வீரர்கள் என்னைப் பின்தொடர்வது எனக்குத் தெரியும்
அமைச்சரே...’’

‘‘நன்றி மன்னா... என் கடமையை நான் சரிவர செய்கிறேன் என்பதை தாங்கள் புரிந்து கொண்டதற்கு...’’
விக்கிரமாதித்தரின் உதட்டில் இகழ்ச்சி வழிந்தது. ‘‘நான் எங்கு சென்றேன் என தங்களுக்குத் தெரியும்... அப்படியிருந்தும் ‘எங்கு சென்றீர்கள்’ என என்னிடமே கேட்கிறீர்கள்... இதற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்..?’’
‘‘உண்மையை... சென்ற இடத்தில் நடந்ததைச் சொல்லுங்கள்...’’
‘‘உங்களால் அனுப்பப்பட்டவர்கள் எதுவும் சொல்லவில்லையா..?’’
‘‘இல்லை...’’

‘‘ஏன்... அவர்கள் சரிவர பணியாற்றவில்லையா..?’’
‘‘சாளுக்கிய குடிமகன் தன் பணியை சரிவர செய்வதுபோல் வேறு எந்த தேசத்தவனும் தன் கடமையைச் செய்வதில்லை...’’
‘‘அப்படியானால் எதற்காக என்னிடம் கேட்கிறீர்கள்..?’’
‘‘மன்னரின் உயிருக்கு ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்வதுதான் அவர்களது பணியே தவிர பாண்டிய மன்னருடன் என்ன பேசினார் என ஒட்டுக் கேட்பதல்ல...’’

‘‘ஆக, நான் மதுரைக்கு ரகசியமாகச் சென்றது உங்களுக்குத் தெரியும்...’’
‘‘அரிகேசரி மாறவர்மருடன் தனிமையில் என்ன பேசினீர்கள் என்று தெரியாது...’’
‘‘தெரிந்து என்ன செய்யப் போகிறீர்கள்...’’
‘‘பாண்டிய நாட்டு மன்னருடன் எங்கள் சாளுக்கிய மன்னர் என்ன பேசினார் என்று தெரிய வேண்டியது சாளுக்கிய தேசத்தின் போர் அமைச்சரின் கடமை...’’

‘‘சொல்ல மறுத்தால்..?’’
‘‘தன் நாட்டின் நலனுக்காகவும், தன் குடிமக்களின் மகிழ்ச்சிக்காகவும், தன் பிரதிநிதிகளின் பாதுகாப்புக்காகவும் வாழும் எங்கள் மன்னர் ஒருபோதும் தன் பொறுப்பில் இருந்து மீற மாட்டார்...’’
‘‘கடமை... பொறுப்பு... விசாரணை... நானும் மனிதன்தானே..?’’
‘‘மன்னன் ஒருபோதும் மனிதனல்ல... அவர் தன் தேசத்தின்... நாட்டு மக்களின் பிரதிநிதி...’’
விக்கிரமாதித்தர் பெருமூச்சு விட்டார். ‘‘உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்...’’

‘‘சீனனை மதுரை தச்சர் வீதியில் தாங்கள் சந்தித்தது... கச்சையை எரித்தபோது கிடைத்த தேவ மூலிகையின் சாம்பல்... பொக்கிஷங்கள் தொடர்பான குறியீடுகள்... இவை எல்லாம் உங்கள் போர் அமைச்சரான அடியேனும் அறிவேன்... காஞ்சியிலும் அதேபோன்று நிகழ்ந்தது...’’ நிறுத்திய ராமபுண்ய வல்லபர் தன் மன்னரை சங்கடத்துடன் நோக்கினார். ‘‘அறிந்துகொள்ள விரும்புவது பாண்டிய மன்னர் தங்களிடம் என்ன சொன்னார் என்பதை...

காரணம், விருந்தினராக நீங்கள் மதுரைக்குச் செல்லவில்லை... பகையாளியாகவும் நுழையவில்லை... ரகசியமாகச் சென்றீர்கள்... உங்களை எதிர்கொண்டு உபசரித்து அதே ரகசியத்துடன் அரிகேசரி மாறவர்மர் அனுப்பி வைத்திருக்கிறார்... இதற்கு நடுவில் பரம ரகசியமாக உங்களுடன் உரையாடியிருக்கிறார்... அந்த உரையாடலில், நடைபெறவிருக்கும் பல்லவ - சாளுக்கிய போர் குறித்து பேச்சு இடம்பெற்றதா..?’’
‘‘இல்லை...’’‘‘அப்படியானால்..?’’‘‘போர் குறித்து உங்களிடமும் விநயாதித்தனிடமும் என்ன சொன்னாரோ அதையேதான் உறுதிப்படுத்தினார்... ஆனால், வேறொரு தகவலைச் சொன்னார்...’’

‘சொல்லுங்கள்’ என்பதுபோல் அவரையே பார்த்தார் ராமபுண்ய வல்லபர்.‘‘பல்லவ இளவரசியான சிவகாமியை நாம் சிறைப்பிடித்து... அவள் போலவே இருக்கும் நம் ஒற்றர் படைத்தலைவியை ‘சிவகாமி’யாக பல்லவர்களுக்குள் ஊடுருவவிட்டிருக்கிறோம் அல்லவா... அதுவே நாம் செய்த பெரிய பிழை என்கிறார் பாண்டிய மன்னர்...’’‘‘இதில் என்ன பிழையை அவர் காண்கிறார்..?’’

‘‘பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மனுக்கு இரத்த சம்பந்தமாக மட்டுமல்ல... வளர்ப்பு ரீதியிலும் மகளே கிடையாதாம்...’’
‘‘அதுதான் தெரியுமே மன்னா... நரசிம்மவர்ம பல்லவனின்
காதலியான ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமியின் வளர்ப்புப்
பேத்திதானே இந்த சிவகாமி...’’‘‘இல்லை என்கிறார் அரிகேசரி மாறவர்மர்...’’
‘‘என்ன...’’ அதிர்ந்தார் ராமபுண்ய வல்லபர்.

‘‘ஆம் அமைச்சரே... வாதாபி தீக்கிரையாகட்டும் என சபித்து... அந்த சபதம் நிறைவேறியதைப் பார்த்து ரசித்த நடன மங்கையான சிவகாமி... எந்த பெண்பிள்ளையையும் வளர்க்கவும் இல்லையாம்... பேத்தியாகக் கருதவும் இல்லையாம்... மாறாக ஓர் ஆண்
மகவை தன் பேரனாக தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கினாராம்!’’

‘‘உத்தமனை காஞ்சி - மல்லைக்கு இடையில் இருக்கும் சத்திரத்துக்கு அனுப்பியிருக்கிறீர்களா..?’’ தலையை
உயர்த்தி சிவகாமி கேட்டாள்.பதிலேதும் சொல்லாமல் அவள் இதழில் கரிகாலன் முத்தமிட்டான்.
‘‘நானும் பொன்னனை அதே இடத்துக்கு விநயாதித்தனைச்
சந்தித்துப் பேசும்படி அனுப்பியிருக்கிறேன்!’’ என்றபடி கரிகாலனின் பரந்த மார்பில் தன் முகத்தைப் பதித்து ஒன்றினாள்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்