உள்ளங்கையில் சிவப்பு புள்ளி வைத்து போட்டோ எடுத்து அனுப்புங்க!



பெண்களே... வீடுகளில் நடைபெறும் வன்முறைகளுக்கு தீர்வு காண நினைக்கிறீர்களா..?

உள்ளங்கையில் சிவப்பு புள்ளி வைத்து போட்டோ எடுத்து அனுப்புங்க!


‘தனியாகச் சென்ற பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!’,

‘12 வயது சிறுமிக்கு உறவினர்களால் நடந்த பயங்கரம், மின்சாரம் பாய்ச்சி சிறுமி கொலை!’இப்படி ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்கள், செய்திச் சேனல்கள், சமூக வலைத்தளங்களில் பதிவாகும் செய்திகள் ஏராளம் என்றால் பதிவாகாமல் இருக்கும் செய்திகள் அதைவிட பலமடங்கு அதிகம்.
இவற்றைப் படித்தும், பார்த்தும் கோபம் கொள்கிறோம்; குமுறுகிறோம், விவாதிக்கிறோம், உச் கொட்டி மனமுடைகிறோம். இதைத் தாண்டி வேறு எதையும் நாம் செய்வதில்லை.

செய்திகளில் வரும் இதுபோன்ற நிகழ்வுகள் அசாதாரணமானவை. ஆனால், இதை விட பன்மடங்கு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நம் அக்கம்பக்கத்தில்... ஏன், நம் இல்லத்திலேயே நடக்கின்றன. ‘பாத்திரம் கழுவிக்கிட்டே இருக்கேன்... சேர்ந்துகிட்டே இருக்கு. எந்நேரமும் கிச்சன்லயே இருக்கேன்...’ என்று மனதுக்குள் அழும், துளியளவு உதவியில்லாமல் தவிக்கும் உங்கள் வீட்டுப் பெண்களிடம் பேசிப் பாருங்கள். தான், அனுபவிக்கும் கஷ்டங்களை வெள்ளமாகக் கொட்டுவார்.

படித்த, அன்பான குடும்பங்களிலேயே இப்படி எனில் கிராமங்களில் படிப்பறிவில்லாத வீடுகளில் பெண்களின் நிலை..? நினைக்கவே உடல் அதிர்கிறது அல்லவா..?
இப்படி வீடுகளில் நடைபெறும் வன்முறைகளுக்குத் தீர்வு காணத்தான் பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இதி ராவத் ‘Red Dot Campaign’ என்னும் ஒரு பிரசார செயல் மூலம் இந்தியா முழுவதும் களமிறங்கியிருக்கிறார். ‘‘தினம் தினம் குடிச்சுட்டு வந்து தன் மனைவியை அடிக்கும் கணவனை எல்லோருமே நாள்தோறும் பார்க்கிறோம். ஆனால், தட்டிக் கேட்கத் தோன்றியதேயில்லை. காரணம், அவன் கணவன்... தன் மனைவியை அடிக்கிறான்... இது அவன் உரிமை... என்ற எண்ணம் நம் எல்லோர் மனதிலும் ஆழப் பதிந்திருக்கிறது. குறிப்பாக பெண்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்பதுதான் வேதனை.

மனைவி என்றால் அடிக்கலாமா..? இந்த உரிமையை யார் கணவனுக்குக் கொடுத்தது..?’’ நறுக் என்று கேட்டபடி பேசத் தொடங்குகிறார் இதி ராவத்.
‘‘இந்த ரெட் டாட் தொடங்குவதற்கு முன் WEFT அமைப்பை ஆரம்பித்தோம். பெண்கள் முன்னேற அவர்களுக்கென ஒரு தொழிலை உருவாக்கிக் கொடுப்பதுதான் WEFTஇன் (Women Entrepreneurs For Transformation) பணி. வேலைகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், எதிர்கொள்ளும் சவால்கள், சங்கடங்கள்... இதையெல்லாம் போக்கி போதுமான ஆதரவை அவர்களுக்குக் கொடுத்து வணிக ரீதியாக அவர்களை வெற்றி பெற வைத்து தொடர்ந்து வாய்ப்புகளை வழங்குவதுதான் WEFTஇன் வேலை.

இதற்காக யாரிடமும் பண உதவி பெறுவதில்லை. நிறைய தன்னார்வலர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். அவர்கள் தத்தம் பகுதிகளில் WEFT செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறார்கள்.பெண் தொழில் முனைவோருக்காக வங்கிகளில் போதுமான நிதி உதவிகள் அளிக்கப்படுவதில்லை.
இதையெல்லாம் மனதில்  வைத்துதான் WEFT அமைப்பைத் தொடங்கினோம். ஆரம்பத்தில் 80 உறுப்பினர்கள் கொண்ட குழுவாகச் செயல்பட்டோம். இப்போது 1500 உறுப்பினர்கள் சூழ களத்தில் இருக்கிறோம். ஒருவருக்கு ஒருவர் நிதி உதவி, பயிற்சி... இப்படி எல்லாமே பகிர்தல் முறையில் நடக்கின்றன.  
ரீடெயில் பிஸினஸ் விரிவாளராக ஃபிளை (Fly) கார்ப்பரேஷனில் பத்து வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் எனக்கு உண்டு. அதனால்தான் WEFT அமைப்பை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்த முடிகிறது...’’ என்று சொல்லும் இதி ராவத், இதன் அடுத்த கட்டமாக தொடங்கப்பட்டதுதான் ‘ரெட் டாட்’ பிரசாரம் என்கிறார். ‘‘வீட்டில் நடக்கும் வன்முறைகள், பெண்களுக்கு நடக்கும் அநீதிகள் எல்லாம் இந்த கொரோனா பொது ஊரடங்கு காலத்தில் அதிகமாகி இருக்கிறது.

அதற்குக் காரணம் ஆண்களுக்கு இக்காலங்களில் ஏற்பட்டுள்ள அளவுக்கு அதிகமான மன அழுத்தங்கள். சம்பளம் இல்லாமை, வேலை இல்லாமல் போவது, வீட்டில் ஆபீஸ் வேலை செய்வது, அதிக வேலைப்பளு... என நீளும் பட்டியலால் அவதிப்படும் ஆண்கள் அதற்கான வடிகாலாக தங்கள் வீட்டுப் பெண்களை அடிப்பது, உதைப்பது, ஆபாச வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களில் இறங்குகிறார்கள்.

இந்த கொரோனா பொது முடக்கத்தால் இல்லத்தரசிகளும் அதிகளவு மன அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதை வீட்டு ஆண்கள் உணரவேயில்லை. இப்படி வீட்டு வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு உதவுவதற்காகத்தான் ‘ரெட் டாட்’ தொடங்கியிருக்கிறோம். பிரச்னை என யார் குரல் கொடுத்தாலும் எங்கள் குழு உறுப்பினர்கள் அங்கு ஆஜராகி உதவுவார்கள்.

எங்களுக்கு வந்த ஒரு மின்னஞ்சல் மொத்தமாக எங்களை திசை திருப்பியது, மாதந்தோறும் பிசினஸ் சந்திப்புகள் தொடர்பாக மெயில் வழியாகப் பேசுவோம். அப்படி உரையாட ஆரம்பித்த ஒருநாள் எங்கள் உறுப்பினர் ஒருவர், ‘எனக்கு பிசினஸ் உதவியை விட அந்தரங்க உதவிதான் இப்ப தேவை’ என மின்னஞ்சல் செய்தார்.அதாவது சொந்த வீட்டிலேயே, தான் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்ததைப் பகிர்ந்து உதவி கேட்டிருந்தார். தாமதிக்காமல் உடனே செயல்பட்டு அவரது பிரச்னையைத் தீர்த்து வைத்தோம்.

அந்தக் கணத்தில்தான் இப்போதைய முக்கியமான தேவை வீட்டு வன்முறைகளைத் தீர்ப்பதுதான் என்பது எங்களுக்குப் புரிந்தது. உடனடியாக எங்கள் குழு உறுப்பினர்களை அந்தந்த பகுதிகளின் பிரதிநிதிகளாக நியமித்தோம்...’’ என்ற இதி ராவத், பாதிக்கப்படும் பெண்கள் தங்களை எப்படி தொடர்பு கொள்ளலாம் என்று விவரித்தார்.

‘‘வீட்டுக்குள் நடக்கும் பிரச்னைகளை வெளியில்... ஏன், அக்கம்பக்கத்தில் கூட பெண்களால் சொல்ல முடியாது. குடும்ப மரியாதை, கவுரவம், பயம்... என இதன் பின்னால் பல காரணிகள் இருக்கின்றன. எனவே, பெண்கள் தங்களுக்கு நேரும் அவலங்கள் குறித்து வாயே திறக்க மாட்டார்கள்.

பெண்களின் இந்த மனப்பான்மையை நாங்கள் மதிக்கிறோம். எனவேதான் ‘சிவப்பு புள்ளி’ என்பதை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

அதாவது எதுவும் சொல்லாமல், விளக்காமல், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் உள்ளங்கையில் சிவப்பு நிற புள்ளி அல்லது பொட்டை வைத்து அதை செல்போனில் போட்டோ எடுத்து, வீடு இருக்கும் லொகேஷனுடன் weftinfo@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் போதும்; அல்லது 9686119822 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்தால் போதும். உடனே சம்பந்தப்பட்ட பகுதியில் இருக்கும் எங்கள் குழுவினர் அந்த வீட்டுக்கு விரைவார்கள். உங்கள் பிரச்னையைத் தீர்த்து வைப்பார்கள்.

இந்த கான்செப்ட்டை ஒரு ஸ்டேட்டஸாக ஃபேஸ்புக்கில் எழுதினோம். ஒருசில நிமிடங்களுக்குள் 200க்கும் மேற்பட்ட அழைப்புகள் எங்களுக்கு வந்தன...’’ பெருமூச்சுவிடும் இதி ராவத், தங்களுக்கு வரும் எல்லா அழைப்புகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காண்பதாகச் சொல்கிறார்.

‘‘உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்றேன். ஒரு பெண் வீங்கிய தன் கால்களையும் தழும்பான தன் முதுகையும் புகைப்படம் எடுத்து அனுப்பினாங்க. வரதட்சணைக் கொடுமை. மாமியாரும் நாத்தனார்களும் அடித்து ஏற்படுத்திய காயம். கணவனுக்கு வெளியூர்ல வேலை.

வாரக் கடைசியில் வீட்டுக்கு வருவானாம். மனைவி என்னவிதமான கஷ்டங்களை அனுபவிக்கிறாள் என்பதை அறிந்துகொள்ளாமல்... அவளே பேசவந்தாலும் அவளை மவுனமாக்கிவிட்டு மிருகத்தனமாக பலாத்காரம் செய்திருக்கிறான். இப்படியே பல மாதங்கள். உடனடியாக அப்பெண்ணை மீட்டு பாதுகாப்பு கொடுத்திருக்கிறோம்.

இப்படி நிறைய சம்பவங்கள். நீங்கள் எந்த ஊரில்... எந்த மாநிலத்தில் இருந்தாலும் பரவாயில்லை... வீட்டு வன்முறையால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்...’’ என்கிறார் இதி ராவத்.

ஷாலினி நியூட்டன்