வலைப் பேச்சு



@Maanaseegan - ஐம்பது வயதைத் தாண்டிய பிறகும் எஸ்பிபி, பெண்களுக்கு தந்தையின் பிம்பமாக மாறவில்லை. ஜேசுதாஸ்தான் தந்தை பிம்பத்திற்கான சரியான ஆள்.இறுக்க அணைக்கும் காதலனுக்கும், பட்டும் படாமல் கை கொடுக்கும் நண்பனுக்கும் நடுவில் இருந்தார்.
அவர் கண்ணனுமில்லை; இராமனுமில்லை. இரண்டுக்கும் இடைப்பட்டவர். அவரை யார் வேண்டுமானாலும் காதலித்துக் கொண்டேயிருக்க முடியும். ஆனால், அது பெண்களுக்குத் தொந்தரவே தந்து விடாத அபூர்வமான காதல்.

அவரைப் பார்க்கவே வாய்ப்பு கிடைக்காத நம் வீட்டுப் பெண்களில் தொடங்கி, அவரோடு சேர்ந்து பாடிய சித்ரா, சுஜாதா, அனுராதா ஆகியோருக்கு மட்டுமல்ல; அவருடைய குழந்தை வயது கொண்ட ஸ்வேதாவிற்கும், ஹரிணிக்கும், ஏன்... அவரை விட வயதில் மூத்த ஜானகியம்மாவிற்கும், எல்.ஆர்.ஈஸ்வரிக்கும் கூட இந்தக் காதல் இருந்திருக்க முடியும்.

ஆண்களுக்குத்தான் அவர் உற்ற தோழனின் வடிவம்; தலை கோதும் தந்தையின் வடிவம். பெண்களுக்கு அவர் தீராக்காதலன்.
கோடிக்கணக்கான பெண்கள் தன்னை இரகசியமாகவும், வெளிப்படையாகவும் காதலிப்பதை அவரும் உணர்ந்திருந்தார். அந்தக் காதலை பாடல்களில் மட்டும் திருப்பித் தந்தார். சகலத்தையும் மறந்து அந்த உணர்வில் குதித்து ஆழ நீந்தி ப்ளேபாயாக மாறிவிடாமல் வாழ்வின் சுமை உணர்ந்தபடி அதே உணர்வை கவனம் பிசகாமலும் கையாண்டு ஜென்டில்மேனாகவும் வலம் வந்தார்..

இந்த உணர்வில் திளைத்த பரவசமும், திருப்தியும்தான் அவரை மிகச் சிறிய வயதிலேயே பணிவும், கனிவும் கொண்டவராக மாற்றியது.
ஆம்; அவர் பெண்களால் காதலிக்கப்படுவதையே ஞானத்திற்கான பாதையாகத் திருப்பிக் கொண்டவர்.

அவரோடு உரையாடும்போதெல்லாம் நிரம்பி வழியும் சித்ரா அம்மாவின் வெட்கமும், ஜானகி அம்மாவின் பொய்க்கோபமும், உரிமை நிரம்பிய பெருங்காதலோடு தோளில் புதைந்துகொண்ட அனுராதா ராமின் கண்ணீரும், அவர் பாடுகிற போது ஓரக்கண்ணால் பார்த்துப் பார்த்துப்
பரவசப்படும் சுஜாதாவின் கண்களில் பெருகித் ததும்பும் காதலும், உச்சபட்சமான ரசனையில் கண்களை மூடி அவரைக் கண்டு ஸ்வேதா அடைகிற பரவசமும், இன்னும் கோடிக்கணக்கான ஏழு பருவத்துப் பெண்களின் பேசித் தீர்க்க முடியாத பெருங்கனவுகளும் அதே வண்ணங்களோடு அப்படியே
இருக்கின்றன.ஒரு பாடகனை அல்ல... தீராக்காதலனைப் புதைத்துவிட்டு வந்திருக்கிறோம்...

@Magudeswaran Govindarajan - எஸ்பிபியின்மீது நமக்கேன் இவ்வளவு உணர்ச்சிப்பற்று என்பது விளங்கிவிட்டது. என்னதான் இசை மயக்கம் இருப்பினும் இது அதனையும் தாண்டிய அன்பாகத் தெரிகிறதே. வெறும் இசைத் துய்ப்பின்பாற்பட்ட அன்பு என்று இதனைச் சுருக்க இயலாதே. அனைத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பு இருக்க வேண்டுமே. அது என்ன?

இப்பிறவியில் நம் செவிபட்டு உணர்வில் தைத்த சொற்களைத் தொடர்ந்து கூறிக்கொண்டே (பாடிக்கொண்டே) இருந்தவர்களில் அவருக்கே முதலிடம்.
தாய் தந்தை உள்ளிட்ட பிற உறவுகள்கூட ஒரு கட்டத்தில் நம்முடன் சொல்லாடுவதைக் குறைத்துக் கொள்கின்றனர். அவர் எப்போதும் குறைத்துக் கொள்ளவில்லை. இவ்வாழ்வில் மற்றவர்கள் நம்மிடம் பல பத்தாயிரம் சொற்களால் உறவாடினர் என்றால் எஸ்பிபி நம்மோடு அதனைவிடவும் மிகுதியான சொற்களால் உள்ளம் புகுந்தார். அது எண்ணிக்கையாலும் மிகுதி; எண்ணத்தாலும் நெருக்கம்.
அவர் நம் காலத்தின் குரல், நம் சொற்களின் தலைவன், உடனிருந்த தொடர்ச்சியான தோழமை, செவிகளை நிரப்பிய சொற்றுளிகளால் ஆன மொழியூற்று.

@Vignesh Subramanian - இறையருள் பெற்ற செவ்வியல் பாடகர்கள் தனி ரகம். இசைக்கலையில் தேர்ச்சி பெற்றபின் உத்தியையும் உணர்ச்சியையும் சரியான அளவில் கலந்து திறமைக்கு நியாயம் செய்பவர்கள் அவர்கள்.  ஆனால், பின்னணிப் பாடகர்கள் வேறு ரகம். செவ்வியல் இசைக்குரிய அதே வீரியம் அங்கு தேவைப்படுகிறது. அதே சமயம் வேறொருவராக மாறிக் கூடுபாய்ந்தவர்களின் கதையைச் சொல்லும் சவாலும் சேர்ந்து கொள்கிறது.

ஒரு நடிகனைப் போல் நீங்கள் காதல் செய்ய வேண்டும், சல்லாபிக்க வேண்டும், சிரிக்க வேண்டும், அழ வேண்டும், சண்டை போட வேண்டும், வெறுக்க வேண்டும், வேறு எந்த உணர்ச்சியையும் ஒரு பொத்தானை அழுத்தினால் நடப்பதைப் போல வெளிப்படுத்த வேண்டும்.
சில சமயம் அந்த உணர்ச்சிகளை மிகைப்படுத்த வேண்டும். சில சமயம் மிக நுட்பமாகக் குறைக்க வேண்டும். இது அத்தனையையும் கண்ணுக்குத் தெரியாத குரல் என்ற ஒற்றை ஊடகத்தை மட்டுமே கொண்டு செய்ய வேண்டும்!இந்தச் சகலகலா வல்லமையின் மொத்தப் பிரதிநிதியாய் முதலும் கடைசியுமாய் எனக்குத் தோன்றுபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மட்டுமே.

@Shoba Sakthi - எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை என் காதில் அம்மாவின் குரலோ, வேறு யாருடைய குரலோ தினந்தோறும் ஒலிக்க வாய்ப்பிருந்ததில்லை.  ஆனால், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் ஒருநாள் தவறாமல் எனக்குக் கேட்டுக்கொண்டிருந்தது. சிங்கள சிறையிலிருந்த போது கூட யாராவது ஒரு சிறைத் தோழன் அவரைப் பாடிக்கொண்டிருப்பான்.

எம்ஜிஆர் ரசிகர்களான எங்களுக்கு எஸ்.பி.பி. எங்களுடைய ஆள் என்ற ஒரு பிணைப்பிருந்தது. ‘ஆயிரம் நிலவே வா’ எனத் தொடக்கி வைத்த வாத்தியார் ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’, ‘அவளொரு நவரச நாடகம்’, ‘பாடும்போது நான் தென்றல் காற்று’ என ஒவ்வொரு படத்திலும் எஸ்.பி.பி.யைத் தன்னுடனேயே அழைத்து வந்தார்.

நடிகர் திலகத்துக்கு எஸ்.பி.பி. பாடியது மட்டும் குறைச்சலா என்ன! ‘பொட்டு வைத்த முகமோ’ பாடி ஐம்பது வருடமிருக்குமா? இன்றுவரை பாரிஸில் நடக்கும் எந்த இலக்கியக் கூட்டத்தின் பின்னிரவும் இந்தப் பாடலைப் பாடாமல் முடிவதில்லையே.‘மணியோசை கேட்டு எழுந்து’ என்றொரு பாடல். இருமிக்கொண்டே பாடுவார். என் பள்ளிக் காலத்தில் அந்தப் பாடல் மிகப் பிரபலம். கேட்டு பித்துப் பிடித்திருந்தோம். பொடியன்கள் லவ் லெட்டரில் கூட இந்தப் பாடலை எழுதுவார்கள். இசைஞானியோடு அவர் சேர்ந்த பாடல்களைப் பற்றி நான் என்ன சொல்வது! எதைச் சொல்வது! ‘அந்தி மழை பொழிகிறது’ கேட்ட போதுதானே காதலிக்கவே ஆசை வந்தது.  

டி.ராஜேந்தர் இசையில் அவர் பாடிய பாடல்கள் அப்போது எங்கள் சுவாசமல்லவா. ‘வசந்தம் பாடி வர’ என மயங்கியும், ‘நானும் உந்தன் உறவை’ எனக் கலங்கியும் திரிந்தோமே. ‘வாசமில்லா மலரிது’வை தொடங்கும் போது எஸ்.பி.பி. சிரிக்கும் கசப்பான சிரிப்பே ‘ஒருதலைராகம்’ படத்தின் மொத்தக் கதையையும் சொல்லிவிடுமே!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அவர் பாடிய ‘தங்கத் தாமரை மகளே’ பாடலுக்கு தேசிய விருது என்ற செய்தி வெளியாகியபோது அவர் பாரிஸில் பாடிக்கொண்டிருந்தார். ‘அதாண்டா இதாண்டா’ பாடலை அவர் முழங்கிய போது பார்வையாளர் வரிசையிலிருந்த சிலர் மீது அருள் வந்து  ரஜினிபோல கைகளை விசுக்கிக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடக்கத் தொடங்கிவிட்டார்கள்.

அப்போது பாட்டின் நடையை எஸ்.பி.பி. மாற்றிவிட்டார். பாரிஸ் ரஜினிகளின் ஆட்டத்திற்கு ஏற்ப அவர் பாடினார். அன்று என்னவொரு கொண்டாட்டம்!  நான்கு வருடங்களுக்கு முன்பு கோவா விமான நிலையத்தில் காத்திருந்தேன். எதிர்வரிசையில் பாடும் நிலா நின்றிருந்தார். அவரிடம் போய் பேசவெல்லாம் விரும்பவில்லை. அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதுமானது என்பதால் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.
ஒரு சிறுமி அவரை நெருங்கி அவரது காலைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றாள். நான் தூர நின்றே மனதால் வணங்கினேன். அது என் பண்பாட்டை வணங்குதல் போன்றது.  

இன்று லக்ஸம்பேர்க்கிலிருந்து ரயிலில் பாரிஸுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது அவரது மறைவுச் செய்தி கிட்டியது. கிட்டத்தட்ட 12 மணி
நேரங்கள் கடந்திருக்கும் இவ்வேளையில் என்னால் எழுதாமல் இதைக் கடக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஏனெனில் நான் இழந்திருப்பது ஒரு வாழ்க்கை முறையை. ஒரு பண்பாட்டை.  
அஞ்சலி! அஞ்சலி! அஞ்சலி!