பயமுறுத்தும் apps



ஒரே நொடியில் நீங்கள் அஜித் ஆக மாறலாம்...

உங்கள் மனைவியின் ஆபாச வீடியோவும் வெளிவரலாம்...


அழகில்லாத முகத்தை அழகாகக் காட்டுவது, நினைத்த இடத்திலெல்லாம் புகைப்படம் எடுத்துக்கொண்டது போல் மாற்றுவது, இறக்கைகள் முதல் ஆசைப்பட்ட அனைத்தையும் நம் புகைப்படங்களில் எடிட் செய்துகொள்வது என வளர்ந்து வரும் தொழில்நுட்பம் எதையும் எப்படியும் விரல் நுனியில் நிகழ்த்திட சாத்தியப்படுத்தி வருகிறது.

இது சாதகமான அம்சம் என்றால்... அதன் மறுபதிப்பாக பாதகமும் ஏற்பட வேண்டுமல்லவா..? அப்படிப்பட்ட ஆபத்துகளில் ஒன்றுதான் #DeepFake.
கோடிக்கணக்கில் செலவழித்து உருவாக்கிய ‘டைட்டானிக்’ படத்தில் பைசா செலவில்லாமல் நாயகன் லியோனார்டோ டிகாப்ரியோவுக்கு பதிலாக உங்களை நீங்களே பொருத்திக் கொள்ள முடியும்! அதை வீடியோவாகவும் இணையத்தில் பதிய முடியும்!

கடந்த ஓராண்டாக மேற்கத்திய நாடுகளில் டிரெண்டில் இருந்த இந்த மென்பொருள் இப்போது நம் ஊரிலும் நுழைந்துவிட்டது. இதில் ஒரு குழு வக்கிரமான வழியில் அப்பாவிப் பெண்களின் முகங்களை ஆபாச நடிகைகளின் முகத்துடன் பொருத்தி விளையாட ஆரம்பித்திருக்கின்றனர்.
அப்படித்தான் நம்மூரில் பல நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் வாட்ஸ்அப்பில் சுற்றுகின்றன. அவை எல்லாமே போலி. ஒவ்வொருவரிடமும் ‘அது நான் இல்லை...’ என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா... என அலுப்புடன் நடிகைகள் அதை கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றனர்.

அதுவே சாதாரண, சாமான்ய பெண்ணாக இருந்தால்..? அதிர்ந்து போய் மானம் மரியாதை போய்விட்டது என தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இப்படி பெண்களின் உயிருடன் விளையாடும் DeepFake போன்ற appsஇன் அடிப்படை 19ம் நூற்றாண்டில் மோஷன் அனிமேஷன் திரைப்படங்களில் கையாளப்பட்ட தொழில்நுட்பம்தான்.

இன்று அதைக் காட்டிலும் பிரமாதமான தொழில்நுட்பங்கள் வந்துவிட்டதால் இந்த ‘டீப் ஃபேக்’ மென்பொருள் இப்போது ஆன்லைனில் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என பல வெர்ஷன்களில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றைத் தரவிறக்கம் செய்துதான் பெண்
களின் மானத்துடனும் ஆண்களின் சுயமோகத்துடனும் கயவர்கள் விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த appsஇல் சில பல துணுக்கு வீடியோக்கள் இருக்கும். உதாரணத்துக்கு, ஜேம்ஸ்பாண்ட் தன் காதலியுடன் சரசம் செய்யும் ஒன்றரை நிமிட வீடியோ. இந்த வீடியோவில் உங்கள் போட்டோவை ஏற்றினால் நீங்கள் ஜேம்ஸ்பாண்ட் ஆகக் காட்சியளிப்பீர்கள்.

போலவே தொழில்முறை ஆபாச நடிகை நடித்த ஒன்றரை நிமிட வீடியோவில் வேறொரு பெண்ணின் போட்டோவை ஏற்றினால் அந்த app கச்சிதமாக ஆபாச நடிகை செய்த அனைத்து நடவடிக்கைகளையும் பதிவேற்றிய பெண்ணின் முகம் செய்வதுபோல் மாற்றிவிடும். இது போலி என ஒருவராலும் கண்டுபிடிக்க முடியாது.

‘‘இந்தத் தொழில்நுட்பத்தில் உருவான வீடியோக்களை பொய் என நிரூபிக்க வளர்ந்த நாடுகளே தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அப்படியிருக்க இந்தியாவை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. ஏனெனில் நம் நாட்டில் சைபர் கிரைம்களுக்கு தனியாக காவல் நிலையமே சமீபத்தில்தான் கொண்டு வரப்பட்டிருக்கிறது. எனில் கண்டறியும் தொழில்நுட்பத்திற்கு எங்கே போவது?’’ என்று ஆரம்பித்தார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் ரக்‌ஷனா வேலாயுதம்.

‘‘ஆன்லைன் சைபர் குற்றங்கள் பெரும்பாலும் பெண்கள்  மற்றும் குழந்தைகளுக்கான குற்றங்களின் அடிப்படையிலேதான் இங்கே விசாரிக்கப்படுகின்றன.
ஐடி சட்டத்துடன்இணைந்த மற்ற சட்டங்களின் அடிப் படையில்தான் தண்டனைகள் வழங்கப்படும். இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்களில் கணக்கு இல்லை என்றாலும் நம் புகைப்படம் கிடைப்பது ஒன்றும் அரிதான விஷயமல்ல. ஏதோ ஒரு கல்யாண வீட்டில் நாம் கலந்துகொண்ட வீடியோவே போதுமானது; அல்லது உங்களுக்கே தெரியாமல் உங்களை நான்கு போட்டோக்கள் எடுப்பது என்ன பெரிய விஷயமா? எனவே, பிரச்னைகள் வந்தால் எப்படி அதைச் சந்திப்பது என்பதைக் கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம்.

வழக்கு தொடுத்தபின் குற்றத்தின் பாதிப்பைப் பொருத்து பாதிக்கப்பட்டவருக்கு முதலில் கவுன்சிலிங்; பிறகு ஐடி ஆக்ட் 2000ன்படி நடவடிக்கைகள் அடுத்தடுத்து எடுக்கப்படும். முகநூல், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகைப்படம், வீடியோக்கள் போடுவது நம் உரிமை. ‘பொதுவெளியில் நீ புகைப்படம் பதிவிட்டால் அப்படித்தான் நடக்கும்’ என்னும் வாதத்திற்கு இங்கே வேலையே இல்லை.
‘பொதுவெளியில் புகைப்படம் போடக்கூடாது’ என்பது நாளடைவில் பெண்களை வீட்டை விட்டு வெளியே வராதே... நடமாடாதே... என்னும் கற்கால சிந்தனைகளுக்குத்தான் அழைத்துச் செல்லும்...’’ என்கிறார் ரக்‌ஷனா.

‘‘ஐடி சட்டம் 2002, மற்றும் டேட்டா பிரைவஸி 2012ன்படி முதலில் நாம் போடும் ஸ்டேட்டஸ் உட்பட எதையும் யாரும் நம் அனுமதியின்றி பயன்படுத்த முடியாது...’’ என்கிறார் ஸ்வப்னா சுந்தர்.  ‘‘இந்த DeepFake வீடியோக்கள் மூலம் அரசியல் தலைவர்கள் சொல்லாத அறிவிப்புகளை அவர்களே சொன்னது போல் வீடியோ வெளியிட முடியும். அப்படித்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப், முகநூல் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் ஆகியோர் சிக்கினர்.

முதலில் ஒரு புகைப்படமோ அல்லது வீடியோவோ போலி எனில், சம்பந்தப்பட்ட தளத்திற்கோ, நபருக்கோ தொடர்பு கொள்ளாமல் இருப்பது நல்லது.
ஒருவேளை அந்த நபர் மிரட்டினால் கூட அடுத்தடுத்து வரும் அழைப்புகளையோ அல்லது மெஸேஜ்களையோ எடுக்காமல் சட்டத்தின் உதவியை நாடுவதுதான் சரி. முகநூலில் நாம் பதித்த ஸ்டேட்டஸ் மற்றும் புகைப்படங்கள் தவறாக வேறொருவரால் பயன்படுத்தப்படுகிறது என்றால் தைரியமாக வழக்குப் பதியலாம். இதற்குத்தான் டேட்டா பிரைவஸி சட்டம் இருக்கிறது. முதலில் ஸ்கிரீன் ஷாட் அல்லது ஸ்கிரீன் பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் மிகப்பெரும் ஆதாரம். வீடியோ எனில் ஸ்கிரீன் ரெக்கார்ட்.

ஐடி சட்டம் பிரிவு 67 ஏயின் படி ஆன்லைன் தளத்தில் பாலியல் ரீதியில் ஒருவரைத் தவறாக சித்தரிக்கும்படி பதிவிட்டால் அல்லது அதன் வாயிலாக ஒருவரை மிரட்டினால் பாதிப்பின் வீரியத்தைப் பொருத்து ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே கிடைக்கும.

ஒருவேளை குற்றத்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து பெறவேண்டியிருக்கும்...’’ என ஸ்வப்னா சுந்தர் முடிக்க, வழக்கு தொடர்ந்தபின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதை விளக்குகிறார் டிஜிட்டல் மார்க்கெட்டிங் & சொல்யூஷனின் டைரக்டரான காமேஷ் இளங்கோவன்.

‘‘பெரும்பாலும் இப்படியான பிரச்னைகள் எங்களுக்கு சட்டத்தின் வாயிலாகத்தான் வரும். கோர்ட் ஆர்டர் இருந்தால் சம்பந்தப்பட்ட தளமோ, பதிவோ, வீடியோவோ எதுவானாலும், குறிப்பிட்ட சர்வரை ஆராய்ந்து முடக்கியோ அல்லது நீக்கியோ விடுவோம்.

ஒருவேளை பதிவுகள் முகநூல் அல்லது யூ டியூப் போன்ற அதிகாரபூர்வ தளங்களில் இருந்தால் நீதிமன்ற ஆணையின் நகலைக் கொண்டு சம்பந்தப்பட்ட தளங்களின் உதவியுடனேயே அந்த பதிவுகளை நீக்குவோம்...’’ என்கிறார் காமேஷ் இளங்கோவன்.‘‘இதெல்லாம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வழி. எந்த நீதிமன்றமும் வேண்டாம், சட்டமும் வேண்டாம். பணம் இருந்தால் ரெண்டே நாட்கள்போதும்...’’ என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஹேக்கர் ஒருவர்.  

‘‘யாரோ ஒருவரிடம் உங்கள் அந்தரங்க வீடியோ இருக்கிறது. அந்த நபர் உங்களை மிரட்டுகிறார் எனில் அதை நீக்குவது சுலபம்.
ஒரு லிங்க் அல்லது அழைப்பு, மெஸ்ஸேஜ், மெயில் வசதி மூலம் மொபைல் அல்லது கணினியில் இருக்கும் குறிப்பிட்ட வீடியோவையோ அல்லது மொத்த டிவைஸில் இருக்கும் அத்தனை விவரங்களையுமோ கூட அழித்து விடலாம்.

ஆனால், ஆன்லைனில் வந்துவிட்டால் கொஞ்சம் சிக்கல்தான். சிலவகை சட்டத்தால் கூடத் தீர்க்க முடியாத அளவுக்கு இணைய தொழிநுட்பங்கள்
நவீனத்துவமாக இருக்கும். அப்படிப்பட்ட பிரச்னைகளை நீதிமன்றங்களே சில நேரங்களில் இழுத்தடிப்பதுண்டு. நாங்களே அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் ஹேக்கர்களைத்தான் இது தொடர்பாக தொடர்பு கொள்வோம்.

என்ன செய்கிறார்கள்... எப்படிச் செய்கிறார்கள் என்று தெரியாது. லிங்க் கொடுத்து அதை நீக்க வேண்டும் என்று சொல்லி, அதற்கு அவர்கள் கேட்கும் பணத்தையும் செலுத்திவிட்டால் ஓரிரு நாட்களில் அதை அந்த ஹேக்கர்கள் நீக்கிவிடுகிறார்கள்!

இப்படி அண்டர் கிரவுண்டில் மிகப்பெரிய ஹேக்கர் மாஃபியா உலகம், பிரபஞ்சத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பெண்கள் தொடர்பான பிரச்னைகளில்தான் இவர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள். எந்த நாட்டு சட்டத்தாலும் இவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. என்ன செய்ய...

உடனடி நிவாரணத்துக்கு இந்த ஹேக்கர்களைத்தான் நாம் தொடர்பு கொண்டாக வேண்டும்...’’ என அதிர்ச்சி தருகிறார் இந்த ஹேக்கர்.
குழந்தைகளின் படிப்பு முதல் சகலமும் இப்பொழுது ஆன்லைனை மையம் கொண்டிருக்கிறது. ஆன்லைனைத் தவிர்த்துவிட்டு
ஒருவராலும் இயங்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நம் கடமை. பிக்பாக்கெட் திருடன் பயணிக்கும் பஸ்ஸில் நாமும் பயணிப்பதில்லையா... நமது பொருட்களை அவன் பிக்பாக்கெட் அடிக்காதபடி பார்த்துக் கொள்வதில்லையா... அப்படித்தான் ஆன்லைனில் புழங்கவேண்டும்.பெண்களே... உங்கள் புகைப்படத்தை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் பயந்துவிடாதீர்கள்.

துணிந்து சட்டப்படி அதை எதிர்கொள்ளுங்கள்.ஆண்களே... உங்களுக்குத் தெரிந்த பெண்களின் புகைப்படங்கள் தவறாகப் புழங்குவதை நீங்கள் காண நேர்ந்தால் உடனடியாக அப்பெண்ணை தவறாக நினைக்காமல், இணையத்தில் இருந்து அப்புகைப்படத்தை / வீடியோவை நீக்குவதற்கான வேலைகளில்
சம்பந்தப்பட்ட / பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இணைந்து களம் இறங்குங்கள். அவளுக்கு தோள் கொடுங்கள்!                         

ஷாலினி நியூட்டன்