ரத்த மகுடம்-118பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘மன்னா... ஒரு நிமிடம்...’’ சட்டென விக்கிரமாதித்தரின் கரங்களில் இருந்த தன் கச்சையை சிவகாமி வாங்கினாள்.‘‘ஏன் சிவகாமி..? பார்க்க வேண்டும் என்றுதானே கொடுத்தாய்..?’’ சாளுக்கிய மன்னரின் நயனங்கள் புன்னகைத்தன.‘‘அது...’’ சங்கடத்துடன் நெளிந்தவள் கணத்தில் சுதாரித்தாள். ‘‘நானே உயர்த்திப் பிடித்துக் காட்டுகிறேன் மன்னா... அப்பொழுதுதான் நீங்கள் மட்டுமல்ல... குருநாதரும் இளவரசரும் கூட அதைப் பார்க்க முடியும்...’’விக்கிரமாதித்தர் வாய்விட்டுச் சிரித்தார்.

நாசிகள் அதிர, கன்னங்கள் சிவக்க, மன்னரிடம் இருந்து பெற்ற கச்சையை கையில் ஏந்தியபடி அறையின் கோடிக்கு சிவகாமி வந்தாள். தாழ்களை நீக்கி கதவைத் திறந்தாள்.சூரிய வெளிச்சம் அறைக்குள் பாய்ந்தது.தன் கரத்தில் இருந்த கச்சையை இருபக்கமும் ஏந்தி உயர்த்தி கதிரவனின் கதிர்கள் அதன் மீது விழும்படி பிடித்தாள். ‘‘குருநாதரே... இளவரசே... நன்றாகப் பாருங்கள்... தாங்கள் இருவரும் இதைக் காண வேண்டும் என்றுதான் உங்களிடம் கொடுத்தேன்...’’ஸ்ரீராமபுண்ய வல்லபரும், விநயாதித்தனும் அவளுக்குப் பின்னால் வந்து நின்றார்கள். சூரிய ஒளியில் தகதகத்த சிவகாமியின் கச்சையைப் பார்த்தார்கள்.

மெல்லிய சிவப்பு நிற பருத்தி நூலினால் நெய்யப்பட்ட அந்தக் கச்சையில் குறுக்கும் நெடுக்குமாக... மேலும் கீழுமாக கோடுகள் தென்பட்டன. கோடுகள் ஒன்றின் மீது மற்றொன்று பிணைந்த இடங்களில் புள்ளிகள் வைக்கப்பட்டிருந்தன.‘‘இவை...’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் இழுத்தார்.
‘‘கோடுகள்...’’ சிவகாமி சட்டென பதில் அளித்தாள்.‘‘அதுதான் பார்த்தாலே தெரிகிறதே...’’ விநயாதித்தன் எரிந்து விழுந்தான்.

சிவகாமி தன் இமைகளை மூடித் திறந்தாள். ‘‘இளவரசே... உங்கள் கோபம் சரியானது... நியாயமானது. மதுரையில் நான் நடந்து கொண்ட விதத்தை நீங்கள் மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை என்பதை என்னால் உணர முடிகிறது... அதனால்தான் நான் எது சொன்னாலும் உங்களுக்கு அது தவறாகவே தெரிகிறது... அதுவேதான் இப்பொழுது எதிரொலிக்கவும் செய்கிறது.

உங்கள் பணிப்பெண்ணாக தங்களை நான் புரிந்துகொண்டுள்ளதைப் போலவே, ஓர் இளவரசனாக, ஒற்றர் படைத்தலைவியான என்னையும் என் செய்கைகளையும் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் வைக்கிறேன்...’’‘‘விநயாதித்தன் அதை ஏற்றுக்கொண்டான் சிவகாமி...’’ விக்கிரமாதித்தர் நின்ற இடத்தில் இருந்தே குரல் கொடுத்தார். ‘‘அந்த கோடுகளுக்கு விளக்கம் சொல்...’’‘‘மன்னா... தங்களுக்குத்தான் அதன் அர்த்தம் தெரியுமே..?’’‘‘எங்கள் மூவருக்குமே கோடுகளின் பொருள் தெரியும். பரவாயில்லை... உன் வாயால் அதைச் சொல்...’’ சாளுக்கிய மன்னர் கட்டளையிட்டார்.

‘‘உத்தரவு மன்னா...’’ அறைக்குள் நுழைந்த சிவகாமி கச்சையை தன் வலது கரத்தில் சுருட்டினாள். ‘‘இந்தக் கச்சையில் இருக்கும் கோடுகள் போர் வியூகத்தைக் குறிப்பவை. அதுவும் அசுரப் போர் வியூகம். இந்த வியூகத்தை அமைத்தவர் நரசிம்மவர்ம பல்லவர் காலத்தில் படைத்தளபதியாக இருந்த பரஞ்சோதி!’’ஸ்ரீராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் அதிர்ந்தார்கள்.

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘பரஞ்சோதி அமைத்ததா..?’’ கேட்ட சாளுக்கிய போர் அமைச்சர், சிவகாமியிடம் இருந்து கச்சையை வாங்கி அறைக்குள் பாய்ந்த சூரிய ஒளியில் மீண்டும் அதைப் பார்த்தார்.‘‘ஆம் குருநாதரே...’’ சிவகாமி நிதானமாக பதில் சொன்னாள். ‘‘இந்த வியூகப்படிதானே வாதாபியில் பரஞ்சோதி போர் புரிந்தான்...’’ விநயாதித்தன் படபடத்தான். ‘‘அதே வியூகப்படிதான் இம்முறையும் பல்லவப் படைகள் நம்மை எதிர்கொள்ளப் போகிறதா..?’’‘‘இல்லை இளவரசே...’’ என்ற சிவகாமி, ராமபுண்ய வல்லபர் ஆராய்ந்துகொண்டிருந்த தனது கச்சையைச் சுட்டிக் காட்டினாள். ‘‘இதிலுள்ள அசுர வியூகத்தை பரஞ்சோதி அப்பொழுது பயன்படுத்தவில்லை...’’

‘‘புரியவில்லை... சற்று விளக்கமாகச் சொல்...’’ விநயாதித்தனின் கண்கள் சுருங்கின.‘‘இளவரசே... வாதாபியை அழிக்க பல்லவப் படைகள் புறப்பட்டபோது பரஞ்சோதியின் கைவசம் மூன்று அசுர வியூகங்கள் இருந்தன. மூன்றுமே அவரால் தயாரிக்கப்பட்டவை. சாளுக்கியப் படைகளின் போர்த் திறத்தை உள்வாங்கி உருவாக்கப்பட்டவை. அந்த மூன்று அசுரப் போர் வியூகங்களில் ஒன்றைத்தான் நரசிம்மவர்ம பல்லவர் தேர்வு செய்தார். மற்ற இரண்டையும் இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டார். அந்த இரண்டில் ஒன்றுதான் இது...’’சிவகாமி இப்படிச் சொன்னதுமே விநயாதித்தன் பாய்ந்து ஸ்ரீராமபுண்ய வல்லபரிடம் இருந்து கச்சையைப் பிடுங்கினான். தன் கண்களுக்கு அருகே அதைக் கொண்டு வந்து ஆராய்ந்தான்.

‘‘ஒரு பெண் அணிந்த கச்சையை எதற்காக நான் பார்க்க வேண்டும் என்று சீறினாயே விநயாதித்தா... இப்பொழுது நீயே அதை உன் முகத்துக்கு நேராகக் கொண்டு வந்து ஆராய்கிறாயே..!’’ விக்கிரமாதித்தர் நகைத்தார்.‘‘மன்னா...’’ ‘‘வாழ்க்கையில் பதற்றமும் படபடப்பும் கூடாது விநயாதித்தா... அதுவும் நாட்டை ஆளப் போகும் இளவரசன் எல்லா தருணங்களிலும் நிதானத்துடன் இருக்க வேண்டும்... சிவகாமி யார்..? நம்மைச் சேர்ந்தவள். நமது போர் அமைச்சரால் உருவாக்கப்பட்ட ஆயுதம்.

நம் நலனுக்காக தன் உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்திருக்கிறாள். அப்படிப்பட்டவளின் நடவடிக்கைகள் சமயங்களில் நமக்கு எதிரானதுபோல் தெரியும். ஆனால், அவை எல்லாம் நடிப்பு. நம் இலக்கை நோக்கிப் பயணப்பட இப்படி அவள் நடந்துகொள்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றையும்... எல்லோரையும் சந்தேகிக்க வேண்டும்தான்... அதேநேரம் சந்தேகமே தீர்ப்பாக எழுதப்படக் கூடாது. இக்கரையில் இருந்து அக்கரையைக் காண்பது போலவே அக்கரையில் நின்றபடியும் இக்கரையைப் பார்க்க வேண்டும்...’’
விநயாதித்தன் தலைகுனிந்தான்.

விக்கிரமாதித்தர் அவனை நெருங்கி அணைத்தார். தட்டிக் கொடுத்தார்.‘‘இந்த விஷயம் உனக்கெப்படித் தெரியும் சிவகாமி..?’’ யோசனையில் இருந்து மீண்ட ராமபுண்ய வல்லபர் சட்டெனக் கேட்டார்.‘‘எனக்குத் தெரியாது குருநாதரே...’’‘‘அப்படியானால்..?’’ ஸ்ரீராமபுண்ய வல்லபரின் புருவங்கள் சுருங்கின.‘‘நான்தான் சொன்னேன் போர் அமைச்சரே...’’ விக்கிரமாதித்தன் முற்றுப்புள்ளி வைத்தான். ‘‘பரஞ்சோதியை எதிர்கொண்ட நமது சாளுக்கிய படைத்தளபதி இறக்கும் தருவாயில் இந்த ரகசியத்தை என்னிடம் தெரிவித்தார். அப்பொழுது முதல் பயன்படுத்தப்படாமல் இருக்கும் மற்ற இரு அசுரப் போர் வியூகங்களைத் தேடி வருகிறேன்...’’‘‘எதற்காக மன்னா..?’’

‘‘பழிவாங்கத்தான் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... எந்த அசுரப் போர் வியூகத்தைக் கையாண்டு சாளுக்கிய தலைநகரை பல்லவ சேனாதிபதி கொளுத்தினானோ... அதேபோன்ற ஓர் அசுரப் போர் வியூகத்தை... அதுவும் அவனாலேயே உருவாக்கப்பட்ட இன்னொரு அசுரப் போர் வியூகத்தை நாம் பயன்படுத்தி... நம்மை அழித்த அதே பல்லவப் படைகளை நாம் சிதறடித்து நசுக்க வேண்டும்...

அப்பொழுதுதான் என் தந்தையின் ஆன்மா சாந்தி அடையும்...’’‘‘எல்லாம் சரி மன்னா... ஆனால்...’’ விநயாதித்தன் கரங்களில் இருந்த சிவகாமியின் கச்சையை ஸ்ரீராமபுண்ய வல்லபர் பிடுங்கினார். ‘‘இது அசுரப் போர் வியூகமா..?’’‘‘அதிலென்ன சந்தேகம் ஸ்ரீராமபுண்ய வல்லபரே... போர் அமைச்சரான நீங்கள் இப்படியொரு சந்தேகத்தைக் கிளப்பலாமா..?’’
‘‘இல்லை மன்னா... இது அசுரப் போர் வியூகம் அல்ல! போலி! முக்கியமாக இது பரஞ்சோதி தயாரித்தது அல்ல...’’ அழுத்தம்திருத்தமாகச் சொன்னார் ராமபுண்ய வல்லபர்.

இதைக் கேட்டு அங்கிருந்த மூவரும் அதிர்ந்தனர்.‘‘என்ன... என்ன... போலியா... இது போலியா..?’’ சிவகாமியின் குரல் நடுங்கியது. அறையை விட்டு ஓட முயற்சித்தாள்.ஒரு கரம் பாய்ந்து அவளைப் பிடித்தது. ‘‘ஆம்... உன்னால் தயாரிக்கப்பட்ட போலியேதான்... பல்லவ ஒற்றர் படைத்தலைவியே... உண்மையைச் சொல்... பரஞ்சோதி தன் கைப்பட எழுதிய மற்ற இரு அசுரப் போர் வியூகங்கள் எங்கே..?’’ கேட்டவனை சிவகாமி பார்த்தாள்.சிவந்த நயனங்களுடன் கரிகாலன் அவள் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தான்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்