அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!



சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகி டிரெண்டாகிக் கொண்டிருக்கும் ஸ்பானிய மொழிப் படம் ‘Dad Wanted’. அப்பாவை இழந்த ஒரு மகளும்... உயிருக்கு உயிரான மகளை இழந்த ஓர் அப்பாவும் சந்தித்துக்கொண்டால்... அவர்களுக்கு இடையில் புதிதாக ஓர் உறவு வளர்ந்தால்... அதுதான் இந்தப் படம். சுட்டிக் குழந்தை பிளாங்கா. கோபக்காரி. ஸ்போர்ட்ஸ் சைக்கிள் ஓட்டுவதில் அவளை அடித்துக்கொள்ள ஆளில்லை. அவளின் அப்பா விபத்தில் இறந்துவிடுகிறார். அதிலிருந்து பிளாங்காவை சைக்கிள் பக்கம் அம்மா விடுவதே இல்லை. கணவனுக்கு ஏற்பட்டதுபோல மகளுக்கும் ஏதாவது நடந்துவிடுமோ என்ற பயம்.

சைக்கிளைத் தொடுவதற்குக் கூட அனுமதிக்காத அம்மா மீது பிளாங்காவுக்குக் கடும் கோபம். அதனால் பல மாதங்களாக அம்மாவுடன் அவள் பேசுவதே இல்லை. வீட்டுக்கு வெளியே மறைவான இடத்தில் சைக்கிளை ஒளித்து வைத்து, அம்மா வீட்டில் இல்லாதபோது அதை எடுத்து ஓட்டி மகிழ்கிறாள். ஊரிலேயே புகழ்பெற்ற சைக்கிள் பந்தயம் ஒன்று வருகிறது. அதில் கலந்துகொண்டு பணப்பரிசைத் தட்ட வேண்டும் என்பது பிளாங்காவின் கனவு.

அம்மாவுக்குத் தெரியாமல் கலந்துகொள்ள நினைக்கிறாள். ஆனால், இந்தப் போட்டி சிறுவர், சிறுமிகளுக்கு இடையே நடக்கிறது. அப்பா அல்லது அம்மாவின் அனுமதி கையொப்பம் இருந்தால் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்பது விதி. சைக்கிள் ஓட்டுவது தெரிந்தாலே அம்மா வீட்டுக்குள் விட மாட்டார். போட்டியில் கலந்துகொள்ள அனுமதிகேட்டால் அவ்வளவுதான். ஸ்கூலுக்குக் கூட அனுப்ப மாட்டார் என்று பயப்படுகிறாள். இருந்தாலும் போட்டியில் எப்படியாவது கலந்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். தனது தோழியுடன் சேர்ந்து பொய்யான ஒரு அப்பாவைக் கண்டுபிடிக்க ஆடிஷன் வைக்கிறாள் பிளாங்கா.

சில மாதங்களுக்கு முன் இறந்துபோன மகளின் நினைவாகவே இருக்கும் ஒரு தந்தை அதில் கலந்துகொள்கிறார். அவர் ஒரு நடிகரும் கூட. மகள் இறந்த பிறகு நடிப்பை விட்டுவிட்டு டாக்ஸி ஓட்டிக்கொண்டிருக்கிறார். அவரை அனுமதி கையொப்பம் போடுவதற்கான அப்பாவாகத் தேர்வு செய்கிறாள் பிளாங்கா. அப்பாவாக நடிக்க வந்தவர் பிளாங்காவின் நிஜ தந்தையின் இடத்தை எப்படி நிரப்புகிறார்... இறந்துபோன மகளின் இடத்தை பிளாங்கா எப்படி பிடித்துக் கொள்கிறாள்... என்பது நெகிழ்ச்சியான திரைக்கதை.

கிளைமேக்ஸ் மட்டுமல்ல, பல இடங்களில் ஃபீல் குட்டாக இருப்பது மனதுக்குப் புத்துணர்வு அளிக்கிறது. மொழியைத் தாண்டி, எல்லோரும் ரசிக்கும்படியாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜாவியர் காலினாஸ்.

தொகுப்பு: த.சக்திவேல்