Porn Wood!



வருடத்துக்கு 11 ஆயிரம் வீடியோக்கள்...ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி லாபம்... மொத்த மதிப்பு ரூ.7.37 லட்சம் கோடி...

கொரோனா காலத்திலும் அடங்கிப்போகாமல் ஆவேசமாக அடித்து ஆடி இலாபம் ஈட்டிய ஒரே துறை போர்னோகிராஃபி என்னும் ஆபாசப் படத்துறைதான்.கடந்த ஐம்பது வருடங்களுக்குள் உருவாகி விண்ணைத் தொடும் அளவிற்கு வளர்ச்சியடைந்த துறையும் இதுவே. உலகளவில் இதன் மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர். அதாவது 7.37 லட்சம் கோடி ரூபாய்!

இது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மதிப்பை விட அதிகம். தவிர, வருடத்துக்கு குறைந்தபட்சம் 45 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டி ஹாலிவுட்டுக்கே சவால் விடுகிறது போர்னோகிராஃபி.குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் என்னும் சூத்திரத்தைச் சொல்லி அமெரிக்காவில் சில இயக்குநர்கள் போர்னோகிராஃபியில் அழுத்தமாக குதித்தனர்.

ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைத்த 1969ல் ‘ப்ளூ மூவி’ என்ற முதல் அடல்ட் ஏரோடிக் படம் வெளியாகி பெரும் அதிர்வைக் கிளப்பியது.
வெளிப்படையான செக்ஸ் காட்சிகளுடன் கதையும் சேர்ந்திருந்ததால் அமெரிக்காவில் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாக அனுமதி கிடைத்தது. போர்னோகிராஃபிக்கு அஸ்திவாரம் இட்ட இந்தப் படத்தின் அன்றைய பட்ஜெட் 3 ஆயிரம் டாலர்கள்.

மட்டுமல்ல, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படத்தில் இடம்பெற்ற செக்ஸ் காட்சிகள் நீல வண்ணத்தில் இருந்தன. போர்னோ
கிராஃபி படங்கள் ‘ப்ளூ ஃப்லிம்’ என்று அழைக்கப்பட இந்தப் படத்தின் காட்சிகள்தான் காரணம் என்று சிலர் சொல்கின்றனர்.

இன்னொரு பக்கம் ஆபாசப்பட விசிஆர் கேசட்களை நீல வண்ண பேக்கில் வைத்துத் தருவார்களாம். அதனாலும் ப்ளூ ஃப்லிம் என்று போர்னோ
கிராஃபி அழைக்கப்படுவதாகச் சொல்கின்றனர்.‘ப்ளூ மூவி’க்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து  ஐரோப்பாவிலும் போர்னோகிராஃபி படங்கள் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியாகின. திரையரங்க வசூல் மட்டுமே அப்போது முக்கிய வருமானமாக இருந்தது.

அடுத்து ஆபாசப் படங்களைப் பார்க்க போர்ன் பூத்துகள் உருவாகின. இதன் மூலமும் கணிசமான வருமானம் கிடைத்தது. 1969 - 84 வரையிலான வருடங்களை போர்னோகிராஃபியின் பொற்காலம் என்கின்றனர்.அந்த வருடங்களில் வெளியான ஒவ்வொரு ஆபாசப் படமும் வசூலை அள்ளின. 1990களில் கேரளாவில் ‘பி’ கிரேடு செக்ஸ் படங்கள் பெரிய ஸ்டார்களின் படங்களைவிட அதிக வசூலைக் குவித்தது வரலாறு.

தொழில்நுட்ப வளர்ச்சி இந்த பிசினஸிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தன. 80களில் விஹெச்எஸ், விசிஆர் வருகை. பிறகு சிடி, டிவி, இன்டர்நெட்டின் வருகை ஆபாசப் பட வணிகத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளன. பட்டி தொட்டிக்கெல்லாம் ஆபாசப் படங்களைக் கொண்டு சேர்த்தது இன்டர்நெட். அதனால் அதன் வடிவமும் மாறியது.

கதையைத் தவிர்த்துவிட்டு செக்ஸ் காட்சிகள் மட்டுமே உள்ள வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. இதைத்தான் இங்கே ப்ளூ ஃப்லிம் அல்லது பிட்டுப் படம் என்று அழைத்தனர். ஆரம்பத்தில் இந்த வீடியோக்களை சந்தா செலுத்தி டவுன்லோடு செய்து மட்டுமே பார்க்க முடியும்.
தினசரி, வாரம், மாதம், மூன்று மாதங்கள், வருடம் என பல வகைகளில் சந்தா செலுத்தும் வசதிகள் இருக்கின்றன. தினசரி என்றால் 1 முதல் 15 டாலர் வரை சந்தா கட்டணம்.

பிறகு ஸ்மார்ட்போன் வருகையும், இணையத்தின் வேகமும் அதிகரிக்க ஆபாசப் படத்துறையும் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தது.  
இதன் தொடர்ச்சியாக பிரீமியம் வீடியோக்களைத் தவிர மற்றதை  இலவசமாகவே இணையதளங்களில் பார்க்க முடியும் என்ற வசதி வரவே பில்லியன் கணக்கானோர் இன்டர்நெட்டை ஆபாசப் படம் பார்ப்பதற்காக ஆக்கிரமித்தனர்.

அதனால் விளம்பரங்கள் குவிந்து ஆபாசப் படத் தயாரிப்பாளர்களின் கல்லாவை நிறைத்தது. இன்று சுமார் 2.5 கோடி ஆபாசப் பட இணையதளங்கள் உள்ளன. பல்வேறு நாடுகளில் ஆபாசப் படத் தளங்களுக்குத் தடை இருந்தாலும் இணையத்தில் டிராஃபிக் ஆக 30 சதவீத காரணம் இந்தத் தளங்கள்தான். அடுத்து பெரும்பாலும் ஆபாசப் படத்தயாரிப்பு நிறுவனங்கள் நடிகர், நடிகைகளை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்கின்றன. அவர்கள் சொல்பவர்கள் கூடத்தான் நடிக்க வேண்டும்.

பெரும்பாலும் ஆசை வலையை வீசி நடிகைகளின் தேர்வு நடக்கிறது. சிலர் விரும்பியே இதில் ஈடுபடுகின்றனர். செக்ஸ் டிராஃபிக் எனப்படும் பெண்கள் கடத்தப்படும் நிகழ்வும் இதற்காகவே நடக்கிறது. தயாரிப்பு நிறுவனம் சார்பாக நடித்தால் ஒரு வீடியோவுக்கு 500 டாலர் அல்லது 1000 டாலர் சம்பளம். அந்த வீடியோ கோடி முறை பார்க்கப்பட்டாலும் இதேதான் சம்பளம். ராயல்டி எதுவும் கிடையாது. எல்லாமே தயாரிப்பு நிறுவனங்களுக்குப் போய்விடும்.

இப்படி ஒப்பந்த அடிப்படையில் போய் மாட்டிக்கொண்டவர்தான் மியா கலிஃபா. அவருக்குக் கிடைத்த வருமானம் 12 ஆயிரம் டாலர்கள் மட்டுமே.
ஆனால், அவர் நடித்த வீடியோக்கள் மூலமாக தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கிடைத்த வருமானம் கோடிகளில். ‘போர்ன்ஹப்’பிற்கு கலிஃபாவின் வீடியோக்கள் மூலம்தான் அதிக லாபம் கிடைத்திருக்கும் என்கின்றனர் மீடியா பிசினஸ் அனுபவஸ்தர்கள்.

இன்று பலர் தாங்களாகவே ஆபாச வீடியோக்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு காசு பார்க்கின்றனர்.  இப்படி வருடத்துக்கு 11 ஆயிரம் புது வீடியோக்கள் இறங்குகின்றன. இதுபோக 3D போர்ன் வீடியோக்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைத்து வருகிறது.

தவிர, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் உங்களுக்கு விருப்பமான போர்ன் நட்சத்திரங்களைச் சந்திக்கலாம். அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம். அவர்களைத் தொட்டுப் பார்க்கலாம். இவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது. மட்டுமல்ல, பல  நகரங்களில் ஆபாசப் படத்திருவிழாக்கள் நடக்கின்றன. அதில் நடித்தவர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன!

த.சக்திவேல்