IAS ஆக மாறும் RSS!



இந்திய குடிமைப் பணி என்பது நாட்டின் உயரிய அந்தஸ்துள்ள பணி. அரசாங்க எந்திரத்தின் அச்சாணிகளான இவர்களால்தான் ஒவ்வொரு செயலும், திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் UPSC நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 50% பேர் ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள்...

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இவர்களைத் தேர்ந்தெடுப்பது ‘யுபிஎஸ்சி’ நடத்தும் தேர்வு முறையினால். அந்த தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளாக யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 50%க்கு மேற்பட்டவர்கள் ஒரே பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

1986ம் ஆண்டு துவக்கப்பட்டு ‘சம்கல்ப்’ என்கிற பெயரில் இயங்கும் இந்நிறுவனம் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல், லாப நோக்கமற்று அமைதியான முறையில் ‘தேசிய பார்வை’ என்ற கொள்கையில் அலுவலர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் 61% பேர் நேர்முகத் தேர்வில் தேர்வாகியுள்ளனர். அதாவது 759 பேரில் 466 பேர்.

34 ஆண்டுகளாக இயங்கக் கூடிய இப்பயிற்சி மையத்திலிருந்து 2015ம் ஆண்டிலிருந்து மட்டும் எப்படி அதிகமானோர் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று வருகிறார்கள்..? ஆம். 2015ல் 1236 பேரில் 670 பேரும்; 2016ல் 1078 பேரில் 648 பேரும்; 2017ல் 1099 பேரில் 689 பேரும்; 2018ல் 990 பேரில் 641 பேரும் இப்பயிற்சி மையத்திலிருந்து தேர்வாகியுள்ளனர்.

ஆனால், துவக்கத் தேர்விற்காகப் படித்துத் தேர்வு எழுதுபவர்களில் 10% பேர்தான் தேர்வாகியுள்ளனர். மற்றபடி நேர்முகத் தேர்வில்தான் அதிகமானோர் வந்துள்ளனர். ஏன்?

இந்தக் கேள்விக்கான பதில்- “1980களில் பாரதிய ஜனதா கட்சியை நாடு முழுவதும் பரப்பு வதற்கு, வலுப்படுத்துவதற்கு, ஆட்சியைப் பிடிப்பதற்கு… எனத் திட்டமிட்டபோது, எங்கள் கவனம் அரசு அலுவலர்கள் மீதும் போனது.

அவர்களை உருவாக்க உருவானதே ‘சம்கல்ப்’ நிறுவனம்...” என்று ‘த பிரிண்ட்’ ஆங்கில இணை இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவர்.“குடிமைப் பணிக்குத் தேர்வாகி வருபவர்கள் எல்லோரும் ஜேஎன்யூ போன்ற பல்கலைக் கழகங்களிலிருந்து வருவார்கள். அவர்கள் இடதுசாரி சிந்தனையிலிருந்து ஈர்க்கப்பட்டிருப்பார்கள். அந்த அஜெண்டாவை ஒழித்துக் கட்ட வேண்டும். அதேவேளையில் மாணவர்களை மூளைச் சலவை செய்யாமல் ‘சரியான புரிதலை’ உருவாக்கிக் கொடுக்க முடிவு செய்தோம்.

தேசப்பற்று என்பதில் மட்டும் தயாராகி வருபவர்களுக்கு கம்யூனிசத்தையோ, நக்சலிசத்தையோ, மக்கள் உரிமைக்காகப் போராடக் கூடிய சக்திகள் என்று சொல்லவோ நினைக்கவோ தோன்றாது...’’ என்று கூறும் அந்த நபர், “காஷ்மீரில் எடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நியாயமானது என்று கற்பிப்போம். இந்திய ஒருமைப்பாட்டின் முக்கியத்தை வலியுறுத்துவோம். நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சட்டம் என்பதையும், ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு சட்டம் என்றில்லாமல் எல்லோருக்கும் ஒரே சட்டம்தான் என்றெல்லாம் புரிய வைத்து அவர்களை தேசியவாதிகள் ஆக்குவோம்; ஆக்கினோம்; ஆக்குகிறோம்...’’ என்கிறார்.

யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களிடம் இந்நிறுவனம் பற்றி பெரிய அறிமுகம் இல்லை. ஆனால், இவர்களது ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் அரசு, கட்சி, அமைப்பு சார்ந்த முக்கிய புள்ளிகள் கலந்துகொள்கின்றனர்.இந்த ஆண்டு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி ஆகியோர் இந்நிறுவன விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் ரவி, வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாதக் குழுவினருடன் சமரசம் பேசும் நபராவார். கடந்த ஆண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கக் கூடிய கிருஷ்ண கோபால் பங்கேற்றனர்!

“முதன்மைத் தேர்வில் ஆவரேஜாக பாசானவர்கள், நேர்முகத் தேர்வில் எவ்வாறு அதிக மதிப்பெண் பெறுகிறார்கள்? பொதுவாக யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் எப்போதும் மர்மமாகவே இருக்கும்போது, அத்தேர்வுக்கு இங்கு மட்டும் சிறப்பான பயிற்சி எப்படி அளிக்கப்படுகிறது?” என்ற கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை.

“டாப் யுபிஎஸ்சி பயிற்சி நிறுவனங்களே இதுபோன்று ரிசல்ட் தராத நிலையில் இந்த ஒரு நிறுவனத்தில் மட்டும் இருந்து எப்படி கடந்த சில ஆண்டுகளாக அதிகமானோர் தேர்வாகி வருகிறார்கள்? விடை தெரியாத இந்தக் கேள்வியினால் இத்தேர்வின் மீதுள்ள நம்பகத் தன்மை அடிபட்டுப் போகிறது.

கல்வித்துறையைப் பொறுத்தவரை வட இந்தியா பின்தங்கியே உள்ளது. ஆனால், ரயில்வே, யுபிஎஸ்சி… போன்ற தேர்வுகளில் கோலோச்சுகிறார்கள்.
மத்திய அரசின் வேலைகளில் விகிதாச்சாரமும் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. இப்போது யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வில் ‘சம்கல்ப்’ போனால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்கிற உத்தரவாதத்தை ஏதோ ஒரு சக்தி ஏற்படுத்தியிருக்கிறது.

இது சிவில் துறைக்கு அவர்கள் விட்டிருக்கும் சவால். உயர்மட்ட அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்யும் மீடியமாக இருக்கும் இம்முறை அரசியலமைப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது...” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.   

அன்னம் அரசு