நியூஸ் சாண்ட்விச்



இந்திய போர் ஹெலிகாப்டரை இயக்கும் 2 பெண் அதிகாரிகள்!

இந்திய கடற்படை தனது பணியிடங்களில் பெண் அதிகாரிகள் பலரை நியமித்திருந்தாலும் போர்க் கப்பல்களில் இதுவரை பெண்களை நியமிக்கவில்லை.
நீண்ட பணிநேரம், பணியாளர்கள் தங்கும் இடங்களில் ‘பிரைவஸிக்கு’ வாய்ப்பில்லாதது, தனி குளியல் அறை போன்ற வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக போர்க்கப்பல்களில் பெண்கள் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடற்படையில் பாலின சமத்துவத்தைக் கொண்டு வரும் மற்றொரு முயற்சியாக போர்க் கப்பல்களில் முதல் முறையாக 2 பெண்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி, சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகிய இருவரும் கப்பல் பணியாளர்களில் ஒரு பகுதியாக, கடற்படை போர்க் கப்பல்களில் பணியமர்த்தப்படும் முதல் பெண் அதிகாரிகள் என்ற சிறப்பை பெறவுள்ளனர்.

இவர்கள் போர்க் கப்பல்களில் உள்ள பன்னோக்கு ஹெலிகாப்டர்களில் சென்சார் கருவிகளை இயக்குவதற்கான பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சிக்குப் பிறகு கடற்படையின் புதிய எம்எச்-60ஆர் ஹெலிகாப்டர்களில் இவர்கள் பணியாற்ற உள்ளனர்.

வேலை இழந்த வொயிட் காலர்ஸ்!

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், மே முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் வொயிட் காலர் பணி என்றழைக்கப்படும் அலுவலகப் பணியாளர்களான மென்பொறியாளர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், கணக்காளர்கள்… என 66 லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் மே முதல் ஆகஸ்ட் வரையில் 1.88 கோடிப் பேர் வொயிட் காலர் பணியாளர்களாக இருந்து வந்த நிலையில், நடப்பாண்டில் அது 1.22 கோடியாகக் குறைந்துள்ளது. இதேபோல் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு!

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்திருக்கும் பதிலில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் 58 வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு ரூ.517.82 கோடி செலவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பயணங்கள் மூலம் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கடல் சார் போக்குவரத்து, விண்வெளி, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாடுகளுடன் இந்தியா உறவை பலப்படுத்தியுள்ளதாம்.

பலத்த அடி வாங்கிய காப்பீட்டு நிறுவனங்கள்!

மார்ச் மாத இறுதி முதல் நான்கு மாதங்களில் புதிய காப்பீடு எடுப்பவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்திருப்பதோடு, காப்பீடுகளை புதுப்பிப்பதும் குறைந்திருக்கிறது. விளைவு, சுமார் 40 லட்சம் புதிய காப்பீடுகள் எடுக்கப்படாமலேயே முடிந்துபோனதால், காப்பீடு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.45 ஆயிரம் கோடி.

இதில் புதிய காப்பீடுகள் மூலமாக மட்டும் கிடைத்திருக்க வேண்டிய ரூ.15 ஆயிரம் கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள காலாவதியான காப்பீடுகள் புதுப்பிக்கப்படவில்லை. இதனால் ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான காலாண்டில், காப்பீட்டு நிறுவனங்கள் அடைந்த நட்டம் என்பது ரூ.49,335 கோடிகள்.

செக்யூரிட்டி ஆன சிலை மனிதர்!

சென்னை கிழக்குக் கடற்கரைக் சாலையில் உள்ள பிரபலமான பொழுது போக்கு பூங்கா ‘விஜிபி’. இங்கு வரும் பொதுமக்களின் கவனத்தை முதலில் ஈர்ப்பது, பார்வையாளர்கள் என்னதான் செய்தாலும் ஆடாமல் அசையாமல் சிலை போல நின்று அவர்களை மலைக்க வைக்கும் சிலை மனிதரான தாஸ்தான்.

1991ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த தாஸ் 2020ல் கொரோனா தொற்று பரவல் காலம் வரை 30 ஆண்டு களாக சிலை மனிதராக பணியாற்றி வந்துள்ளார். இப்போது 60 வயதாகும் தாஸ், ரூ.600 சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்து, கடைசியாக ரூ.8,400 வாங்கியுள்ளார்.

விதவிதமான பார்வையாளர்களிடம் எந்தவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் சிலையாக நிற்பது என்பது வேலை அல்ல... கலை.
இதுவரை யாரும் அசைத்துப் பார்க்க முடியாத இந்த சிலை மனிதனை, கண்ணுக்கே தெரியாத ஒரு வைரஸ் வாட்டி வதைத்துவிட்டது.
கொரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது விஜிபி பொழுதுபோக்கு பூங்காவும் மூடப்பட்டது. சிலை மனிதர் தாஸ் வேலையின்றி வீட்டிலிருக்கும் நிலையும் உருவானது.

ஐந்து மாதங்களாக வேலையின்றி வீட்டிலிருந்து வந்த தாஸ், குடும்ப சூழல் காரணமாக இப்போது செக்யூரிட்டி வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்.
“சிலை மனிதனாக நிற்கும் பணியே மனநிறைவைத் தருகிறது. அந்தப் பணிக்கு செல்லும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்...” என்கிறார் தாஸ்.

உணவகத்தில் சானிட்டரி பேட் இயந்திரம்!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள உணவகம் ஒன்று, பெண்களுக்கான சானிட்டரி பேட் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை பொருத்தி பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

நகரின் மேற்குப் பகுதியில் செயல்பட்டு வரும் பீட்ஸா கடையில், பெண்களின் மாதவிடாய் சங்கடங்களைப் போக்கும் பொருட்டு 5 ரூபாய் நாணயத்தை போட்டு சுகாதாரமான சானிட்டரி பேட்கள் பெறும் வகையில் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

தொகுப்பு: அன்னம் அரசு