தேர்தல் என்பது ஒரு Project!



FaceB(JP)ook - மினி தொடர் 9

இந்தியாவில் தேர்தல் ஜனநாயகம் போல் கேலிக்கூத்தாக்கப்பட்ட ஒரு நவீன சமூக ஏற்பாடு பிறிதொன்று இருக்குமா என்று தெரியவில்லை. நவ இந்தியாவை எப்படி உருவாக்க வேண்டும் என்று யோசித்த நம் முன்னோர்கள் கண்டெடுத்த அற்புதமான ஜனநாயகப் பார்வைதான் தேர்தல் அரசியல்.
அதிலும் தலையெண்ணி வாக்களிக்கும் உரிமையை இந்தியர்களுக்குத் தரப்போகிறோம் என நம் சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறை தலைவர்கள் சொன்னபோது ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் மனதுக்குள் சிரித்தார்கள்.

இதன் காரணம், நாம் ஒரு முதிர்ச்சியான சிவில் சமூகமாக மாறவில்லை என்ற மனநிலை அவர்களிடம் ஆழமாக இருந்தது. அதில் உண்மை இல்லாமல் இல்லை.அதற்குமுன்பு ஒருவகை பண்பாட்டுத் தொடர்பால் ஒரே நிலம் போன்ற மனநிலையில் இந்தியா இருந்ததே தவிர, சுதந்திர இந்தியாவின் புதிய வரைபடத்தில் உள்ளபடியான ஒரு தேசமாக வரலாற்றில் நாம் முன்னெப்போதுமே இருந்ததில்லை.

இங்கு நிறைய பேரரசுகள் தோன்றி மறைந்திருக்கின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றும் இந்நிலத்தில் ஏதாவது ஒரு சிறிய அல்லது பெரிய பகுதியை
மட்டுமே ஆண்டிருக்கின்றன. மாபெரும் முகலாய சாம்ராஜ்யம்கூட தென்னிந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை, கேரளத்தை உள்ளடக்கியிருக்கவில்லை.

எனவே, இவ்வளவு பெரிய நிலப் பரப்பை ஒரே தேசம் என்று மக்கள் மனதில் உருவகிக்கச் செய்வதே பெரும் சவாலாக இருந்தது. பெரும்பாலானவர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள். ஏட்டுச் சுரைக்காய் நமக்கு எதற்கு என்பதே அப்போதைய மனநிலை.  

இப்படியான சூழலில்தான் ஒரே பெரிய ஜனநாயகமாக தேர்தல் அரசியலில் நாம் நுழைந்தோம். மக்கள் கல்லாதவர்களாக, அறியாதவர்களாக இருப்பது உண்மையான தலைவர்களுக்கு சவாலாக இருக்க, வணிக அரசியல் செய்யும் கூட்டத்துக்கு வசதியானதாக இருக்கிறது.தேர்தல் அரசியல் என்பதை எப்படி எல்லாம் சீரழிக்க முடியும் என்பதே இந்த சுயநலக் கூட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான செயல்திட்டத்தோடு இதில் களம் காணுகிறார்கள்.

ஒரு காலத்தில் சாதி அரசியல், பின்பு பண பலம், இவை இரண்டும் போதாது என்றாகிவிட்ட நம் சமகாலத்தில் மார்க்கெட்டிங் அரசியல்.
ஒரு பொருளை விற்பதற்கு வணிகர்கள் என்னென்ன தந்திரங்களை எல்லாம் பின்பற்றி அதனை சந்தைக்குக் கொண்டு வந்து மக்கள் தலையில் கட்டு
கிறார்களோ, அதேபோல், சொல்லப்போனால் அதைவிட கேடுகெட்ட செயல்களை எல்லாம் ராஜதந்திரம் என்ற பெயரில் அரங்கேற்றுகிறார்கள். திட்டமிட்ட ஒரு அரசியல் கட்சியை, ஒரு தலைவனை, ஓர் அமைப்பை அதிகார மையத்தில் நுழைக்கிறார்கள்.

மிகப் பெரிய கார்ப்பரேட்டுகள்; அரசியல் சித்தாந்திகள்; அதிகார மையங்கள்; ஆளும் தரப்பினர்; இடைத்தரகர்கள்; மீடியா, அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் செலிபிரிட்டிகள்; சட்ட வல்லுநர்கள்; மார்க்கெட்டிங் சேவைத் துறையினர்... உட்பட பல்வேறு துறை சார்ந்தவர்கள் சேர்ந்து இயங்கும் கூட்டுக் கொள்ளை வணிகம் இது.

இவர்கள் ஒவ்வொருவரும் நேரடியாகத் தடவுவது மக்களின் தலையைத்தான். தங்கள் கைவசம் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, தங்கள் மூளையைப் பயன்படுத்தி இதனைச் செய்கிறார்கள்.தேர்தல் என்பது இவர்களுக்கு ஒரு புராஜெக்ட். அதை தேசத்தின் நலனை, மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் மாபெரும் ஜனநாயகச் செயல்பாடாக எல்லாம் பார்க்க மாட்டார்கள்.

இந்த முறை யாரை அதிகாரத்தில் அமரவைத்தால் இந்த மேற்சொன்ன அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், நிபுணர் இடைத்தரகர் குழுவுக்கு லாபமோ அவர்களை அமரச் செய்வார்கள்.கடந்த இரு தேர்தல்களாக பாஜக அதிகாரத்துக்கு வந்தது இப்படியான ஒரு குழுவின் ஆசீர்வாதத்தோடும், ஆலோசனையோடும்தான்.

ஏன் நமது மீடியாக்கள் ராகுல் காந்தியை பப்பு அல்லது சின்னப் பையன் என்று அழைக்கிறது என்பதும், ஏன் மோடியை இவ்வுலகைக் காக்க வந்த கிருஷ்ணபரமாத்மா போல் காட்ட முயல்கிறது என்பதும் எதேச்சையானது அல்ல. அதற்குப் பின்பு ஒரு திட்டமிடல் உள்ளது.

ராஜ்தீப் சர்தேசாய் இந்தியா வின் குறிப்பிடத்தக்க ஊடகவியலாளர்களில் ஒருவர். இவர் ஒரு முக்கியமான நூல் எழுதியிருக்கிறார். இந்தியாவின் தேர்தல் அரசியலைப் பட்டவர்த்தனமாக முன்வைக்கும் நூல் இது. இந்தியாவின் தேர்தல் எந்திரவியல், மக்கள் நலன், தேசியம், இந்துத்துவ சிந்தனைகள், அதன் நவீன வளர்ச்சி வடிவங்கள், மீடியாவைப் பயன்படுத்துவது, நரேந்திர மோடி என்னும் பிம்பத்தைக் கட்டமைப்பது ஆகியவை மூலம் கடந்த 2014ம் ஆண்டும் தொடர்ச்சியாக கடந்த ஆண்டும் எவ்வாறு மோடி பிரதமரானார், பிஜேபி அதிகாரத்துக்கு எப்படி வந்தது என்பதை இவரின் நூல்கள் பேசுகின்றன.

சர்தேசாய் தன்னுடைய நடுநிலையான பார்வைகளுக்காக வட இந்திய ஊடகங்களில் கொண்டாடப்படுபவர். லிபரல் சிந்தனையாளர்களில் ஒருவரான சர்தேசாய் பிஜேபியின் இந்துத்துவா உலகியல் நோக்கையும் அதன் நியாயத்துக்கு எதிரான பண்புகளையும் தொடர்ந்து கவனப்படுத்தி வருபவர்.

கடந்த 2014ம் ஆண்டின் தேர்தல் மோடியை முன்வைத்து கட்டமைக்கப்பட்டது. மோடி இந்தியாவின் ஆபத்பாந்தவனாக, எல்லோரையும் காக்கும் பரமாத்மாவாக முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால், கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், மோடி மட்டுமே இருந்தார் (தேர் இஸ் ஒன்லி மோடி  டிமோ) என்ற கருத்தியல் உருவாக்கப்பட்டது என்கிறார் சர்தேசாய்.

மிகத் தெளிவாக, மோடி என்கிற ஒற்றை நபரை முன்வைத்தே பிரசாரங்கள் கட்டமைக்கப்பட்டன. இந்தியாவில் 543 தொகுதி களிலும் மோடியின் பெயர் மட்டுமே சொல்லப்பட்டது.

உள்ளூர் அளவிலான பிரச்னைகள், சிக்கல்கள் எதுவுமே பேசப்படவில்லை அல்லது பேசப்பட்டாலும் அவையும் மோடியால் சரி செய்யப்படும் என்பதைப் போல் பேசப்பட்டது. கிட்டத்தட்ட மோடி ஒரு சூப்பர்மேன் போல் உருவகிக்கப்பட்டார். நம்பவியலாத அளவுக்கு இது செல்லுபடியாகவும் செய்தது.

மறுபுறம் மோடிக்கு இணையான வலிமையான தலைவர்கள் யாரும் எதிர்க்கட்சியில் இல்லை என்பதைப் போன்ற சித்திரம் ஒன்றையும் மிகக் கவனமாக வடிவமைத்தார்கள்.

இங்குதான், ராகுலை சின்னப் பையன் என்ற இமேஜில் சிக்க வைப்பதற்கான பப்பு என்கிற விளிப்பு உதவியது.ராகுல் முதிர்ச்சியற்றவர், ஒரு தலைவராக மோடியை எதிர்க்கும் அளவுக்கோ இந்தியாவின் தலைமையை ஏற்கும் அளவுக்கோ தகுதியில்லாதவர் என்பதைப் போன்ற கட்டுமானத்தை மிகக் கவனமாகத் திட்டமிட்டு உருவாக்கினார்கள்.

அமித்ஷாவின் தேர்தல் பிரசார வியூகம் இன்னொரு முக்கிய அம்சம். சர்தேசாய் தன்னுடைய நூலில் அமித்ஷாவின் சித்தாந்தத் தெளிவையும் (இந்துத்துவ சார்பு), அவரது நிர்வாகத் திறனையும், அமைப்பு உருவாக்க நிபுணத்துவத்தையும், கடின உழைப்பையும் விரிவாகப் பேசுகிறார்.

சர்தேசாய் தில்லி அரசியலில் ஊறியவர். பாராளுமன்றம் உட்பட பல்வேறு பணியிடங்களில் அமித்ஷா போன்றவர்களோடு இயங்கியவர் என்பதால் அவர் சொல்லும்போது இதன் விஷயங்களுக்கு நம்பகத்தன்மை கூடுகிறது.

அவர் சொல்வது இதுதான்: தெளிவான திட்டமிடல், சரியான இலக்கு இருந்தால் தேர்தலைக்கூட ஒரு புராஜெக்ட் போல சுலபமாகச் செய்ய முடியும். ஒரு தலைவனைக்கூட செயற்கையாக உருவாக்கிக் காட்ட முடியும். அதைத்தான் செய்திருக்கிறார்கள். என்னவெல்லாம் செய்தார்கள்..?

(தொடர்ந்து தேடுவோம்)

 - இளங்கோ கிருஷ்ணன்