சிறுகதை - தாமிரத் தழும்புகள்



லயன்ஸ் டவுன் சகாயமாதா ஆலயத்தின் திருப்பலி நிகழ்வைத் தவிர அந்த நகரம் நிசப்தத்தை திரைச்சீலையாகக் கொண்டிருந்தது.
‘தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே...’ கனத்துப் போயிருந்த அக்குரலை அச்சபையில் இருப்போரும், மற்றவர்கள் யாருமேகூட அதற்குமுன் கேட்டிருக்கவில்லை.

பதிலுக்கு மிகத்தாமதமாக சபையின் குரல் ஒலித்தது20க்கும் மேற்பட்ட பங்குத் தந்தைகளின் ஒருமித்த பிரார்த்தனையில் வேத வசனங்கள், அதனைத் தொடர்ந்து திருப்பலியின் முதல் பாடல்.

சோஃபியா மண்டியிட்டு அழுது கொண்டிருந்தாள். தனது தோளில் இருக்கின்ற காயத்தைவிட ஆழமான ஒன்றை அவள் உணர்ந்தாள். அதற்கெல்லாம் அர்த்தமே இல்லை என்று இந்த உலகம் தம்மைக் கைவிட்டதை ஏற்க மறுத்த மனம். “ஏபே நம்ம முருகன் தெரியும்ல, அவன் அம்மாக்கு கேன்சராமாம்.

ஏற்கனவே அவன் அப்பாவும் கேன்சர்ல செத்துப்போனதா தான சொன்னான். அதான் ஸ்கூலுக்கே வரலை. எப்படியும் டீஸி வாங்கிடுவான்னு அமல்ராஜ் சொல்லுதான்...”“ஸ்கூல் முடிஞ்சோனே போயி பாப்பமா..?” “ஏ அவன் ஹைக்ரவுண்டு ஆஸ்பத்திரிக்கு போயிருக்கானாமாம்...”

“ஏன் இங்கதான் புதுசா கேன்சர் ப்ளாக் கட்டிருக்காகளே. ஏன் இந்த கிறுக்குப்பய பாளையங்கோட்டை வர போயிருக்கான். அவன் அம்மாதான் பாவம்பே...”“சீ நீதான் புள்ள கிறுக்கு. இந்த ஊர்ல இருக்கறதனாலதான் கேன்சர் வருதுன்னு தாம் அவன் ஊரை விட்டே போய்ட்டான்...”
“ஆனா, கேன்சர் ப்ளாக்கே அவனுகதான கட்டிக் கொடுத்துருக்கானுக...” “அது ஒண்ணும் நன்கொட இல்ல எரும... அந்த சாத்தானுகளுக்கு கோர்ட் கொடுத்த தண்டனை. உனக்கு ஜேம்ஸ் அண்ணன் எதும் சொல்லலையா..? ஞாயித்துக்கெழம தூங்க மட்டுந்தான் செய்வியோ நாயி...”
“ஹெலன் ஆகிய நான் ஒரு வழக்கறிஞராக விரும்புகிறேன்...”

‘சுப்பையா வித்யாலயா’வில் நடந்த ஒரு பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டபோது ஹெலன் பேசியது ஞாபகத்தில் இருந்தது. அன்று தூக்கம் கலைந்து எழுந்தபோது செய்திகளில்தான் பார்க்க முடிந்தது. ‘சத்யா’ தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார்கள். 

‘‘டீவியை ஏம்மே போடுத, நிறுத்தி தொலயும்...” சோஃபியாவின் அண்ணன் அம்மாவை ஏச ஆரம்பிக்க, அழுதபடி அமர்ந்து கொண்டிருந்தாள். பேண்டு வாத்தியங்கள் முழங்க 10000 பேருக்கும் மேலாக கலந்து கொண்டார்கள் என்று டிவியில் சொன்னார்கள். ஊர்வலம் அவள் வீட்டு வழியாகத்தான் சென்றது.

“ஏ பே இவளே...” என்று அடிக்கடி சொல்லும் ஹெலனின் வாய் சிதைந்திருந்தது. உயிர் பிரியும் வேளையிலும் தன்னை ஓடச்சொல்லி அசைத்த வாயினை அவளால் மறக்கவே முடியவில்லை.“பு  து பஸ்  ஸ்டாண்ட்லாம் எறங்குங்க...” கனவுகளில் முன்னும் பின்னுமாக ஹெலனின் நினைவு.

தனக்கு அவள் கனவில் மட்டுமல்ல, நிஜத்திலும் கூடவே இருப்பதாகத் தோன்றியதுபையை எடுத்து மடிமேல் வைத்துக்கொண்டாள். ஒவ்வொருவராக இறங்கிக் கொண்டிருந்தார்கள். இறங்கிக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் காக்கி பேண்ட் அணிந்திருந்ததைப் பார்க்கையில் அணையாத கங்கிலிருந்து ஏதோ ஒன்று எரிய ஆரம்பித்தது.

போனில் மணி பார்த்துக்கொண்டாள். காலை 05:15 என இருந்தது. கொந்தளிப்பு அடங்கிய அவ்வூரையே அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், வீட்டில் ஒரு கொந்தளிப்பு உருவாகலாம் என்று பயம் இருந்தது. எனினும் அவள் முடிவில் உறுதியாக இருந்தாள்.அண்ணனை அழைத்தாள்.

வீட்டில் எதுவும் மாறவில்லை. எல்லோரும் மாறியிருந்தார்கள் என்பது புரிந்தது. ஹாலில் இருந்த கட்டிலிலேயே தனது தோள்பையை வைத்து படுத்துக்கொண்டாள். வீட்டு நடையின் உட்புறம் புதிதாக ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது.

‘என் ஆயன் ஆண்டவர் எனக்கென்ன குறைவு பசும்புல் மேய்ச்சலில் என்னை இளைப்பாறச் செய்கின்றார்’கண்களை மூடும்போது ஹெலனோடு டிவிஎஸ் 50ல் பயணித்த காட்சிகள் திரும்பவும் ஓடின. தன்னுடைய டிவிஎஸ் 50 என்றாலும் எப்போதும் ஹெலன்தான் ஓட்டுவாள். அண்ணன் சொல்வதை அவள் பொருட்டாக மதிக்க மாட்டாள். அப்பா எப்போதாவதுதான் வருவார். அவர் சாயல்குடி அருகே உள்ள கிராமத்தில் பாண்டியன் கிராம வங்கியில் வேலை பார்த்து வந்தார்.

“ஏபே மாஸுக்கு கூப்ட்டு போறேன்னு எங்க கூட்டிப்போற..? எனக்கு இன்னும் ரெண்டு பரிட்சை இருக்கு தெரியும்ல...”
“கர்த்தரை ஜபிக்கறத விட விசுவாசிக்கறது முக்கியம்பே. நம்மலாம் உண்மையான விசுவாசிகள். உண்மையான விசுவாசிகள் ஊழியம் செய்வார்கள். உண்மையான ஊழியம் இன்னைக்கு நாம செய்யப்போறதுதான்...”“வெளக்கம்லாம் பெருசுதாம் போ. எல்லாரும் என்ன போட்டு கொமைக்கப் போறாக...” என்று கட்டிக்கொண்டாள்.

ஹெலன் மீது எப்போதும் ஒரு வாசம் இருப்பதாக சோஃபியாவுக்குத் தோன்றும். அது என்ன வாசமென்று அடிக்கடி அவளிடம் கேட்பாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதில் சொல்வாள்.

“லே இது கருவாட்டு வாசம்...”
“இது தேவதைகளின் வாசம்...”
“இது அட்வகேட் ஹெலனின் வாசம்...”
“இது ஃபாத்திமா அக்கா வாசம்...”
“இது எம்ஜிஆர் வாசம்...”
“இது பட்டாம்பூச்சி வாசம்...”
“இது சகாயமேரி வாசம்...”
“இது மாக்ரூன் வாசம்டி லூசு... இந்தா...”
“எங்க அண்ணன் பையன் வாசம்...”
‘‘போடி நீ ஒண்ணும் சொல்லாத... எனக்கே தெரியும். இது
பட்டாம்பூச்சி வாசம்...’’
‘‘இது கண்டிப்பா ப்ளம் கேக் வாசம்...’’
‘‘ஏச்சீ... இது அந்த கிறுக்குப்பய வாசமுந்தான்... ஏ கிள்ளாதடி...’’

அவ்வப்போது சோஃபியாவே சொல்லிக்கொள்வது உண்டு. அன்றும் அவள் அந்தக் கேள்வியைக் கேட்கத் தவறவில்லை.
தோளில் சாய்ந்தபடி ஹெலனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு சொன்னாள். ‘‘விடிஞ்சா கெமிஸ்ட்ரி எக்ஸாம்...’’ பாதை மாறிப் போவதைத் தடுக்க இயலாமல் கண்களை மூடிக்கொண்டபடி கேட்டாள்.

“ஹெலா... இன்னிக்கு என்ன புதுசா மணக்குது..?”
“இது நம்ம ஊரு வாசம்பெ...”
அவளுக்கு எப்படித்தான் அப்படி ஒரு பதில் வந்தது எனத் தெரியவில்லை.
“ஊரு இப்பதான் புதுசா மணக்கா என்ன..?”

“ஆமாபே, மீளவிட்டானோட நின்னு போற தூத்தல் இங்கயும் அடிக்குதுல்ல... ஏன்னா அவுக கவர்மெண்ட், மீடியாவுக்கெல்லாம் பயந்து இப்ப அரசாங்க விதிமுறைப்படிதான் செயல்படுறாக... ஆனா, அவுக லைசன்ஸ் ரின்யூ பண்ணி, விரிவாக்கம் பண்ணிட்டாகன்னா... நம்ம எல்லார் ஒடம்பிலயும் கேன்சர் வரும். முருகன் மாதிரி ஊர காலி பண்ணிட்டுப் போக வேண்டியதுதான்...”
“அதுவும் சரிதா... நம்மள கைது பண்ணிட்டாகன்னா எப்படி பரிட்சை எழுத?”

“நான் எப்படியாவது தப்பிச்சிருவேன். அஞ்சு வருசத்துல படிச்சு முடிச்சி உன்னை ரிலீஸ் பண்ண அட்வகேட் ஹெலனா வந்து நிப்பேன்...”“ஓ... பரிட்சை எழுதி தெரைச்சுருவ போ!”
“ஆமா... அது மட்டுமில்லைலே... அந்த சாத்தானுவ எந்த நாட்டுல இருந்தாலும், இந்தியாவுக்கு கூட்டி வந்து தண்டன வாங்கிக்கொடுப்பேன். டவ் கெமிக்கல் கேஸ் மாறிலாம் ஆவாது...”

“ம்ம்ம்ம்... அன்னைக்கு மட்டும் நீ தெரச்ச தெரைப்புக்கு ஒனக்கு பேச்சுப்போட்டியில பரிசு கொடுத்துருந்தா... இப்படிலாம் அலைஞ்சிட்டு இருப்பியா..? வாத்யாராகணும், போலீஸாகணும்னு சொன்னவனுங்களுக்குதான ப்ரைஸ் கொடுத்தாக...”“முருகன் கூடதான் லூஸு மாதிரி விவசாயி ஆகணும்னு சொன்னான். இந்த சாத்தானுக இங்கிட்டு இருக்கற வரையும் இந்த பூமியில என்ன வெளையப் போவுது..?”
“இப்ப எதுக்கு அவனைப் பத்தி பேசுற..?”

“அவன்கிட்ட நான் என்ன போன்லயா பேசுறேன்...”
“எரும பாத்துப்போ... வண்டி என்ன இந்தக் குதி குதிக்குது...”
“சாத்தானுக போட்ட ரோடுலே, அப்படித்தான இருக்கு...”
“அவனுவ நல்லதும் செய்றானுவதான..?”

“எருமெ... ஒனக்கு எத்தனை தடவதான் சொல்ல... அது நாம வரி கட்டுற மாதிரி. தொழில் பண்ற ஒவ்வொருத்தனும் பண்ணணும். இந்த ரோட்டுக்கு போட்ட மண்ணு கூட குளத்தை தூர்வாரி எடுத்துப்போட்டதுதான்...”
“அதுவும் நல்லதுதான..?”

“என்ன நல்லது? அது முழுக்க இவனுக கெமிக்கலைத்தான் கொட்டிவச்சுருக்கானுக... அன்னைக்கு ப்ரின்ஸ் அண்ணே ஒரு கண்ணாடி டம்ளர்ல அள்ளிட்டு வந்து அதுக்குள்ள என்னமோ இருக்குன்னு சொன்னாருல்ல...”
“ஆர்சனிக்...”

“ஆ... சரிதான்... அந்த வெசம்தான இந்த ஊர் தண்ணில, காத்துல எல்லாம் கலக்குது... ஆமா, நாளைக்கு என்ன கெமிஸ்ட்ரி பரிட்சையா?”
“ம்ம்ம்...”அன்று அந்த ஊர் மக்கள் தொடங்கிய போராட்டத்தின் 53வது நாள். அப்போராட்டம் உலக அளவில் கவனம் பெற ஆரம்பித்திருந்தது. மேகம் எப்போதும் போலல்லாமல், நீல வண்ணத்தை மட்டுப்படுத்தியிருந்தது. அவர்களோ கருமேகங்கள் மட்டுமே தங்களைச் சூழ்ந்து கொண்டிருப்பதாக நம்பிக்கொண்டு இருந்தனர்.

எப்போது தூங்கி எழுந்தாலும் ஹெலன் நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை. அவளோடு ஹெலன் இன்னமும் உரையாடிக்கொண்டிருந்தாள்.
“டி.வி.எஸ்50 சாவி எங்கம்மா?”பதில் வரவில்லை. அவளே எடுத்துக்கொண்டு கிரேட் காட்டன் சாலையில் பயணிக்க ஆரம்பித்தாள்.

ஹெலன் பெரிதாக மார்க் வாங்குபவள் இல்லை. படிப்பில் அவளைவிட மிகவும் குறைவாகத்தான் இருப்பாள். ஆனாலும் அவளுக்கு எத்தனை விசயம் தெரியும் என்கிற வியப்பு சோஃபியாவிற்கு எப்போதும் இருக்கும். அன்றும் அப்படித்தான்.

“இதெல்லாம் போர்த்துகீசிய உணவு...”
மக்ரோன் என்றால் ஹெலனுக்கு அவ்வளவு பிடிக்கும்.
“ம்ம்ம்...”“இதெல்லாம் போர்த்துகீசிய கட்டட பாணி...”
“நீயும் ஃபர்ஸ்ட் க்ரூப் எடுத்திருந்தா சிவில் இஞ்சினியரே ஆயிருக்கலாம். ஒனக்குத்தான் இவ்ளோ தெரியுதே...”
“ஏ நான் இதெ தெரிஞ்சிக்கறதே, மக்களைத் தெரிஞ்சுக்கத்தான். மக்களைத் தெரிஞ்சுக்கிட்டாதான் மனசுக்குப் பிடிச்ச மாதிரி தொழிலை சரியா செய்ய முடியும்...”
“என்னமோ சொல்ற...”

“நம்ம ஊர்ல காத்துல கலக்கற மாசுகள அளக்கறதுக்குன்னு, அரசாங்கம் சில கருவிகளை வச்சுருக்கானுக. ஆனா, அதை வைக்கும்போது மாசு வரும் திசைக்கு நேரே வைக்காம, அதற்கு எதிர்த்தமாதிரி வச்சுருக்கானுகன்னு அவரு சொன்னாரு. இப்ப அந்த கருவி எங்க தெரியுமா இருக்கு..?”
“என்னபே சொல்ற...”

“அது நம்ம அண்ணாச்சியோட எடம்தான். இத எப்படி அவுக சாதி பிரச்னையா மாத்துனாகன்னு புரியுதா ஒனக்கு? சாதில இருக்கற மேல்மட்டத்து ஆளுக முடிவு பண்ணிட்டாகன்னா, அவுக சாதிலயும் உசுருபோகும்னு நெனச்சாலும் அதை செய்யத் தயங்க மாட்டாக. இதனாலதான் நம்மூர்ல
அப்பப்போ சாதிக்கலவரம் வருது...”

“தங்கத்துலயே மாஸ்க் போட்டுக்கிட்டு நடப்பானுவளா இந்த சாத்தானுக? பனிமயமாதா இவுங்களை சும்மா விடுமா..?”
“நீயும் நானும் கிருஸ்துவரா இருந்தாலும் சண்டைன்னு வந்தா நீயும் நானும் வேற கும்பல்க தாம்பே...”
“ஏன் நாம கிருஸ்தவங்க இல்லையா?”

“சாத்தானுகளுக்கு எதிரா நின்னாதான் கிருஸ்துவன். நீ என்ன சொல்ற..?”
“ஒம்மேல எங்கப்பா வாசம் வருதுப்பிள்ள...”
ஹெலன் இறுதி ஊர்வலத்தின் மறுநாள் ஊருக்குள் அப்பா வந்து சேர்ந்ததிலிருந்து, சோஃபியா மீது வழக்கு பதியப்படாமல் இருக்க பைக்கிலேயே மணியாச்சி சென்று தன் தங்கை வீட்டில் விட்டு விட்டார். அங்கிருந்தே அவள் சென்னையில் உள்ள புகழ்பெற்ற கிருஸ்துவ பல்கலைக்கழகம் ஒன்றில் நன்கொடையோடு பொறியியல் படிப்பில் சேர்ந்திருந்தாள்.

தன்னை அங்கேயே ஏ.பி.சி-யிலோ, அன்னம்மாள் டீச்சர்ஸ் ட்ரெயினிங்கிலோ சேர்த்துவிடுங்கள் என்பதே சோஃபியாவின் வேண்டுகோளாய் இருந்தபோதும், அவள்மீது வழக்கு வந்துவிடக்கூடாது என்பதால் அவளது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.சோஃபியாவுக்கு அப்பா என்றால் தனிப்பிரியம். சோஃபியாவின் அப்பாவும் ஃபாதரும் போலீஸ் ஸ்டேசன், வக்கீல் என நிறைய செலவழித்து எந்த விசாரணைக்கும் சோஃபியா போகாதபடி பார்த்துக்கொண்டார்கள்.

இன்ஃபெண்டா பற்றி மட்டும் செய்தி களில் அவ்வப்போது சில வரிகள் வந்தன. அடுத்த நாள் எப்படியாவது அவளையும் பார்க்க வேண்டும் என்று நினைத்தபடியே பனிமய மாதா கோயில் அருகே நிறுத்தினாள்.மெதுவாகப் படியேறினாள். பெரிதும் தயக்கம் இருந்தது. ஹெலனும் இன்ஃபெண்டாவும் இல்லாமல் முதன்முதலாக பனிமய மாதா ஆலயத்திற்கு செல்கிறாள். ஹெலனின் மறைவுக்குப் பின்னர் இத்தனை மாதங்களுக்குப் பிறகு ஆலயம் வருகிறோம் என்கிற தயக்கமும் இருந்தது.

மாஸ் முடிந்து பெரும்பாலான கூட்டம் வெளியேறிவிட்டது. அந்தப் பெரும் கோபுரங்களில் தஞ்சமடையும் புறா போல இங்கேயே இருந்துவிடலாமா என்று அவளுக்குத் தோன்றியது. எப்படியும், தான் வருவது குறித்து ஃபாதருக்கு தகவல் சென்றிருக்கும் என்று அறிந்திருந்தாள்.

‘‘ஏன் படிக்க மாட்டேன்னு சொல்லிட்டு காலேஜ விட்டு வந்துட்டியாமே?’’ என்று ஃபாதர் அவளிடம் கேட்பார் என சோஃபியாவுக்குத் தெரியும். அவளிடம் அப்போது எந்த பதிலும் உறுதியாக இல்லை. உள்ளே பிரம்மாண்டமான சுவரில் பரலோகத்தின் ஓவியம், கீழே அன்னையின் திருவுருவம். தன்னை வணங்கிய கடலோடிகளுக்கு என்றைக்கும் காவலாய் இருந்தவள். ‘இனியும் இருப்பவள் என்று சொல்ல முடியுமா?’ என்று தனக்குள் ஒரு குரல் ஒலிப்பதை உணர்ந்தாள்.

எல்லா பிள்ளைக்கும் குழந்தை இயேசுவைப் போல் வாய்த்துவிடுகிறதா என்ன? இயேசுவின் தியாகம்தான் அன்னையை வணங்க வைக்கிறதா... அன்னையின் தியாகம்தான் ஒரு இயேசுவை உருவாக்கியதா என யோசித்துக் கொண்டிருந்தாள். அங்கே அவளுக்குப் பழக்கப்பட்ட முகங்கள் தென்பட்டன.ஃபாதரும் அவளைப் பார்த்ததும் அருகில் வந்தார்.

“என்ன சோஃபி... இன்னும் அப்படியேதான் இருக்கப்போறியா?”
ஹெலனின் அம்மா அங்கே ஆலயத்தை சுத்தம் செய்து கொண்டிருந்ததையே பார்த்தபடி இருந்தாள்.“கல்லறைக்குப் போயிட்டு வந்தியா சோஃபி?” ஃபாதரின் கேள்வி அவளுக்குள் புகவில்லை.

“ஹெலனோட அம்மா!”“ஆமா...”
சொன்னவுடனேயே ஓடிச் சென்று அம்மாவை அணைத்துக் கொண்டாள்.“எவ்ளோ நாளாச்சு மக்கா...” ஹெலனின் அம்மா புன்னகையும் அழுகையுமாக சோஃபியாவின் கன்னங்களை வருட... அங்கிருந்தபடியே... “ஃபாதர்... எங்கம்மாகிட்ட எங்கப்பாவ சொல்லச் சொல்லுங்க, சோஃபியா வக்கீலாகப் போறான்னு...” என்றாள்.

கழற்றிக் கொண்டிருந்த மைக் ஒன்று தரையில் விழுந்த ஒலியும், எதிரொலியும் தவிர்த்து சற்று நேரத்திற்கு அங்கு அமைதி நிலவியது.

சுட்டெரிக்கும் படிகளில் துள்ளியபடி அவள் கீழிறங்கும்போது, அவளுக்கு மேலே கூட்டமாக புறாக்கள் பறந்தன. இதுவரை பெறாத அப்பத்தின் வாசனை சோஃபியாவிடம் இருந்தது.
 
த்ரிஷாவின் சுத்தம்

வீட்டைப் பெருக்கி சுத்தமாக வைத்திருப்பதைப் போல இன்ஸ்டாவில் உள்ள தேவையில்லாத ஆணிகளை எல்லாம் நீக்கிவிட்டு, செம நீட்டாக வைத்திருக்கிறார் த்ரிஷா. அவரது இன்ஸ்டாவில் இப்போது பதினொரு பதிவுகள்தான் இருக்கின்றன. த்ரிஷ், இப்போது யூனிசெஃப்பின் செலிபிரிட்டி அட்வகேட்டாக மின்னுவதால், இன்ஸ்டா, டுவிட்டர் என சோஷியல் மீடியா போஸ்ட்கள் எல்லாம் களை எடுப்பாம்.

இந்தியில் தஞ்சமடைந்த வடிவேல் ஹீரோயின்!

வடிவேலுவின் ‘தெனாலிராமன்’ ஹீரோயின் மீனாட்சி தீக்‌ஷித், அப்போது தமிழில் ஒருசில படங்களில் தலைகாட்டினார். அதன்பிறகு டோலிவுட்டில் மகேஷ்பாபுவின் ‘மஹரிஷி’யில் மினுமினுத்தார்.

இப்போது மீண்டும் பாலிவுட் பக்கமே பயணித்து வருகிறார். உத்தரப் பிரதேஷின் ரேபரேலியில் பிறந்து வளர்ந்த மீனாட்சி, தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து சினிமாவிற்கு வந்தவர். மீனாட்சியின் தந்தை ரேபரேலியில் புகழ்பெற்ற சீனியர் அட்வகேட்டாம்!

தமிழை நேசிக்கும் கொல்கத்தா!

விக்ரமின் ‘ஸ்கெட்ச்’சில் ஹோம்லியாக பளபளத்த மெகாலி மீனாட்சி, க்ளாமர் துள்ளலாக புது போட்டோ ஷூட் ஒன்றை தட்டி விட்டிருக்கிறார்.
பெங்காலி பறவையான மெகாலி, பிறந்து வளர்ந்ததெல்லாம் கொல்கத்தாவில். ‘ஐ லவ் தமிழ், ஐ லவ் சென்னை’ என சிலிர்க்கும் மெகாலி, சரளமாக தமிழில் புகுந்து விளையாடுகிறார். நான்கு திருக்குறளையும் ஒப்புவித்து அசத்துகிறார். ‘பாண்டிமுனி’ படத்தில் ஜாக்கி ஷெராஃபுடனும் மிரட்டியவர் இவர்.

கிச்சன் சிகா!

லாக்டவுன் பலரையும் கிச்சன் குயின்களாக மாற்றியிருக்கிறது. காஜல் அகர்வாலைப் போல, ஹன்சிகாவும் வெரைட்டி ஐட்டங்களை சமைப்பதில் இப்போது கில்லாடி பேபி. கேக், குக்கீஸ் என ஈஸியான மேக்கிங்கில் கலக்கியவர், தனது செஃப் உதவியுடன் சுடச்சுட பன்னீர் மக்கன்வாலாவை சமைத்தும் கெத்து காட்டுகிறார். அதை தனது யூ டியூப் பக்கத்திலும் பதிவிட்டு புன்னகைக்கிறார். அடுத்து டும் டும் டும் ஹன்சிகா?

ஜீவ கரிகாலன்