ரத்த மகுடம்-89



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘பேசா மடந்தைகள் வாட்கள் கொண்டு உரையாட வந்ததற்கு வந்தனங்கள்!’’
தன் வாளை நீட்டியபடி சொன்ன சிவகாமி, சற்றே அதைத் தாழ்த்தி ஒருவர் மீது ஒருவராக நின்றிருந்த அவ்விரு பெண்களுக்கும் வணக்கம் தெரிவிப்பதுபோல் குனிந்தாள்.இதுதான் சமயம் என்று காவி உடை தரித்திருந்த பெண்ணின் தோள் மீது நின்றிருந்த மற்றொரு காவி உடை அணிந்த பெண், தன் வாளுடன் சிவகாமியின் மீது பாய்ந்தாள்.

இதற்காகவே காத்திருந்தது போல் தன் வலது காலை அரைவட்டமிட்ட சிவகாமி, நின்றிருந்த காவி உடை தரித்த பெண்ணின் பாதங்களைத் தட்டிவிட்டாள்.இதை சற்றும் எதிர்பார்க்காத அந்தப் பெண், நிலைதடுமாறி சரிந்தாள்.அதேநேரம் தன் வாளின் இரு பக்கங்களையும் தன்னிரு கைகளால் பிடித்தபடி மல்லாந்து படுத்தவண்ணம் தன் மீது பாய்ந்த மற்றொரு காவி உடை அணிந்த பெண்ணின் வாளை சிவகாமி தடுத்து நிறுத்தினாள்.

இமைக்கும் பொழுதுக்குள் வாளைத் தடுத்தபடியே படுத்த நிலையில் இருந்து சிவகாமி எழுந்தாள். மேலிருந்து தன்மீது பாய்ந்த பெண்ணை தன் இடது காலால் எட்டி உதைத்தாள். காவி உடை அணிந்திருந்த இரு பெண்களும் இருவேறு திக்குகளில் விழுந்தார்கள்.
அலட்சியமாக தனது ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை நீட்டி, வாளைப் பிடித்திருந்த கையை நீட்டியும் மறு கையை மடக்கி
யும் நின்றாள் சிவகாமி.

அவளது கருவிழிகள் அவ்விருவரையும் அலசின. தடுமாறி விழுந்த நிலையிலும் அவர்கள் தத்தம் வாட்களை இறுக்கமாகப் பிடித்திருந்தார்கள். வாட்களை ஏந்திய அவர்களது தோரணை, தொடர்ந்து அவர்கள் வாட்பயிற்சி மேற்கொண்டு வருவதைப் பறைசாற்றியது.எப்போது, எந்த இடத்தில் இவர்கள் வாட் பயிற்சி மேற்கொண்டார்கள்... இவர்களுக்கு பயிற்சி அளிப்பது யாராக இருக்கும்..?

கிளைவிட்ட வினாக்களை வெட்டி எறியாமல் தன்னுள் அவற்றை சிவகாமி படரவிட்டாள். அதேநேரம் தன் கவனத்தை அவ்விருவர் மீதும் குவித்தாள்.
விழுந்த அதிர்ச்சியில் சற்றே உறைந்த அவர்கள், கணங்களில் தங்களைச் சமாளித்துக் கொண்டு எழுந்தார்கள்.சிவகாமியை இருபுறங்களில் இருந்தும் தாக்க ஆயத்தமானார்கள்.

அவ்விருவரின் பாத அசைவுகள் சிலம்பாட்டத்தை நினைவுபடுத்தின. ‘வீடு கட்டுகிறார்கள்’!தனக்குள் புன்னகைத்த சிவகாமி, சிலையாக அப்படியே நின்றாள். தன் கருவிழிகளை மட்டும் இருவர் பக்கமும் மாறி மாறி சுழற்றினாள். ஆனால், மனதுக்குள் அவர்களை எப்படி சமாளிப்பது என திட்டமிட்டாள். அதன் ஒருபகுதியாக தன் பங்குக்கு அகத்தில் ‘வீடு கட்டினாள்’!

ஆனால், கணங்கள்தான் நகர்ந்தனவே தவிர அவ்விருவரும் தத்தம் இடங்களை விட்டு அசையவில்லை. தாக்குதலைத் தொடுக்கவில்லை.
சிவகாமிக்கு இது புதிராக இருந்தது. இருவரும் தன்னை நோக்கி வாட்களை நீட்டியிருக்கிறார்கள். ஆனால், சண்டையிட முற்படவில்லை. மாறாக தங்கள் பாதங்களை மட்டும் சிலம்புப் பயிற்சி மேற்கொள்ளும்போது அடி எடுத்து வைப்பதுபோல் அசைக்கிறார்கள்.

ஆனால், அசைக்கவில்லை! அசைப்பதுபோல் தங்கள் செய்கை செய்கிறார்கள்.கவனித்த சிவகாமியின் புருவங்கள் எழுந்து தாழ்ந்தன. இருவரும் தங்கள் உடலை இறுக்கத்தில் இருந்து தளர்த்துகிறார்கள்; கொடியாக மாறுகிறார்கள்!இது ஒருவகையான போர் முறை. மரத்தைப் போல் உடலின் நாடி நரம்புகளை இறுக்கினால், வளைவது கடினம். தசைகள் பிடிக்கலாம். எதிராளி தன் முழு வலுவையும் பயன்படுத்தும் பட்சத்தில் எலும்புகள் முறியவும் வாய்ப்பிருக்கிறது.

மாறாக செடி போல் உடலின் நாடி நரம்புகளைத் தளர்த்தினால், புயலிலும் வளைந்து தாக்குப் பிடிப்பதுபோல் யுத்தத்தில் நிற்கலாம். எதிராளியின் வலிமை அப்போது பயன்படாமல் போகும்.சொல்வதற்கு எளிதாக இருக்கும் இச்செயல், கடுமையான பயிற்சிக்குப் பிறகே கைகூடும் என்பதை சிவகாமி அறிவாள். எனில், நாள் தவறாமல் இப்பெண்கள் இப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்... யார் தலைமையில்..? எவரது மேற்பார்வையில்..?
இவர்களுடன் பேசிப் பழகிய காலங்களில் தங்கள் உடல்மொழியால் கூட, தாங்கள் வாள் பயிற்சி மேற்கொண்டு வருவதை இவர்கள் பறைசாற்றவில்லையே..? அந்தளவுக்கு ரகசியத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள் என்றால்...

தன் பாத கட்டை விரலை இருமுறை உயர்த்தி தாழ்த்தினாள் சிவகாமி. ஆச்சர்யத்தின் ரேகைகள் அவளது மேனி முழுவதும் படர்ந்தன. இவர்களது ஆசான் யார்..? யாராக இருந்தாலும் தமிழக வரலாற்றில் அவர் தவிர்க்க முடியாத போர்த் தளபதியாக, முக்கியமானவராக இருக்க வேண்டும்.
தனக்குக் கூட தெரியாதபடி வாழ்ந்து வரும் அந்த நபர் யார்..?

அறிந்து கொள்ளும் ஆவல் சிவகாமிக்குள் பொங்கி எழவே, இருவரிடமும் பேச்சுக் கொடுக்க முற்பட்டாள்.ஆனால், அதற்குள் கனவிலும் அவள் நினைத்துப் பார்க்காத காட்சிகள் எல்லாம் அரங்கேறத் தொடங்கின.தனக்கு இரு பக்கமும் இருந்த அவ்விரு பெண்களையும் ஒரு பக்கமாக வரவழைக்க, சிவகாமி நகர்ந்தாள்.இதை ஊகித்தது போல் சாளரத்தின் அந்தப் பக்கத்தில் இருந்து ஒரு பெண் வாளுடன் குதித்தாள்.

குதித்தவள் வேறு யாருமல்ல... சில கணங்களுக்கு முன் சிவகாமியால் தள்ளிவிடப்பட்ட மயிலின் கழுத்து நிற ஆடையை உடுத்தியிருந்தவள்தான்!
ஆக, இப்போது, தான் மூவரை எதிர்க்க வேண்டும். அதுவும் குனிந்த தலை நிமிராதவர்கள்... பயந்த சுபாவம் கொண்டவர்கள் என்றெல்லாம் தங்களைக் குறித்த பிம்பங்களை சுற்றிலும் இருந்தவர்களுக்கு ஏற்படுத்தியவர்கள்!

வித்தைக்காரன்தான் இவர்களின் ஆசான்... காற்றுக்குக் கூட தெரியாதபடி எவ்வளவு ரகசியமாக இம்மூவரையும் வீராங்கனைகளாக தயார்படுத்தியிருக்கிறான்... கண்டிப்பாக அந்தப் பயிற்சியாளனை சந்தித்தே ஆக வேண்டும்... அதற்கு இம்மூவரையும் விரைவாக
வீழ்த்திவிட்டு விசாரிக்க வேண்டும்...

முடிவுடன் தன் வாளைச் சுழற்றி காற்றைக் கிழித்த சிவகாமி தாக்குதலில் இறங்க முற்பட்டபோது -
சர்... சர்... சர்... என பல பெண்கள் உப்பரிகைக்குள் குதிக்கத் தொடங்கினார்கள்!
அனைவரது கரங்களிலும் வாட்கள் அந்த நள்ளிரவிலும் மின்னின.
சொல்லி வைத்ததுபோல் சிவகாமியை அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.
அனைவருமே தென் தமிழக கிராமப் பெண்கள்!
‘‘மன்னா...’’

தயக்கத்துடன் ஒலித்த குரலைக் கேட்டு சட்டென திரும்பினார் பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர்.அவரை வணங்கியபடி நின்றிருந்தான் கடிகை பாலகன். மறைந்து, கரைந்துவிட்டதாகக் கருதப்பட்ட வேளிர்களின் தலைவனாக திடீரென்று சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரால் ‘முடிசூட’ப்பட்டவன்!தனது சயன அறையின் கதவுக்கு நடுவில் கம்பீரமாக நின்ற அரிகேசரி மாறவர்மர், பாலகனை உற்றுப் பார்த்தார்.

அவர் உதட்டில் புன்னகை மலர்ந்தது. ‘‘சொல்லுங்கள் வேந்தே! நடுச்சாமத்தில் என்னைக் காண தாங்கள் வந்திருப்பதன் காரணத்தை அடியேன் அறியலாமா..?’’‘‘மன்னா...’’ அதிர்ந்துபோனான் கடிகை பாலகன். ‘‘என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்..? காஞ்சி கடிகையில் பயிலும் சாதாரண மாணவன் நான்... என்னைப் போய் தாங்கள் வேந்தே என அழைக்கலாமா..?’’
‘‘அழைப்பது தவறா..? வேளிர்களின் தலைவன்தானே நீங்கள்..?’’

‘‘இல்லை மன்னா... கடிகை மாணவன்தான்... பல்லவர்களை வீழ்த்த என்னை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார் சாளுக்கிய மன்னர்...’’
‘‘அந்த ஆயுதம் பாண்டியர்களுக்கும் எதிரானதுதானே..?’’
‘‘இல்லை மன்னா...’’‘‘எப்படி நம்புவது..?’’ நிறுத்திய அரிகேசரி மாறவர்மர், பாலகனை உற்றுப் பார்த்தார். ‘‘வேளிர்களை வேரோடு வீழ்த்தி பேரரசு காலத்தை உருவாக்கியது பல்லவர்கள் மட்டுமல்ல... பாண்டியர்களும்தான்...’’

‘‘அந்தப் பாண்டியர்கள் இப்போது வேளிர்களின் நண்பர் என்னும்போது எப்படி ‘இந்த’ ஆயுதம் தங்களுக்கு எதிராகத் திரும்பும்..?’’
தலைதாழ்த்தி வணங்கியபடி கேட்ட பாலகனைக் கண்ட அரிகேசரி மாறவர்மரின் கண்கள் ஒளிர்ந்தன: ‘‘சொல்... என்ன விஷயம்..?’’ மரியாதையைக் கைவிட்டு நேரடியாக உரையாட முற்பட்டார்.‘‘மன்னா... வந்து... ஒரு விஷயம்...’’ பாலகன் உமிழ்நீரை விழுங்கியபடி தவித்தான்.
‘‘அதுதான் வந்துவிட்டாயே... என்ன விஷயம்..?’’‘‘எங்கள் படை...’’

பாலகன் முடிப்பதற்குள் அரிகேசரி மாறவர்மர் குறுக்கிட்டார்: ‘‘இப்பொழுது சிவகாமியை சுற்றி வளைத்திருக்கிறது... அப்படித்தானே..?’’
பிரமை பிடித்து நின்றான் பாலகன்.
‘‘இதைச் சொல்லத்தான் இங்கு வந்தாயா..?’’
‘‘மன்னா... தங்களுக்கு எப்படி...’’
‘‘வேளிர்களின் ரகசியப் படை குறித்து தெரியும் என்று கேட்கிறாயா..?’’

பதிலேதும் சொல்லாமல் பாலகன் தலைகுனிந்தான்.‘‘தென் தமிழகத்தை ஒரு குடையின் கீழ் ஆளும் மன்னன் நான்... ஆயிரம் கண்கள் இல்லாமல் அரியாசனத்தில் அமர முடியாது... என்னதான் கால ஓட்டத்தில் வேளிர்கள் ஒடுங்கிவிட்டாலும் முற்றிலுமாக அவர்கள் அழியவில்லை என்பதும்... இழந்த தங்கள் நிலப்பரப்பைப் பெற என்றேனும் ஒருநாள் அவர்கள் முயற்சிப்பார்கள் என்பதும்... சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தமிழக மன்னர்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். குறிப்பாக பல்லவனுக்கும் பாண்டியனுக்கும்! அப்படியிருக்க எனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அதுவும் தென்பாண்டி கிராமத்தில் வேளிர்களின் படை பயிற்சி பெற்று வருவதை அறியாமல் இருப்பேனா என்ன..?’’  
‘‘மன்னா...’’

‘‘தடுக்காமல் இருந்ததற்கான காரணம், அப்படையை எப்போது வேண்டுமானாலும் பாண்டியப் படையுடன் இணைக்கலாம் என்பதால்தான்!’’
சட்டென மலர்ந்தான் பாலகன்: ‘‘நன்றி மன்னா... நீங்கள் எப்பொழுது சொல்கிறீர்களோ அப்பொழுது படையை இணைத்து விடுகிறேன்!’’
‘‘கடிகை பாலகனாக இல்லாமல் வேந்தனாக வாக்குக் கொடுக்கிறாய்!’’ கடகடவென சிரித்தார் அரிகேசரி மாறவர்மர்: ‘‘நல்லது... படையில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?’’

‘‘நூ...று பேர் மன்னா...’’
‘‘நூற்றைம்பது!’’ அழுத்திச் சொன்னார் பாண்டிய மன்னர்.
‘‘ம...ன்...னா...’’‘‘அனைவரும் பெண்கள். வீராங்கனைகள்! வாள் சண்டையில் சூரர்கள். அதங்கோட்டாசான்தானே வாள் பயிற்சி அளிக்கும் ஆசான்..?’’
பாலகன் சிலையென நின்றான்: ‘‘மன்னா... தங்களுக்கு அதங்கோட்டாசானைத் தெரியுமா..? அவர்... அவர்...’’
‘‘எவர் கண்ணிலும் படாமல் மறைந்து வாழ்கிறார்!’’

‘‘தங்கள் பார்வையில் எப்பொழுது அவர் தட்டுப்பட்டார் மன்னா..?’’
‘‘அவர் பிறந்தபோது!’’ அலட்சியமாக சொன்ன அரிகேசரி மாறவர்மர், ஏதோ சொல்ல வந்த பாலகனை தன் கரம் உயர்த்தி தடுத்தார்: ‘‘நாளை சந்திப்போம். உனது படையிடம் சிவகாமி சிக்க மாட்டாள். சென்று வா...’’

சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் தன் சயன அறைக்குள் நுழைந்தார் அரிகேசரி மாறவர்மர்.படுக்கைக்கு அருகில் இருந்த மேஜையில் தாயப் பலகை இருந்தது. கூடவே மூன்று முத்துக்கள்.அவற்றை எடுத்து திக்குக்கு ஒன்றாக வைத்தார்: ‘‘இது பல்லவன்... இது சாளுக்கியன்... இது பாண்டியன்...’’ முணுமுணுத்த அரிகேசரி மாறவர்மர், தந்தத்தாலான தாயத்தை எடுத்து உருட்டினார்.

சிவகாமி சலிக்கவேயில்லை. துவளவுமில்லை. தன்னைச் சூழ்ந்த அத்தனை பெண்களையும் வாளால் தடுத்து நிறுத்தினாள்.சூழ்ந்த பெண்கள் அனைவருமே சிலம்பாட்டம் கற்றவர்கள் என்பதை அவர்களது பாத நடவுகளில் இருந்தே அறிந்துவிட்டாள். எனவே தன் வாளையும் சிலம்பம் போலவே சுற்றினாள். தன்னைச் சுற்றிலும் எதிராளிகளின் வாள் நுழையாதபடி பார்த்துக் கொண்டாள்.

யாரையும் காயப்படுத்தவோ அல்லது வீழ்த்தவோ சிவகாமி விரும்பவில்லை. ஆண்களுக்கு சமமாக பெண்கள் உக்கிரமாக வாள் சண்டையிட்டது அவளைக் கவர்ந்தது. அவர்களது திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும்... அதேநேரம், தானும் அவர்கள் கையில் சிக்கக் கூடாது. தவிர கரிகாலனும் சீனனும் என்ன ஆனார்கள்... மதுரையில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்... அதற்கு முதலில் இங்கிருந்து வெளியேற வேண்டும்...

முடிவுடன் தன் வாளைச் சுழற்றியபடியே நகர ஆரம்பித்தாள். உப்பரிகையின் அந்தப் பக்கம் சுவர் இருப்பதை முன்பே பார்த்துவிட்டாள். எனவே சுவருக்கு அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ கதவு இருக்க வேண்டும். சுவரை நோக்கி சிவகாமி நகர்ந்தாள்.

சரியாக சுவரை அவள் நெருங்கவும், திரைச்சீலை போல் அந்தச் சுவர் உயரவும் சரியாக இருந்தது!ஒரு கரம் வலுவாக அவளை உள்ளே இழுத்தது!

சிவகாமி உள்ளே வந்ததும் பழையபடி அந்தச் சுவர் மூடிக் கொண்டது!
பாண்டிய மன்னர் அரிகேசரி மாறவர்மர் யோசிக்கத் தொடங்கினார்: ‘‘இந்த தாயம்தான் அதங்கோட்டாசான்... எந்த எண்ணை விழவைத்து யாரை எப்படி நகர்த்தப் போகிறான்..? அவனுக்கும் சிவகாமிக்கும் தொடர்பு இருக்கிறதா..?’’
 
(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்