FIR பதியாமல் நீங்கள் சிறையில் அடைக்கப்படலாம்!



என்ஐஏ சட்டத்தின்படி ஒருவர் மீது சந்தேகம் இருந்தாலே, அவரைக் கைது செய்து விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கலாம்! அந்த நபர் ஏன், எதற்காக, எதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரங்களை எஃப்ஐஆரில் கூறவேண்டிய அவசியம் இல்லை!

வன்முறை, தீவிரவாதம், தீவிரவாதப் பேச்சு, வன்முறைப் பேச்சு, வன்முறைக்கு தூண்டுவது போன்ற பேச்சு, சமூக ஊடகங்களில் தவறான செய்திகளைப் பதிவிடுவது, வன்முறைச் செய்திகளைப்பரப்புவது... என இவற்றில் ஏதாவது ஒன்றில் உங்கள் மீது சந்தேகம் வந்தாலே போதும், என்ஐஏ சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கலாம்.

நாடு முழுவதும் நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை மாநில அரசுகளின் அனுமதி இன்றியே கூட விசாரணைகள் மேற்கொள்ள இவ்வமைப்புக்கு உரிமையுள்ளது. என்ஐஏவின் தலைமை அலுவலகம் தில்லியிலும் லக்னோ, ஜம்மு, கெளஹாத்தி, கொல்கத்தா, மும்பை, ராய்ப்பூர், ஹைதராபாத், கொச்சி என எட்டு இடங்களில் இதன் கிளை அலுவலகங்களும் அமைந்திருக்கின்றன.

என்ஐஏ சட்டம் இயற்றி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், இன்னும் இது ஏன் விவாதப் பொருளாக இருக்கிறது?

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் 2008ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து பயங்கரவாத குற்றச் செயல்களை விசாரிக்க 2009ம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்பு (National Investigation Agency - NIA) காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
நாட்டில் உருவாகும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில், என்ஐஏ அமைப்புக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும் என்று 2017ம் ஆண்டு முதல் மோடி அரசு முயற்சித்து வந்தது.

தேசியப் புலனாய்வு அமைப்பிற்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி நிறைவேற்றப்பட்டது. நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 278 உறுப்பினர்களும், மசோதாவுக்கு எதிராக 66 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

ஒற்றை தேசத்துக்கு வழிவகுக்கிறதா?

புதிய குற்றப் பிரிவுகளைச் சேர்த்ததன் மூலமாக பல்வேறு வழக்குகளில் மாநில அரசின் அதிகாரத்தை, தேசியப் புலனாய்வு முகமையின் கையில் ஒப்படைத்திருக்கிறது மத்திய அரசு.மட்டுமல்ல. சிபிஐயைவிட அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த மாநிலத்திற்குள் நுழைவதற்கும், யார் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் என்ஐஏவுக்கு முழு அதிகாரம் உண்டு.

இதற்குக் குறிப்பான மாநில அரசிடமோ, நீதிமன்றத்திடமோ அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. இவர்களுக்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.இணையக் குற்றப்பிரிவு (66F) என்ஐஏவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது இறையாண்மையை அச்சுறுத்தும் நோக்கிலோ, மக்கள் அல்லது மக்களில் ஒரு பிரிவினர் மீது பயங்கரவாதமான தாக்குதலை நிகழ்த்தும் நோக்கத்துடனோ ஒருவர் செயல்படுவார் எனில், அவரை என்ஐஏ கைது செய்து விசாரிக்கலாம்.

அரசுக்கு எதிராக யார் போராடினாலும், அரசை எதிர்த்து நின்றாலும் அவர்கள் இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் கைது செய்யப்படலாம். அவர் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட வேண்டியதும் இல்லை.எதிர்த்த முதல் மாநிலம் இந்தியாவிலேயே முதன் முறையாக என்ஐஏ என்பது கூட்டாட்சி அரசியல் அமைப்பு சாசனத்துக்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 131வது பிரிவின் கீழ்  வழக்கு தொடர்ந்துள்ளது.  

சத்தீஸ்கர் மாநில அரசு கடந்த 15ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், “என்ஐஏ சட்டம் நாடாளுமன்றத்தின் சட்டமன்றத் திறனுக்கு அப்பாற்பட்டது. அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது. அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் பட்டியல் IIன் பிரிவு 2ன் படி போலீஸ் என்பது மாநில அரசாங்கத்தின் கையில் இருக்கும் அதிகாரத் துறை. எனவே, போலீஸின் அதிகாரங்களை மத்திய அரசுக்கு வழங்குவது அரசியலமைப்பிற்கு எதிரானது.

என்ஐஏ என்பதன் மூலம் மாநிலத்தின் போலீஸ் துறையின் அதிகாரங்களை மீறும் ஒரு விசாரணை நிறுவனத்தை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான அரசியலமைப்பு வரையறுத்த உறவுகளை என்ஐஏ சீர்குலைக்கிறது.அரசியலமைப்பின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள மாநில இறையாண்மை பற்றிய கருத்தை என்ஐஏ தெளிவாக நிராகரிக்கிறது. மாநிலத்தின் அதிகார எல்லைக்குள் செய்யப்பட்டுள்ள குற்றங்களை விசாரிப்பதற்கான மாநில அரசுகளின் அதிகாரத்தை முற்றிலுமாகப் பறிக்கிறது.

என்ஐஏ சட்டத்தின் பிரிவு 6 (4), 6 (6); என்ஐஏ சட்டத்தின் பிரிவு 7, 8 மற்றும் 10ன் கட்டளைகள் அரசியலமைப்பு திட்டத்திற்கு முரணானவை. பொதுவாக, காவல் துறையினரால் விசாரிக்கப்படும் எந்தவொரு மாநிலத்தின் பிராந்திய அதிகார எல்லைக்குள்ளும் எழும் விஷயங்களை என்ஐஏ விசாரிக்கும் என்பது அட்டவணை 7ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரம்.

இந்தச் சட்டம் ஒரு தேசிய போலீஸை உருவாக்குகிறது. இது மாநிலத்தின் உரிமைகளை பாதிக்கிறது. எனவே என்ஐஏ சட்டம் அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று அறிவிக்கப்பட வேண்டும்...” என்று மனுவில் வலியுறுத்தியிருக்கிறது சத்தீஸ்கர் அரசு.இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் என்ஐஏவுக்கு எதிராக சிவில் வழக்கு தாக்கல் செய்த முதல் மாநிலமாக சத்தீஸ்கர் விளங்குகிறது.

அதாவது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த ஒரு சட்டத்தை எதிர்த்து அதே காங்கிரஸ் தலைமையிலான ஒரு மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது!சமீபத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது முக்கிய வழக்கு இது.

கடந்த ஜனவரி 13ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறது.  இந்தியா முழுவதும் ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே கல்வி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் என்கிற வரிசையில் இப்போது தேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத் திருத்தத்தின் மூலமாக ஒரே சித்தாந்தம் என்பதை புகுத்தப் பார்ப்பதாகப் பலதரப்பிலும் சந்தேகம் கிளம்பியிருக்கிறது.

அதுவும் ஒரு மதத்தை சார்ந்த நபர்களே குற்றவாளிகளாக்கப்படுவது இதை நிரூபணமாக்குகிறது. மக்கள் உணர்வுகளை, எழுத்துக்களை என்றும் கட்டுப்படுத்த முடியாது. அப்படி வரும் சட்டங்கள் நிலைக்குமா என்று பார்க்க வேண்டும். மக்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி எந்த அரசும் ஆட்சி செய்ய முடியாது. அதைத்தான் வரலாறுகளும் நமக்கு காட்டுகின்றன.  

அன்னம் அரசு