ஒரு தமிழ் மகளாக அரசியலுக்கு வருகிறேன்!



திவ்யா சத்யராஜ் Exclusive

இந்தியாவின் சிறந்த ஊட்டச்சத்து நிபுணராக விருது பெற்றிருக்கிறார் திவ்யா சத்யராஜ். வசதியான வாழ்க்கை, நிம்மதியான சிறகடிப்பு என போய்விடாமல் தொடர்ந்து எளியவர்களுக்கான பிரியம் தொட்டு அவரது கரம் நீள்கிறது. மக்களின் நலன் பேணுகிற அவரின் அக்கறைக்கு ஆயிரம் லைக்ஸ் போடலாம்.

உலகின் பெரிய மதிய உணவுத்திட்டமான ‘அக்‌ஷய பாத்ரா’வின் விளம்பரத்  தூதுவர். மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும், நீட் தேர்வை எதிர்த்தும் சமீபத்தில் திவ்யா பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அன்பின் பேராழத்தில் அவர் செல்கிற பயணத்தில் ஆச்சர்யப்பட்டு பேசினால் வெளிப்பட்டது மனம் நிறைந்த கனிவு.நீங்கள் சமூக அக்கறை நிறைந்தவராக, ஊட்டச்சத்து நிபுணராக திசை மாறிவிட்டீர்கள்...

சின்ன வயசில் எனக்கு சாப்பாடு என்றாலே பிடிக்காது. அப்பாவிற்கும், அம்மாவிற்கும் நிறையக் கவலை. காலனியிலேயே நான்தான் ஒல்லியான குழந்தை. ‘என் குழந்தை இன்னைக்கு நல்லா சாப்பிட்டா’ன்னு பெருமை பேசிக்குவாங்க. அம்மாவுக்கு அது மாதிரி சொல்ல ஒண்ணுமே இருக்காது. அப்பா மடியில் உட்கார்ந்து இரண்டு வாய் கொறிச்சிட்டு இறங்கிப் போயிடுவேன்.

அப்படி இருந்த நான், பின்னாடி உணவின் மீது அக்கறையாகவும், உடல் நலத்தை முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ளும்படியும் மாறியது எனக்கே ஆச்சர்யம். அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் என இறங்கிப் பார்த்தபோது பல உண்மைகள் புலப்பட்டன. கடைக்கோடியில் இருக்கிற ஒருத்தருக்கு  மருத்துவமும், கல்வியும் பாரபட்சமின்றி கிடைக்கிறபோதுதான், அந்த நாடு வாழ்வதற்கே தகுதியானதாக மாறுகிறது.

பொறுப்பின்மையாலும், அலட்சியத்தாலும், பொருள் இல்லாமையாலும் ஒரு நோயாளி கூட துன்பப்படக்கூடாது என்பதுதான் முக்கியம். எல்லா மருத்துவர்களும் குறைந்த வருமானத்தில் உள்ளவர்களும் ஆரோக்கியமானவர்களாக இருக்கவேண்டும் என நினைக்க வேண்டும். மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் கூடவே வருவது மருத்துவம்தான்.

அரசு மருத்துவமனைகளின் சிகிச்சையைக் குற்றம் சொல்ல முடியாது. ஆனால், பராமரிப்பும், வேண்டிய சுகாதாரமும் இல்லை. குறைந்தபட்சம் போர்வை, தலையணைகள் கூட கிடையாது. நான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் முன்பாக உடல்நலத்தை வேண்டுகிறேன். பெரும் மக்கள் தொகையைத் தாண்டிய நம் நாட்டில் தனியார் மருத்துவமனைகளின் சேவை நிச்சயம் தேவைதான்.

நோய் வந்துவிட்டால் மருத்துவர்களிடம் போகப் பயப்படுகிறோம். இரும்புச்சத்து குறைபாடுள்ள பெண்களைப் பரிசோதனை செய்து அவற்றைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் வரும் நோய்களைத் தடுக்க தடுப்பூசிகள் குறைவாக உள்ளன. மருந்துக்கடைகளில் காலாவதியாகும் மருந்துகள் பற்றிய எச்சரிக்கைகளை மக்கள் பெறவேண்டும். குழந்தைகளுக்கு வாங்கும் பொருள்களின் காலாவதியாகும் தேதி கவனிக்கப்பட வேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக மக்களின் அறியாமையை யாரும் பயன்படுத்தக் கூடாது.

ஈழ அகதி முகாம்களுக்குப் போயிருக்கிறீர்கள்...

அவர்களின் உடல் நலன், உணவுப் பழக்கங்கள், குறைகள், சீர் செய்யப்பட வேண்டிய விஷயங்களை அவர்களோடு கலந்து பேசினேன். அனேகமாக என்னை அவர்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அப்பா ஈழத்தமிழர் மீது கொண்டிருக்கும் அன்பை வரையறுக்க முடியாது. அப்பாவின் செயல்பாடுகள், மேடைகளில் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிய விஷயங்கள் எல்லாம் அவர்களுக்குத் தெரிந்துள்ளன.

எப்பவும் எனக்கு ஈழ உறவுகள் மீது அதிக அக்கறை உண்டு. என்னோட பெரிய சந்தோஷம், உண்மையோடு நான் எளிய மக்களுக்கு போய்ச் சேர்ந்திருப்பதுதான். நீங்கள் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வருகின்றன…

உயிர்ப்பும், மனிதமும் நிறைந்ததாக இந்தத் தமிழ்ச் சமூகம் மாறணும். நம் நம்பிக்கைகள் கண்ணுக்கு முன்னால் கானல் நீராகிவிடுகின்றன. இரட்டை வேடம் போடுவதே நமக்கு நடைமுறையாகிவிட்டது. கண்ணுக்கு எதிரே தவறுகள் நடக்கிறபோது, அதைத் தடுக்க வேண்டும் என்கிற உணர்வே இல்லாமல், தனக்குத் துன்பம் வந்தால் மட்டும் உலகம் கெட்டு விட்டதாகப் புலம்புகிறோம். நேர்மையாக வாழ விரும்புபவர்களை பிழைக்கத் தெரியாத மனிதர் என்கிறோம். ஏமாற்றுக்காரர்களை பிழைக்கத்தெரிந்தவர் என்கிறோம்.

இதையெல்லாம் கண்டறிய வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன். அரசியலுக்கு வர விரும்புகிறேன். ஓர் அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றால் நாம் அந்த அமைப்பில் இருந்தால்தான் சாத்தியம். வருங்காலத் தலைமுறைக்கு நல்ல ஆரோக்கியமான அரசியலை அறிமுகப்படுத்தலாம். நான் மற்ற பிரச்னைகளை விட உடல்நலத்தை, ஆரோக்கியத்தை முன்நிறுத்துகிறேன். இது சரியில்லை, அது சரியில்லை என புலம்புவதில் பலனில்லை. சிஸ்டத்தில் நாமே நுழைந்துவிட வேண்டியதுதான்.

நேர்மையும், உண்மையும் அரசியலின் இரண்டு பக்கங்களாக மாறும்போதுதான் நாம் கனவு காணுகிற நாட்டை உருவாக்க முடியும். ஒரு தமிழ் மகளாக, தமிழர்களின் ஆரோக்கியத்திற்கு அரசியலுக்கு வருகிறேன்.அப்பா சத்யராஜிடம் சொல்லிவிட்டீர்களா?

அப்பாவும் அம்மாவும் என்னைப் புரிந்தவர்கள். அவர்கள் எனக்கு எப்போதும் அரவணைப்பு தருவார்கள். ஒருநாளும் என் நல்லுணர்வுகளுக்கு அவர்கள் தடை சொன்னதில்லை. சத்யராஜ் என்ற மனிதருக்கு மகளாக இருப்பது எனக்கு மிகவும் பெருமை. நான் கடுமையாக உழைக்கிற பெண். எனது அக்கறைகள் உண்மையானவை என அவர்கள் அறிவார்கள்.

நான் அப்பாவுக்கு ரொம்பப் பிரியமான பெண். ஆனால், அவரை சார்ந்து இருந்தது கிடையாது. I like to be self made and independent. அவரின் புகழையும், பின்புலத்தையும் எனது அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளமாட்டேன்.

நூறு கோடியைத் தாண்டிய மக்கள் இருக்கிற தேசத்தில் எனது எந்த முயற்சியும் எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று சொல்வதற்கில்லை. எந்தப் பெரிய பாதைக்கும் முதல் அடிதான் காரணமாகிறது.                        

நா.கதிர்வேலன்