ரத்த மகுடம்-63



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

உலகமே சூரியோதயத்தைக் கண்டுகளித்தபடி ஆதித்ய ஹிருதயத்தை உச்சரித்துக் கொண்டிருக்க... அந்த இளைஞன் மட்டும் குன்றின் மீது நின்றபடி கீழ்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தான்.அதிகம் போனால் அவன் வயது இருபதிருக்கும். ஒற்றை நாடி சரீரம். என்றாலும் தசைகள் பாறைகள் போல் காட்சியளித்தன. விரிந்திருந்த மார்பு, அவன் பிராணாயாமத்தை விடாமல் செய்பவன் என்பதை பறைசாற்றின.

இடுப்பில் மட்டும் அதுவும் முழங்கால் அளவுக்கு ஆடை அணிந்திருந்தான். வீசும் காற்றில் தலைக்குழல்கள் எட்டு திசைகளிலும் பறந்தன. அவற்றை ஒதுக்காமல் அலட்சியம் செய்தபடி குன்றுக்குக் கீழே பார்த்தான்.நூற்றுக்கும் மேற்பட்ட களிறுகள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தன. அவன் வதனத்தில் சந்தோஷத்தின் ரேகைகள் பூத்தன, படர்ந்தன.

யானைகளின் சிரசில் பிரமனும், கழுத்தில் இந்திரனும், தோளில் சூரியனும், கால்களில் மிருத்யுவும், மார்பில் பூதேவியும், ஆண்குறியில் பிரஜாபதியும், துதிக்கையில் நாகமும், பக்கங்களில் அசுவநீ தேவர்களும், காதுகளில் திக்குதேவர்களும், மனத்தில் சந்திரனும், புத்தியில் பரமேசுவரனும், இதயத்தில் பர்ஜந்யனும் இருப்பதாக கஜ சாஸ்திரம் சொல்வது எத்தனை உண்மை என்று அக்கணத்தில் நினைத்தான்.

மொத்த பாரத தேசத்தையும் எட்டு வனங்களாகப் பிரித்து ஒவ்வொரு வனத்திலும் வசிக்கும் யானைகளின் குணங்களை வரையறை செய்த முன்னோர்களை நினைத்து பெருமிதம் கொண்டான்.  லோஹித நதியின் மத்தியிலுள்ள உபவனம், ரக்த கங்கை, யமுனா கங்கா சங்கமம், வித்யாதர பர்வதம் ஆகிய நான்கு எல்லைகளுக்கும் உட்பட்டது ‘பிராச்ய வனம்’.இங்கு வசிக்கும் யானைகளின் மண்டை, கழுத்து, உதடு, வயிறு, துடை, அடிவயிறு, தாடை, கழுத்து மாமிசம், முதுகெலும்பு, முழங்கால், குதம், தோள்பட்டை, புச்சமூலம் ஆகியவை அழுத்தமாக இருக்கும்.

கழுத்து, தலை, உதடு, முகம், தந்தம், வயிறு, துதிக்கை, கால்கள், முதுகெலும்பு, பிருஷ்டம் ஆகியவை பருத்து அழகாக இருக்கும். பிளிறல் இனிமையாக இருக்கும். கோபமற்று அதேநேரம் அக்கினிபலம் கொண்டவை இவை.மேகலை, திருபுரீ, தாசார்ணம், உன்மத்தகங்கம் ஆகிய நான்கு எல்லைகளுக்கும் உட்பட்ட இடத்துக்கு ‘சேதிகரூச வனம்’ என்று பெயர். இப்பகுதியைச் சேர்ந்த யானைகள் பக்கவாட்டில் உயர்ந்து மதுவர்ண தந்தம், சீக்கிரபராக்கிடமம், நீண்ட அழகிய உடல், அழகான கால்களுடன் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். இவைகளில் சில முன்கோபம் மிக்கவை. உயர்ந்த முன் கால்களுள்ளவை.

தாசார்ணம், உன்மத்தகங்கம், திருபுரத்தின் சாரமான பாகம் ஆகிய இடங்களுக்கு உட்பட்ட பகுதிக்கு ‘மேகலாமந்திரம்’ என்று பெயர். சேதிதேசத்தை சார்ந்த இந்த இடங்களிலுள்ள யானைகள், குட்டையானவை. அழகிய அங்கங்களும் நல்ல வேகமும் இவற்றின் அடையாளம்.

பர்வதம், பலபர்வதம், வேத்திரவதி, தாசார்ணம் ஆகிய நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட இடத்துக்கு ‘தாசார்ண வனம்’ என்று பெயர். இந்த இடத்தைச் சேர்ந்த யானைகள் பெருத்த அவயவங்களும், மஞ்சள் நிறமும் உடையவை. பிரமாதமானவை என்பதற்கான அர்த்தமாக இவற்றைச் சொல்லலாம்.

ரேவதி நதி, பாரியாத்திர பர்வதம், விதிசாநகரம், பிரும்மாவர்தம் ஆகிய நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட இடத்துக்கு ‘ஆங்கரேய வனம்’ என்று பெயர். இங்குள்ள யானைகள் அழகிய கண்களும், மிகுந்த வலிமையும், மிருதுவான தோலும் உடையவை.

சஹ்யபர்வதம், விந்தியபர்வதம், உத்கலதேசம், தெற்கு சமுத்திரம் ஆகிய எல்லைகளுக்கு உட்பட்ட இடத்துக்கு ‘காலிங்க வனம்’ என்று பெயர். இங்குள்ள யானைகள் மெல்லிய ரோமமும் தேன் நிறக் கண்களும் மெதுவான நடையும் உடையவை. பார்க்கப் பார்க்க புதிதாக இந்த யானைகள் தோற்றமளிக்கும்.

ரேவா நதி, கிருஷ்ணகிரி, மேற்கு சமுத்திரம், மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய எல்லைகளுக்கு உட்பட்ட இடத்துக்கு ‘அபராந்த வனம்’ என்று பெயர். இங்குள்ள யானைகள் அழகிய உடலும், அதிக வலிமையும், மெதுவான தோலும் உள்ளவை.

ரேவதி நதி, அவந்திதேசம், அற்புதம் எனப்படும் பிரமதபுரம், துவாரகை ஆகிய எல்லைகளுக்கு உட்பட்ட இடத்துக்கு ‘செளராஷ்டிர வனம்’ என்று பெயர். இங்குள்ள யானைகள் மெல்லிய நகமும் தந்தமும் கொண்டவை. அறியாமையில் மூழ்கியவை. அற்பாயுள் கொண்டவை.

காலேய வனம், சிந்து நதி, இமய மலை, குருேக்ஷத்திரம் ஆகிய எல்லைகளுக்கு உட்பட்ட இடமாகிய உத்தர வனத்துக்கு ‘பாஞ்சநத வனம்’ என்று பெயர். இங்குள்ள யானைகள் மிக்க வலிமையும் கம்பீரமும் கொண்டவை.ஆக, யானைகளின் லட்சணம், உடலமைப்பு, செய்கை, நிறம் ஆகியவற்றைக் கொண்டு எந்த வனத்தைச் சேர்ந்தவை அவை என்பதை நிர்ணயிக்க வேண்டும், இல்லையா..?

குறுநகையுடன் அதன்படியே கீழே குழுமியிருந்த களிறுகளை வகை பிரித்தான். ப்ராச்யம், காலிங்கம், அபராந்தம் ஆகிய வனங்களிலுள்ள யானைகள் சிறந்தவை. சேதிகரூசம், தாசார்ணம், ஆங்கரேயகம் ஆகிய வனங்களைச் சேர்ந்தவை மத்திமமானவை. செளராஷ்டிரம், பாஞ்சநதம் ஆகிய வனங்களிலுள்ள யானைகள் அதமமானவை.

இவை தவிர பூர்வோப வனம், ஆக்நேயோப வனம், தஷிணோப வனம், நைருருத்யோப வனம், பச்சிமோப வனம், வாயவ்யோப வனம், உத்தரோப வனம், ஐசாந்யோப வனம் என யானைகளுக்கு உப வனங்களும் உண்டு. இவையும் எட்டுதான்.இமயத்தின் கீழ்த்திசையிலுள்ள கிராதபூமிக்கு ‘ப்ராச்யோப வனம்’ என்று பெயர். அங்குள்ள யானைகள் கொடுமையானவை. அவற்றின் குணங்களை நிச்சயமாக அறிய இயலாது.

அதன் தென்புறத்திலுள்ள லீலா பர்வதத்திலுள்ள காட்டுக்கு ‘ஆக்நேயோப வனம்’ என்று பெயர். இங்குள்ள யானைகள் முகம் சிறுத்து, விகாரமான உருவம் பெற்றிருக்கும்.விசாலத்வீபத்தின் (விசாலா நதியால் சூழப்பட்ட இடம்) தென் பாகத்துக்கு ‘தக்ஷிணோப வனம்’ என்று பெயர். இங்குள்ள யானைகள் குட்டையானவை. ஒட்டிய கன்னமும் விகார உருவமும் ராட்சச குணமும் படைத்தவை.

இமயத்தின் தென்மேற்குத் திசையிலுள்ள ‘பர்பர’ தேசத்தின் காட்டுக்கு ‘நைருருத்யோப வனம்’ என்று பெயர். அங்குள்ள யானைகள் குட்டையான துதிக்கையும் நீண்ட கால்களும் உள்ளவை.இமயமலையின் வடமேற்கு மூலையிலுள்ள ‘வாதிகம்’ என்ற மலையிலுள்ள காட்டுக்கு ‘வாயவ்யோப வனம்’ என்று பெயர். இங்குள்ள யானைகள் ஒட்டிச் சுருங்கிய அங்கங்களும் செம்பட்டை நிறமும் உடையவை.

அதன் வடக்கேயுள்ள மலையின் வனத்துக்கு ‘உத்தரோப வனம்’ என்று பெயர். இங்குள்ள யானைகள் அறியாமைக்கு பெயர் போனவை.இமயமலையின் வடகிழக்கு மூலையிலுள்ள மலைக்காட்டுக்கு ‘ஐசாந்யோப வனம்’ என்று பெயர். இங்குள்ள யானைகள் சாம்பல் நிறமும், பைசாச குணமும் படைத்தவை. எந்தக் காரியங்களுக்கும் பயனற்றவை.

வனஜாதம், பத்திராதி என்ற இருவித லட்சணங்களில் வனஜாத லட்சணம் சிறந்தது. உபவன கஜங்கள் அனைத்தும் குணமற்றவை. எனவே இவற்றைப் பிடிக்கக் கூடாது...முடிவுக்கு வந்த அந்த இளைஞன் மெல்ல குன்றை விட்டு இறங்கத் தொடங்கினான். பார்வை மட்டும் களிறுகளின் மீதே பதிந்திருந்தன. ஒவ்வொரு யானையின் வயதையும் கணக்கிடத் தொடங்கினான்.  

பால் குடிக்க முலையை அறியாதது ஒரு மாதத்திய குட்டி. இதற்கு ‘சிசு’ என்று பெயர். சிவப்பு நிறமும் சேற்றில் விருப்பமும் உடையது இரண்டு மாதக் குட்டி. இதற்கு ‘ஹஸ்தம்’ என்று பெயர்.நீரிலும் பாலிலும் ஆசையும் கூட்டத்தை விட்டு வெளியே வரும் குணமும் உள்ளது மூன்று மாதக் குட்டி. இதற்கு ‘யூதநிஷ்க்ராமி’ என்று பெயர். நான்கு மாதக் குட்டி எங்கும் திரியும். இதற்கு ‘சபலாங்கம்’ என்று பெயர்.

ஐந்து மாதக் குட்டி யூதத்துக்கு வெளியில் பக்கத்தில் நிற்கும். இதற்கு ‘விக்லபாஷம்’ என்று பெயர். ஆறு மாதக் குட்டி ஆசையுடன் நீரை நோக்கி ஓடும். இதற்கு ‘லஷோபதம்சம்’ என்று பெயர்.ஏழு மாதத்திய குட்டி புற்களையும் லத்தியையும் தின்னும். இதற்கு ‘லண்டபஷம்’ என்று பெயர். கால்களைப் பதிய வைத்து இவை நன்றாக நடக்கும். எட்டு மாதத்திய குட்டி இங்கும் அங்கும் ஓடி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கும்.

இதற்கு ‘சபலம்’ என்று பெயர்.ஒன்பது மாதத்துக் குட்டி தளிர்களைத் தின்னும். கோபமடையும். இதற்கு ‘குரோதனம்’ என்று பெயர். பத்து மாதக் குட்டி எதையாவது தின்று கொண்டே இருக்க விரும்பும். தாயிடம் அன்பு கொண்டிருக்கும். இதற்கு ‘மாதிருவத்ஸலம்’ என்று பெயர்.
பதினோராவது மாதத்தில் நல்ல அங்க அமைப்புடன் காணப்படும். இதற்கு ‘வ்யக்ததாலு’ என்று பெயர். பன்னிரண்டு மாதக் குட்டி அதிகமாகத் தூங்காது. இதற்கு ‘விநித்திரம்’ என்று பெயர்.

ஒரு வயது பூர்த்தியான குட்டிக்கு நாக்கு, உதடு, தந்தம் ஆகியவை சிவப்பாகவும் குதிகால் அழகாகவும் முகமும் தாடையும் நன்கு அமைந்தும் காணப்படும். நகங்கள் பாதத்தை ஒட்டி இருக்கும். இதற்கு ‘ஜாதவர்ஷம்’ என்று பெயர்.இரண்டு வயதுடைய குட்டி சிவப்பு நிறத்துடன் காதுகளில் புள்ளி, அடிக்காதில் அடர்ந்த மயிர் ஆகியவற்றுடன் வலம் வரும். இதற்கு ‘ரோமசசூலிகம்’ என்று பெயர்.

மூன்று வயதுக் குட்டி மென்று திங்கும். தந்தங்கள் வெண்மையாக இருக்கும். இதற்கு ‘ஷீரதந்தம்’ என்று பெயர்.நான்கு வயதுக் குட்டி மூன்று மடிப்புகள், உறுதியடையாத தலை, சிறிதளவு தந்தம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதற்கு ‘பர்யஸ்தம்’ என்று பெயர்.ஐந்து வயதுக்குட்டி மாவுத்தனை சுமந்து கொண்டு எங்கும் சென்று வர அறிந்திருக்கும். ஆண்குறி எழும். அதிகம் தூங்காது. இதற்கு ‘அல்பநித்ரம்’ என்று பெயர்.

ஆறுவயதுக் குட்டிக்கு கடைவாயின் முன்பக்கம், காது, கன்னம், கண்கூடு, தந்தமத்தியம், அடிவாலின் பக்கம் ஆகியவற்றில் புள்ளிகள் இருக்கும். சுக துக்கங்களை அறியும். இதற்கு ‘வைகாரிகம்’ என்று பெயர்.ஏழு வயது யானையின் கழுத்தில் சுருக்கம், அழுத்தமான நகம், அழகிய துதிக்கை, அழகான வால் ஆகியவை காணப்படும். காரியம் முடிந்தபிறகும் அதையே நினைத்து சந்தோஷமடையும். இதற்கு ‘சிசு’ என்று பெயர்.

எட்டு வயது யானை, உட்புற பற்களிலாட்டம், ஆண்குறி எழுச்சி, உடலில் புள்ளிகள், புண்கள் ஆகியவற்றுடன் காணப்படும். சிறிது சந்தோஷமும் கோபமும் அடையும். பெண் யானைகளை நேசிக்கும்.

ஒன்பது வயது யானைக்கு சுக்கிலம் உண்டாகாது. தோல் அழுத்தமாகவும் தலையில் மயிர் அடர்ந்தும் உற்சாகமும் வலிமையும் கொண்டதாக இருக்கும். பத்து வயது யானை நல்ல வலிமை, நன்கு அமைந்த உடல், ஒளியுள்ள அங்கங்கள், சுக்கிலம் சிந்தும் ஆண்குறி, அழுத்தமான துதிக்கை, வலுப்பெற்ற சந்திகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்...

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்