மசாலா சினிமாக்களுக்கு இது சோதனைக் காலமா?
மசாலா படம்... அடிக்கடி இந்த வார்த்தையை கேட்டிருக்கிறோம்; உச்சரித்திருக்கிறோம்.ஆனால், இன்றைக்கு அந்த வார்த்தை அதிகமாக புழக்கத்தில் இல்லை. நாலு ஃபைட், நாலு பாடல்கள், தங்கச்சி சென்டிமென்ட், ஹீரோவின் அதிரடி என வசூல் பார்த்தவர்களுக்கு இது சோதனைக்காலம். இப்போது கதையம்சம்தான் ரசிகர்களின் அக்கறை. நல்ல அடர்த்தியான சினிமாவிற்கான காலம் திரும்புகிறது.
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை கோடி மனிதர்களை விடவும் அதிகமான கதைகள் இருக்கின்றன. நம் நினைவுகள்கதைகளாக மாற, நாம்தான் கதைகளாக மாறிக்கொண்டு இருக்கிறோம். சினிமாவில் கதை சொல்லும் மரபில் வந்த நம் நூற்றாண்டு முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் நம்மைவிட புத்திசாலிகள், அறிவாளிகள். நம்மைவிட கற்பனை வளம் மிக்கவர்கள்.
இத்தகைய வேளையில் சினிமாவில் மசாலாக்கதைகளுக்கு இது விடைபெறுதல் காலமா என யோசிப்பை பலரிடம் முன்வைத்தோம். வந்து சேர்ந்த விடைகள் பலவிதமான சிந்தனைக்கு நம்மை இட்டுச்சென்றது.பிரபல ஒளிப்பதிவாளரும் ‘டூலெட்’ படத்தின் மூலம் அதிக வெளிச்சம் பெற்றவருமான செழியன் சொல்வது வேறு விதத்தில் சிந்திக்கத் தூண்டுகிறது. ‘‘உலகமயமாக்கல் நடந்தபிறகு சினிமா எளிமையான வடிவத்திற்கு மாறிவிட்டது. ஃபிலிம்ரோல் விடைபெற்ற பிறகு, சினிமா இப்போது சுலபமடைந்து விட்டது. சினிமா பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தன் முகத்தை மாற்றிக்கொண்டே வருகிறது.
நான் கல்லூரி படிக்கும்போது 10 கிலோ மீட்டர் நடப்பது மிகவும் சுலபமாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. அது ஒரு பருவம். அப்படியேதான் சினிமாவுக்கும் ஒரு பருவம் இருக்கிறது. அதுவும் மாறிக்கொண்டேயிருக்கிறது. முன்பு 500 பேரை உட்காரவைத்து, இருட்டை உருவாக்கி, அவர்களுக்கு முற்றிலும் ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்தினோம். அப்போது சினிமாவை வேறு வடிவங்களில் பார்க்க வாய்ப்பு கிடையாது.
இன்று லேப்டாப்பில், கைபேசியில், சௌகரியமாக படுத்துக்கொண்டே பார்க்க முடிகிறது. சினிமாவிற்கான சாத்தியங்கள் மலிவான பிறகு அதன் மீது இன்னும் வித்தியாசங்களை மக்கள் கோருகிறார்கள். உள்ளடக்கம் மாறுகிறது. ஹீரோ இமேஜ் உயர்த்திப் பிடிக்கப்படுவது, தங்கச்சி சென்டிமென்ட் போன்றவை எத்தனையோ முறை பார்த்து சலிப்பு ஏற்படுகிறது. இன்னும் நெட்ஃபிலிக்ஸ், அமேசான் இறக்குமதிகள் தமிழ் சினிமாவின் மாற்றத்தை அவசரப்படுத்துகின்றன.
சமீபத்தில் ‘அவெஞ்சர்ஸ்’ படம் ரிலீசாகி பெரும் பணத்தை வாரிச் சுருட்டியது. சென்னை ‘சத்யம்’ காம்ப்ளக்ஸில் ஒரு நாளைக்கு 35 ஷோ வீதம் ஒரு வாரத்திற்கு மேல் அரங்கு நிறைந்து ஓடி கல்லா கட்டியது. அதன் டெக்னாலஜி, கதை சொல்லல், பிரம்மாண்டம் என அவற்றுக்கு முன்னால் நம்மால் நிற்க முடியவில்லை.
இப்போது ‘Lion King’. அதன் வசூல் புரட்சி என்னாகுமோ! நம்முடைய படங்கள் மூன்று நாட்களில் தன் தீவிர பயணத்தை முடித்துக்கொள்கின்றன. இனிமேல் மசாலாப் படங்கள் ஓடுவதற்கு அதிகமான வாய்ப்பு இல்லை. சினிமா எல்லா வடிவத்திலும் கை வந்துவிட்டதால், அதன் இமேஜ் போய்விட்டது.
அதோடு சேர்ந்து நடிகர்களின் இமேஜும் குறைந்துவிட்டது. நடிகர்களைப் பார்க்க கூட்டம் இருக்கும். அது வேறு. பரவலாக கொண்டாட்டமாகப் பார்க்கிற இடம் போய்விட்டது.இப்போது நடிகர்கள் தேவை. இமேஜ் தேவையில்லை. சென்ற வருடம் 300 படங்கள் வரை வந்து 30 படங்கள் கூட வெற்றி பெறவில்லை. இனிமேல் ஃபார்முலா படங்கள் நிலை பெறுவது கடினமே...’’ என்கிறார் செழியன்.
படங்களின் நிஜ நிலவரத்தை உடன் இருந்தே கவனிக்கும் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியனின் கருத்து வேறு விதமாக இருக்கிறது. ‘‘கதாநாயகனை முன்னிலைப்படுத்துவதுதான் இன்றைக்கு வரைக்கும் நம்பப்படுகிறது. பெரிய ஹீரோக்கள் இன்னும் மசாலாப் படங்களைத்தான் உயிர்நாடியாக வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், கதைக்காக ஹீரோ என்றில்லாமல், அவர்களின் இமேஜை உயர்த்த அதைப் பயன்படுத்துகிறார்கள்.
இந்த இடத்தில்தான் தவறு நடக்கிறது. ‘ஒரு சினிமாவிற்கு போகலாமா’ என்று கேட்டால், ‘எதுவும் பார்க்கிற மாதிரி இல்லை’ என்கிறார்கள். சிங்கிள் தியேட்டர்களின் பாடு படுமோசம். கதையை எடுத்துக்கொண்டு அதில் ஹீரோவை சாமர்த்தியமாகப் பொருத்தாமல், அவதிப்படுகிறார்கள். செருப்புக்குத் தக்கபடி காலை வெட்டுகிற வேலை சரி வருமா!
முன்பு எம்ஜிஆர், சிவாஜியெல்லாம் அவரவருக்கு ஏற்ற படங்களில்தான் நடித்தார்கள்...’’ என ஆதங்கப்படுகிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.படத்தொகுப்பிற்கென பல தேசிய விருதுகளைப் பெற்றவரும், பிரபல எடிட்டருமான கர் பிரசாத் தெளிவாகப் பேசுவது இப்படித்தான்: ‘‘ஆடியன்ஸ் மாறிவிட்டார்கள். இன்னும் மாறுவார்கள்.
அவர்கள் வெவ்வேறு இடங்களில், வேறு படங்களில் கன்டன்ட் வலிமையாக இருந்து பார்க்கிறார்கள். அவர்களுக்கு பாடல்கள் அலுத்துவிட்டது. முன்பு பாடல் முக்கியமான காரணியாக இருந்தது. இப்போது படத்தில் பாட்டு இல்லாமல் இருந்தாலும் அவர்களுக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. இது நல்ல மாற்றமே.
பெரிய ஹீரோக்கள் படங்களில் ஆறு பாடல்கள் வந்தது. இப்போது நான்காகிவிட்டது. எல்லா பாடல்களிலும் அவர்கள் டான்ஸ் ஆடுவதில்லை. ஒரு பாட்டில் கதை சொல்கிறார்கள். இன்னொன்று மான்டேஜ் வகையில் போகிறது. ஏதோ ஒரு பாடலில் மட்டுமே மரம் சுற்றுகிறார்கள். ஃபார்முலா படங்களுக்கான காலம் முடியப்போகிறது என்றுதான் என் அனுபவத்திலிருந்து நினைக்கிறேன்...’’ என்கிறார் கர் பிரசாத்.
இயக்குநர் வசந்த பாலன் இப்படிச் சொல்கிறார்: ‘‘மசாலா படங்களுக்குத்தான் எப்பவும் எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் எட்டுக்கும் மேலான பெரிய ஹீரோக்கள் அந்தவகை சினிமாவைத்தான் விரும்புகிறார்கள். சினிமா ஒரு வியாபாரம். அப்பொழுது கலை என்பது கொஞ்சம் பின்னால்தான் வரவேண்டியிருக்கும். ரஜினி முதற்கொண்டு, பெரும் ஹீரோக்கள் மசாலா சினிமாவில்தான் நம்பிக்கை வைக்கிறார்கள்.
‘நேர்கொண்ட பார்வை’ வேறு. எதிலும் விதிவிலக்குகள் உண்டு. கமர்ஷியல் சினிமா முக்கியம்தான். சினிமா சூதாட்டம் என்கிறபோது ஓடுகிற பெரும் குதிரைகளின் மேல்தான் பணம் கட்ட முடியும். திரையுலகின் நம்பிக்கையான இருப்பு, கமர்ஷியல் படங்களின் வெற்றியில்தான் இருக்கிறது. இல்லாவிட்டால் மூடும் தியேட்டர்களின் எண்ணிக்கை பெருகிவிடும்.
கேரளாவில் நடப்பது வேறு. அவர்கள் கமர்ஷியல் படத்தையே மாற்று சினிமாவாக எடுக்கிறார்கள். நமக்கு கமர்ஷியல் சினிமாக்கள் பெரு நதி என்றால் மற்றவை ஆறுகள். இன்னும் பரீட்சார்த்த படங்கள் எடுப்பவர்களை கால்வாய்களாகக் குறிக்கலாம்.
ஆக, கமர்ஷியல் சினிமாக்களின் உயிர்த்துடிப்பு தமிழ் சினிமாவிற்கு அவசியமே. எங்களை மாதிரி இயக்குநர்கள் ஆறுகள் மாதிரி சிறு ஓட்டமாக போய்க்கொண்டு இருக்கலாம்...’’ என்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.எப்படியிருந்தாலும் தமிழ் சினிமா நல்ல கதைகளில் நிறைவு அடையும் போதும், கமர்ஷியலில் வெற்றி பெறும்போதும் கொண்டாட் டத்தில் இருப்பது நாம்தான்!
நா.கதிர்வேலன்
|