ரத்த மகுடம்-50



இரவின் ஒளியை ரசித்தபடியே அந்தப் பாலகன் நடந்தான். ஒருபோதும் சாலையின் நடுவில் அவன் செல்லவில்லை. சாலையோரங்களையே தேர்வு செய்தான். குறிப்பாக இருளடர்ந்த பகுதிகளை. மாளிகைகளில் ஏற்றப்பட்டிருந்த தீபங்களின் ஒளியை விட அந்த ஒளியின் நிழல் அவனுக்கு அதிக பாதுகாப்பை அளித்தது.

கடிகையில் இந்நேரம் வித்யார்த்திகள் உறங்கிக் கொண்டிருப்பார்கள். பல்லவர்கள் போலவே சாளுக்கியர்களும் கடிகையில் காவலுக்கு எந்த வீரர்களையும் நிறுத்தவில்லை. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு வாயில்களில் மட்டும் பெயருக்கு இரண்டிரண்டு வீரர்கள் நிற்பார்கள்; பகலிலும் இரவிலும். என்ன... நேற்று பல்லவ வீரர்கள் ஈட்டியுடன் நின்றார்கள். இன்று சாளுக்கியர்கள்.

மற்றபடி கடிகைக்குள் நுழையும் தகுதி எப்போதும் போல் இப்போதும் வித்யார்த்திகளுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. காஞ்சியைக் கைப்பற்றி பல்லவ நாட்டை சாளுக்கியர்கள் ஆளத் தொடங்கியபோதும் பழைய வழக்கத்தை சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் மாற்றவில்லை. எல்லாவற்றிலும் குறுக்குக் கேள்வி கேட்கும் போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் கூட இந்த விஷயத்தில் மன்னருக்கு ஆதரவாகவே நின்றார்.

எனவேதான் தன்னால் நாசுக்காக அவ்வப்போது வெளியேற முடிகிறது. மன்னர் விக்கிரமாதித்தர் அந்தரங்கமாகக் கட்டளையிடும் பணிகளை நிறைவேற்ற முடிகிறது. அந்த வகையில் இன்றும் எவ்வித சங்கடத்தையும் யாருக்கும் ஏற்படுத்தாமல் கடிகைக்குள் சென்று தன் அறையில் உறங்கிவிட வேண்டும்.முடிவுடன் நடந்தான் அந்தப் பாலகன்.

இரவின் மூன்றாம் ஜாமத்திலும் வீரர்கள் நடமாட்டமும் வணிகர்களின் நடமாட்டமும் காஞ்சி முழுக்கவே இருந்தது. கருக்கல் நேரத்தில் தொடங்க வேண்டிய வணிகத்துக்காக இப்பொழுதிலிருந்தே வேலையைத் தொடங்கியிருந்தார்கள். பொருட்களை இறக்குவதும் ஏற்றுவதுமாக வணிக ஆட்கள் இருந்தார்கள். அதிக ஒலியை எழுப்பாமல் அதேநேரம் சைகையிலும் உரையாடாமல் தேவைக்குப் பேசியபடி தங்கள் பணிகளில் அவர்கள் ஈடுபட்ட பாங்கு அந்தப் பாலகனைக் கவர்ந்தது.

மெல்ல சில கணங்களுக்குமுன் நடந்ததை அசைபோட்டான். மன்னருக்கும் ராமபுண்ய வல்லபருக்கும் இடையில் நடந்த உரையாடல் அவனை நிரம்ப யோசிக்க வைத்தது. இருவருமே அவரவர் நிலையில் தெளிவாக இருந்தார்கள். குறிப்பாக, மன்னரை விட நாடு முக்கியம் என சாளுக்கிய போர் அமைச்சர் அழுத்தம்திருத்தமாகச் சொன்னது அவன் செவியில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதற்கு மறுப்பு சொல்லாமல் சாளுக்கிய மன்னர் அமைதியாக இருந்தது அவனை நெகிழ வைத்தது.

அவனையும் அறியாமல் பெருமூச்சு விட்டான். பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் விரைவில் போர் மூளப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்குள் மன்னர் விக்கிரமாதித்தர் தன்னிடம் ஒப்படைத்த பணியை முடித்துவிட வேண்டும்.நிதானமாக நடந்த அந்தப் பாலகன், மகேந்திரவர்ம பல்லவ சாலையைக் கடந்து நரசிம்மவர்ம பல்லவ சாலைக்குள் நுழைந்து நேராகச் செல்லாமல் பரஞ்சோதி சந்துக்குள் நுழைந்து தோப்பை அடைந்தான்.

இந்த மாந்தோப்பைக் கடந்துவிட்டால் கடிகையில் வடக்குப் பக்கம் வரும். வடமேற்குத் திசையில் வளர்ந்திருக்கும் புளியமரத்தின் மீது ஏறி மெல்ல கடிகைக்குள் குதித்தால் வாள்பயிற்சிக் கூடத்தை அடையலாம். அங்கிருந்து தன் அறைக்குச் செல்வது எளிது. காவலுக்கு நிற்கும் வீரர்களின் பார்வையில் படாமல் கடிகைக்குள் செல்லும் வழி அது மட்டும்தான்.

மெல்ல தோப்புக்குள் நுழைந்தான். பாலகனுக்கு எந்த சந்தேகமும் ஏற்படாதபடி அவ்விரு உருவங்களும் பின்தொடர்ந்தார்கள். காஞ்சிக்குள் அந்தப் பாலகனைச் சிறைப்பிடிக்கக் கூடாது என அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. பலநாள் அந்தப் பாலகனைக் கண்காணித்து அதன் பிறகே தோப்புக்குள் அவனைச் சிறைப்பிடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தார்கள். ம்ஹும். திட்டமிட்டது அவர்கள் இருவரும் அல்ல. அவர்களின் தலைவர்.

எனவே, தங்கள் கண் பார்வையிலேயே பாலகனை அவர்கள் இருவரும் வைத்திருக்கவில்லை. எப்படியும் தோப்புக்குள்தான் நுழைவான் என்பதால், ‘‘வருபவன் அந்தப் பாலகன்தானே?’’ என ஒருவருக்கொருவர் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு மகேந்திரவர்ம சாலையின் இறுதிவரை அவனைப் பின்தொடர்ந்துவிட்டு அதன்பிறகு நரசிம்மவர்ம பல்லவ சாலைக்குள் நுழையாமல் குறுக்கு வழியாக அந்தப் பாலகனுக்கு முன்பாகவே தோப்பை அடைந்தவர்கள் நிதானித்தார்கள். கண்களாலேயே இருவரும் ஒருவருக்கொருவர் உரையாடிவிட்டு ஆளுக்கொரு திசையில் பிரிந்தார்கள். தோப்புக்குள் நுழையாமல் தோப்பின் ஓரமாகவே நடந்து புதருக்குள் மறைந்தார்கள்.

எதிர்பார்த்ததுபோலவே அந்தப் பாலகன் வந்து சேர்ந்தான். தோப்புக்குள் நுழைந்தான். முழுவதுமாக அவன் மறையும் வரை காத்திருந்துவிட்டு அதன்பிறகு சத்தம் எழுப்பாமல் சருகின் ஒலி அமைதியைக் கிழிக்காதபடி தங்கள் கால் கட்டைவிரலால் ஓடி அந்தப் பாலகனை முன்னும் பின்னுமாகச் சுற்றி வளைத்தார்கள்.

என்ன ஏது என அந்தப் பாலகன் சுதாரிப்பதற்குள் ஓர் உருவம் அவன் நாசியை பருத்தித் துணியால் மூடியாது. சில கணங்களில் பாலகன் உணர்விழந்து மயக்கமானான். உடனே அவனைத் தூக்கிக் கொண்டு அவ்விருவரும் நடந்தார்கள்.உறக்கம் வராததால் பஞ்சணையில் இருந்து எழுந்த கரிகாலனின் பெரிய தாயார் தன் அறையில் இருந்து சாளரத்தின் அருகில் வந்து நின்றார்.

அதிக வெக்கையோ அதிக குளுமையோ இல்லாத காற்று அவர் உடலைத் தழுவியது. கண்கள் முழுக்க நிரம்பி வழிந்த சிந்தனைகளுடன் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றார். கண்கள் பார்த்த திசையில் காஞ்சி மாநகரின் நடமாட்டம் அந்த இரவிலும் தெரிந்தது. ஆனால், அவர் கவனம் எதிலும் இல்லை. கரிகாலனையும் சிவகாமியையும், காஞ்சி சிறையிலிருந்து குறுவாள் பாய்ந்த நிலையில் தப்பித்துச் சென்ற தன் மைத்துனரின் நிலை குறித்தும் யோசித்துக் கொண்டிருந்தார்.

எத்தனை கணங்கள் அல்லது நாழிகைகள் கடந்ததோ... சரசரவென்று பறந்து வந்த புறா ஒன்று அவர் முகத்துக்கு நேராக தன் சிறகை அடித்துவிட்டு வந்த வழியே பறந்தது.சட்டென சுயநினைவுக்கு வந்த கரிகாலனின் பெரிய தாயார் தன் கண்களைக் கூர்மையாக்கினார். கவனத்தைக் குலைத்த முதல் புறா சென்றதுமே அடுத்த புறா வந்தது. பிறகு இன்னொன்று. பின்னர் அடுத்தது. கடைசியாக வேறொன்று.

மொத்தம் ஐந்து புறாக்கள், குறிப்பிட்ட இடைவெளியில் அவர் நின்ற சாளரத்தின் அருகில் வந்து படபடவென தங்கள் சிறகுகளை அடித்தன. வந்த வழியே திரும்பிச் சென்றன.ஐந்து... ஆம். ஐந்து... கணக்கிட்ட கரிகாலனின் பெரிய தாயார் முகத்தில் இனம்புரியாத அமைதி பூத்தது. புன்னகையுடன் பஞ்சணைக்கு வந்தவர் நிம்மதியாக உறங்கினார்.

எதிர்பார்த்த செய்தி கிடைத்துவிட்டது!‘‘அம்மா... வயதில் நான் இளையவன்தான். ஆனாலும் நான் சொல்வதைக் கேட்பீர்கள் அல்லவா..?’’ பாசத்துடன் சாளுக்கிய சக்கரவர்த்தினியின் முன் மண்டியிட்டபடி கங்க இளவரசன் கேட்டான்.‘‘எதற்கு குழந்தாய் இவ்வளவு பூடகம்..? கங்க நாட்டில் நீ வளர்ந்ததைவிட வாதாபியில் ஓடியாடி விளையாடியதுதான் அதிகம். விநயாதித்தன் போலவே நீயும் எனக்கு மைந்தன்தான். தயங்காமல் சொல்...’’ என்றபடி அவன் தலையைக் கோதினாள்.

‘‘அம்மா! சிவகாமி ஆபத்தானவள்தான். ஆனால், நமக்கல்ல. பல்லவர்களுக்கு! ஏனெனில் அவள் நம்மால் தயாரான ஆயுதம். நம் சுழற்சிக்கு ஏற்ப சுழலும் பொறி. எனவே அவளால் விநயாதித்தனுக்கு சிக்கல் வந்துவிடுமோ என நீங்கள் அஞ்சவேண்டாம். சாளுக்கிய மன்னர் வந்ததும் அவரிடமே கேட்டு நீங்கள் அறியலாம். எனவே மனதைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள்...’’ மெல்ல சக்கரவர்த்தினியின் கரங்களை கங்க இளவரசன் பற்றினான். ‘‘என் ஊகம் சரியாக இருந்தால் விக்கிரமாதித்த மாமன்னர்தான் தன் மகன் விநயாதித்தனை ஏதோ ஒரு காரணத்துக்காக அஞ்ஞானவாசத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும்!’’

‘‘எதற்காக மன்னர் அப்படிச் செய்ய வேண்டும்..?’’ சாளுக்கிய அரசியின் முகத்தில் கேள்வி பூத்தது. குரல் மெல்ல தழுதழுப்புக்கு மாறியது.
‘‘நாளை நாட்டை ஆளப்போகிறவர் விநயாதித்தன்தானே..? அதற்கான பயிற்சியின் ஒரு கட்டமாக இது இருக்கலாம்...’’
‘‘லாம்தானே குழந்தாய்... உறுதியில்லையே..?’’

‘‘அந்த உறுதியை கண்டிப்பாக மன்னர் அளிப்பார்...’’ கங்க இளவரசன் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் மேல்மாடத்துக்கு வந்து சேர்ந்தார்.மரியாதை நிமித்தமாக சக்கரவர்த்தினியும் கங்க இளவரசனும் எழுந்து நின்றார்கள்.‘‘உங்கள் உரையாடலைத் தடை செய்துவிட்டேனா..?’’ விக்கிரமாதித்தர் புன்னகைத்தார்.‘‘உரையாடலே உங்களைக் குறித்துதானே மன்னா...’’ கங்க இளவரசன் மரியாதை கலந்த பக்தியோடு சொன்னான். ‘‘விநயாதித்தன் எங்கே என்று கேட்டேன்... தனக்குத் தெரியாது என அம்மா சொன்னார்...’’

மன்னர் எதுவும் சொல்லாமல் மேல்மாடத்தின் விளிம்புக்கு வந்தார். காஞ்சி மாநகரத்தின் இரவு அழகை ரசித்தார். சட்டென அவர் பார்வை கூர்மை அடைந்தது.புறா! இல்லை புறாக்கள்! மொத்தம் ஐந்து! ராமபுண்ய வல்லபரால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கரிகாலனின் பெரிய தாயார் தங்கியிருக்கும் அறையின் சாளரத்தில் படபடத்துவிட்டு அவை பறந்ததை கவனித்தார்.

மலர்ச்சியுடன் திரும்பி தன் பட்டத்து அரசியையும் கங்க இளவரசனையும் ஏறிட்டார். ‘‘விரைவில் விநயாதித்தன் வந்துவிடுவான்! அதற்கான வேளை நெருங்கிவிட்டது!’’பொழுது புலர்வதற்காகவே காத்திருந்ததுபோல் காஞ்சி மாநகரம் பரபரப்பானது. வழக்கத்துக்கு நேர்மாறான பரபரப்பு.

‘‘என்ன... காஞ்சி கடிகைக்குள் ஒற்றனா..?’’‘‘காஞ்சிக்குள் நுழைந்த கரிகாலனை சாளுக்கியர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பிக்க வைத்தது ஒரு கடிகை மாணவனா..?’’‘‘அப்படியானால் இனி கடிகையும் சாளுக்கியர்களின் கண்காணிப்புக்குள் வருமா..?’’‘‘யாரை நம்புவது என்றே தெரியவில்லையே..?’’

‘‘உண்மையில் அவன் கடிகையில் கல்வி பயில வந்தவன் இல்லையாம்...’’‘‘இரவோடு இரவாக அவனைக் கைது செய்துவிட்டார்கள். அவனிடம் மூட்டை நிறைய பொற்காசுகள் இருந்ததாம்!’’‘‘காலையிலேயே விசாரணை நடக்கும் என்கிறார்கள்...’’மக்கள் பலவாறாகக் கூடிக் கூடிப் பேசினார்கள். கேள்விப்பட்டதை, கேள்விப்படாததை, அறிந்ததை, அறியாததை... எல்லாம் ஒன்று கலந்து நேரில் பார்த்ததுபோல் எல்லோருமே ஒவ்வொரு கதையைச் சொன்னார்கள். எல்லா கதையின் மையமாகவும் கடிகையைச் சேர்ந்த அந்தப் பாலகனே இருந்தான்.

வெயில் ஏற ஏற மக்கள் நடமாட்டமும் அவர்கள் கூடிக் கூடிப் பேசுவதும் அதிகரித்தது.அதற்கு ஏற்பவே சூரியோதயம் முடிந்த நான்காம் நாழிகையில் மேற்கூரை இல்லாமல் தேர் ஒன்று பவனி வந்தது. அதன் நடுவில் இருந்த தேக்கு மரத்தில் அதுவரை பேசுபொருளாக இருந்த பாலகன் கட்டப்பட்டிருந்தான்!வீரர்கள் இருபுறமும் வர அந்தத் தேர் நிதானமாக விசாரணை மண்டபத்தை நோக்கிச் சென்றது.மக்கள் வியப்பும் பரிதாபமும் கலந்த நிலையில் அத்தேருடன் நடந்து வந்தார்கள்.

(தொடரும்)

அட்டையில்: ஹன்சிகா

படம்: ஜேடி ஜெர்ரி

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்