மக்களைப் பார்த்து தோனி கையசைக்கவும் விராட் கோலி முகத்தைத் திருப்பிக்கவும் இதுதான் காரணம்..!



எனக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தமில்ல. ஆனா, மசால் தோசைனா தோனிக்கு ரொம்பப் பிடிக்கும்னு தெரியும்! அவரை மாதிரி டைமிங்கை ஃபாலோ பண்றவங்களைப் பார்ப்பதே கஷ்டம்...’’அசால்ட்டாக சொல்லி புன்னகைக்கிறார் ராமசுந்தரம். இன்னோரம் பையோ ஜெனிசிஸ் புராடக்ட்ஸை உற்பத்தி செய்து அதை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்து வருகிறார் இந்த தொழிலதிபர்.

‘‘எதார்த்தமான பிசினஸ் மீட்ஸ்தான் கிரிக்கெட் வீரர்களை நண்பர்களா மாத்திச்சு. ஸ்கூல் டேஸ்ல இருந்தே கிரிக்கெட் மேல ஆர்வம் உண்டு. காரணம், எங்கப்பா வெங்கட்ராமன். அவர் விக்கெட் கீப்பரா இருந்தார். இதுவும் பெரும்பாலான கிரிக்கெட் ப்ளேயர்ஸ் எனக்கு ஃப்ரெண்ட்ஸாக ரீசன். கபில்தேவ் தொடங்கி விராட் வரை எல்லாருமே என் நண்பர்கள்தான். அதாவது உட்கார்ந்து பேசிச் சிரிச்சு சாப்பிடற அளவுக்கு...’’ கண்சிமிட்டும் ராமசுந்தரம், கல்லூரி நாட்களில் கிரிக்கெட் ப்ளேயராக இருந்திருக்கிறார்.

‘‘1995ல இருந்து இலங்கைல என் ஃபார்மா தொழிலை செய்துட்டு இருக்கேன். அப்படி ஒரு டிராவல்லதான் கிரிக்கெட் பிளேயர் நயன் மோங்கியா நட்பு கிடைச்சது. என் பிஸினஸ் பத்தி நிறைய கேட்டு தெரிஞ்சுக்கிட்டார். அப்படியே ஒவ்வொருத்தரையும் அறிமுகப்படுத்தினார்.
அப்பதான் ஸ்பைருலினா என்கிற கடல்பாசி டயட் ப்ராடக்ட்டை லான்ச் செஞ்சிருந்தோம். அதை கேள்விப்பட்ட நயன் மோங்கியா, தனக்கு சில டேப்ளட்ஸ் தரமுடியுமானு கேட்டார். அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பக்கத்துல எனக்கு வீடு இருந்தது. அதனால அவர் ரூமுக்கு எடுத்துட்டுப் போய் கொடுத்தேன்.

திடீர்னு பார்த்தா என் பின்னாடி பெரிய கும்பல்! சச்சின், கங்குலி, டிராவிட்னு எனக்கு ரோல் மாடலா யாரை எல்லாம் நினைச்சேனோ அவங்க எல்லாரும் என் பின்னாடி நின்னுட்டு இருந்தாங்க!எல்லாரையும் நயன் மோங்கியா அறிமுகப்படுத்தினாரு. அப்படியே என் நட்பு வட்டம் அதிகரிச்சது...’’ என்றவர் முதல் பத்தியில் சொல்லப்பட்ட விஷயத்துக்கு வந்தார்.

‘‘தோனிக்கு மசால் தோசைனா ரொம்பப் பிடிக்கும். ஆனா, டயட்ல செம ஸ்ட்ரிக்ட். எல்லாருக்கும் முன்னாடி வெயிட்டிங்ல இருப்பார். யாராவது லேட்டா வந்தா எதுவுமே சொல்ல மாட்டார். சும்மா ஒரு லுக் விடுவார்!‘உங்களுக்குள்ள எப்படி இவ்வளவு பொறுமை வந்தது’னு கேட்டேன். ‘என் மனசுல இருந்த பலரை ஒவ்வொருத்தரா இழந்தப்ப ரொம்ப யோசிச்சேன். இந்தப் பக்குவமும் பொறுமையும் அப்ப வந்ததுதான். நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்து வாழ்க்கைல முன்னேற வைச்சது பொறுமைதான்.

ஒரு விக்கெட் கீப்பரா நான் எனக்குப் பக்கத்துல இருக்கிற பேட்ஸ்மேனை கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி டைவர்ட் பண்ணக்கூடாது. அது எதிக்ஸ் இல்ல. ஒரு ப்ளேயரா சக ஆட்டக்காரரை மதிக்கறேன்! அதேநேரம் என்னைக் கொண்டாடுகிற மக்களை மனசுல வைச்சு தாங்கறேன். என்னால யாரும் கஷ்டப்படக் கூடாது’னு கேஷுவலா தோனி சொன்னார்!

ஆனா, எனக்குள்ள பல வாசல்களை இது திறந்து வைச்சது! நீங்க கூட பார்த்திருக்கலாம். தன்னைப் பார்த்து கையசைக்கும் மக்களுக்கு அவரும் நின்னு திரும்பி கையசைப்பார்!’’ என்று நெகிழும் ராமசுந்தரம் இதற்கு நேர்மாறாக தன்னைப் பார்த்து மக்கள் கையசைக்கும்போது விராட் கோலி ஏன் முகத்தை திருப்பிக் கொள்கிறார் என்பதையும் விளக்கினார்.

‘‘இதே கேள்வியை விராட் கோலிகிட்ட கேட்டேன். அதுக்கு அவர், ‘டிரெயினிங் தொடங்கி மேட்ச் முடியற வரை எந்த புகழையும் மண்டைல ஏத்திக்கக் கூடாதுனு கவனமா இருப்பேன். மக்களோட கொண்டாட்டம்... என்னைப் பார்க்கணும்னு அவங்க நினைப்பதெல்லாம் ஒரு போதை மாதிரி உள்ளுக்குள்ள ஏறிட்டா ஆபத்து. மேட்ச் சுல அது கர்வமா வெளிப்பட வாய்ப்பு இருக்கு.

இதனாலயே மேட்ச்சுல ஜெயிச்ச பிறகே மக்களை தலைநிமிர்ந்து பார்க்கறேன்... அவங்க சந்தோஷத்துல பங்கெடுத்துக்கறேன்’னு விராட் கோலி சொன்னார். அவரோட பார்வைல இது சரிதானே..?’’ நம்மிடமே கேள்வியைக் கேட்ட ராமசுந்தரத்திடம், ‘மேட்ச் ஃபிக்சிங்’ பற்றி வீரர்களிடம் அவர் பேசியிருக்கிறாரா என்று கேட்டோம்.

‘‘பேசியிருக்கேன். குறிப்பா தோனிகிட்ட. அதுக்கு அவர் சொன்ன பதில் சுவாரஸ்யமா இருந்தது. ‘மேட்ச் ஃபிக்ஸிங் முழுமையா இல்லைனு சொல்ல மாட்டேன். ஆனா, என் பார்வைல அது நடக்கல. நிச்சயம் இல்ல! இது கேம். ஒவ்வொரு நிமிஷமும் உணர்வுகள் சூழ விளையாடறோம். என்ன ஃபிக்ஸ் செஞ்சாலும் கண்டிப்பா ஓர் இடத்துல நம்மை மீறின ஆட்டம் நடக்கும்! அதுல யாரும் யாரையும் கைட் பண்ணவே முடியாது’னு சொன்னார்.

உடனே சட்டுனு ஐபிஎல் தேவையானு கேட்டுட்டேன்! தோனி சிரிச்சுகிட்டே, ‘‘நிச்சயம் தேவை. ஏன்னா இதுக்கு முன்னாடி இளைஞர்கள் வெறும் ரஞ்சி கோப்பையை மட்டுமே நம்பியிருந்தாங்க.

இப்ப ஐபிஎல் அவங்களுக்கு பெரிய வரமா அமைஞ்சிருக்கு! இன்னொரு விஷயம். ரஞ்சி கோப்பையை எத்தனை மக்கள் பார்க்கறாங்க? ஆனா, ஐபிஎல்லை நிறைய பேர் கண்டுகளிக்கறாங்க! கிரிக்கெட்ல இனி யார் இருக்கணும்... இருக்கக் கூடாதுனு மக்கள் ஐபிஎல்லைப் பார்த்து டிசைட் பண்றாங்க. நல்ல விஷயம்தானே’னு சொன்னார்.எனக்கும் தோனி சொன்னது சரினு தோணுது... நீங்க என்ன சொல்றீங்க..?’’ என ராமசுந்தரம் கொக்கி போட்டார்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! வேறென்ன சொல்ல?!

ஷாலினி நியூட்டன்