தலபுராணம்



இந்தியாவின் முதல் தொழிற்சங்கமும் பின்னி மில்லின் இன்றைய நிலையும்!

சுதந்திரத்திற்குப் பிறகான ‘பின்னி அண்ட் கோ’வின் கதையைப் பார்க்கும்முன் அதில் ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தின் வரலாற்றைப் பார்த்துவிடலாம்.மெட்ராஸ் லேபர் யூனியன்தான் இந்தியாவில் அமைக்கப்பட்ட முறையான முதல் தொழிற்சங்கம். இதற்கு வித்திட்டவர்கள் செல்வபதி செட்டியார் மற்றும் ராமஞ்சலு நாயுடு என்கிற இரு வணிகர்கள்.

இவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இருக்கிறது. செல்வபதி செட்டியார் துணிக்கடையும், ராமஞ்சலு நாயுடு அரிசிக்கடையும் நடத்தி வந்தார்கள். இருவரும் நண்பர்கள். இருவரின் கடைகளும் பி அண்ட் சி மில்லுக்கு அருகில் இருந்தன. பின்னி தொழிலாளர்களே இவர்களின் வாடிக்கையாளர்கள்.

அவர்களின் கஷ்டங்களையும், அவலநிலைகள் பற்றியும் செல்வபதியின் கடைக்கு வரும்போது பேசிக் கொள்வர். இதில், ஒரு தொழிலாளிக்கு நடந்த மோசமான சம்பவம் ஒன்று செல்வபதியின் மனதை வெகுவாக பாதித்தது. அவர், பின்னி மில்லில் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது பற்றி, ‘இந்தியன் பேட்ரியாட்’, ‘சுதேசமித்திரன்’ பத்திரிகைகளில் கட்டுரை வெளியிடச் செய்தார்.

செல்வபதி செட்டியார் தன் தாத்தா நிறுவிய சபா ஒன்றையும் நிர்வகித்து வந்தார். இந்தச் சபாவும் அவரின் துணிக்கடையுடன் இணைந்தே செயல்பட்டது. இந்தச் சபாவில் சொற்பொழிவாற்ற திரு.வி.க., என்.சி.கண்ணபிரான் முதலியார் போன்ற பெயர் பெற்ற சொற்பொழிவாளர்கள் வருவது வழக்கம். இதைக் கேட்க தொழிலாளர்களும் வருவர்.

இந்நிலையில் இந்தச் சபாவின் வழியே, தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி நிறவெறிக்கு எதிராக இந்தியர்களைத் திரட்டிப் போராடியதைப் போல் நாமும் தொழிலாளர்களைத் திரட்டி அவர்களின் உரிமைகளுக்காகப் போராடலாம் என்று நினைத்தார் செட்டியார். நண்பர் ராமஞ்சலு நாயுடும் இதற்கு இசைந்தார்.

ஒருமுறை கண்ணபிரான் முதலியார் மகாபாரதச் சொற்பொழிவாற்றி முடித்தவுடன் தொழிற்சங்கம் தொடங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். பின்னர், சங்கத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் ராமஞ்சலு நாயுடுவின் கடையிலுள்ள பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

தொழிலாளர்களும் இதற்கு ஊக்கமளித்து கையெழுத்திட்டனர்.இதனால், மகிழ்ச்சியடைந்த இருவரும் சபாவின் கீழ் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். முக்கிய பிரமுகராக அன்றைய சிறந்த வழக்கறிஞரும், மத்திய சட்டசபை உறுப்பினருமான டி.ரங்காச்சாரியரிடம் பேசினர். அவர் பிராமணர் என்பதால் இதை நீதிக்கட்சியின் ஆதரவாளர்கள் வரவேற்கவில்லை.

பிறகு, மாஜிஸ்திரேட்டாக இருந்த சுதர்சன முதலியார் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அன்றைய பி அண்ட் சி மில்லில் இருந்து பத்தாயிரம் தொழிலாளர்கள் வரை கலந்து கொண்டனர். திரு.வி.க. எளிய தமிழில் மிகுந்த ஆற்றலுடன் பேசினார். தொழிலாளர்களிடையே பெரும் உற்சாகம் ஏற்பட்டது.பின்னி நிர்வாகம் சும்மா இருக்குமா என்ன?

‘‘மில் மேற்பார்வையாளர்கள் வழியே தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. செல்வபதி செட்டியாருக்கும் காவல்துறை மூலம் நெருக்கடி தரப்பட்டது. இதனால், இரு நண்பர்களும் பொது மக்களிடம் செல்வாக்குள்ள, சங்கத்தில் ஈடு கொண்ட ஒரு பெரிய மனிதரின் தலைமை தேவையென நினைத்தனர்.

இதனால், கேசவப் பிள்ளையை அணுகினர். இவர், இந்தியன் பேட்ரியாட் பத்திரிகையில் தொழிலாளர்களைப் பற்றி எழுதி வந்தார். திரு.வி.கவும் இவரைத் தலைமையேற்க வேண்டும் என்கிற கருத்தைக் கொண்டிருந்தார். ஆனால், கேசவப் பிள்ளையோ, தான் மெட்ராஸ்வாசி கிடையாதென அதை மறுத்துவிட்டு, அன்னிபெசன்ட் அம்மையாரிடம் அழைத்துச் சென்றார். அவர் அந்நேரம் அலுவலகத்தில் இல்லை. அவரின் சீடரான பி.பி.வாடியாவைச் சந்தித்தனர்.

அதுவரை பி அண்ட் சி மில் பற்றியும், அதன் தொழிலாளர்கள் பற்றியும் சிறிதே தெரிந்திருந்தவர், இந்தச் சந்திப்பின் மூலம் பல விஷயங்களை அறிந்தார். இதுவே அவரை முதல் தொழிற்சங்கத்தின் தலைவராக்கியது...’’ என்கிறார் ‘THE MAKING OF THE MADRAS WORKING CLASS’ நூலில் பேராசிரியர் டி.வீரராகவன்.

இப்படியாக, 1918ம் வருடம் ஏப்ரல் 27ம் தேதி மெட்ராஸ் தொழிலாளர் சங்கம் முறையாக தோற்றுவிக்கப்பட்டது. வாடியா தலைவராக இருந்து உரையாற்ற அதை திரு.வி.க தமிழில் மொழிபெயர்த்தார். இதைப் பின்பற்றி டிராம்வே, மின்சப்ளே கார்ப்பரேஷன், எம்.அண்ட்.எஸ்.எம் ரயில்வே வொர்க்‌ஷாப், அச்சகங்கள் எனப் பல நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டன.

மட்டுமல்ல. முடிதிருத்துனர்கள், துப்புரவாளர்கள், ரிக்‌ஷாகாரர்கள், ஐரோப்பியர் வீடுகளில் வேலை செய்பவர்கள் எனப் பலரும் தங்களுக்கென சங்கம் அமைத்தனர். தவிர, காவல்துறையினரும், தபால்காரர்களும் கூட சங்கத்தைத் தோற்றுவிக்க இந்தச் சங்கம் வித்திட்டது.

பின்னி நிர்வாகமும் பல்வேறு சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டது. எல்லா எதிர்ப்புகளையும் தங்கள் கரங்களால் தொழிலாளர்கள் தவிடுபொடியாக்கினர்.
சரி. சுதந்திரத்திற்குப் பிறகு பின்னி மில்லும், தொழிலாளர்கள் நிலையும் என்னானது?

இதைப் பற்றி பி அண்ட் சி மில்லின் அலுவலர் சங்கத்தின் பொதுச் ெசயலாளர் ராமலு விரிவாகவே பேசினார். ‘‘ஆசியாவுலயே மிகப் பெரிய காம்போசிட் மில்னு இதைச் சொல்வோம். அதாவது, கச்சா பொருளா பஞ்சு உள்ளே வரும். வெளியே துணியா மார்க்கெட்டுக்குப் போகும். அந்தளவுக்கு எல்லா வசதிகளும், தொழில்நுட்பங்களும் கொண்ட மில் இது.

மொத்தம் 228 ஏக்கர் கொண்டது. தொழிலாளர்களுக்கான கோர்ட்டர்ஸ், அதிகாரிகளுக்கான பங்களாகள்னு தனியா இருந்துச்சு. சுதந்திரத்திற்குப் பிறகும் பிரிட்டிஷ்காரங்கதான் இதை நிர்வாகம் பண்ணினாங்க.1962ம் வருஷம் பின்னி அண்ட் கோவைச் சேர்ந்த எல்லா நிறுவனங்களையும் ஒண்ணா இணைச்சு, ‘பின்னி லிமிடெட்’னு ஒரே நிர்வாகமாகப் பெயர் மாத்தினாங்க.

இந்நேரம், வெளிநாட்டு முதலீடு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாதுனு ஒரு விதி வந்தது.‘ஏற்கனவே சுதந்திரம் கொடுத்தாச்சு. இனிமே நாம இங்க இருக்க வேண்டாம்’னு பிரிட்டிஷ்காரங்க நினைச்சாங்களோ என்னவோ? நிறுவனத்தை அரசு கையில கொடுக்கணும்னு முடிவெடுத்தாங்க.

அதனால, இதிலுள்ள பங்குகள் எல்லாத்தையும் அரசின் கீழ் இருக்குற ஸ்டேட் பேங்கிடம் கொடுத்தாங்க. அரசின் மேற்பார்வையில, ஸ்டேட் பேங்க் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுல இந்த மில் செயல்பட்டுச்சு. அதாவது, அரசு நியமிக்கும் நிர்வாகியும், வங்கியின் நிர்வாகிகளும் இணைஞ்சு மில்லை நடத்தினாங்க.

ஏறக்குறைய, மொத்த பின்னி லிமிடெட்லயும் அன்னைக்கு 45 ஆயிரம் நேரடித் தொழிலாளர்கள் பணியாற்றினாங்க. இந்த பி அண்ட் சி மில்ல மட்டும் 16 ஆயிரம் நேரடித் தொழிலாளர்கள். வடசென்னையின் பொருளாதாரமே இதையொட்டி அமைஞ்சிருந்தது.

ஆனா, ஆரம்பத்துல ஆங்கிலேயர்கள்கிட்ட இருந்தது மாதிரி நிர்வாகம் சரியா நடக்கல. இதற்கு, அரசு ஒரு பாலிசி வச்சிருந்தது. அதாவது, நலிவடையும் ஒரு நிறுவனத்தை வளமான நிறுவனத்தின் மேற்பார்வையில் நடத்த வைப்பது. இதனால, 1974ல் கோயமுத்தூரைச் சேர்ந்த லட்சுமி மில்லின் கட்டுப்பாட்டிற்குள் பி அண்ட் சி மில் போச்சு.

அவங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாங்க. அந்நேரம் மெட்ராஸ்ல ஒரு வெள்ளம் வந்தது. ஆறு மாதம் மில் மூடவேண்டிய நிலை. இதுக்குப்பிறகு, லட்சுமி மில்லும் விலகிடுச்சு.உடனே, தமிழக அரசு மில்லைத் திறக்க ஒரு நிதி ெகாடுத்தது. பின்னர், அன்றைய தொழிலாளர் துறைச் செயலாளர் பத்மநாபனை நிர்வாக இயக்குநராகக் கொண்டு மில் செயல்பட தொடங்குச்சு.

பிறகு, 1980ல் மீண்டும் மில்லை மூடவேண்டிய நிலை. இதுக்கு, அரசு தரப்பில் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு தொழிலாளர்களைக் குறைக்கணும்னு காரணம் சொல்ல, பலத்த எதிர்ப்பு கிளம்புச்சு. மாநில எம்.பிக்கள் எல்லோரும் சேர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி மில்லைத் திறக்க வச்சாங்க.

அதன்பின்பும் மில் நவீனமா மாறல. மறுபடியும், 1984ல் பதினோரு மாதம் மூடினாங்க. இப்பவும், பொருளாதார நிலையைக் காரணம் காட்டி, தொழிலாளர்களைக் குறைக்கணும்னு சொன்னாங்க. ஏற்கனவே 1980கள்ல குறைச்சதுக்குப் பிறகு இப்ப மேலும் ஆள் குறைப்பு செய்தாங்க. இதனால, மில் எட்டாயிரம் தொழிலாளர்களாக சுருங்கிடுச்சு.

1974ல் வெள்ளம் வந்தப்ப மட்டும் எங்களுக்கு 50 சதவீதம் ஊதியம் கிடைச்சது. அப்புறம், மூடினப்ப எல்லாம் எந்த ஊதியமும் கொடுக்கல. இதேமாதிரி பெங்களூர், மீனம்பாக்கம் மில்களிலும் நடந்தது.இதனால, அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி தலைமையில நாங்க எல்லோரும் பிரதமர் இந்திராகாந்தியைச் சந்திச்சு நிலைமையை அவங்ககிட்ட விவரிச்சோம். ‘இதை அரசு எடுத்து நடத்தணும். அதுக்கு இழப்பீடு கொடுக்கணுமேனு யோசிக்க வேண்டியதில்ல. ஏன்னா, எல்லா பங்குகளுமே ஸ்டேட் பேங்கிடம்தான் இருக்கு. அவசரச் சட்டம் போட்டா போதும்’னு ராமமூர்த்தி சொன்னார்.

அவங்க, ‘நாடாளுமன்றம் நடந்திட்டு இருக்குறப்ப அவசரச் சட்டம் போட முடியாது. முடிஞ்சதும் சட்டம் போட்டுடலாம்’னு சொன்னதுடன், மத்திய வர்த்தகம் மற்றும் டெக்ஸ்டைல் துறைச் செயலாளர் ராமகிருஷ்ணனை பின்னிக்கு இயக்குநராகவும் போட்டாங்க.

ஆனா, பிரதமர் இந்திராகாந்தியின் மரணத்திற்குப் பிறகு எல்லாம் மாறிடுச்சு. அடுத்து வந்த ராஜீவ்காந்தி, ஹடா என்கிற கல்கத்தா நிறுவனத்திற்கு ஸ்டேட் பேங்கிடம் இருந்து பங்குகளை வாங்கிக் கொடுத்தார். அவங்க கட்டுப்பாட்டுல இந்நிறுவனம் வந்துச்சு. அவங்களும் தாக்குப்பிடிக்க முடியாம வந்தஉடனே போயிட்டாங்க.

1986ம் வருடம், தமிழக முதல்வர் எம்ஜிஆர் மூலம் உடையார் குரூப் இந்நிறுவனத்தின் எல்லா பங்குகளையும் ஆறு கோடி ரூபாய்க்கு வாங்கியது. அவங்களுக்கு டெக்ஸ்டைல் துறைல அனுபவம் கிடையாது.

அவங்க நோக்கம் எல்லாம் ரியல் எஸ்டேட்டா இருந்துச்சு.இங்க வந்ததும், ‘தண்ணீர் பிரச்னையா இருக்கு; நிலக்கரி கிடைக்கல’னு பொய்யான காரணங்களைச் சொல்லி யூனிட்டை புவனகிரிக்கு மாத்தப் போறோம்னு சொன்னாங்க. அங்க எங்களுக்கு அபரிமிதமா, ‘காஸ்’ கிடைக்கும்ன்னாங்க.

அப்புறம், மில்லின் சைஸை சுருக்கி, கிரே துணியா வாங்கி ப்ராசஸ் பண்ணி அனுப்பறத் திட்டத்தையும் முன்வைச்சாங்க. இதனால, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ேவலையிழப்பாங்கனு சொன்னோம்.

யூனியன் எதிர்த்துச்சு.இதுல கவனிக்க வேண்டியது, நாங்க எந்த இடத்திலும் போராட்டம் நடத்தவே இல்ல. எதிர்ப்பை மட்டுமே தெரிவிச்சோம். இதை வச்சு 91ம் வருடம் மறுபடியும் மூடிட்டாங்க. எல்லாமே சட்டவிரோதமா செய்தாங்க.

1992ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா புவனகிரி போற நடவடிக்கையைத் தடுத்து மில்லை திறந்தார். ஆனா, மில்லின் பெரும்பகுதி செயல்பாட்டைக் குறைச்சாங்க.பிறகு, 1994ல் BIFR எனப்படும் தொழிற்சாலை மற்றும் நிதி மறுசீரமைப்புக்கான வாரியத்திற்கு, ‘இந்த மில் மோசமாகிடுச்சு’னு கொண்டு போனாங்க. நாங்க எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தினோம். பிரச்னை அதிகரிச்சதால நிறைய தொழிலாளர்கள் வி.எஸ்.எஸ்ல (Voluntary Separation Scheme) போயிட்டாங்க. 5 ஆயிரம் பேர்தான் இருந்தோம்.

இதேமாதிரி மற்ற பின்னி நிறுவனங்களிலும் நடந்தது. 1996ம் வருடம் ஜுன் மாதம் வெயில் காலத்தில் மெட்ராஸில் ஒரு வெள்ளம் ஏற்பட மில் மூடப்பட்டுச்சு.

அப்ப, கலைஞர் முதல்வராக ஆட்சிக்கு வந்தார். அவர் மில்லை குறிப்பிட்ட தேதியில திறக்கணும்னு அறிவிச்சார். அந்த அறிவிப்பை எதிர்த்துக் கோர்ட்டுக்குப் போனாங்க. இந்நேரம், அவர் சட்டசபையில 110 விதியின் கீழ் மில்லை அரசு ஏற்று நடத்தும்னு அறிவிச்சார். சில காரணங்களால அதுவும் நடக்காம போயிடுச்சு.

பிறகு, 1998ம் வருடம் முதலமைச்சர் முன்னிலையில் ஒரு குறிப்பிட்ட தேதியில் மில்லைத் திறக்கவும், ஆயிரம் பேரைக் கொண்டு மில்லை நடத்தவும் ஒப்பந்தம் போட்டாங்க. மிச்சம் இருக்குற தொழிலாளர்களுக்கு வி.ஆர்.எஸ் கொடுத்து பணத்தை வழங்கணும்னு சொன்னாங்க.தொழிலாளர்கள் நம்பிக்கையிழந்து ஏறக்குறைய 87 பேர் தவிர மற்ற எல்லோருமே வி.ஆர்.எஸ். வாங்கினாங்க.

ஆனா, ஒப்பந்தப்படி கிரஜுவிட்டி, பி.எஃப்னு எந்தத் தொகையும் கிடைக்கல. 1996க்குப் பிறகு மில்லும் திறக்கப்படவே இல்ல. 2003ம் வருடம் வழக்கு ஐகோர்ட்டிற்கு வந்தது.BIFR வாரியத் திட்டத்தின்படி தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுக்கணும்னு தீர்ப்புல சொல்லப்பட்டது. பிறகே, எல்லோருக்கும் பணம் வந்து சேர்ந்தது.

இதில், கோர்ட்டர்ஸில் வசித்த தொழிலாளர்களுக்கு நிலம் வேணும்னு ஏற்கனேவே முறையிட்டு இருந்ேதாம். பெங்களூர் மில் தொழிலாளர்களுக்கு இதுபோல நிலம் கொடுத்து இருந்தாங்க. அதைக் காரணம் காட்டிக் கேட்டோம். சுமார், 244 பேர் அடையாளம் காணப்பட்டு அவங்களுக்கு பெரம்பூர் மேட்டுப்பாளையத்தில் இருந்த வில்லேஜில் ஆயிரம் ரூபாய்க்கு 500 சதுர அடி கொடுத்தாங்க.

தவிர, BIFR வாரியத் திட்டத்தில் இந்த மில்லைக் காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலில் தொடங்கி ஆயிரம் பேருக்கு வேலை வழங்கணும்னு சொல்லியிருந்தது. ஆனா, மில்லை தொடங்காமல் சொத்துகளை விற்க ஆரம்பிச்சாங்க. உடனே, BIFR வாரியத்திடமே முறையிட்ேடாம். வாரியமும் சொத்தை விற்கக்கூடாதுனு சொன்னது.

BIFRன் இந்த முடிவை எதிர்த்து ஐகோர்ட்டுக்குப் போய் தடை வாங்கினாங்க.இந்நேரம், மத்திய அரசு BIFR உள்ளிட்ட சில வாரியங்களை இணைச்சு என்.சி.எல்.டினு சொல்லப்படுற தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உருவாக்கிட்டாங்க. அதனால, இதில் புதிதாக முறையீடு செய்யணும்னு சொல்லிட்டாங்க. வழக்கு நடந்திட்டு இருக்கு.

இப்ப பழைய தொழிலாளர்கள் நான்கைந்து பேர்தான் மில்லில் செக்யூரிட்டி உள்ளிட்ட பணிகள்ல இருக்காங்க. இந்த மில்லும் ரியல் எஸ்டேட் வழியா குடியிருப்புகளா மாறிட்டு வர்றதைப் பார்க்க ரொம்ப வேதனையா இருக்கு.இப்ப எங்கப் போராட்டமே சிங்கபெருமாள்கோவில்ல 50 ஏக்கர்ல ஆயிரம் தொழிலாளர்களுடன் மில் நடத்தணும் என்பதுதான்...’’ என்கிறார் ஸ்ரீராமலு!           

பேராச்சி கண்ணன்  ராஜா