அத்தை பெண்ணையே வீட்டை எதிர்த்துதான் கட்டிக்கிட்டேன்!



‘மின்னலே’ சீரியல் இயக்குநர் பி.நக்கீரனின் லைஃப் ட்ராக்

செலிபிரேஷன் மூடில் பறக்கிறது ‘மின்னலே’ மெகா தொடரின் ஸ்பாட். சன் டிவியில் நண்பகல் 1.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் இத்தொடர் நூறாவது எபிசோடை தாண்டியிருப்பதால் யூனிட்டில் துள்ளுகிறது சந்தோஷம். ‘மின்னலே’யை இயக்கி வருபவர் பி.நக்கீரன்.
இதற்கு முன் மரணமாஸ் ஹிட்டான ‘கோலங்கள்’, ‘திருமதி செல்வம்’ மெகா தொடர்களை கன்னடத்திலும், தமிழில் ரம்யா கிருஷ்ணனின் ‘தங்கம்’, ‘வம்சம்’ தொடர்களையும் இயக்கியவர் இவர். மட்டுமல்ல பெரியதிரையிலும் ‘நிலாவுக்கு 2 சீட்டு’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்!‘‘எங்க குடும்பமே கலைக் குடும்பம்தான்! கொள்ளு தாத்தா சுப்பிரமணி வாத்தியாரும், தாத்தா குப்புசாமி வாத்தியாரும் நாடகக் கம்பெனி நடத்தியிருக்கறதா எங்க ஆயா சொல்லியிருக்காங்க...’’ என ஃப்ளாஷ்பேக்கை ஓபன் செய்யும் பி.நக்கீரன், பி.ஏ. பொருளாதாரம் முடித்தவர்.

‘‘பூர்வீகம் ஆர்.கே.பேட்டை. அப்பா பாலசுந்தரம். அம்மா, பொன்னம்மாள். சொந்தப் பெயரே நக்கீரன்தான். ரெண்டு அண்ணன், ரெண்டு அக்கா, ஒரு தங்கைனு கூட பிறந்தவங்க அஞ்சு பேர். சென்னை நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ்லதான் படிச்சேன். அப்பதான் சினிமா கனவும் எனக்குள்ள வந்துச்சு!காலேஜ் பக்கத்துலயே ஒய்.எம்.சி.ஏ. கிரவுண்ட் இருந்ததால தினமும் அங்க ஏதாவது படப்பிடிப்பு நடக்கும்.

க்ளாஸுக்கு மட்டம் போட்டுட்டு ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கறதுதான் என் வேல! ‘இதையெல்லாம் ஒரு சீன்னு எப்படி யோசிச்சாங்க... ரொம்ப மட்டமா இருக்கே... டைரக்டருக்கு நடிச்சு காட்டவே தெரியலை...’னு விவரம் புரியாம கலாய்ச்சிருக்கேன்...’’ வாய்விட்டு சிரித்தஅவர் கங்கை அமரனிடம் உதவி இயக்குநராக வேலைப் பார்த்திருக்கிறார்.

‘‘டிகிரி வாங்கினதும் சினிமால டைரக்டர் ஆகப் போ றேன்னு வீட்ல சொன்னேன். விழுந்து விழுந்து சிரிச்சாங்க! ஒரு மாதிரியா ஆகிடுச்சு. எல்லாருக்கும் நான் போலீசாகணும்னு ஆசை. ஏன்னா, அப்பா டூட்டில இருக்கிறப்பவே இறந்துட்டார். எனக்கோ டிபார்ட்மென்ட்ல சேர பிடிக்கல.சினிமாவுக்கு போக வீட்ல சம்மதிக்க மாட்டாங்கனு நினைச்சு யார் கிட்டயும் சொல்லாம வெளில வந்தேன்.

 ரங்கநாதன் தெரு மேன்ஷன்ல தங்கியிருந்த நண்பன் கூட ஒட்டிக்கிட்டேன். ரெண்டு வருஷங்கள் வீட்டுக்கு தெரியாம போராடினேன். நிறைய சினிமா கம்பெனிகள்ல ஏறி இறங்கினேன். அப்படித்தான் ஒருநாள் கங்கை அமரன் ஆபீஸ் போனேன். என் நல்லநேரம், அவர் அசோசியேட் அரசு கண்ல பட்டேன். என் கையெழுத்து நல்லா இருந்ததால அமரன் சார்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன்.

‘சின்னவர்’, ‘கோயில் காளை’, வெங்கட்பிரபு முதன்முதல்ல ஹீரோவா அறிமுகமான ‘பூஞ்சோலை’, ‘அத்தை மக ரத்தினமே’ படங்கள்ல ஒர்க் பண்ணினேன். அவர் தூர்தர்ஷனுக்காக ‘கீதம் சங்கீதம்’னு 13 வாரத் தொடரை இயக்கினார். அதிலும் ஒர்க் பண்ணினேன். அப்புறம் பல சின்னப் படங்கள்ல வேலை பார்த்தேன்...’’ என்ற நக்கீரனுக்கு இந்த நேரத்தில்தான் திருமணமாகியிருக்கிறது.

‘‘சாப்பாட்டுக்கே போராடிட்டு இருந்த காலம் அது. எங்க குடும்பத்துக்கும் என் அப்பாவோட தங்கை... அதாவது அத்தை குடும்பத்துக்கும் வருஷக்கணக்குல ஒரு பகை இருந்துட்டு இருந்தது.இந்தச் சூழல்ல ஒருநாள் திடீர்னு அவங்க வீட்டுக்கு போக வேண்டிய நிலை. அத்தைக்கு நான் யாருனு தெரியலை. அங்கதான் அத்தைப் பெண் கவிதாவை பார்த்தேன்.

அப்புறம் சென்னை வந்துட்டேன். நான் சினிமால இருக்கறது எங்க வீட்டுக்கு தெரிஞ்சுடுச்சு. அண்ணன் என்னைத் தேடி வந்து கூட்டிட்டுப் போனார். வீட்ல எனக்கு பெண் பார்த்து வைச்சிருந்தாங்க. அத்தைப் பொண்ணைத்தான் கட்டிக்குவேன்னு சொன்னதும் அவங்களுக்கு பயங்கர ஷாக். பேசிப் பார்த்தாங்க. நான் காதுலயே வாங்கிக்கலை.

ஒரு கட்டத்துக்கு பிறகு ‘உன் இஷ்டத்துக்கு வேலை தேடிக்கிட்டே... பொண்ணும் பார்த்துட்டே... எப்படியோ போ...’னு சொல்லிட்டாங்க. சிம்பிளா
கவிதாவை கட்டிக்கிட்டேன். அமரன் சார் வந்து ஆசிர்வதிச்சார். இந்த நேரத்துல படைப்பாளி - ஃபெப்சி பிரச்னை ஆரம்பிச்சது. இண்டஸ்டிரில எங்கயும் வேல இல்ல. வருமானம் கிடைக்கல. அத்தை வீடு வசதினாலும் அங்க போக விரும்பலை.

நானும் கவிதாவும் சில நாட்கள் ரெண்டு வேளை கூட பட்டினி கிடந்திருக்கோம். அத்தை வீட்டுக்குப் போயிருந்தா வேலைக்கே போகாம கூட வாழ்ந்திருக்கலாம். அதை நாங்க செய்யல. கைல இருந்த காசுல பன்னோ சமோசாவோ வாங்கி ஒரு வேளை மட்டும் சாப்பிடுவோம்...’’ சொல்லும்போதே நக்கீரனின் குரல் தழுதழுக்கிறது. சமாளித்தவர் தொடர்ந்தார்.

‘‘என் நண்பர் உதய், சீரியலுக்கு வசனம் எழுதிட்டிருந்தார். அவர்தான் என்னை சின்னத்திரைக்கு கூட்டிட்டுப் போனார். ‘பயணம்’ தொடர்ல போஸ்ட் புரொடக்‌ஷன் வேலை செய்தேன். அங்கிருந்து விகடன் டெலி விஸ்டாஸ் போனேன். ‘அப்பா’ சீரியலுக்கு ஷெட்யூல் டைரக்டரா ஓர்க் பண்ணினேன். 50 எபிசோடுகள்தான் அந்த தொடர் போச்சு. ஆனா, என் ஓர்க் சீனிவாசன் சாருக்கு பிடிச்சிருந்தது.

ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, ‘கோலங்கள்’ தொடரை கன்னடத்துல இயக்குங்கனு சொல்லி வாய்ப்பு கொடுத்தார். எனக்கு கன்னடம் தெரியாது. திகைச்சு நின்னேன். சிரிச்சுகிட்டே ‘உங்களால முடியும்... பண்ணுங்க...’ சொன்னார். இப்படித்தான் அவரால நான் இயக்குநரானேன். பெங்களூர்ல ஷூட் நடந்தப்ப கன்னட ராஜ்குமார் பிரச்னை ஓடிட்டு இருந்தது. ‘ஒரு கன்னடர்தான் டைரக்ட் பண்ணனும்’னு பிரச்னை கிளப்பினாங்க. அப்பவும் சீனிவாசன் சார், ‘நீங்க இயக்கறதா இருந்தா அந்த சீரியல் இருக்கும். இல்லைனா சீரியலையே விட்டுடலாம்’னு சொன்னார். நெகிழ்ந்துட்டேன்.

அப்புறம் நிலமை சரியாகிடுச்சு. எங்ககிட்ட பிரச்னை பண்ணினவங்களே ‘கோலங்கள்’ வெற்றிவிழால எனக்கு விருது கொடுத்தாங்க! இது முடிஞ்சதுமே ‘திருமதி செல்வம்’ கன்னடத்துல ரீமேக் செய்தேன். தொடர்ந்து ரம்யா கிருஷ்ணனின் ‘தங்கம்’, ‘வம்சம்’ தொடர்கனு பிசியாகிட்டேன்...’’ அடக்கத்துடன் சொல்லும் நக்கீரன், சத்தமே இல்லாமல் ஒரு படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார்.

‘‘அது ஒரு எமோஷனலான காதல் கதை. ‘தங்கம்’ சீரியல் முடிச்சதும் படம் இயக்கற வாய்ப்பு தானா அமைஞ்சது. சின்ன புராஜெக்ட்தான். பேசமுடியாத ஒருத்தரை பேசி நடிக்க வச்சிருக்கேன்! அவர்தான் ஹீரோ! ‘ஆடுகளம்’ நரேன், ஆர்.பாண்டியராஜன் தவிர புதுமுகங்களும் நிறைய பேர் படத்துல இருக்காங்க.

‘மின்னலே’ தொடங்கறதுக்கு முன்னாடியே சினிமா ஷூட் முடிஞ்சுடுச்சு. ரிலீசுக்கு ரெடியா இருக்கு. அதனால முழு கவனத்தையும் சீரியல்ல செலுத்த முடியுது...’’ என்று சொல்லும் நக்கீரன் தன் மனைவி கவிதா எல்லாவகையிலும் தனக்கு உறுதுணையாக இருப்பதாகச் சொல்கிறார். இந்த காதல் ஜோடிகளின் அன்புக்கு அடையாளமாக மாதுரி, சூரிய குமார் என குழந்தைகள் வீட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்! l

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்