பகவான்-9



ஞானம் பிறந்தது!

ஜோதிடர்கள் கணித்த கடைசி கண்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்ரஜனீஷ்.இந்தக் காலக்கட்டத்தில் முற்றிலுமாக அவர் வேறு மனிதராக மாறியிருந்தார். தாடி வளர்த்து சந்நியாசி தோற்றத்துக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார்.வெறித்த பார்வையும், மெதுவான செயல்பாடுகளுமாக திக்பிரமை பிடித்தவாறே அலைந்து கொண்டிருந்தார்.

“ரஜனீஷ், உப்பு தீர்ந்துவிட்டது. கடைக்குப் போய் கொஞ்சம் வாங்கி வருகிறாயா?”  அடுப்பில் குழம்பு கொதித்துக் கொண்டிருக்க, அம்மா கேட்டார்.
‘‘ம்…’’ என்று சுருக்கமாகத் தலையசைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியே வந்தார். தெருமுக்கில் இருந்த கடையை மறந்தார். மனம் போன போக்கில் நடக்க ஆரம்பித்தார்.

உப்புக்காக அரை மணி நேரம் காத்திருந்த அம்மா, அலுத்துப் போய் அவரே கடைக்கு வந்து உப்பு வாங்கிக்கொண்டு சென்றார். ரஜனீஷ் கடைக்கே வரவில்லை என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். சில நாட்களாகவே மகன் இப்படித்தான் அவர் மனம் போன போக்கில் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து வேதனைப்பட்டார்.அன்று இரவு முழுக்க ரஜனீஷ் வீட்டுக்கே வரவில்லை.

மறுநாள் காலையில் பார்த்தால் வழக்கம்போல கல்லூரிக்கு கிளம்பிச் சென்றுகொண்டிருந்தார்.ரஜனீஷ் எப்போது வருகிறார், என்ன சாப்பிடுகிறார், தூங்குகிறாரா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. கண்ணுக்குப் புலப்படாத காற்றைப் போல அவரது நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

அவர் நிலையைப் புரிந்து கொண்ட அப்பா, “யாரும் ரஜனீஷை தொந்தரவு செய்ய வேண்டாம். 21 வயது வரை அவன் நம்முடைய மகன் இல்லை. அதன் பிறகு திரும்பவும் வருவான்...” என்று நம்பிக்கையோடு சொன்னார்.

ரஜனீஷ், ஞானத்தின் வாசலைத் திறந்துவிட்டார். இருப்பினும் முழுமையான ஞானம் தனக்கு இன்னமும் கிட்டவில்லை என்று அக அவஸ்தையில் இருந்தார்.இந்த நிலைமை ஓராண்டுக்கும் மேலாக அவருக்கு நீடித்தது.இந்த உலகில், தான் மட்டுமே தனிமையானவனாக இருப்பதாக அவர் நினைத்தார். அவரை சூனியம் சூழ்ந்திருப்பதாகவும், விண்மீன்களின் வெளிச்சத்தில் மட்டுமே அவர் நடந்துகொண்டிருப்பதாகவும் கருதினார்.

தூரத்தில் தெரிந்த ஒளிதான் ஞானம். அதை எட்டுவதற்கு பல லட்சம் மைல்கள் நடக்க வேண்டும் என்று கருதி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் நடந்துகொண்டே இருந்தார். இவர் வேகமாக நடக்க நடக்க ஒளி தூரமாக விலகிச் சென்றுகொண்டிருப்பதாகப்பட்டது. எனவே நிதானமாக நடந்து ஞானத்தை எட்ட உறுதி பூண்டார்.

தன்னுடைய ஆன்மா இருட்டறையில் உலவுவதாகவும், ஒரே ஒரு விளக்கு ஏற்றினால் வெளிச்சம் கிடைத்துவிடும் என்றும் நினைத்தார். இதெல்லாம் ரஜனீஷின் ஆழ்மனசுக்குள் ஏற்பட்ட குழப்பமான தோற்றங்கள். இந்த அனுபவங்களை யாரிடமும் அவரால் சொல்லி புரியவைக்க இயலாது. குருவின் துணையின்றி சுயமாக ஞானத்தை எட்ட முயற்சிப்பவர்கள் படக்கூடிய அவஸ்தை.

அக்காலகட்டத்தில் உடலுக்கு உயிர் சுமை என்றுகூட அவருக்குத் தோன்றியது. நெஞ்சுறுதி இல்லாதவர்கள் இத்தகைய சூழலை எதிர்கொள்ள நேரும்போதுதான் உயிர் துறக்கிறார்கள். நாம் கண்ட, கேள்விப்பட்ட புதிரான தற்கொலை செய்து கொண்டவர்கள் ஒருவேளை இம்மாதிரி ஞானத்தேடலில் துன்பப்பட்டு போதுமான ஆன்மபலம் இல்லாமல் கூட தோற்றுப் போயிருக்கலாம்.

பணம், பெண், சொத்து, அதிகாரம் என்பதையெல்லாம் தேடி அலைகிறவர்களின் கண்களிலேயே வெறி தெரிகிறது. அப்படியிருக்க மனிதப் பிறவியின்
அதிகபட்ச இலக்கான ஞானத்தைத் தேடிக்கொண்டிருப்பவர்கள் எத்தகைய மூர்க்கத்தில் இருப்பார்கள். ஞானம் வேண்டும் என்கிற விருப்பத்தைத் துறக்கும்போதுதான் ஞானம் அவர்கள் வசமாகிறது.

இந்த துறவுக்கான மனநிலையை எட்டுவதற்கே தம்மைத் தாமே அவர்கள் அதிகபட்ச சித்திரவதைகளுக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.ஒரு மனிதனுக்கு ஞானம் பிறந்துவிட்டால் மகிழ்ச்சி என்கிற உணர்வைத் தவிர வேறெதுவும் இருக்காது என்கிற நம்பிக்கை மட்டும் ரஜனீஷுக்கு தீவிரமாக இருந்தது.

எது ஞானம் என்பதை யாரும் யாருக்கும் வார்த்தைகளால் விளக்க முடியாது. ஞானம் முழுக்க முழுக்க மவுனத்தால் நிறைந்தது. ஞானம் பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் பெற்ற ஞானம் தனித்துவமானது. ரஜனீஷுக்கு கிடைக்கும் ஞானத்தை, வேறு வேறு யோகிகளின் ஞானத்தோடு ஒப்பிடமுடியாது.

ஒருநாள் திடீரென ரஜனீஷ், எல்லோரையும் போல இயல்பானவராகி விட்டார்.கலகலவென்று வேடிக்கையாக பேசத் தொடங்கினார். அவருடைய வயிறு பெரும் பசியில் இருந்தது. பிறந்ததில் இருந்து உணவே உண்ணாதவரைப் போல வெறித்தனமாக சாப்பிடத் தொடங்கினார். அதுநாள் வரை உடையில் அக்கறை காட்டாதவர், மிகவும் நாகரிகமான முறையில் நறுவிசாக உடையணிந்தார். தன்னுடைய தோற்றத்தை மிகவும் பொலிவாக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டினார்.

இரவு ஒன்பது மணிக்கு உறங்கச் சென்று, விடியற்காலையில் எழுந்து குளித்து, படித்துவிட்டு, நேரத்துக்கு கல்லூரிக்கு ஜம்மென்று தயாரானார்.
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மகிழ்ச்சி. ஆசிரியர்களுக்கு ஆச்சரியம்.“ரஜனீஷ், எப்போதும் இதே போல இரேன்.

இவ்வளவு நாட்களாக ஞானம், கீனமென்று உளறிக்கொண்டு ஒரு பைத்தியக்காரனைப் போல சுற்றிக் கொண்டிருந்தாய். இப்போது பார். நீ ஒரு நவீன இளைஞனாக எல்லோரையும் போல இருக்கிறாய். நீ இப்படி இருப்பதைத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள்...” என்றார் ஓர் ஆசிரியர்.

அவரைப் பார்த்து ரஜனீஷ் மர்மமாகப் புன்னகைத்தார்.அது 1953, மார்ச் மாதம்.ரஜனீஷ், ஒரு வாரத்துக்குத்தான் அதுபோன்ற இயல்பான நிலையில் இருந்தார்.21ம் தேதி தனக்கு ஞானம் கிடைத்துவிட்டதாக எல்லோருக்கும் அறிவித்தார்.

“முன் ஜென்மங்களில் எல்லாம் நான் ஞானத்தை தேடித்தேடி கிடைக்காமல் அலுத்து விட்டேன். பல ஜென்மங்களாகத் தொடரும் அந்த முயற்சியில் இப்போது வெற்றி கண்டிருக்கிறேன். கடந்த ஒரு வாரமாக நான் எந்த முயற்சியும் செய்யவில்லை. அதற்கு முன்பாக உளப்பூர்வமாக என்னால் முடிந்த அத்தனையையும் செய்துவிட்டேன்.

இனிமேல் ஞானம் கிடைத்தால் கிடைக்கட்டும். கிடைக்காவிட்டால் அடுத்த ஜென்மத்தில் முயற்சிப்போம் என்று இருந்த நிலையில்தான் இந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது!” என்றார்.ஆசையைத் துறப்பதே ஞானம். ஞானம் அடையவேண்டும் என்கிற இலட்சியமும் கூட ஒரு வகையில் ஆசைதான். அதையும் துறந்தபிறகே ரஜனீஷுக்கு ஞானம் கிட்டியது.

தன்னுடைய இருள்பாதையில் அவர் ஒளியை எட்டிவிட்டதாக உணர்ந்தார். தன்னைச் சுற்றியிருந்த மனிதர்கள், மரம், செடி, கொடி, ஆறு அனைத்திலிருந்தும் தனக்கு சக்தி கிடைத்துக் கொண்டிருப்பதாக சொன்னார். இதற்கு முன்பாக எப்போதும் இல்லாத உற்சாகத்தை அவரது உள்ளமும், உடலும் எட்டியது.ரஜனீஷ், பகவான் ஆனார்!

கோபம் வரும்போது சிரியுங்கள்!

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது நம் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வாக அமையும். குறிப்பாக, கோபம்.‘எனக்குக் கோபமே வராது...’ என்று ஒருவர் சொல்கிறார் என்றால், அவர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம்.ஓஷோ, தன் சீடர்களுக்கு கோபம் என்கிற குணத்தை எப்படி நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்று வகுப்பு எடுத்திருக்கிறார்.

“எதை துறக்க முடிந்தாலும் கோபத்தை மட்டும் நம்மால் முற்றிலுமாக துறக்க முடியாது. மகிழ்ச்சி கூட வந்த சுவடு தெரியாமல் போய்விடும். ஆனால், கோபம் வந்துவிட்டால் அது குறைவதற்கு நெடுநேரமோ, நாட்களோ தேவைப்படும். நம் உடல் முழுக்கவே கோபம் உறைந்திருக்கிறது.நம்மை யாரோ ஏமாற்றிவிட்டார் என்பதை அறிய நேரும்போது எப்படி கோபப்படாமல் இருக்க முடியும்?

உடலின் கோபம் உள்ளத்தைச் சுடாமல் மட்டும் தடுக்க முடியும். உங்கள் கண்கள் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும், உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்குமாறு பயிற்சிகள் மூலமாக நம்மை மாற்றிக் கொள்ள முடியும்.முறையான தியானப் பயிற்சிகள் முதலில் நமக்கு உணர்த்துவது நம்முடைய எதிர்மறை குணங்களையே. எவையெல்லாம் நம்முடைய மைனஸ் என்பதை அறிந்து அவற்றையெல்லாம் அகற்றிவிட்டால், நம்மிடம் மீதியிருப்பது அத்தனையுமே பிளஸ்தான்!” என்கிறார் ஓஷோ.

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்