சிலுக்குவார்பட்டி சிங்கம்



கான்ஸ்டபிள் விஷ்ணு விஷால், ரவுடி சாய் ரவியை அவர் அறியாமலேயே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அடக்கும் ரகளை ராவடியே ‘சிலுக்குவார்பெட்டி சிங்கம்.’சொந்த ஊரிலேயே போலீஸ் ஸ்டேஷனில் பணி. வேலையில் நாட்டம் இல்லாமல், எல்லா தவறுகளையும் செய்துகொண்டு, உதார் பார்ட்டியாக விஷ்ணு விஷால்.

திடீரென  வேறு இடத்திற்கு போக வேண்டிய பிரபல ரவுடி இவரிடம் சிக்கிக்கொள்ள, விஷ்ணு பதற்றப் பிரதேசங்களுக்குப் பிரயாணம் ஆகிறார். அம்மாவின் ஆசைப்படி ஆய்வாளர் ஆனாரா, அத்தை மகளை மணந்தாரா என்பது காமெடி கலாட்டா. தமிழ்ச் சினிமா ட்ரெண்ட், உலகச் சினிமாவிற்கான சீரியஸ் முயற்சி பற்றிெயல்லாமல் வருத்தப்பட்டுக் கொள்ளாமல் சீனுக்கு சீன் சிரித்தால் போதும் என இறங்கி அடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் செல்ல அய்யாவு.

எல்லா கதாநாயகர்களும் சம்பிரதாயமாக நடிக்கும் ‘கிராமத்துக் காதல்’ கதையில் இது விஷ்ணு விஷாலின் கோட்டா! ஜாலியான கலகலப்பில் மனுஷன் வெளுத்துக் கட்டியிருக்கிறார். கைக்கு எட்டிய ஆஃப் பாயில் முட்டை கீழே விழ வரும் கோபமாகட்டும், பெண் வேடமிட்டு உலவும் நெருக்கடி தருணங்களில் புலம்பி  சலம்புவதிலாகட்டும், ஊர்த் திருவிழாவில் கரக ஆட்டக்காரியை துரத்துவதிலாகட்டும், ரெஜினாவிடம் ஃபீலிங்ஸ் விடுவதாகட்டும்... அட்டகாசம்!

அழகில் சொக்க வைக்கிறார் ரெஜினா. ஆனால், கிளாமர் பக்கமே எட்டிப்பார்க்காமல் அநியாயத்திற்கு ஏமாற்றுகிறார். படத்தின் இன்னொரு நாயகன் யோகி பாபு. சாருக்கு இது செம சிக்ஸர் சினிமா. மைண்ட் வாய்ஸில் அடுத்தடுத்து பேசும் இடங்களில் எல்லாம் சிரிப்பு ரவுசு. கிண்டல் அடிப்பதில் எல்லோரையும் பின்னுக்குத்தள்ளி, ‘ஒன்மேன் ஷோ’ ஆக்குகிறார். விஷ்ணுவின் சேட்டை கலாட்டாக்களுக்கு பக்கவாத்தியமாக வார்த்தை சுழட்டுகிறார் கருணாகரன்.

ஏகமாக பழைய திரைக்கதை ஆங்காங்கே தரைத் தட்டி நிற்கும்போது, அடுத்தடுத்து காமெடி பன்ச்களைத் தூவிக் கப்பலைக் கரை சேர்க்கிறார்கள். லொள்ளு சபா மனோகரை அதிகப்படியாக பயன்படுத்தி இருப்பது சிறப்பு. போதாதென்று ஆனந்த்ராஜும் சிரிப்புக் காமெடி ரகளை. சிங்கமுத்துவின் டாஸ்மாக் காமெடி அல்டிமேட்.

பாக்யராஜ் - சுந்தர்.சி படங்களின் ரசிகராக இயக்குநர் இருப்பதால் கொஞ்சமும் சிரமப்படாமல் அவ்வகையிலேயே காட்சிகளை இறக்குமதி செய்துவிடுகிறார். ஓவியா ஆர்மியை கரகாட்டக்காரியாக ஆக்கியிருப்பது அநியாயம். அந்தப் பச்சை உடம்பு இச்சையான ஆட்டத்திற்கு உதவவில்லை.

லியோன் ஜேம்ஸ் இசை, பின்னணியில் மட்டுமே களைகட்டுகிறது. சினிமாவின் எல்லா சூழலுக்கும் ஏற்ற வகையில் உலா வருவதில் வெற்றி அடைந்திருக்கிறது லஷ்மணின்  ஒளிப்பதிவு.படத்தில் கதை, லாஜிக் எல்லாம் மூச்... திரைக்கதையின் காமெடி ட்ரீட்மெண்ட் படத்தை ஓட வைக்கிறது.
சிலுக்குவார்ப்பட்டி சிரிப்பு சிங்கம்.    
            
குங்குமம் விமர்சனக் குழு