கிளட்ச் புட்டுக்கிச்சு... கீர் விழலை... ஆக்ஸிலேட்டர் அவுட்டு!
நியூஸ் வியூஸ்
அப்போது தொழிற்துறை நிபுணர்கள் அடித்துச் சொன்னார்கள்.‘அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் அபார வளர்ச்சி காணப்போகும் துறைகளில் ஆட்டோமொபைலே பிரதானமாக இருக்கப் போகிறது, பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் அளிக்கப் போகிறது...’ என்று மிக உறுதியாகவே சவால் விட்டார்கள். அவர்கள் சொல்லி மிகச்சரியாக பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் -இப்போது ப்ளூகாலர் என்று அழைக்கப்படும் semi-skilled ஆட்கள் அத்தனை பேருமே பணி பறிபோகுமோ என்கிற அச்சத்தில்தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமே கார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பத்து லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் அபாயத்தை தொழிற்சங்கங்கள் சுட்டிக் காட்டுகின்றன.  ஆட்டோமொபைல் துறைக்கு என்னதான் ஆனது?
உலகம் எங்குமே கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி கொஞ்சம் மந்தம்தான். எனினும் இந்தியாவில் வேகமாக வளரும் துறையாகவும், உற்பத்திப் பிரிவில் கணிசமான பங்களிப்பை நாட்டுக்கு தரக்கூடிய துறையாகவும் இருந்தது. 2018ல் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு மட்டுமே 7 சதவிகிதம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நேரடியாகவும், மறைமுகமாகவும் கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாகவும் இதுவே இருந்து வந்தது.
எனினும் -கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டோமொபைல் துறை படுமோசமான வீழ்ச்சியை 2019ம் ஆண்டு பதிவு செய்து வருகிறது. ஆம். கடந்த ஆண்டு மே மாத நிலவரத்தை ஒப்பிடுகையில் இந்தாண்டு மே மாதம் 26 சதவிகிதம் விற்பனை வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. 2017 - 18 ஆண்டில் கார் விற்பனை 14 சதவிகிதமாக அதிகரித்திருந்தது. 2019ல் வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. இதே காலக்கட்டத்தில் இருசக்கர வாகன விற்பனையும் 15 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதனை அடுத்து மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்கள் தங்கள் தொழிற்சாலையின் பணிநேரத்தைக் குறைத்துக் கொண்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. அதாவது தயாரிப்பு எண்ணிக்கை குறைகிறது என்று அர்த்தம். இதே நிலை நீடிக்குமேயானால் அடுத்ததாக பணியாட்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நிலைதான் அவர்களுக்கு ஏற்படும்.
ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது யார்?
முதலாவதாக வங்கிகளின் ஸ்திரத்தன்மை ஆட்டம் கண்டிருப்பதைத்தான் சொல்ல வேண்டும். தொழில் வளர்ச்சிக்காக வங்கிகளிடம் கடன் வாங்கும் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டிருப்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் வாகனங்களை விற்பனை செய்யும் டீலர்களும், வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இந்தியாவில் ஐந்து வண்டிகள் விற்பனை ஆகின்றன என்றால் அதில் மூன்று வாகனங்கள் வங்கிக் கடன் வாங்கியே வாங்கப்படுகின்றன. இந்நிலையில் வங்கிகள் தங்கள் சுருக்குப்பையை இறுக்கி வைத்துக் கொள்ளும்போது கடன் கிடைக்காத நிலையில் வாடிக்கையாளர்களால் வாகனம் வாங்க முடியவில்லை.ஒட்டுமொத்தமான பொருளாதார மந்த நிலை, அதில் வங்கிகளுக்கு ஏற்பட்டிருக்கும் எக்ஸ்ட்ரா நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக மட்டுமே ஆட்டோமொபைல் துறை பாதிக்கப்பட்டிருப்பதாக நாம் கருத முடியாது.
வாகனங்களுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் சுற்றுப்புறச்சூழல் மற்றும் சட்டத்தின் அடிப்படையில் புதிது புதிதாக செயல்பாட்டுக்கு வரும் நெறிமுறைகளும், விதிமுறைகளும்கூட காரணம் என்பதை மறுக்க முடியாது.குறிப்பாக நீதிமன்றங்கள் தரும் அதிரடித் தீர்ப்புகள் பலவும் சமீபகாலமாக யதார்த்தத்தைக் கருத்தில் கொள்ளாத வகையில், பாதிக்கப்படுவோர் குறித்த முன்னெச்சரிக்கை இல்லாத நிலையில் அமைகின்றன.வாகனங்கள் வெளியிடும் புகை அளவை கட்டுப்படுத்தும் தரஅளவீடுகளை (Bharat stage) மிகக்குறுகிய காலக்கெடு விதித்து அகரிக்கச் சொல்கிறது நீதிமன்றம். புகை குறைவான வாகனங்களை தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு பல்லாயிரம் கோடிகளை வாகன உற்பத்தியாளர்கள் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு தயாரிக்கப்படும் வாகனங்களின் விலையேற்றமும் தவிர்க்க முடியாதது.ஏற்கனவே வங்கிக்கடன் பிரச்னையால் வாகன உற்பத்தியாளர்களும், வாகனங்களை வாங்குபவர்களும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் விலை உயர்வு என்பது நிச்சயமாக இத்துறையை பாதாளத்தில் தள்ளும் என்பது தவிர்க்க முடியாததுதான்.
 சமீப ஆண்டுகளாக வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை கன்னாபின்னாவென்று உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் புதியதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு மொத்தமாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு என்று ஒரேயடியாக இன்சூரன்ஸ் தொகையை வசூலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஒரு போடு போட்டு வைத்திருக்கிறது.மக்களின் நடைமுறைச் சிக்கல்களை கருத்தில் கொள்ளாது வழங்கப்படும் நீதிமன்றத் தீர்ப்புகள், வரி வசூலால் மட்டுமே நாட்டை நடத்தமுடியும் என்கிற நிலையில் இருக்கும் அரசாங்கம்... இவை இரண்டுமே இன்றைய ஆட்டோமொபைல் துறையின் அநியாய வீழ்ச்சிக்கு முதலில் பொறுப்பேற்க வேண்டியவர்கள்.எங்கே கை வைத்தால் விளைவு என்ன ஆகுமென்ற தெளிவில்லாமல் இவர்கள் நடந்து கொண்டதின் பலன் என்ன?
கடந்த சில மாதங்களில் மட்டுமே ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஒப்பந்தப் பணியாளர்கள், நிரந்தரம் செய்யப்படாத பயிற்சிப் பணியாளர்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் செய்யும் தொழில்நிலையங்களில் பணியாற்றியவர்கள், வாகனங்களின் டீலர்களிடம் பணியாற்றிய விற்பனையாளர்கள் என்று சுமார் நான்கு லட்சம் பேர் பணியிழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள்.என்னதான் தீர்வு?பத்து ஆண்டுகளுக்கும் மேல் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்று தற்காலிகமாக ஒரு ஷார்ட் கட்டை சில நிபுணர்கள் அரசுக்குப் பரிந்துரைக்கிறார்கள்.இதன் மூலமாக பழைய வாகனங்களை கைவிட்டு புதிய வாகனங்களை வாடிக்கையாளர்கள் வாங்கியாக வேண்டுமென்ற கட்டாயத்தை ஏற்படுத்த முடியுமென்று கருதுகிறார்கள்.
ஆனால் -கையில் காசில்லாத நிலையில் ‘நட’ராஜாவாகக் கூட பல கிலோ மீட்டருக்கு நடக்கத் தயாராக இருக்கும் மிஸ்டர் பொதுஜனம், வங்கிக் கடனுக்கும் வக்கில்லாத நிலையில் புதிய வாகனத்தை வாங்குவாரா என்பது சந்தேகம்தான்.வாகனங்களை வாங்குபவர்களுக்கு வங்கிகளில் சுலப வட்டிகளில் தாராளக் கடன் வசதி, வாகனத் தயாரிப்பாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் நெருக்கடியான விதிமுறைகளில் சற்றுத் தளர்வு மற்றும் வரிச்சலுகைகள் ஆகியவையே இத்துறையின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால், நம்முடைய அரசு அதையெல்லாம் செய்யும் என்று நம்புவதற்குரிய சூழல் இப்போது இல்லை.
யுவகிருஷ்ணா
|