கோமாளி



பதினாறு வருட கோமாவிற்குப் பிறகு  விழிக்கும் ஹீரோவின் முன், பின்னான வாழ்வின் சுவாரஸ்யங்களே ‘கோமாளி’.திரையில் பல தடவை சவட்டி எடுக்கப்பட்ட திரைக்கதைதான். எல்லா ‘அம்னீஷியா’ கதைக்களத்திலும் என்ன கதை இருக்குமோ, அதேதான்.ஜெயம் ரவியும், சம்யுக்தாவும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். இருவருக்குமான ஈர்ப்பு மெல்லியதாகப் பரவுகிறது. ரவியின் அப்பா பத்திரமாக வைத்துக்கொள்ள கொடுத்த சிலையை அதன் முக்கியத்துவம் அறியாமல் காதலிக்குப் பரிசளிக்கிறார். இடையில் அவர் மீது லாரி மோத, கோமாவில் ஆழ்ந்து பதினாறு வருடங்களுக்குப் பிறகு விழித்தெழுகிறார். மொத்த உலகமே உருமாற்றம் காண, ஆச்சர்யமும், திகைப்பும், அதிர்ச்சியும் ஒரு சேர ஏற்படுகிறது. இழந்ததை எண்ணி, மறுபடியும் காலத்தோடு தன்னைப் பொருத்திக்கொள்ள போராடும் இளைஞனின் அடுத்தடுத்த போராட்டங்களே நாம் பின்தொடரும் கதை.

மூன்று வித காலகட்டங்களில் பயணம் போகும் கதையைப் புதுமையாக யோசித்ததற்கே அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு முதல் பூங்கொத்து. ஹீரோவின் காலம் தவறிப் படுகிற அல்லல்களை நகைச்சுவை தெறிக்கச் சொன்ன விதமே திரைக்கதையின் சிறப்பு.பெரும் அளவில் வளர்ந்திருக்கிறார் ஜெயம் ரவி. காமெடி கதையையும் ஈடுபாட்டோடு செய்யும் அழகில் இயல்பு. பள்ளி மாணவன், வளர்ந்த இளைஞன் என முன்னேற்றம்.  ஒரு  தலைமுறையின் மாற்றத்தை நகைச்சுவை, குணச்சித்திரம என இருதரப்பிலும் வித்தியாசப்படுத்தி வெளிப்படுத்தியதில் ரவி அடுத்த அடி வைத்திருக்கிறார்.

நியாயப்படி ஹீரோயின் காஜல் அகர்வால்தான். அப்படித் தோன்ற முடியாதபடிக்கு சம்யுக்தாவும் சரியான போட்டி தருகிறார். அதிகமாகவும் நம்மை கவன ஈர்ப்பு செய்வது சம்யுக்தாதான்.யோகிபாபு தனி ஆவர்த்தனம் வாசிக்காமல், ஜெயம் ரவியோடு பயணமாகிற மொத்த இடங்களிலும் தன் வழக்கம்போலான டைமிங் ஒன்லைனர்களினால் தியேட்டரை கலகலக்க வைக்கிறார். வில்லாதி வில்லனாக கே.எஸ்.ரவிக்குமார் விஸ்வரூபம் எடுக்கிறார். அடாவடி அரசியல்வாதியாக கச்சிதமான செயலாற்றல். ரவியின் தங்கையாக ஆனந்தி சிறப்பு.

சிலையை மீட்கும் அடுத்த கட்டத்தில் திடீரென்று படம் தடம் மாறித் தொய்வதை கவனித்திருக்கலாம். சிலையைத் திருடப் போடும் திட்டம் எல்லாம் சற்றே அயர்ச்சி. காமெடியில் காட்டிய அக்கறையை, மற்ற ஏரியாவிலும் காட்டியிருக்கலாம். சமயங்களில் அவ்வப்போது காமெடியில் ஏன் ‘பச்சை’? ரிச்சர்ட் எம்.நாதன் நேர்த்தியான ஒளிப்பதிவில் சரளமாக படத்தைக் கடத்துகிறார். ஹிப்ஹாப் தமிழா இசையில் ‘ஒளியும் ஒலியும்’ பாடல் இதம் காட்டியதோடு பின்னணியிலும் பரபரப்பு கூட்டுகிறது. படத்தின் தலைப்புக்கான முயற்சியைக் கடைசி வரையிலும் கொண்டு வந்து திரைக்கதையில் கவனிப்பு நடத்தியிருப்பது நன்று. சுவாரஸ்யமாக நேரத்தைக் கடத்துவதால் இந்தக் ‘கோமாளி’யை ரசிக்கலாம்.

குங்குமம் விமர்சனக் குழு