நடிகையாகவும் ஜெயிக்கும் ஸ்டெம்செல் விஞ்ஞானி!



அட சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நாயகி’ சீரியலின் கதாநாயகிதானே இவர்... ‘சைவம்’, ‘பசங்க 2’ படங்களிலும் நடித்திருக்கிறார் அல்லவா..?இங்கிருக்கும் புகைப்படங்களைப் பார்த்ததும் இப்படித்தான் சொல்லத் தோன்றும்.ஆனால், வித்யா பிரதீப் வெறும் நடிகை மட்டுமல்ல என்பதுதான் ஸ்பெஷல்!

யெஸ். படிப்பிலும் கெட்டிக்காரர். பயோ டெக்னாலஜியில் முதுகலைப்படிப்பும், ஸ்டெம்செல் பயாலஜியில் முனைவர் (பி.எச்.டி.) பட்டமும் வாங்கியிருப்பவர். சர்வதேச பத்திரிகைகளில் இவரது கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. சயின்டிஸ்ட் பாஸ்!

‘‘பூர்வீகம் கேரளா. அப்பா ஆர்மி ஆபீசர். அம்மா டீச்சர். ஒரேயொரு தங்கை. பெங்களூர்ல அப்பாவுக்கு போஸ்டிங் இருந்தப்பதான் பிறந்தேன். ரொம்ப கண்டிப்பான ஃபேமிலி. பெரியவங்க ஆச்சாரத்தை கடைப்பிடிக்கறவங்க. அவங்க முன்னாடி பெண்கள் கால் மேல கால் போட்டு அமர்ந்தா கண்டிப்பாங்க!படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. அதனாலயே பயோ டெக்னாலஜில மாஸ்டர் டிகிரி முடிக்க முடிஞ்சது. எனக்கும் படிப்புல ஆர்வம். மகிழ்ச்சியோட ஸ்டெம்செல் பயாலஜில பி.எச்.டி முடிச்சேன்.

தொடர்ந்து படிப்புல கவனம் போனதால மன அழுத்தம் வந்துடுமோனு லேசா பயம் வந்தது. அதனாலயே ரிலாக்ஸுக்காக மாடலிங் பக்கம் வந்தேன். விளம்பரப் படங்கள்ல நடிக்க சான்ஸ் கிடைச்சது. அங்கிருந்து சினிமா ஆஃபர். ‘சைவம்’ பண்ணினேன்.

தொடக்கத்துல அப்பா கோபப்பட்டார். ‘உனக்குனு நல்ல ஜாப் இருக்கு. இதெல்லாம் தேவையா’னு கேட்டார். ஆனா, ஆர்மில அவர் இருந்ததால எனக்கான சுதந்திரத்தையும் கொடுத்தார். சரியான முடிவைத்தான் நான் எடுப்பேன்னு நம்பினார். நடிப்புல எனக்கு passion இருப்பதைப் புரிஞ்சுகிட்டார். இப்ப என் நடிப்பைப் பாராட்டறார்!’’ இமைகள் படபடக்க சொல்லும் வித்யா, ஒரு ஜூனியர் சயன்டிஸ்ட்.

‘‘பி.எச்.டி என் ஓர்க் இண்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் செல் தெரபில, ‘Invitro transdifferentiation of skin keratinocytes to corneal epithelial cells’ என்ற தலைப்புல பப்ளிஷ் ஆகியிருக்கு. ஸ்டெம்செல் பயோலஜில ஸ்பெஷலிஸ்ட்டா இருக்கிறதால இப்ப நான் ஜூனியர் சயன்டிஸ்ட். கண் தொடர்பான கார்னியல் சிகிச்சைக்கான ஸ்டெம்செல் கல்ச்சர் பண்ணிட்டிருக்கேன் (used for ocular surface reconstruction for the treatment of corneal blindness).

ரொம்ப பிடிச்ச வேலை, சூழல்னு அமைஞ்சிருக்கு. உண்மைலயே இது கொடுப்பினை. ஆபீஸ் ஓர்க் பாதிக்காத வகைலதான் படங்கள்ல நடிச்சிட்டிருக்கேன். இப்பவும் மலையாளம், தமிழ்ல ஹீரோயினா நடிக்கக் கேட்டு நிறைய ஆஃபர்ஸ் வருது. நிறைய நாட்கள் கால்ஷீட்ஸ் கொடுக்க வேண்டியிருக்கறதால சம்மதிக்காம இருக்கேன். படிப்பு, நடிப்பு ரெண்டையும் பேலன்ஸ் பண்ணறது சவால்தான். ஆனாலும் இரண்டிலும் நூறு சதவிகித உழைப்பைக் கொடுக்கணும்னு நினைக்கறேன்.

வேலையை இன்னும் ரிசைன் பண்ணல. கொஞ்ச நாட்களா ஆபீஸ் பக்கம் போக முடியலை. அலுவலகத்தை ரொம்ப மிஸ் பண்ணறேன். வாழ்க்கைல பெரும் பகுதியை படிப்புலதான் செலவிட்டிருக்கேன். அந்தக் கல்விதான் நல்ல பொசிஷனை கொடுத்திருக்கு...’’ கம்பீரமாக சொல்லும் வித்யா, இதுவரை 15 படங்களில் நடித்திருக்கிறார். சீரியலுக்கு வந்தது சமீபத்தில்தான்.

‘‘ஆனா, சினிமால எனக்குக் கிடைக்காத பெயரும் புகழும் ‘நாயகி’லதான் கிடைச்சிருக்கு! படங்கள்ல நடிச்சுட்டு இருந்தப்பவே சீரியல்ல நடிக்கச் சொல்லி கேட்டாங்க. போகணுமானு ஒரு யோசனை இருந்தது.இந்த நேரத்துலதான் விகடன் டெலிவிஸ்டாஸ்ல இருந்து ஆஃபர் வந்தது. டாப் புரொட்யூசர், டாப் டைரக்டர்னு நல்ல காம்பினேஷன் அமைஞ்சதால உடனே கமிட் ஆகிட்டேன்.

சமீபத்துல எங்கம்மாவுக்கு உடம்பு முடியாம போச்சு. ஆஸ்பிடல்ல அட்மிட் செய்திருந்தோம். அப்ப ‘ஆனந்தி... ஆனந்தி...’னு மெலிசா ஒரு குரல் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. அது ‘நாயகி’ல என் கேரக்டர் பேரு. யார் இப்படிக் கூப்பிடறாங்கனு திரும்பிப் பார்த்தா... பக்கத்து பெட்ல இருந்த பேஷண்ட். டிரிப்ஸ் ஏறிட்டிருக்கு. கை, கால்கள்ல கட்டோடு இருக்கார். அவர்தான் ‘ஆனந்தி’னு கூப்பிட்டார்!

கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. வெளில இப்ப என்னை யார் பார்த்தாலும் ‘ஆனந்தி’னுதான் கூப்பிடறாங்க; பாராட்டறாங்க. சினிமால கிடைக்காத பெயரும் புகழும் சீரியல்ல நடிக்க ஆரம்பிச்ச சில மாதங்கள்லயே எனக்குக் கிடைச்சிருக்கு!ஒண்ணு தெரியுமா... சமீபத்துல மாலத்தீவுக்கு டூர் போயிருந்தேன்.

அப்ப பைக்ல வந்த ரெண்டு பேர், ‘ஆனந்தி’னு என்னைக் கூப்பிட்டு சிரிச்சாங்க! கடல் கடந்தும் நான் ரீச் ஆகியிருக்கேனா..? சந்தோஷத்துல எனக்கே டவுட் வந்துடுச்சு! ஆபீஸ்ல கூட என்னை ‘ஆனந்தி’னுதான் கூப்பிடறாங்க! ‘ஆனந்தி மாதிரி ஒரு பொண்ணுதான் எங்க வீட்டுக்கு மருமகளா வரணும்’னு நிறைய பேர் மேரேஜ் புரொபோஸல்களோவர்றாங்க!

இவ்வளவு அன்பும் அக்கறையும் எனக்குக் கிடைக்கும்னு கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கலை...’’ தழுதழுக்கும் வித்யா, ‘நாயகி’ இயக்குநர் எம்.குமரன் குறித்து பேசும்போது நெகிழ்கிறார். ‘‘இந்த பெருமை எல்லாம் குமரன் சாரைதான் போய்ச் சேரணும். அவர் மைண்ட்ல அவ்வளவு தெளிவு இருக்கும். சரியா அதை நம்மகிட்ட கன்வே பண்ணி வேலை வாங்கிடுவார். அதனாலதான் அவர் இயக்கற சீரியல்களும், அதில் நடிக்கிற நடிகர்களும் பேசப்படறாங்க. தொடர்ந்து நம்பர் ஒன் சீரியல் டைரக்டரா அவர் இருக்கவும் இதுதான் காரணம்...’’ என்ற வித்யாவின் பர்சனல் லைஃப் சுவாரஸ்யமானது.

‘‘தினமும் ஏதாவது ஒரு புது விஷயத்தை கத்துக்கணும்னு நினைப்பேன். தத்துவம் சார்ந்த நூல்களை விரும்பிப் படிப்பேன். நாள் கணக்குல நேரம் கிடைச்சா எங்காவது பயணம் செய்வேன். நிறைய நாடுகளை சுத்திப் பார்த்திருக்கேன்.ஒருமுறை பாங்காக் போயிருந்தப்ப என் பர்சை திருடிட்டாங்க.

மத்தபடி எல்லா இடங்கள்லயும் குட் எக்ஸ்பீரியன்ஸ்தான். இப்ப மாசத்துக்கு பத்து நாட்கள் சீரியலுக்காக செலவழிக்றேன். மீதி நாட்கள்ல சினிமா, விளம்பர படங்களோட ஷூட். குக்கிங்ல ரொம்பவே ஆர்வம் உண்டு. சிக்கன் நல்லா சமைப்பேன். மெது மெதுனு சப்பாத்தி சுடுவேன்.

‘மாரி 2’, ‘தடம்’, ‘ஒத்தைக்கு ஒத்த’ படங்கள்ல நடிச்சு முடிச்சிருக்கேன். வெங்கட்பிரபு சார் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் படத்துல கமிட் ஆகியிருக்கேன். ‘தடம்’ல லீட் ரோல். நிச்சயம் என் கேரியர்ல அது முக்கியமான படமா இருக்கும். சினிமாவோ சீரியலோ... எதுவுமே நான் ப்ளான் பண்ணி வந்ததில்ல.

இப்ப எல்லாமே நல்லா போயிட்டிருக்கு. I ’m just going to the flow. எதில் இருந்தாலும் எப்படி இருந்தாலும் அதுல இப்ப இருக்கறதை விட பெட்டரா இருப்பேன். அந்த நம்பிக்கை நிறையவே இருக்கு!’’ தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் வித்யா பிரதீப்.  

மை.பாரதிராஜா