வாயேஜர்ஸ் என்னும் வான் பறவைகள்…



ஒரு விண்வெளி சாதனை!

கடந்த நவம்பர் ஐந்தாம் தேதி சத்தமில்லாமல் ஒரு விண்வெளி சாதனை நிகழ்ந்திருக்கிறது. வாயேஜர் 2 என்ற விண்கலம் சூரிய மண்டலத்தின் ஈர்ப்புப் பாதையைக் கடந்து இன்டர்ஸ்டெல்லர் என்னும் பிரபஞ்ச வெளியில் நுழைந்திருக்கும் செய்திதான் அது.
நிலத்தையும் காட்டையும் ஆற்றையும் கடலையும் ஆண்டமனிதன் வானை ஆளத் தொடங்கி முக்கால் நூற்றாண்டுகளான நிலையில் இந்த முக்கியமான விண்வெளிச் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.அது என்ன வாயேஜர்? ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

அது கடந்த நூற்றாண்டின் மத்தியப் பகுதி. ஒரு பக்கம் இரண்டு உலகப் போர்கள் நடந்து முடிந்து பூமிப் பந்தின் பாதி நாடுகள் கடும் நெருக்கடியில் இருந்த காலகட்டம். இன்னொரு பக்கம் அந்தப் போர்களால் வல்லரசாக உயர்ந்த அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பனிப்போர்.

பூமியில் நிகழ்ந்து கொண்டிருந்த இந்த பனிப்போர் விண்ணுக்கும் சென்றது. ரஷ்யா முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பியது. விண்வெளி ஆய்வைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவு செய்த அமெரிக்கா, அதிரடியாக நிலவுக்கு மனிதனை அனுப்பப் போவதாகச் சொல்லி அனுப்பியும் காட்டியது.

அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு நிறுவனம் இதன் மூலம் உலகின் வலிமையான விண்வெளி அமைப்பாக உயர்ந்தது. இதன் அடுத்த கட்டமாக, செவ்வாய்க் கிரகத்துக்கும் பிற கோள்களுக்கும் விண்கலங்களை அனுப்ப நாஸா முடிவு செய்தது. ஒட்டுமொத்த சூரிய மண்டலத்தையும் ஆய்வு செய்வதற்காக கடந்த நாற்பதொரு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1977ம் ஆண்டு இரண்டு வாயேஜர் கலங்களை பதினாறு நாட்கள் இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பியது.

இவையே வாயேஜர் சகோதரர்கள் எனும் இரட்டைக் கலங்கள். அதில் தம்பிதான் இப்போது சூரிய மண்டலத்தின் எல்லையைக் கடந்து பிரபஞ்ச சஞ்சாரம் செய்யத் தொடங்கியுள்ளது!அப்படியானால் சீனியர் வாயேஜர் எங்கே இருக்கிறார்? அவர் மேலும் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் முன்னேறி விண்வெளியில் இண்டர்ஸ்டெல்லர் வெளியையும் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்! இந்த வெளியை ஹெலிஸ்பியர் என்கிறார்கள்.

சூரிய மண்டலத்தின் எல்லையைக் கடப்பது சாதாரண விஷயமில்லை. சூரியனின் ஈர்ப்பு விசையால் அதன் புலங்களைக் கடக்க முற்படும்போது ஏற்படும் வெப்பம் அசாதாரணமானது. இவ்விரு விண்கலங்களுக்கும் அந்தத் திறன் உள்ளதா என்பதில் விஞ்ஞானிகளுக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. இப்போது இரு விண்கலங்களுமே அதைக் கடந்திருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இவை பறந்துகொண்டிருக்கும் இண்டர்ஸ்டெல்லர் வெளி என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விண்ணிலிருந்த விண்மீன்கள் வெடித்துச் சிதறிய பகுதி. அங்கு இன்றும் அதிலிருந்து வெளியேறிய பாகங்கள் இருக்கின்றன. வாயேஜர் சகோதர்கள் அது பற்றிய தகவல்களை அனுப்பும்போது மேலும் இந்த பிரபஞ்சம் பற்றி துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நாற்பது வருடங்களுக்கு முன்பு வாயேஜர் கலங்கள் பூமியிலிருந்து புறப்படும்போது, சூரிய குடும்பத்தின் பிற கோள்களிலோ விண்வெளியில் வேறு எங்காவதோ உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்பிருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஒருவேளை அவர்கள் நம்மை தொடர்புகொள்ள முயன்றால் அதற்கு உதவக்கூடும் என உலகின் பழமையான ஐம்பத்தொன்பது மொழிகளில் வாழ்த்துச் செய்திகள் அதில் பதிவாகியுள்ளன. இந்திய மொழிகளில் இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மராத்தி, ஒரியா, ராஜாஸ்தானி, உருது ஆகிய மொழிகளில் வாழ்த்துச் செய்திகள் அதில் உள்ளன. தமிழ் அதில் இல்லை! பின்னர் அனுப்பப்பட்ட விண்கலங்களில் தமிழ் இருந்தது என்கிறர்கள்.

மனித மொழியைத் தவிர அலைகளின் ஓசை, பறவைகளின் குரல்கள், டால்பின்களின் குரல்கள், காற்றடிக்கும் ஓசை, இடியோசை எனப் பலவிதமான இயற்கை ஒலிகளும் இதில் பதிவு செய்து அனுப்பப்பட்டுள்ளன. இதைத் தவிர நூற்றுப் பதினொரு புகைப்படங்கள், காட்சித் துணுக்குகள் ஆகியவையும் இதில் பயணிக்கின்றன. இப்போதுவரை இவற்றை யாரும் கண்டதாகவே, பதில் அனுப்பியதாகவோ தகவல் இல்லை.

ஆனால், வாயேஜர் விண்கலங்கள் இதுவரை பல்லாயிரம் புகைப்படங்களை எடுத்துக் குவித்துள்ளது. இன்றுவரை அது படங்களை எடுத்துத் தள்ளிக்கொண்டே இருக்கிறது. இது ஒரு மகத்தான சாதனை. நெப்ட்யூனை ஆய்வு செய்வதற்காகத்தான் இது பிரதானமாக அனுப்பப்பட்டது. அந்த வேலையை இது 1989லேயே முடித்துவிட்டது. போலவே, 1986ல் யுரேனஸையும், 1981ல் சனிக் கோளையும், 1979ல் ஜீபிடரையும் படம் எடுத்து அவை பற்றிய பலநூறு தகவல்களைத் தெரிவித்துள்ளது.

தோராயமாக நம் பூமியிலிருந்து ஆயிரத்து இருநூறு கோடி மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருக்கின்றன இவ்விரு கலங்களும். எழுநூறு கிலோ எடைகொண்ட வாயேஜர் விண்கலம் சராசரியாக மணிக்கு ஐம்பத்தேழாயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் வானில் சீறிப் பாய்ந்துகொண்டிருக்கிறது. சூரியனிலிருந்து பதினாறரை ஒளியாண்டுகள் தொலைவில் இப்போது இருக்கிறது. ஓர் ஒளியாண்டு என்பது விநாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் ஓர் ஆண்டு பயணிக்கும் தொலைவு!

வாயேஜர் ஒன்று விண்கலம், எதிர்வரும் 2025 வரை சிறப்பாக இயங்கும். பிறகு, அதற்கு ஆற்றல் தர பொருத்தப்பட்டுள்ள ரோடியோஸ்டோப் தெர்மாடிக் ஜெனரேட்டர் என்னும் ஒருவகை தானியங்கி மின்கலம் செயல் இழக்க வாய்ப்புள்ளது.

ஆனால், வாயேஜர் இரண்டுக்கு இன்னமும் இரண்டு ஆண்டுகள்தான் வாழ்நாள் உள்ளது என கவலை தெரிவிக்கிறார்கள் விஞ்ஞானிகள். அதனால் என்ன? உயிரோடு இருக்கும் கடைசி நொடி வரை போர்க்களத்தில் தீரத்துடன் போரிடும் மாவீரனைப் போல இடையறாது வேலை செய்துகொண்டிருக்கிறது. அதில் இருந்து வரும் இன்னமும் பலநூறு புகைப்படங்களுக்காகவும் தகவல்களுக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அமெரிக்காவின் சாதனை இதுவென்று ஆர்ப்பரிக்கிறார்கள். இருக்கலாம். எந்த நாடாக இருந்தால் என்ன? வாயேஜரின் இந்த சாதனை ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே பெருமையான விஷயம்.‘மானுடம் வென்றதம்மா’ என்ற கம்பனின் சொற்களில் இந்த சாதனையைக் கொண்டாடுவோம்!        
               
இளங்கோ கிருஷ்ணன்