விவசாய தோட்டக்கலை சங்கமும் ஆயிரம் விளக்கும்!
ெஜமினி மேம்பாலத்திலிருந்து கடற்கரை நோக்கிச் செல்லும் கதீட்ரல் சாலையில் இருக்கிறது விவசாய தோட்டக்கலை சங்கம். போயஸ் கார்டன், ஸ்டெல்ல மேரீஸ் கல்லூரி எனப் பரபரக்கும் அந்தச் சாலையில் பயணிக்கும் எவரும் இப்படியொரு சங்கம் இருப்பதை கவனித்திருக்க மாட்டார்கள்.
 1835ம் வருடம் நிறுவப்பட்ட இச்சங்கம் சுமார் நூற்றி எண்பது வருடங்களைக் கடந்து இன்றும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதன் தொடக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் வித்திட்டவர் ராபர்ட் வைட் என்கிற மருத்துவர்.  இவர், 1819ம் வருடம் கிழக்கிந்தியக் கம்பெனியில் சேர்ந்து உதவி மருத்துவராக மெட்ராஸ் வந்தார். மருத்துவராக இருந்தாலும், தாவரவியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார். தாவரங்கள், பழங்கள் பற்றி எப்போதும் ஆய்வு மேற்கொண்டார். பிறகு, அதுபற்றி மெட்ராஸ் ஜர்னல் ஆஃப் லிட்ரேச்சர் அண்ட் சயின்ஸ் இதழில் கட்டுரைகள் எழுதினார். மட்டுமல்லாமல், மெட்ராஸ் தாவரவியல் பூங்காவின் இயக்குநராகவும் இருந்தார்.
 இந்தச் சங்கத்தில் அன்றைய மெட்ராஸ் மாகாண கவர்னர் சர் ஃபிரடரிக் ஆடமும் புரவலராக இருந்தார். ஆரம்பத்தில் தோட்டக்கலையை ஊக்கப்படுத்தவே இச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதனால், மெட்ராஸ் தோட்டக்கலை சங்கம் என்றே பெயர் வைக்கப்பட்டது. பின்னர், விவசாயத்தையும் ஊக்கப்படுத்தி அதன் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்கிற நோக்கில் செயல்படத் தொடங்கியது.
இதனால், சங்கத்தின் பெயர் விவசாய தோட்டக்கலை சங்கம் என மாற்றமானது. தொடர்ந்து சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி பதிவும் செய்யப்பட்டது. இப்படி உருவான சங்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்தான் கதீட்ரல் சாலை. அப்போது பெரிதாக சாலைகள் கிடையாது.
அன்று சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் இதன் தோட்டம் பரந்து விரிந்திருந்தது. சாலைகள் வந்தபிறகு இரண்டு புறத்திலும் தோட்டம் இருந்தது. இதில், சமீபம்வரை ஒண்ணேகால் நூற்றாண்டுகளாக மலர்க் கண்காட்சி ஆண்டுதோறும் நடந்ததென வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா குறிப்பிடுகிறார்.
இந்தச் சங்கம் வெளிநாட்டுக் காய்கறிகள் மற்றும் பழங்கள், அலங்காரப் பூச்செடிகள், மரங்கள் ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தி பரவலாக்கியது.குறிப்பாக, 1839களில் சீனாவிலிருந்து தேயிலைச் செடிகளைப் பெற்று நீலகிரிக்கு அனுப்பியது. மொரீஷியஸிலிருந்து பெறப்பட்ட கரும்பை பரவலாக விநியோகித்தது. ஐரோப்பாவிலிருந்து பழங்கள் மற்றும் காய்கறி விதைகளைப் பெற்று பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு சேர்த்தது. அன்று இந்தச் சங்கத்தின் உறுப்பினர் கட்டணம், ஏ, பி வகுப்புகள் என இருவகையாக பிரித்து வைக்கப்பட்டிருந்தன.
‘‘ஏ கிளாஸ் உறுப்பினர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை 7 ரூபாயும், பி கிளாஸ் உறுப்பினர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை 3 ரூபாயும் செலுத்தினர். இவர்களுக்கு அந்தந்த நேரங்களில் நர்சரி செடிகள் இலவசமாக கொடுக்கப்பட்டன. உறுப்பினர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான விதைகளையும் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம். காலை 7 மணி முதல் 11 மணி வரையும், பிறகு மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் தோட்டம் திறந்திருக்கும்...’’ என 1923ல் வெளியான ‘மெட்ராஸ் இயர் புக்’ குறிப்பிடுகிறது.
சுதந்திரத்திற்குப் பின்னர் சாலைக்கு தென்புறமுள்ள 18 ஏக்கர் பரப்பை உட்லாண்ட்ஸ் ஹோட்டல் உரிமையாளர் கே.கிருஷ்ணராவிற்கு குத்தகைக்குக் கொடுத்தது சங்கம். அவர், 1962ம் வருடம் இந்த இடத்தில் நகரிலேயே முதல்முறையாக காரில் அமர்ந்திருந்தபடியே சாப்பிடும் டிரைவ் இன் ரெஸ்டாரண்டை தொடங்கினார். சுமார் நாற்பத்தைந்து வருடங்கள் உட்லாண்ட்ஸ் டிரைவ் இன் ரெஸ்டாரண்ட் இயங்கியது.
இந்த ஹோட்டல் வளாகத்தில் 1982ம் வருடம் ெசன்னை புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சில பிரச்னைகளால் 2008ல் நீதிமன்ற உத்தரவுப்படி ஹோட்டல் மூடப்பட்டது. பின்னர், இந்த இடம் தமிழக தோட்டக்கலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுவே, 2010ல் செம்மொழிப் பூங்காவாக உருவாக்கப்பட்டு, அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
இன்று வீட்டுத் தோட்டத்திற்குத் தேவையான நர்சரி செடிகள், விதைகள் என சகலமும் கிடைக்கும் இடமாக விவசாய தோட்டக்கலை சங்கம் உள்ளது. அத்துடன் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழங்களின் விற்பனையும் நடக்கிறது. ஆயிரம் விளக்கு…ஆயிரம் விளக்கு என்றாலே நம் எல்லோர் நினைவிலும் சட்டமன்றத் தொகுதிதான் நினைவுக்கு வரும். இப்படியொரு பெயர் ஏன் இந்தப் பகுதிக்கு வந்தது என்பதை அறிய இருநூறு வருடங்களைக் கடந்து செல்ல வேண்டும்.
ஆம். 1800ம் வருடம் நவாப் முகமது அலி வாலாஜாவின் மகனான நவாப் உம்தத் உல் உம்ரா மொகரத்தை அனுசரிக்க ஒரு கட்டடம் எழுப்பினார். இதன் அசெம்பிளி ஹாலில் 1810ம் வருடம் நவாப் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆயிரம் விளக்குகளை ஏற்றியதால் இந்தப் பெயர் ஏற்பட்டது.1822ன் வரைபடத்தில் இந்தக் கட்டடம் மஜீத் தௌலா என அழைக்கப்பட்டதாக கர்னல் லவ் குறிப்பிடுகிறார்.
‘‘இந்த அரங்கத்தை நோக்கி ஒரு லட்ச ரூபாய் செலவில் 1820ல் ஒரு மசூதி கட்டப்பட்டது. 1981ல் 64 அடி உயரமுள்ள இரண்டு கோபுரங்கள், உள்நோக்கிய நான்கு வளைந்த கூம்புகள், ஒரு பெரிய 30 அடி உயரக் கூம்பு ஆகியவற்றுடன் அபுதாபி பாணியில் ஒரு நவீன மசூதி கட்டப்பட்டது. அதை வடிவமைத்தவர் கே.எம்.அஸாதுல்லா பாகா. தொழ விரும்பும் பெண்களுக்காக பிரத்யேக நுழைவாயிலுடன் ஒரு தளம் இருக்கிறது.
உட்புறம், வெளிப்புறம் இரண்டிலும் குர்-ஆனின் வாசகங்கள் பச்சை பீங்கான் ஓடுகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆயிரம் விளக்கு மசூதி, நகரின் முக்கிய மசூதிகளில் ஒன்றாகும். மசூதியைத் தவிர்த்து ஒரு நூலகமும், விருந்தினர் விடுதியும், இடுகாடும் வளாகத்தில் உள்ளன...’’ என ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ நூலில் குறிப்பிடுகிறார் வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா. தேனாம்பேட்டை…
ஆயிரம் விளக்கிற்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்த பகுதி தேனாம்பேட்டை. 1800க்கு முன்பு வரை இங்கே நெல், வாழை, கரும்பு, காய்கறிகள் பயிரிடப்பட்டு வந்தன. இந்த ஏரியாவிற்கு மேற்கே நுங்கம்பாக்கத்தின் நீண்ட ஏரி இருந்ததால் விவசாயம் தழைத்தோங்கியது. இன்று டி.எம்.எஸ் எனச் சுருக்கமாகச் சொல்லப்படும் மருத்துவப் பணிகள் இயக்குநரகத்துக்கு எதிரே உள்ள பிளாக்கர்ஸ் சாலை லெப்டினன்ட் கர்னல் வேலன்டைன் பிளாக்கர் பெயரில் உள்ளது.
1806ம் வருடம் இந்தப் பகுதியில் ஒன்பது ஏக்கர் நிலம் அவருக்கு வழங்கப்பட்டது. அங்கே தனது வீட்டைக் கட்டியிருந்தார். அதனால், இன்றும் அந்த இடம் பிளாக்கர்ஸ் பெயரில் அழைக்கப்படுகிறது. இதேபோல தேனாம்பேட்டை பகுதியில் 1822ல் மிஸ்டர் போ என்பவர் தோட்டம் வைத்திருந்தார். அவரின் பெயரால் போயஸ் தோட்டம் அழைக்கப்படுகிறது.
ஆழ்வார்பேட்டைைய தேனாம்பேட்டையுடன் இணைத்து அண்ணாசாலை வரை நீண்டிருக்கும் சாலையின் பெயர் எல்டாம்ஸ். இது 1801ல் மெட்ராஸின் கடைசி மேயராக இருந்த ரிச்சர்ட் எல்டாம் பெயரில் அழைக்கப்படுகிறது.
இவர் தேனாம்பேட்டை பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தைப் ெபற்று 1796ம் வருடம் தன்வீட்டைக் கட்டினார். இவரின் வீடு அன்று லஸ் ஹவுஸ் என அழைக்கப்பட்டதாக கர்னல் லவ் குறிப்பிடுகிறார்.
(முற்றும்)
பேராச்சி கண்ணன்
ஆ.வின்ெசன்ட் பால்
ராஜா
|