அரியானாவின் கிங் மேக்கர்!உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது சுவாரசியமும், வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வுகளும் அரங்கேறுவது வழக்கமாக இருந்தாலும் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் அரியானா மாநில தேர்தல் முடிவுகள் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

கட்சி தொடங்கிய 319 நாட்களிலேயே அரியானா மாநிலத்தில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் சக்தியாக உருவாகியிருக்கிறார் 31 வயதான துஷ்யந்த் சவுதாலா. 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டமன்றத்தில், தேசிய கட்சிகளான பாஜக 39, காங்கிரஸ் 31 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆக,எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை.

இந்நிலையில் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி (ஜே.ஜே.பி) அரியானாவில் பத்து இடங்களை வென்றிருக்கிறது. இந்தக் கட்சி யாரை ஆதரிக்கிறதோ அவர்களே அரியானாவில் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், ஜே.ஜே.பி-யின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா இப்போதைய அரசியல் சூழலில், ‘கிங் மேக்கராக’ பார்க்கப்படும் அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.

யார் இந்த துஷ்யந்த் சவுதாலா?

இந்தியாவின் முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் கொள்ளுப் பேரனும், அரியானா மாநித்தில் நான்கு முறை முதல்வராக இருந்தவரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான ஓம்பிரகாஷ் சவுதாலாவின் பேரன்தான் இந்த துஷ்யந்த் சவுதாலா.

அஜய்சிங் மற்றும் அபய்சிங் ஆகியோர் ஓம்பிரகாஷ் சவுதாலாவின் மகன்கள். துஷ்யந்தின் தந்தை அஜய் சவுதாலாவும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவ்வகையில் இக்குடும்பத்தின் நான்காம் தலைமுறை வாரிசாக அறியப்படுபவர் துஷ்யந்த். இவரது மனைவி மேக்னா சவுதாலா மூத்த ஐபிஎஸ் அதிகாரி பரம்ஜீத் அஹ்லவத்தின் மகள்.

ஹிசார் மாவட்டத்தில் தரோலியில் பிறந்த துஷ்யந்த், ஹிசாரில் உள்ள செயின்ட் மேரி பள்ளியிலும், இமாச்சல பிரதேசத்தில் உள்ள லாரன்ஸ் பள்ளியிலும் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் வணிகத்தைப் பயின்றவர், இந்தியா திரும்பியதும் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் கற்றார்.

அரசியல் பிரவேசம்

துஷ்யந்தின் கொள்ளுத் தாத்தா தேவிலாலால் தொடங்கப்பட்டதே இந்திய தேசிய லோக் தளம் (INLD). அதன் பின் இக்கட்சியை அவரது மகன் ஓம் பிரகாஷ் சவுதாலா வழிநடத்தி வந்தார். மாநிலத்தின் சக்தி வாய்ந்த அரசியல் தலைவராக வலம் வந்தவர், அரியானாவில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் சிக்கினார். ஐபிசி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் புதுதில்லி நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததை அடுத்து, 2013ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதியன்று, ஓம்பிரகாஷ் சவுதாலாவும் அவரது மகன் அஜய் சவுதாலாவும் சிறைத் தண்டனை பெற்றனர்.

ஓம் பிரகாஷ் சவுதாலா அரசியலில் முழுமையாக செயல்பட்டு வந்த காலத்தில், மூத்த மகன் அஜய் சவுதாலா மத்திய மட்டத்தில் அரசியலை மேற்கொள்வார் என்றும், தம்பி அபய் சவுதாலா மாநில மட்டத்தில் அரசியலை மேற்கொள்வார் என்றும் குடும்பத்தில் ஒருமித்த கருத்து இருந்தது.
ஓம்பிரகாஷ் சவுதாலா சிறைக்குச் சென்றபோது இந்திய தேசிய லோக்தளம் கட்சிக்கு பொறுப்புத் தலைவராக அவரின் இளைய மகன் அபய் சவுதாலா தேர்வானார்.

தந்தை அஜய் சிறைக்குச் சென்றதும், துஷ்யந்த் அரசியலில் தீவிரமாக செயல்படத் தொடங்கினார். குடும்பக் கட்சியான இந்திய தேசிய லோக் தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு 2014 மக்களவைத் தேர்தலில், அரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன்லாலின் மகன் குல்தீப் பிஷ்னாயை தோற்கடித்து, தனது முதல் தேர்தலிலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

26 வயதிலேயே இந்தியாவின் இளம் எம்பி ஆக பிரபலமடைந்ததோடு லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்தார். ஒரு பக்கம் துஷ்யந்தின் செல்வாக்கு அதிகரிக்க, மறுபக்கம் குடும்பத்துக்குள் அவநம்பிக்கையும் பிளவும் ஏற்படுவதற்கான சாத்தியத்தை இவரது வளர்ச்சி உருவாக்கியதோடு, குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான உறவும் கசப்படையத் தொடங்கியது.

இறுதியில் அஜய் சவுதாலாவின் மகன்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சிக்குள்ளேயே வழிவகுத்து துஷ்யந்த் சவுதாலாவும், அவரது சகோதரர் திக்விஜய் சவுதாலாவும் கட்சிக்குள்ளிருந்து சித்தப்பா அபய் சவுதாலாவால் வெளியேற்றப்பட்டனர்.

பங்காளிச் சண்டையில் உருவான கட்சி

தேவிலாலின் சித்தாந்தத்துடன் துஷ்யந்த் சவுதாலா 2018ம் ஆண்டு டிசம்பரில், ஜனநாயக ஜனதா கட்சியைத் துவக்கினார். கட்சி துவங்கிய சமயமே, தனது தாய்க்கட்சியான ஐ.என்.எல்.டி கைவிட்ட கொள்கைகளை, சித்தாந்தங்களை ஜே.ஜே.பி உயர்த்திப் பிடிக்கும் என சூளுரைத்த இவர், மக்களின் அபிமானங்களைப் பெறத் துவங்கினார்.

அதன் எதிரொலியாக, ஜே.ஜே.பி நிறுவப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, ஜிண்ட் இடைத்தேர்தலில் காங்கிரஸின் ரன்தீப் சுர்ஜேவாலாவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி, துஷ்யந்தின் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கட்சி தொடங்கியது முதல் பல்வேறு பேரணிகளை நடத்தி மக்களைச் சந்தித்து வந்த துஷ்யந்த், தனது முதல் கூட்டத்திலேயே ஆறு லட்சம் பேரைத் திரட்டி வலிமை காட்டினார்.

27% வாக்கு வங்கி கொண்ட ஜாட் இன மக்கள் அதிகம் வாழும் மாநிலம் அரியானா. அதற்கு அடுத்த இடத்தில் தலித்துகள் இருக்கின்றனர். பாஜக இவர்கள் மீது அதிகம் கவனம் செலுத்தாமல், ஆட்சிக் காலத்தில் முக்கியத்துவம் அளிக்காமல் இருந்ததோடு, அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் செயல்படாமல் இருந்தது போன்ற காரணங்கள் ஜேஜேபி, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு இத்தேர்தலில் சாதகமாகின. கிங் மேக்கராக உருவெடுத்துள்ள துஷ்யந்த் சவுதாலா, தனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்தப் போகிறார்..?
அறிய அரியானா மட்டுமல்ல... இந்தியாவே காத்திருக்கிறது.                                  

அன்னம் அரசு