நியூஸ் சாண்ட்விச்



சியாச்சின் உங்களை அன்போடு வரவேற்கிறது…

இந்தியாவின் உயரமான போர்க்கள பனிமலையான சியாச்சின், இப்போது சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராம்நாத் சிங், லடாக்கில் சுற்றுலா அம்ச்சங்கள் அதிகம் இருப்பதாகவும், அதனால் நிச்சயம் அதிக அளவில் மக்கள் லடாக்கிற்கு சுற்றுலா செல்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். சியாச்சின் முகாம் முதல் குமார் போஸ்ட் வரை சுற்றுலாவிற்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பதிவிட்டிருக்கிறார்.

தேசத்துடன் ‘பிரேக் அப்’

லெபனானில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையை எதிர்த்து அரசுக்கு எதிராக மக்கள் பல நாட்களாக போராடி வருகின்றனர்.
முதலில் சிறிய அளவில் ஆரம்பித்த போராட்டம், இப்போது உலக மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், இது வெறும் போராட்டமாக இல்லாமல் திருவிழாவைப் போல், இசை நிகழ்ச்சியுடன் பிறந்த நாள் கொண்டாட்டங்கள், ஆடல் பாடல் என களைகட்டி இருக்கிறது. மேலும் மக்கள் அரசாங்கத்துடன் ‘பிரேக்-அப்’ செய்வதாகக் கூறி, லவ் பிரேக்-அப் பாடல்களும் இசைக்கச் செய்து இந்தப் போராட்டத்தை புதுவிதமாகக் கொண்டாடி வருகின்றனர்.

டிவி சீரிஸில்  விராட் கோலி

நவம்பர் 5ம் தேதி தன் 31வது பிறந்தநாளைக்கொண்டாடும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தன் ரசிகர்களுக்கு புது ட்ரீட் கொடுத்துள்ளார். தன் பிறந்தநாளையொட்டி, ‘சூப்பர் வி’ என்னும் அனிமேஷன் வெப்-சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளார். அதில் விராட் கோலிதான் சூப்பர் ஹீரோ. வாரத்துக்கு ஒரு எபிசோட் வீதம் 13 எபிசோட்களாக வரவிருக்கும் இந்த சீரிஸின் இறுதியில், விராட் தன் ரசிகர்களுக்கு ஒரு மெசேஜ் சொல்லி முடிப்பார் என்கிறார்கள்.

தாயுடன் ஸ்கூட்டரில் சென்றவருக்கு கார் பரிசு

மைசூரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி கிருஷ்ணகுமாருக்கு வயது 40. கடந்த ஆண்டு முதல், 71 வயதான தன் தாயை அழைத்துக்கொண்டு, இந்தியாவிலிருக்கும் கோயில்களுக்கு புனித யாத்திரை செல்கிறார். நான்கு வருடங்களுக்கு முன் இறந்து போன அவரது தந்தையின் நினைவாக, அவர் உயிருடன் இருந்தபோது பயன்படுத்தி வந்த, 19 ஆண்டுகள் பழமையான ஸ்கூட்டரில் மகனும் தாயும் நேபாள், பூட்டான் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்த செய்தியை அறிந்து மனம் நெகிழ்ந்த பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அவர்களுக்கு ஒரு காரை பரிசாக அளிக்கவிருக்கிறார்!

திரவுபதி படுகோன்

புராணக் கதைகளில் நடித்து தனி முத்திரை பதித்து வரும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தன் அடுத்த படம் எது குறித்து என பகிர்ந்துள்ளார்.
யெஸ். இதுவும் புராண கதாபாத்திரம்தான். மகாபாரத திரவுபதி!பல நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் தீபிகாவிற்கு பலமான கதாபாத்திரமும் கதைக்களமும் அமைந்திருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். அனைவருக்கும் தெரிந்த மகாபாரதத்தை புதிய கோணத்தில் இந்தப் படம் அணுகுமாம்.

கத்ரீனா கைஃப் - நயன்தாரா - சாய்னா நெஹ்வால்

பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் கேட்டுக்கொண்டதின் பெயரில், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வாலும், நடிகை நயன்தாராவும் சேர்ந்து ஒரு வீடியோவில் நடித்துள்ளனர். கத்ரீனா Kay Beauty என்ற பெயரில் புதிய அழகுசாதனப் பொருட்களை அறிமுகம் செய்துள்ளார். இதன் புரமோஷன் வீடியோவில்தான், நம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவையும், சாய்னாவையும் நடிக்க வைத்துள்ளார்.

நடுரோட்டில் ஏசி?

கத்தாரில் வெப்பநிலை 40 டிகிரியைக் கடந்து அதிகரித்துள்ளது. அரசு இதை சமாளிக்க பல்வேறு முயற்சிகள் செய்து வரும் நிலையில், இப்போது முன்மொழிந்திருக்கும் திட்டம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 2020 FIFA உலகக் கோப்பை நடக்கவிருக்கும் ஸ்டேடியம், மைதானம் முழுக்க ஏற்கனவே ஏசி அமைக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது சாலைகளிலும் ஏசி அமைக்க பரிந்துரைகள் வந்துள்ளன! குளிர்சாதனங்கள் மூலம் உலக வெப்பமயமாதல் அதிகரிக்குமே தவிர, வெப்பத்தைக் குறைக்க இது நிரந்தரத் தீர்வாகாது என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்