அப்பா : 4 முதல்வர்களுடன் பணியாற்றிய கலெக்டர்...மகள்: தென்னிந்தியாவில் எச்ஐவி பரவாமல் தடுத்த டாக்டர்



‘‘உடல் ஊனம் (disability) என்பது, நீ எப்படி இருக்கிறாய் என்பதில் இல்லை. உன் சுற்றுச் சூழல் (environment) எப்படி உள்ளது என்பதில்தான் இருக்கிறது.
நம்மைச் சுற்றி இருக்கும் கட்டமைப்புதான் நம் இயலாமையை தீர்மானிக்கிறது. தடையின்றி எந்த இடத்திற்கும் இயல்பாய் போய் வர முடியுமெனில், நாங்களும் எபிலிட்டிதான். கட்டடங்களும், பொது வெளிகளும் எல்லாத் தரப்பினரும் பயன்படுத்தும் நிலையில் இருந்தாலே, நடப்பவனும் நடக்காதவனும் இங்கே ஒன்றுதான்...’’

நம்பிக்கையுடன் பேசத் தொடங்கிய டாக்டர் ஐஸ்வர்யா ராவ், சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர். இன்று அவர் குழந்தைகள் நல மருத்துவர். இந்தியாவில் எச்ஐவி பரவியபோது, அதைத் தடுப்பதற்கான திட்டங்களில் தென்னிந்தியாவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். குழந்தைகளுக்கான எச்ஐவி திட்டங்களை முழுவீச்சில் நின்று செயல்படுத்தியவர். பல இடங்களில் ஏஆர்டி மையங்கள் ஆரம்பிக்க காரணமாகவும் இருந்தவர்.  

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி என இரவு பகல் பாராமல் கடைக்கோடி கிராமம் வரை இன்ச் பை இன்ச் ஆக பயணித்து, பம்பரமாய் சுழன்று எச்ஐவி திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்தி, பாராட்டுகளைப் பெற்றவர். உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் அரசின் திட்டங்களுக்கான ஆரோக்கியம் சார்ந்து ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைகளில் (consultation and research field) இருந்து வருகிறார். சென்னை நுங்கம்பாக்கத்தில் மாற்றுத் திறனாளி பெண்களுக்கு இலவச இரவு நேர காப்பகம் ஒன்றை நடத்தி வருவதோடு வார இறுதியில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இலவச மருத்துவ சேவையையும் செய்து வருகிறார்.

‘‘தாய் மொழி தெலுங்கு. சொந்த ஊர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் ஒரு குக்கிராமம். அப்பா புஜங்கராவ் கலெக்டராக இருந்தவர். எளிமையான குடும்பப் பின்னணியில் படித்து வெளிவந்த முதல் பட்டதாரியான என் அப்பா, தொடர்ந்து ஐஏஏஸ் தேர்வில் வென்று சேலம் கலெக்டராக முதல் பணி வாய்ப்பு பெற்றார்.

கலைஞர் முதல்வராக இருந்த எமர்ஜென்சி காலத்தில் சென்னை கலெக்டராக அப்பா இருந்தார். எம்ஜிஆர் காலமான நேரத்தில் சென்னை கலெக்டராக இருந்தவரும் அப்பாதான். எனவே எம்ஜிஆரின் இறுதி நிகழ்வுகளை அப்பா முன்நின்று கவனித்தார். அதன்பிறகு ஜானகி, ஜெயலலிதா முதல்வர்களாக இருந்தபோதும் வேறு வேறு துறைகளில் அப்பா தலைமைச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தார்.

நான் வீட்டில் 3வது குழந்தை. நான் பிறந்தபோது எங்கள் சொந்த ஊரான எலூரு கிராமத்தில் எங்கள் குடும்பம் இருந்தது. அப்போதுதான் சேலம் கலெக்டருக்கான அரசாங்க ஆர்டர் அப்பாவுக்கு வந்தது. அப்போது எங்கள் கிராமத்தில் மின்சாரம் கூடக் கிடையாது. 6 வயது வரை லாந்தர் விளக்கில்தான் என் இளமைகாலங்கள் கழிந்தன. எனக்கு போலியோ டிராப்ஸ் போட்டும் அது தோல்வியில் முடிந்தது. அதுவரை ஓடி ஆடி ஏரி குளம் என நீந்தி விளையாடியவள், ஒரே இரவில் காய்ச்சல் கண்டு நடக்க முடியாமல் போனேன்.

அப்பாவுக்கு கோவை, சென்னை என பணி மாற்றல் வர, எங்கள் வாழ்க்கையும் மாறத் தொடங்கியது. குடும்பத்தோடு சென்னையில் செட்டிலானோம்.
நான் காலிபர் அணிந்து நடக்க, வீட்டிலே படிக்க வேண்டிய சூழல் உருவானது. திருமணத்திற்கு முன் அம்மா ஆசிரியராக இருந்ததால் வீட்டிலேயே எனக்கு பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். அப்பாவும் அம்மாவும் புத்தகங்களை நிறைய வாங்கித் தந்து என்னைப் படிக்கத் தூண்டினார்கள். அப்பா ரஷ்யன் பிக்சர்ஸ் கதைப் புத்தகங்களாக வாங்கிக் கொடுப்பார்...’’ என தனது இளமைக்கால நினைவுகளை அசைபோடு
கிறார் டாக்டர் ஐஸ்வர்யா.

‘‘எத்தனை நாள்தான் என்னை வீட்டுக்குள்ளே அடைப்பது என யோசித்த அம்மா, ஒரு நாள் வீட்டருகில் இருந்த பள்ளியில் என்னைச் சேர்க்க, பள்ளி வாழ்க்கை எனக்குள் பல மாற்றங்களைத் தந்தது. நான் படித்த சிஎஸ்ஐ பெயின் ஸ்கூலின் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் மாணவர்களிடம் தனிக்கவனத்தோடு செயல்படுபவர்கள்.  பாட்டு, நடனம், டிராயிங் என ஆர்வம் வர, பள்ளியில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்தேன். அப்பாவும் பள்ளியில் அனைவரிடமும் மிகவும் எளிமையாகப் பழகுவார்.

தன் விருப்பத்தை எதற்காகவும் என்னிடம் திணித்ததில்லை. மதிப்பெண்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்காது என நினைப்பவர். +2 வரை ஒரே பள்ளியில் படித்து, 1098 மதிப்பெண்களோடு கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்களை தோழிகளோடு சேர்ந்து விண்ணப்பித்துக் கொண்டிருந்தேன்.
ஐஐடி மற்றும் ஆர்க்கிடெக்ட் கனவுகளோடு வெளிநாடு சென்று படிக்கும் கனவுகளும் இருக்க, அம்மா என்னை மருத்துவராக்க விரும்பினார்.
அம்மாவின் விருப்பம் வென்றது.

மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வு முடிவில் எனது எண்களும் இருக்க, நான் மருத்துவக் கல்லூரி மாணவியானேன்.
எம்பிபிஎஸ் முடித்த நிலையில், வெளிநாடு செல்லும் முயற்சியில் விசா என் கைகளில் இருக்க, அந்த நேரம் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் டிப்ளமோ இன் சைல்ட் ஹெல்த் படிப்புக்கான வாய்ப்பு தேடி வந்தது.

தவிர்க்க முடியாத சூழலில், அதையும் படித்து டாப் ஒன் பீடியாட்ரிக்ஸ் மாணவியாக வெளியில் வந்தேன். கல்லூரியில் படிக்கும்போதே தனித்து செயல்பட விரும்பி கார் ஓட்டத் தொடங்கினேன்...’’ என மாடிஃபைட் காரை நம்மிடம் ஓட்டிக் காட்டிய டாக்டர் ஐஸ்வர்யா, இசையின் மீதும் தனக்கு தீராத காதல் உண்டு என்கிறார்.

இசைக் குழுவில் பாடல்களைப் பாடியதோடு, மியூசிக் ஆல்பங்களைத் தயாரித்த கதைகளையும் பேசினார். திரைத்துறை சார்ந்து படத் தயாரிப்பிலும் இறங்கினேன் என தனது கல்லூரிக் கால வாழ்க்கையை மேலும் பகிர்ந்தார். ‘‘அப்போது ஆந்திரா, தமிழ்நாடு, மணிப்பூர் மாநிலங்களில் எச்ஐவி தொற்று அதி தீவிரமாகப் பரவிய நேரம்.

இரவு பகல் பாராமல் முழுவீச்சில் இறங்கி களப்பணி ஆற்றத் தொடங்கினேன். பில் கிளிண்டன், சோனியா காந்தி போன்றவர்கள் அப்போதுதான் இந்தியாவில் ஏஆர்டி (Anti-retroviral therapy) மையங்களைத் தொடங்குவதில் முக்கிய பங்காற்றினர்கள். தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் எச்ஐவிக்காக இந்தியா முழுவதும் முழுவீச்சில் பயணித்து பணியாற்றினேன்...’’ என்றவர் தனது இன்னொரு பரிணாமத்தைத் திறந்து காட்டினார்.

‘‘சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வேலைதேடி வரும் பெண்களுக்கு நண்பர் மற்றும் உறவினர்கள் இல்லாவிட்டால் பாதுகாப்பாக எப்படி தங்குவார்கள்? இப்படி வரும் பெண்கள் மாற்றுத் திறனாளியாகவும் இருந்தால் எத்தனை கஷ்டம்? இதை மனதில் நிறுத்தி அதற்கான திட்டத்தோடு களம் இறங்கினேன். சென்னையில் வெள்ளம் வந்த நேரம் அது. வீடில்லாதவர்களுக்கு இடம் தர வேண்டும் என்கிற அரசு திட்டத்தின் அடிப்படையில் விண்ணப்பித்து மாற்றுத்திறனாளி பெண்களுக்கான ஷெல்டர் புராஜெக்ட்டாக அதை கேட்டுப் பெற்றேன்.

எப்படியாவது வாழ்ந்து காட்ட வேண்டும் எனும் எண்ணத்தில் சென்னை வரும் ஆதரவற்ற பெண்கள் தங்கி ஒரு வேளை உணவோடு பணி வாய்ப்பு
 தேடுவதற்கான பாதுகாப்பான இடமாக எங்களது இரவு நேரக் காப்பகம் செயல்பட்டு வருகிறது. 55 பெண்கள் வரை தங்கியுள்ளார்கள்.

முக்கியமாக மாற்றுத் திறனாளி பெண்கள்தான் அதிகம் வந்து தங்கிச் செல்கிறார்கள். மேலும் போட்டித் தேர்வுக்கு வரும் பெண்கள், கல்லூரியில் படிக்கும் பெண்கள், விளையாட்டுத் துறை சார்ந்து பயிற்சிக்கு வரும் பெண்கள், ஐஏஎஸ் - ஐபிஎஸ் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் பெண்கள்... என பலர் இங்கே தங்கிச் செல்கிறார்கள்.

அதில் சிலருக்கு பணி வாய்ப்புகளும் பெற்றுத் தருகிறோம். சிலரது திருமணங்கள் காப்பகத்திலே நடந்துள்ளன.விளையாட்டுப் பயிற்சிகளுக்காக சென்னைக்கு வரும் மாற்றுத் திறனாளிகள் அவர்களது உடமைகள், வீல்சேர், ஸ்போர்ட்ஸ் வீல்சேர், மற்ற ஸ்போர்ட்ஸ் உபகரணங்கள் என அனைத்தையும் சுமந்து தங்க இடமின்றி பெரும் அவதிக்கு ஆளாக  வேண்டியுள்ளது. இவர்கள் பெரும்பாலும் போக்குவரத்துப் பிரச்னைகளில் சிக்குகின்றனர்.

இதனை மனதில் வைத்து ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் ஒன்றை உருவாக்கும் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது. அதாவது மாநில, தேசிய மற்றும் சர்வதேசத் தரத்தில் விளையாடும் மாற்றுத்திறனாளர்கள் தங்கி பயிற்சி எடுக்கும் ‘டிஸபிளிட்டி மாடல் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ்’. இந்தத் திட்டத்துக்கான கோரிக்கையை அரசிடம் வைத்துள்ளோம்.

மாற்றுத் திறனாளிகளின் உபகரணங்களான பிரெய்லி, ஹியரிங் எய்டு, வீல்சேர், க்ரட்சஸ், மாடிஃபைடு ஸ்கூட்டர், கார் போன்றவற்றுக்கும் உதிரிப் பாகங்களுக்கும் ஜிஎஸ்டி 8ல் இருந்து 24 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. வீல்சேரையும், ஊன்றுகோலையும் (crutches) பயன்படுத்த ஏற்ற வசதிகள் இங்கில்லை. கல்வி, விளையாட்டு, வேலை வாய்ப்பு, போக்குவரத்து என எதுவும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற நிலையில் இல்லாதபோது எதற்காக வரி?  

இந்தக் கேள்விகளோடு, ஜிஎஸ்டி வரியினைக் குறைக்கும் முயற்சியாக அப்போது நிதி அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை நேரில் சந்தித்து வரிக்குறைப்பு நடவடிக்கையில் இறங்கி வெற்றி பெற்றோம்...’’ என தன் பணிகளை சுருக்கமாக விவரிக்கிறார் டாக்டர் ஐஸ்வர்யா.

‘‘15 குடும்பங்களில் ஒரு குடும்பம் என்னும் அடிப்படையில் டிஸபிளிட்டிகள் இருக்கிறார்கள். இன்றும் இவர்களை மூடிமறைத்து வீட்டிற்குள் வைக்கும் நிலையே உள்ளது. ஒரு சிலர் மட்டுமே முயற்சித்து வெளியில் வருகிறார்கள். காரணம், சரியான உடல் அமைப்பையும் அழகையும் மட்டுமே இந்த உலகம் பெரிதும் விரும்புகிறது. ஊடகங்களும் அவற்றையே ஃபேஷனேட் செய்து புரமோட் செய்கின்றன. பெர்ஃபெக்ட் இல்லாத ஒரு உடலை ஏற்க இங்கு மனத் தடைகள் உள்ளது.

அப்படி என்றால் மல்டிபிள் டிஸபிளிட்டி மற்றும் ஸ்பாஸ்டிக் குழந்தைகள் இருக்கும் குடும்பங்களின் நிலை? மாற்றத்தை மாற்றுத் திறனாளிகளிடம் எதிர்பார்க்காமல் உங்களிடத்தில் இருந்து தொடங்குங்கள்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்லும் டாக்டர் ஐஸ்வர்யா, ‘‘Change your vision...’’ என முடித்தார்!

மகேஸ்வரி

ஆ.வின்சென்ட் பால்