தொல்(லைக்) காப்பியம்



லோட்டஸ் கிங் அண்ணனுக்கு மனம் திறந்த கடிதம்!

சாரணர் தேர்தல் தொடங்கி சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் கோட்டை விட்டாலும்,  நாடாளுமன்றத் தேர்தலிலே நோட்டாவே
உங்கள் ஓட்டு வங்கி மீது நட்ட நடுவில் ஓட்டை போட்டாலும், சற்றும் சேட்டை குறையாமல் விளம்பர வேட்டைக்கு, குண்டு இல்லாத துப்பாக்கியை துண்டில் மூடிக் கொண்டு செல்லும் எங்கள் அண்ணன் லோட்டஸ் கிங்குக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்.

உங்கள் ரசிகர்கள் உங்களை டுவிட்டர் சந்திலே துவட்டி எடுத்தாலும், ஃபேஸ்புக் மந்தையில் புரட்டி எடுத்தாலும், எழுதியது என் அட்மின் என டைவர்ட் பண்ணிவிட்டு, ஆத்து மீன் வேகத்தில் அடி ஆழத்துக்கு நாட்  ரீச்சபுள் ஆகும் குலேபகாவலியே... சொட்டு நீர் பாசனத்தை சிறுநீர் பாசனமாக்கி, மொழியை சின்னாபின்னமாக்கி, மொழிபெயர்க்கிறேன் என்ற பெயரில் தமிழ் மொழியையே பெயர்த்தவரே... இந்தி மொழிக்கே இஞ்சி டீ கொடுத்தவரே... நீங்கள் நலமாக இருப்பீர்கள் என மிக பலமாக நம்புகிறேன்.

இணைய வாழ் இந்தியர்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் நீங்கள். இதயம் நொறுங்கிக்கிடக்கும் நேரங்களில் இதமான ஆயின்மெண்ட் நீங்கள். அப்ரூவல் இல்லாமலே வளர்ந்துவிட்ட அபார்ட்மெண்ட் நீங்கள். அடியில் பில்லரே இல்லாத பேஸ்மெண்ட் நீங்கள்.
வதந்தி பரப்பவேண்டுமென்ற அசைன்மெண்ட்டை, வடநாட்டினரோடு அக்ரீமெண்ட் போட்டு வரும் வழியில், வீல் அலைன்மெண்ட் பார்க்காததால், தமிழ்நாட்டு எல்லையில் தடுக்கி விழுந்தவரே... தடுமாறி எழுந்தவரே... ஹைகோர்ட்டையே கடுப்பாக்கி தலைமறைவாகித் திரிந்தவரே... உங்களை நம்பி, இந்த தம்பி இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

அய்யா, என் நிலை நம்ம தேசத்தோட பொருளாதாரத்தை விட மோசமா இருக்கு. இன்னமும் ரெண்டு மாசம் இப்படியே போனாக்கா, மொத்தமா என் வியாபாரம் நாசமா போயிடும் போலிருக்கு.அய்யா என் பேரு காத்தமுத்து. இருந்த ஒரே சொத்தான காட்டை வித்து, திண்டுக்கல்ல இருந்து தேனி போற ரோட்டுல பெருசா வளரணும்னு நல்ல தினுசா ஹோட்டல் வச்சேன். சும்மா சொல்லக்கூடாது, ஆறு மாசம் முன்னால வரைக்கும் என் ஹோட்டலுக்கு வர்றவங்க வெய்ட் பண்ணி சாப்பிட்டுட்டு போவாங்க.

ஆனா, இப்ப யாராவது சாப்பிட வருவாங்களான்னு நான்தான் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.திண்டுக்கல் தாண்டி தேனி போற எந்த பஸ்ஸும் எங்க கடைல நிற்காம போகாது. அளவுக்கு அதிகமா நாங்க சமைச்சு வச்சா கூட அதெல்லாம் விற்காம போகாது. இப்ப போற வர லாரியெல்லாம் நிறுத்தி கூப்பிட்டா, என்னமோ புளியமரத்தடிக்கு கூப்பிட்டா மாதிரி ‘ஐ ஆம் வெரி சாரி’ன்னுட்டு போறாங்க.

ஆஃப்பாயில், முட்டை கலக்கி, முட்டை பொரியல்னு தினம் நாங்க உடைச்ச முட்டைங்க எண்ணிக்கை ஆயிரம். இப்பவெல்லாம் இருபது இட்லி விக்கவே டாரஸ் லாரி டயர் மாதிரி தேயுறோம். இந்தியாவுல பொருளாதார மந்தநிலைன்னு சொல்றாங்க. ஆனா, எனக்கெல்லாம் பொண்டாட்டி புள்ளைக்குட்டிங்களோட மொத்தமா நொந்த நிலையா இருக்கு.

சாப்பிட வர்றவங்க கட்டுற பில்லை வச்சு என்னால கரண்ட் பில் கூட கட்ட முடியல,சொன்னா நம்ப மாட்டீங்க... பணியாரக் குழில என் சமையல் ஆட்கள் பல்லாங்குழி ஆடிக்கிட்டு இருக்காங்க. சப்பாத்தி தேய்க்கிற கருவியில சட்டையை இஸ்திரி போட்டுக்கிட்டு இருக்காங்க. முன்னால எல்லாம், மதிய சாப்பாட்டுக்கே மூணு தடவைக்கு மேல ரசம் வைப்போம். இப்பவெல்லாம் மூணு நாள் ஆகியும் தீராத அந்த ரசத்தை பெருச்சாளிகளுக்கு விஷமாதான் வைக்கிறோம்.

செய்யுற சாப்பாடும் டிபனும் தினம் வீணாகறதால எனக்கு பெரிய லோன் ஆகிப்போயிடுச்சு. கல் பாரத்தைக்கூட தூக்கிச் சுமந்திடலாம். ஆனா, கடன் பாரத்தை தூக்கிச் சுமக்க முடியலடா சாமி. அண்ணே, தினம் கல்லாப்பெட்டில விழுற அந்த கொஞ்சூண்டு பணமும் கந்துவட்டிக்கே சரியாப் போயிடுது.நேத்துதான் என் மச்சான் சொன்னான்... நீங்க விவகாரம் பண்ணியே வியாபாரத்தை விஸ்வரூபம் எடுக்க வைப்பீங்கன்னு.

போன வாரம் கூட கோயமுத்தூருக்கு பக்கத்துல, மாசத்துக்கு முப்பது புடவை வித்துக்கிட்டு இருந்த துணிக் கடைய கண்டபடி திட்டி இப்ப, மணிக்கு 300 புடவை விற்க வச்சுட்டீங்க. வர்றவங்களுக்கு வேட்டிய காட்டவே ஏழு பேர டியூட்டிக்கு போட்டிருக்காராம். ஆயிரம் பேருக்கு மட்டுமே தெரிஞ்ச கடைய ஆல் இந்தியா லெவலுக்கு ரீச்சாக வச்சுட்டீங்க.

நார்த் இந்தியன், சவுத் இந்தியனுக்குப் பிறகு நீங்க கண்டுபிடிச்ச ஆண்ட்டி - இந்தியன்ஸ் எல்லாம், வாடகைக்கு கார் எடுத்து இங்க வியாபாரம் பண்ண வர்றாங்களாம். இஷாந்த் ஷர்மா பேட்டிங் மாதிரி டொக்கு போட்டுக்கிட்டு இருந்த டர்ன்ஓவர் இப்ப ரோஹித் ஷர்மா பேட்டிங் மாதிரி சக்கைப்போடு போடுதாம்.

இதே மாதிரிதான், 2 வருஷம் முன்னால ரிலீசான ‘பர்சல்’ படத்தை எதிர்க்கிறேன்னு பைசா செலவில்லாம, ப்ளெக்ஸ் போர்டு வைக்காம, வெறும் வாயாலயே விளம்பரம் செஞ்சு கொடுத்தீங்க.

அந்தப் படத்தோட புரடியூசரு, தங்களோட பூஜை ரூம்ல உங்க போட்டோ வச்சுருக்கிறதா ஊருக்குள்ள ஒரு ரூமர் கூட உண்டு.அதனால லோட்டஸ் கிங் அண்ணே... நீங்க என் கடைக்கு ஒரு தடவை வரணும், நான் என் கடை புரோட்டாவை உங்களுக்கு தரணும். சாப்பிட்டுட்டு நீங்க என்ன கண்டபடி திட்டி விடணும்.

கடலளவு தோசைப் பற்று இருந்தாலும், கடுகளவு தேசப்பற்று இருந்தாகூட என் கடையில யாரும் சாப்பிடக்கூடாதுன்னு பரப்பி விடணும். என் கடை சட்டினிய தொட்டு தின்னாக்கூட ஆண்ட்டி இந்தியன்ஸுக்கு கிட்னி போயிடும்னு கிளப்பி விடணும். நாட்டுல மக்கள் வாயைத்திறந்தாலோ இல்ல வாட்ஸ்ஸப்பைத் திறந்தாலோ நம்ம கடை பத்தின பேச்சாதான் இருக்கணும்.

வாங்கண்ணே... வந்து வறண்டு கிடக்கிற என் வாழ்க்கைல வாசல் தெளிங்க. இருண்டு கிடக்கிற என் வாழ்க்கைல விளக்கேத்தி வைங்க. உங்க வாயைத் திறந்து எங்களை வசை பாடி வாழ வைங்க!                 

 தோட்டா ஜெகன்