தந்தைக்கு முகம் கொடுத்த மகள்!முதன்முதலாக முகத்தின் தோல் மாற்று அறுவை சிகிச்சை பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்கரின் கதை...

வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவத்தை ஒருவன் எங்கு சந்திக்கிறான்?

சர்வநிச்சயமாக சாலை விபத்தில்தான். மற்ற எல்லாவற்றுக்கும் அதற்கான அறிகுறிகள் முன்பே தெரிந்து விடுகின்றன. ஆனால், சாலை விபத்து..? ஒருவரும் அறியாதது. அதுவும் வாகனம் ஓட்டிச் சென்றவர் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்து ஏற்படுவதைக் கூட வாகன ஓட்டியின் அஜாக்கிரதை எனலாம். ஆனால், பாதையில் நடந்து செல்பவர் மீது வாகனம் மோதி விபத்து ஏற்படுவதை என்னவென்று சொல்வது?

இன்று அன்றாட நிகழ்வாகி விட்ட இந்த மாதிரியான விபத்துதான் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஓர் இரவில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ராபர்ட் செல்சியாவுக்கு நிகழ்ந்தது. ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் மானேஜராக பணிபுரிந்து வந்த ராபர்ட் செல்சியா, 30 வயதுடைய தன் அன்பு மகள் எபோனியாவுடன் வசித்து வந்தார்.

கண்ணிமைக்கும் நேரம்தான். அமெரிக்காவின் கலீப் நகரின் நீண்ட பீச் ஹைவே சாலையில் நடந்து சென்ற ராபர்ட் செல்சியாவின் அனைத்து கனவுகளும் தொலைந்தன. குடிபோதையில் கார் ஓட்டி வந்த ஒரு கனவான், செல்சியா மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்தினான். மோதியவன் காரை பிரேக் பிடித்து நிறுத்தியிருக்கலாம். செய்யவில்லை. அப்படியே காரை ஓட்டிச் சென்றான்.

செல்சியாவின் உடற்பகுதி காருக்குள் சிக்கி தார் சாலையில் தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் தீப்பற்றி எரிந்தது.
ஒருகட்டத்தில் கார் அவரின் உடலை விட்டுச் சென்றது... சாலையில் உருக்குலைந்து மயக்க நிலையில் சுயநினைவற்று கிடந்த செல்சியாவின் மூக்கு, வாய், கண், உதடு, காது, கன்னம், கை விரல்கள்... என பெரும்பாலான உடற்பகுதி சிதைந்து, தீயில் எரிந்த ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராட ஆரம்பித்தார்.

தகவலறிந்த மீட்புக் குழுவினர் செல்சியாவின் உடலைக் கைப்பற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். முதலுதவி கொடுக்கப்பட்ட நிலையில் கலிஃபோர்னியா பல்கலைக்கழக இர்வின் மருத்துவ மையத்தில் சேர்த்தனர்.

சுமார் 4 மாதங்கள் எவ்வித சுயநினைவுமின்றி மருத்துவ சிகிச்சை பெற்ற செல்சியாவுக்கு, 18 வகையான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
எல்லாம் முடிந்தது... செல்சியா உயிருடன் உள்ளார். ஆனால், அவரால் பேச முடியாது. உணவை அவரே உண்ண முடியாது. வாய், மூக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு உணர்வில்லை. வாயில் இருந்து எச்சில் வந்தால் கூட அவருக்குத் தெரியாது.

பார்வை நன்றாக இருந்தது. அவருக்கு ஒரே ஆசை... தன்னை இந்தளவுக்கு பராமரித்து காப்பாற்றிய அன்பு மகள் எபோனியாவுக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று. ஆனால், அதுவும் அவரால் முடியவில்லை. கிட்டத்தட்ட முகமே உணர்வற்ற நிலையில் இருந்தபோது, எப்படி முத்தம் கொடுப்பது?

தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையுடனே செல்சியா வாழ ஆரம்பித்தார். இதை உணர்ந்த மகள் எபோனியா, தன் தந்தையின் உருவத்தை மாற்றவேண்டும் என்று முடிவெடுத்தார். தோல் மாற்று அறுவை சிகிச்சை குறித்து இணையதளங்களில் தேடினார். அவருக்கு கிடைத்த தகவல்களின்படி, தோல் மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகவும் சிக்கலானது.

ஆப்பிரிக்க அமெரிக்கரான செல்சியா, இயற்கையில் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அவரின் சுருள் முடியும், உடலமைப்பும் அறிவியல் ரீதியாக எளிதில் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் இருந்தன. காரணம், அமெரிக்கா! கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் தோல் மாற்று அறுவை சிகிச்சையை அங்கு செய்து கொண்டதில்லை.

ஆனால், அமெரிக்கர் சிலர் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு அமெரிக்கர்களின் தோலும் கிடைக்கிறது. அதற்காக அமெரிக்கர் பலர் உடல் உறுப்பு தானங்களைச் செய்துள்ளனர். ஆனால், கறுப்பின அமெரிக்கர்கள் எவரும் தோல் உறுப்பு தானம் செய்யவில்லை.

அதனால் அறிவியல் ரீதியாக கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர், தனது தோலை தானம் செய்ய முன்வந்தால் மட்டுமே தன் தந்தைக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற முடிவுக்கு வந்தார் எபோனியா.காலங்கள் மெல்லவும் வேகமாகவும் நகர்ந்தன. எபோனியா சும்மா இருக்கவில்லை. தன் தந்தையை பராமரித்துக் கொண்டே, மருத்துவ ரீதியாக அவரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதில் முனைப்பாகவே இருந்தார். அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தை அணுகினார்.

அங்கு கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமெரிக்காவில் வசிக்கும் 13% ஆப்பரிக்க அமெரிக்கர்களில், சிறுநீரகம், நுரையீரல், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளை தானம் செய்ய குறிப்பிட்ட சிலர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். ஆனால், அதனை பெறுவதற்காக 30% பேர் காத்திருந்தனர்!

அதேநேரத்தில் அமெரிக்கர்களில் 65% பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்திருந்தனர். 40% பேரே உறுப்புகளைப் பெற காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர்!ஆக, உடல் தானம் செய்த கறுப்பினத்தைச் சேர்ந்தவரிடம் இருந்து தோலைப் பெறுவது கடினம். சீனியாரிட்டி அடிப்படையில் அது உடனடியாக சாத்தியமில்லை.

என்ன செய்யலாம்..? யோசித்த எபோனியா, தன் தந்தைக்கு தோல் உறுப்பு தேவை என தேசிய சுகாதார நிறுவனத்தில் பதிவு செய்தார். பின்னர், ஆப்பிரிக்க கறுப்பின அமெரிக்கர்களை ஒன்றுதிரட்டி, தன் தந்தைக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து இணையம் மூலம் தகவல்களைப் பரப்பினார். ஒன்றல்ல... இரண்டல்ல... தொடர்ந்து நான்கு ஆண்டுகள் எபோனியா முயற்சி செய்தார்.  

அத்துடன் ப்ரிகாம் ஹெல்த் நிறுவனத்தின் தோல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் போடன் போமஹாக்கின் அறிவுரைப்படி தோல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான நிதியைத் திரட்டத் தொடங்கினார். அறுவை சிகிச்சைக்கு மட்டும் சுமார் 1.5 மில்லியன் டாலர் தேவை. மற்ற செலவினங்களுக்கு 75 ஆயிரம் டாலர். அதாவது இந்திய ரூபாயில் ரூ.11 கோடி!இந்தத் தொகையை  ‘GoFundMe’ என்ற விளம்பர முறையிலும், தன்னார்வ அமைப்பு மூலமும், காப்பீட்டு நிறுவனங்களின் உதவி யுடனும் எபோனியா திரட்டத் தொடங்கினார். இந்நிலையில்தான் ஒரு சிக்கல்.

தந்தையின் தோல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மகள் தயாராக இருந்தார். ஆனால், தந்தை தயாராக இல்லை!  தனது வயது, உடல்நிலை, மனநிலை இவற்றையெல்லாம் உணர்ந்து தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதைத் தவிர்த்தார். எபோனியா விடவில்லை; தந்தையை சமாதானப்படுத்தி ஒருவழியாக டாக்டர் போடன் போமஹாக்கிடம் அழைத்துச் சென்றார். அவரும் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்யத்
தகுந்த உடல் ஆரோக்கியம் இருப்பதாக செல்சியாவுக்கு உத்தரவாதம் அளித்தார்.

ஆனால்... தோல் தானம் செய்ய எவரும் முன்வரவில்லை.ஒரே நம்பிக்கையில் இருந்த தந்தைக்கும் மகளுக்கும் 2018 மே மாதம் ஒரு போன் கால் வந்தது.
எதிர்முனையில் பேசிய 51 வயதான ஜேம்ஸ் என்பவர், ‘62 வயதான என் சகோதரர் அட்ரியன் இறந்துவிட்டார்; விமானப் படையில் பணியாற்றிய அவர், தனது உடலை தானம் செய்ய பதிவு செய்துள்ளார். எனவே, என் சகோதரனின் விருப்பத்தை பூர்த்தி செய்யும்வகையில், அவரது தோல் மற்றும் இதர உறுப்புகளை உங்களுக்கு தானம் செய்ய விரும்புகிறோம்’ என்றார்.

பூரிப்படைந்த செல்சியாவும், எபோனியாவும் டாக்டர் போடன் போமஹாக்குக்குத் தகவல் கொடுத்தனர். அவர், ஜேம்ஸிடம் பேசி அட்ரியனின் தோல் செல்சியாவுக்கு மருத்துவ ரீதியாக பொருந்தும் என உறுதியளித்தார். அடுத்த சில நிமிடங்களில், செல்சியாவுக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான ஆயத்தப் பணிகள் ஒரு பக்கம் நடக்கத் தொடங்கின. மற்றொரு பக்கம் அட்ரியனின் உடல் இருந்த மாகாணத்தில் இருந்து பாஸ்டன் நகருக்கு பாதுகாப்புடன் உடலைக்கொண்டு வர ஏற்பாடுகள் நடந்தன.

24 மணி நேரத்துக்குள் உடல் உறுப்புகளைப் பெற்று பதப்படுத்த வேண்டும். எனவே, மைக்ரோ நொடியையும் வீணாக்காமல் தீயாக வேலை செய்தனர்.
கிட்டத்தட்ட 16 மணி நேரம் டாக்டர் போடன் போமஹாக்கின் தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. 45க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆராய்ச்சி மைய நிபுணர்கள், சமூக சேவையாளர்கள், சேஃப்லைன் பணியாளர்கள்... என பலரும் தங்கள் பங்களிப்பைச்செய்தனர்.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆனந்தக் கண்ணீர் என்றால் என்னவென்று எபோனியாவுக்கு அப்போது புரிந்தது.10 நாட்களுக்குப் பின் செல்சியா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அனைவரது பிரார்த்தனையும் வீண்போகவில்லை. படிப்படியாக செல்சியா, தானே உணவை உண்ண ஆரம்பித்தார். வாசனைகளை நுகர்ந்தார். பொதுவெளியில் நடந்து சென்றார்.

அவரது முகம் முன்பிருந்தது போல் இல்லை. முற்றிலும் மாறுபட்ட முகம். சிதைக்கப்பட்டதற்கு முன்பு இருந்த முகமும் இல்லை; சிதைந்துபோன முகமும் இல்லை; மாறுபட்ட புதிய முகம்!ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் முதன்முதலாக முகம் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் செல்சியாதான். அவரது தைரியமும், மகளின் அன்பும் அரவணைப்பும் மருத்துவ உலகில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி உள்ளது!

தோல் மாற்று சிகிச்சை

ஒருவரின் தொடை போன்ற பகுதியில் இருந்து ஆரோக்கியமான தோலை எடுத்து சம்பந்தப்பட்டவருக்கே பாதிக்கப்பட்ட இடத்தில் பொருத்தும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த அறுவை சிகிச்சை செய்ய நார்மலாக ‘அனஸ்தீசியா’ கொடுக்கப்பட்டு எந்த வேதனையும் இல்லாமல் செய்ய முடியும். இதனை ‘ஆட்டோலாஜிக் கிராப்ட்’ என்கிறார்கள்.  

‘அலோஜெனிக் கிராப்ட்’ முறை என்பது ஆரோக்கியமான தோலை மற்ற நபர்களிடம் இருந்து நோயாளிக்கு பொருத்துதல்; ‘ஐசோஜெனிக் கிராப்ட்’ முறையில், அதாவது ஏற்பவர் மற்றும் வழங்குபவர் இருவருமே ஜெனடிக் (மரபணு) ஒற்றுமை கொண்டு இருந்தால் இந்த ஒட்டுதல் முறை (ஒத்த இரட்டையர்கள்) செய்யப்படுகிறது. ‘ஜொனோஜெனிக்’ முறையில் ஏற்பவர் மற்றும் வழங்குபவர் வேறு வேறு உயிரினங்களாக இருப்பர். உதாரணமாக பன்றி போன்ற மிருகங்களின் தோலை எடுத்து தற்காலிகமாக பொருத்துதல்.

செ.அமிர்தலிங்கம்