முகம் மறுமுகம்-தஞ்சாவூர் பெயிண்டிங்கில் அசத்தும் சீதாஎண்பதுகளின் கதாநாயகிகள் என்றுமே ஸ்பெஷல்தான். குறிப்பாக நடிகை சீதா. ‘ஆண்பாவம்’, ‘குருசிஷ்யன்’, ‘புதிய பாதை’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘மனசுக்கேத்த மகராசா’ என தனக்கான பாதையில் ராஜ நடை போட்டவர். இப்போது டோலிவுட்டில் க்யூட்டான அம்மா கேரக்டரில் அன்பைப் பொழிந்து வருகிறார்.

இந்த முகம்தான் நம் அனைவருக்கும் தெரியும்.ஆனால், நாம் அறியாத சீதாவின் முகம் கலைகளின் ராணியாக பிரகாசிக்கிறது!யெஸ். சாலிகிராமத்தில் உள்ள சீதாவின் வீட்டுக்குச் சென்றால் ஆர்ட் கேலரி போல அழகு அள்ளுகிறது. அறைகளில் நிரம்பித் ததும்புகின்றன பாரம்பரியமிக்க தஞ்சாவூர் பெயிண்டிங்ஸ்.

தங்க ஆபரணங்கள் தகதகக்கும் அந்த எழில் வண்ணம் கொஞ்சும் ஓவியங்கள் அத்தனையையும் வரைந்திருப்பவர் சாட்சாத் சீதாதான்!
‘‘எங்க அம்மா சந்திராவதி ரொம்ப அழகா வரைவாங்க. லைன் பெயிண்ட்டிங்ஸ்ல இருந்து தஞ்சாவூர் பெயிண்டிங் வரை அத்தனையையும் அவங்க அவ்ளோ பிரமாதமா ஆர்ட்டுல கொண்டு வருவாங்க.

அம்மா கூட பிறந்தவங்க பதினொரு பேர். ரொம்ப பெரிய ஃபேமிலி. ஆனா, அத்தனை பேருக்குமே ஆர்ட்ல இன்ட்ரஸ்ட் உண்டு. சித்தியும் நல்லா வரைவாங்க. எங்க அம்மா வரையறதை பார்த்துப் பார்த்து எனக்கும் ஓவியத்துல இன்ட்ரஸ்ட் வந்தது. தஞ்சாவூர் பெயிண்ட்டிங் பண்ண ஆரம்பிச்சேன். அப்ப ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தேன். சில சமயங்கள்ல அம்மாவே கத்தும் கொடுப்பாங்க. என் ஒர்க்கை பார்த்து மெச்சவும் செய்வாங்க.

தஞ்சாவூர் ஓவியம் என்பது பாரம்பரியமிக்க ஒரு ஓவியக் கலை. அதனாலேயே இதை நான் தேர்வு செஞ்சேன். ஏன்னா, பாரம்பரிய விஷயங்களைக் கொண்டாடணும்னு நினைக்கறவ நான். மாடர்னா எத்தனை டிரெஸ்ஸஸ் வந்தாலும் இப்பவும் பட்டுச் சேலைகளுக்கும் நகைகளுக்கும் தனி கம்பீரமும் அழகும் இருக்கத்தானே செய்யுது..? அப்படிதான் தஞ்சாவூர் பெயிண்டிங்ஸும்...’’ ரசனையாக பேசத் தொடங்குகிறார் சீதா.

‘‘வீடுனு நாம எதை சொல்றோம்? வெறும் நாலு சுவர்கள் சூழ்ந்த இடமா..? இல்ல. வீடு என்பது நம்ம சந்தோஷம். மனசை இளமையும், பொலிவுமா ரம்மியமா வச்சுக்கறதே நம்ம வீடுதான். சின்ன வயசில இருந்தே நான் home bird. அதனாலயே வெளிய சுத்தறதில்ல. ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளும் பெரிசா கிடையாது. வீடுதான் என் உலகம்.

பத்தாவது முடிச்சதும் சினிமாவுக்கு வந்துட்டேன். படப்பிடிப்புல எவ்வளவு பிசியா இருந்தாலும் என் கவனம் பெயிண்டிங்ஸ்லதான் இருக்கும். இதுக்கு என் வீட்ல இருந்த எல்லாருமே தஞ்சாவூர் பெயிண்டிங்ஸ்ல எக்ஸ்பர்ட்டா இருந்ததும் ஒரு காரணமா இருக்கலாம். எங்க அம்மா வரைஞ்ச ஓவியங்கள்ல கலை வேலைப்பாடுகளும் பொலிவும் அவ்வளவு தத்ரூபமா இருக்கும். அதனாலயே அவங்க வரைஞ்சதை எல்லாம் தனி ரூம்ல மாட்டி வைச்சு பாதுகாக்கறேன்.

இந்த வீட்டு வாசல்ல இருக்கற ஏழுமலையான் படம், ஹால்ல வரவேற்கிற பிருந்தாவனத்துல விளையாடும் பத்து ராதைகள், பத்து கண்ணன்கள் ஓவியம்... இதெல்லாம் அம்மாவும் நானும் சேர்ந்து வரைஞ்சது.சென்டிமென்ட்டா இருக்கட்டும்னு முதல்ல விநாயகரை வரைஞ்சேன். அப்புறம் அன்னபூரணி. இன்னைக்கு எங்க வீட்டுக்கு வர எல்லாரையும் அந்த அன்னபூரணி கவர்ந்துட்டு இருக்கா...’’ நெகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டு பூஜை அறையைத் திறந்து காட்டினார்.

குட்டி குட்டியாக அசத்தலான தஞ்சாவூர் ஓவியங்கள் அந்த அறையையே வேறொரு தளத்துக்கு மாற்றியிருந்தன.  ‘‘என் முன்னோர்களோட ஆசீர்வாதத்துல இது எல்லாமே நான் வரைஞ்சதுதான். பொதுவா ஓவியம் வரைய பொறுமை அவசியம்னு சொல்வாங்க. அதுவும் தஞ்சாவூர் பெயிண்டிங்ஸ் வரைய ரொம்பவே பொறுமை அவசியம். எப்படி ரோம் நகரம் ஒரேநாள்ல கட்டி முடிக்கப்படலையோ... அப்படித்தான் இந்த ஓவியங்களும்.

ஒவ்வொரு ஓவியமும் வரைய மூணு மாசத்துல இருந்து ஆறு மாசம் வரை அவகாசம் எடுக்கும். ஒருபோதும் அவசர அவசரமா வரைய மாட்டேன். நிறுத்தி நிதானமா, இன்ச் பை இன்ச் ஆக வரைவேன். இப்படி நான் சொன்னதுமே நீங்க நமட்டுச் சிரிப்பு சிரிக்கலாம். ஏன்னா, தஞ்சாவூர் பெயிண்டிங்ஸ் பெரும்பாலும் டிரேஸ் பண்ணி வரையறதுதான். ஆனா, அவ்வளவுதானேனு நீங்க நினைக்கற அளவுக்கு இது ஈசியானதல்ல.

ஓவியத்துக்கான போர்டு ரெடி பண்றதே பெரிய பிராசஸ். பூச்சி அரிக்காம இருக்க ஒரு பவுடர் தூவி துடைக்கணும். அந்த அட்டையை ஒரு துணியால ஸ்டிஃப்பா கவர் பண்ணணும். இதுக்குப் பிறகுதான் அடுத்த கட்ட வேலைகளையே ஆரம்பிக்கணும். அந்த துணியை ஸ்மூத் பண்ண காகிதம் வச்சு தேய்க்கணும். இதுக்குப் பிறகுதான் டிரேஸிங் ஒர்க். அப்புறம் மெகந்தி மாதிரி ஒரு கோன்ல ஒரு லிக்விட் ஊத்தி திக் மக் லைனிங் வரைவேன். அதுல கோல்டு, ஸ்டோன்ஸ் ஒட்டுவோம். கடைசிலதான் பெயிண்ட்டிங் வரும்.

இப்படி சின்னச் சின்னதா நிறைய ஒர்க்ஸ் இருக்கு. என் தம்பி பையன் கனிஷ் வெங்கட்டுக்கு இப்ப அஞ்சு வயசுதான் ஆகுது. ஆனா, அவ்வளவு அழகா அவர் கிராஃப்ட் ஒர்க்ஸ் பண்றார்!’’ வியப்புடன் சொல்லும் சீதா, முதன்முதலில் பிள்ளையார் ஓவியம் வரையும்போதே அன்னபூரணியையும் சேர்த்து வரைய ஆரம்பித்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார்.  

‘‘ஆறு மாசத்துல ரெண்டையும் முடிச்சிட்டேன். இடைல ஒரு ஃப்ளவர் மேக்கிங் ஒர்க் பண்ணினேன். எங்க வீட்ல ஃபேப்ரிக்ல பொம்மைகள் நிறைய பண்ணுவாங்க. இப்ப வீட்ல இருக்கறது குறைவுதான். பாதிக்கு மேல கிஃப்ட்டா போயிடுச்சு. சில ஓவியங்களை விற்கவும் செய்திருக்கோம். சிலதை விற்கறதுக்காகவே வரையவும் செய்வோம்.

ஃபைனல் வந்தப்புறம் அதோட அழகு நம்மை கட்டிப்போட்டுடும். இதை நாமே வைச்சுப்போம்னு மனசு மாறிடும். இப்ப அம்மாவுக்கு வயசாகிடுச்சு. அதனால அவங்க வரைந்த ஓவியங்களை பொக்கிஷமா சேர்த்து வைக்கறேன். சில பெயிண்ட்டிங்ஸை பராமரிக்க முற்படறப்ப அதுல இருந்த ஈரப்பசைனால ஃபங்கஸ் ஆகி இருந்தது தெரிஞ்சது. உடனே அந்த ஓவியங்களை எல்லாம் சரி பண்ணினேன். ஈரத்தை காய வச்சு, பூச்சி மருந்து அடிச்சு, ரீ-டச் கொடுத்தேன்...’’ நிதானமாக சொல்லும் சீதா, கிராஃப்ட் ஒர்க்கிலும் கெட்டிக்காரர்.

‘‘எங்க அம்மா ரூம்ல உள்ள ஒரு ஷோகேஸ் முழுக்க அவங்க கிராஃப்ட்ஸ்தான். இங்க வீட்டுக்குள்ள பார்க்கற இன்டோர் செடிகள் வச்சிருக்கற கலைநயமிக்க பானைகள், பூந்தொட்டிகள் எல்லாமே ஒவ்வொரு இடங்கள்ல இருந்தும் தேடித்தேடி வாங்கினது. ஷூட்டிங் போனா கூட அங்க வித்தியாசமா கண்ணுலபடறதை வாங்கிடுவேன். அதை அப்படியே போட்டு வைக்காம அழகழகா பெயிண்ட் பண்ணிடுவேன்.

ஒரு முறை பாங்காக் போயிருந்தப்ப மரத்தாலான பெரிய மீனை வாங்கிட்டு வந்தேன். உடையாம அதை பத்திரமா கொண்டு வந்து சேர்த்ததே பெரிய சாதனை. இங்க வந்து அதை ஃபிக்ஸ் பண்ணி பார்த்தா... அந்த மீன் என் கண்ணுக்கு பெருமாள் - பத்மாவதி தாயார் போல தோணுச்சு. அந்த மீனுக்கு கலர் பண்ணினேன். அதோட காதுகளுக்கு கொஞ்சம் மக்கு ஊத்தினேன்.

அங்க சங்கு சக்கரங்கள் வரைஞ்சு வண்ணங்கள் சேர்த்தேன்.என் மகள் அபிக்கு இப்ப கல்யாணமாகிடுச்சு. அபிக்கும் ஓவியத்துல ஆர்வம் உண்டு. சிலது அவளும் வரைஞ்சு வச்சிருக்கா. பொண்ணு கல்யாணத்துக்குப் பிறகு, எனக்கு கொஞ்சம் டைம் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. ஓவியங்கள் தவிர எங்க மூதாதையர் காலத்து பித்தளை பாத்திரங்களைக் கூட இன்னும் பொக்கிஷமா வச்சிருக்கேன். எதையும் தூக்கி  தூர வீசிட மாட்டேன். ஃபாரின்ல இருந்து யாராவது என்கிட்ட, ‘உனக்கு என்ன வேணும்’னு கேட்டா ஒரு மேஜிக் ஃபெர்ட்டிலைசர்தான் (வீட்டுச் செடிகள் வளர்வதற்கான திரவ உரம்) வாங்கிட்டு வரச்சொல்லுவேன்.

சின்ன வயசுல இருந்து தெய்வங்களோட பெயிண்ட்டிங்ஸை வரைஞ்சு வருவதாலோ என்னவோ ஆன்மீகத்துல ஆர்வம் வந்துடுச்சு. சிவபக்தையாகிட்டேன். திருவண்ணாமலை, ராமேஸ்வரம், திருச்செந்தூர்னு கோயில் குளங்களுக்கு போறது பிடிச்சிருக்கு.

வக்ரகாளியம்மன், திருவேற்காடு அம்மன் கோயில்களுக்கு ரெகுலரா போயிட்டு வர்றேன். என் ஸ்கூல்மேட்ஸ் சிலர் இன்னமும் என் ஃப்ரெண்ட்ஸா இருக்காங்க. அவங்களோடதான் ஆன்மீகத் தலங்களுக்கு விசிட் அடிக்கறேன்...’’ என பக்தியாக மணக்கும் சீதாவின் கைகளில் ஓஷோவின் ‘வாழ்வு அன்பு மகிழ்ச்சி’ புத்தகம் புன்னகைக்கிறது!                                

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்