நான்...அப்துல் சமத்-எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி



நானாக - தனி ஆளாக எதையுமே உருவாக்க முடியாது. எனவே ஒருபோதும் ‘நான்’ என்று சொல்வதை ஏற்கவே மாட்டேன். அப்படிச் சொல்வது தவறு. எல்லாமே அல்லாஹ்வின் செயல்தான். சின்ன குடும்பம்.
அப்பா, அம்மா, நாங்கள். கஷ்டப்பட்டு முன்னேறிய பயணம். அப்பாவிடம் ஒரு கோழிப்பண்ணை இருந்தது. அப்பா பெயர் சுபான், அம்மா பெயர் ஷமீம். இந்த இருவரின் முதல் எழுத்துகள்தான் எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி.
எனக்கு இரு சகோதரர்கள் - அப்துல் ரஹீம், அப்துல் காதர். ஒரு தங்கை, ஆயிஷா. அண்ணன் பாஸ்மதி ரைஸ் கொள்முதல் பிஸினஸ், தம்பி பெங்களூரில் பெரிய டாக்ஸி பிஸினஸ். தங்கை பிரபல பல் டாக்டர். மருத்துவம் படிக்க வைக்க அப்போது வசதி இல்லை. ஆனாலும் டென்டிஸ்ட் ஆக்கினோம்.

என் முழுப் பெயர் அப்துல் சமத். ரெட் ஹில்ஸில் அப்பாவின் கோழிப்பண்ணை இருந்தது. வசதியாகத்தான் இருந்தோம். அங்கு எங்கள் குடும்பத்தின் மீது அனைவருக்கும் மரியாதை இருந்தது.  என்ன நடந்ததோ... ஒருநாள் கோழிப்பண்ணை முழுவதும் எரிந்தது. திரும்ப ஆரம்பித்த இடத்துக்கே வாழ்க்கை வந்து நின்றது. கையில் எதுவும் இல்லை. பள்ளிகளில் நன்றாக படித்துக் கொண்டிருந்தோம்.

அனைத்தையும் இழந்து தெருவுக்கு வந்தோம். நான் ஒரு கோழிப்பண்ணையில் வேலைக்குச் சேர்ந்தேன். ரொம்ப ஜாக்கிரதையாக கையாள வேண்டிய தொழில் அது. வெயில் அடித்தாலும் கோழிகள் இறந்து விடும். குளிர் அடித்தாலும் கோழிகள் செத்துவிடும். மிஞ்சியதுதான் வருமானம் ஈட்டிக் கொடுக்கும். தினமும் காலையிலும் மாலையிலும் கோழிகளைக் கணக்கெடுப்பது என் வேலை. அதாவது எத்தனை கோழிகள் பிழைத்திருக்கின்றன என்று கணக்கு எடுக்க வேண்டும்.

இந்த வேலையில் முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும் சிக்கன் பக்கோடா போடலாம் என்று முடிவு செய்தேன். அம்மா நன்றாக சமைப்பார். அவர் கைபக்குவம் அருமையாக இருக்கும். இதில் எனக்கு உதவி செய்தவர் என் நண்பர் சாதிக். வண்டி வாங்க என்னிடம் பணமில்லை. எனவே நண்பர் சாதிக்கிடம் தினமும் 50 ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி ரூ.5 ஆயிரத்தை வாங்கினேன்.

தன் திருமணத்துக்காக போட்ட வளையலை அம்மா கழற்றாமல் இருந்தார். அதை சோப்பு போட்டு கழற்றி என்னிடம் கொடுத்தார். எதற்கு தெரியுமா..? பாத்திரங்கள் வாங்க. அப்பொழுது மனதுக்குள் தீர்மானித்தேன். ‘எப்படியாவது இந்த நகையை மீட்டு அம்மாவுக்கு கொடுக்க வேண்டும்...’
வளையலைத் தரும்போதே என்னென்ன வாங்க வேண்டும் என்ற பட்டியலையும் அம்மா கொடுத்தார். சிக்கன் அரித்துப் போட வடிகட்டி கரண்டி, பரிமாற தட்டுகள்...

அம்மா உள்ளுக்குள் அழுததை பார்த்துக் கொண்டிருந்தேன். நன்றாக வாழ்ந்த குடும்பம்... நன்றாக படிக்கும் மகன்... பத்தாவது தேர்வு எழுத வேண்டியவன்... இப்பொழுது தள்ளுவண்டியில் சிக்கன் பக்கோடா விற்று வாழ வேண்டிய நிலை... இன்னொருவர் வீட்டில் அட்வான்ஸ் கொடுக்க முடியாமல் கடனாளியாக வாடகைக்கு வாழும் நிலை...

அல்லாஹ் நம்முடன் இருக்கிறார்... நிச்சயம் நம் நிலை மாறும் அம்மா... என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.இந்த சிக்கன் கடை குறித்து அப்பாவிடம் நாங்கள் சொல்லவே இல்லை. தெரிந்தால் வருத்தப்படுவார். அவரால் தாங்கிக் கொள்ள முடியாது.எனவே அவர் இரவு வீடு திரும்புவதற்குள் விற்பனையை முடித்துவிட்டு நான் வந்துவிடுவேன்.

அந்த தள்ளு வண்டி எனக்கு எட்டாது. தக்காளி பெட்டி என்று சொல்வோம் இல்லையா... அதன் மீது ஏறி பக்கோடா போட்டுக் கொடுப்பேன். வாங்கிச் சாப்பிடுபவர்களின் முகம் மலரும்போது நானும் மலர்வேன்.ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் நடக்கவில்லை. என்ன இருந்தாலும் சிக்கன் பக்கோடாதானே... தினமும் ஒரே சிக்கனை எப்படி திரும்பத் திரும்ப வாங்குவார்கள்..?

இந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொள்ளலாம் என அம்மாவும் நானும் யோசித்தோம். சிக்கனுடன் இடியாப்பம் தரலாம் என முடிவு செய்தோம். ஆனால், இதுவும் சரியாகப் போகவில்லை. இந்த நேரத்தில்தான் அம்மாவின் கைபக்குவத்தில் மணக்க மணக்க தயாராகும் பிரியாணி நினைவுக்கு வந்தது. அம்மாவிடம் சொன்னேன். அவர்களும் இருக்கும் பாத்திரத்தில் சிரமப்பட்டு பிரியாணி செய்து கொடுத்தார்கள். சிக்கன் பக்கோடாவும் பிரியாணியுமாக விற்கத் தொடங்கினேன்.

நல்ல விற்பனை. பிரியாணி அண்டாவை எடுத்துச் செல்ல வேண்டிய அளவுக்கு தேவை அதிகரித்தது. இதற்கும் என் நண்பர் சாதிக்தான் உதவினார். செகண்ட் ஹேண்டில் ஒரு வண்டி வாங்கிக் கொடுத்தார். அதில் பெரிய பிரியாணி அண்டாவை சுடச்சுட எடுத்துச் செல்வேன்.
தினமும் பிரியாணி செய்ய வேண்டியிருந்ததால் அம்மாவின் உடல்நிலை மோசமானது.

இச்சூழலில் எத்தனை கிலோ பிரியாணி செய்து கொடுத்தாலும் ரூபாய் 70 வாங்கும் ஷான் பாஷா என்னும் ஒரு பாயை சந்தித்தேன்.
முதலில் ஐந்து கிலோ, பின் பத்து கிலோ என விற்பனை சூடு பிடித்தது. பகல் முழுக்க மற்ற பிரியாணி கடைகளில் எப்படி விற்பனை செய்கிறார்கள்... எப்படி பேக் செய்கிறார்கள் என்று பார்ப்பேன். மாலையில் அதே ஸ்டைலில் விற்பனை செய்வேன்.

அன்றன்று வரும் வருமானம்தான் மறுநாள் தொழிலுக்கு முதலீடு. இப்படி வாழ்க்கை சென்று கொண்டிருக்கையில் ஒருநாள் அப்பாவுக்கு விஷயம் தெரிந்துவிட்டது.இடிந்து போய்விட்டார். பிள்ளைகள் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றுதானே என் தொழில் பக்கமே வராமல் வைத்திருந்தேன்... இப்படி நடுரோட்டில் நின்று வியாபாரம் செய்கிறானே... என வருத்தப்பட்டார். கோபத்துடன் என்னைத் திட்டினார்.

ஆனால் அதே அப்பா, சொந்தக்காரர்கள் வந்து, ‘என்னப்பா... உன் பையன் ரோட்ல பிரியாணி விற்கறான்...’ என்று சொன்னபோது, ‘பணம் வேணும்னு உங்க வீட்டுப் படியேறி அவன் வரலையே... அப்படி வந்தா அவன் கால், கையை உடைச்சுட்டு என்னைக் கூப்பிடுங்க...’ என்று பெருமையாகச் சொன்னார்.

அதேபோல் அம்மாவிடம், ‘பரவால்ல... அவன் போக்குல விடு... உன்னால முடிஞ்ச உதவிகளைச் செய்...’ என்றார்!ஆனாலும் தினமும் பிரியாணி மீந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஒரு ஐடியா கொடுத்தார்கள். அதன்படி மிஞ்சும் பிரியாணியை பொட்டலங்களாகக் கட்டி அருகில் இருந்த ஆட்டோ ரிக்‌ஷா ஸ்டாண்டுகளில் விற்கத் தொடங்கினேன்.
அப்போது ஒருவர், ‘ரிச்சி ஸ்ட்ரீட்டுக்கு போ... அங்க எலக்ட்ரானிக் கேமரா கடைகள்ல இருக்கறவங்க வாங்குவாங்க...’ என்றார். அதன்படி அங்கு சென்றேன். விற்பனையானது.

இப்படியே மெல்ல மெல்ல வண்டியுடன் பீச்சில் பிரியாணி போடத் தொடங்கினேன். பிரச்னை சுண்டல் விற்கும் பையன்கள் ரூபத்தில் வந்தது. எங்கே எப்படி ஓடுவார்கள் என்று தெரியாது... இரண்டு மூன்று பிரியாணி பொட்டலங்களை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். மேலே துப்பி, அடித்து ரகளை செய்வார்கள்.

அப்போது கரும்பு விற்கும் அண்ணன் ஒருவர் என்னை ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஓர் அண்ணன் இருந்தார். சினிமாக்களில் வருவது போலவே உடல் முழுக்க நகைகள் அணிந்திருந்தார். அவரிடம் பிரியாணி கடை போட அனுமதி கேட்டேன்.அவ்வளவுதான். ‘யாரு வந்து என்ன கேட்டாலும் அண்ணன்கிட்ட சொல்லிட்டேன்னு சொல்லு...’ என்றார். ஆச்சர்யம். அதன் பிறகு காவலர்கள் கூட என்னை தொந்தரவு செய்யவில்லை. கரும்பு விற்கும் அண்ணனே நீச்சல் குளம் பக்கத்தில் விற்கும்படி ஐடியா கொடுத்தார். பிரியாணி விற்பனை இன்னும் சூடு பிடித்தது.

ஆனால், அங்கு வந்தவர்களில் பலர் என் நண்பர்கள். ‘என்னடா இது...’ என்று கேட்க, சங்கடமாகி கொஞ்சம் தள்ளி கடை போட்டேன். இந்த நேரத்தில் இன்னொரு சிக்கல். சிலர் இரவுகளில் வண்டியில் தண்ணீர் அடிக்க ஆரம்பித்தார்கள். என்ன செய்வது என விழித்தபோது பீச்சில் பிரியாணி கடை போட ஒப்புதல் அளித்த அண்ணன், தனது கிளப்புக்கு சாப்பாடு சப்ளை செய்யச் சொன்னார்.

நல்ல வருமானம். நிறைய விஐபிகளின் தொடர்புகள் கிடைத்தது. பிரியாணி சட்டியைக் கொண்டு போய் கொண்டு வந்ததில் சூடு பட்டு என் முதுகு முன்பக்கமாக வளைய ஆரம்பித்தது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார்கள்.அதை பொருட்படுத்தாமல் பிரியாணி செய்யக் கற்றுக் கொண்டேன். பாண்டியன் அண்ணன் மூலமாக பெரம்பூரில் ஒரு கடை வாடகைக்கு கிடைத்தது. அவரிடமே கடன் வாங்கி வாடகை உட்பட, கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கினேன்.

அவர் சாவி கொடுத்த நேரம், அல்லாஹ்வே சாவி கொடுத்தது போல் இருந்தது. எனவே இப்போது வரை எங்கு எங்கள் கிளையை தொடங்கினாலும் அவரைத்தான் சிறப்பு விருந்தினராக அழைக்கிறோம். அம்மாதான் ரிப்பன் வெட்டுவார்.அப்பாவை கேஷ் கவுன்டரில் அமர வைத்தேன். நானே சர்வர், நானே கிளீனர்.

நானே குக். இப்படி ஆரம்பித்த  வாழ்க்கை இன்று 1000 பேருக்கு மேல் எங்களிடம் வேலை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.இன்றும் ஒவ்வொரு பிரியாணி பாத்திரமும் என் கண் பார்வையில்தான் வைக்கிறார்கள். எல்லா கிளைகளிலும் ஒரே பிரியாணி ஃபர்முலாதான். அது என் அம்மா கொடுத்த ஃபார்முலா. இன்று செய்வதை இன்றே விற்று விடுவோம். மீதமானாலும் அதை ஏழைகளுக்குக் கொடுப்போமே தவிர மறுநாள் அதை சுடவைத்து கொடுக்க மாட்டோம்.

அதேபோல் அன்றன்றே பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்துவிடுவோம். மாதச் சம்பளம் கேட்பவர்களுக்கு வங்கியில் கணக்கு தொடங்கி தினம் தினம் போட்டுவிடுவோம்.ஏழை பிரியாணி என்று ஒரு கான்செப்ட் எங்களிடம் உண்டு. அந்த தட்டு மட்டும் ரூ.100. உங்கள் பெயர் எழுதி ஓர் ஏழைக்குக் கொடுப்போம்.

பணம் இல்லாமல், வாங்காமல் வீட்டில் பார்த்த பெண்ணை நிக்காஹ் செய்தேன். அவர்கள் பெயர் சுமையா சுல்தானா. வீட்டையும் என்னையும் ஆளாக்கி, எனக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொடுத்தவர் அவர்தான். தன் பங்குக்கு அவரும் கிளவுட் கிச்சன் கான்செப்டில் மரஹாபாத் கிச்சன் என்கிற ஹோம் கிச்சன் பிஸினஸை நடத்தி வருகிறார்கள்.

எங்களுக்கு ஒரு பையன், அப்துல் அஜீஸ். இரு மகள்கள் - ஆஃபியா சப்ரீன், அசியா சப்ரீன்.  எந்தத் தொழில் செய்தாலும் மேலே இருப்பவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என 24 மணி நேரமும் நினைத்துக் கொண்டிருந்தால் போதும். தொழிலில் தவறு செய்ய மாட்டோம்.
எல்லாம் அவன் செயல்.  

ஷாலினி நியூட்டன்