வீட்டிலேயே ஆரோக்கியமான டிஷ்ஷஸ்ஸை செய்யலாம்... பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாடலாம்!



திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பகுதியில் ‘வாசி’ என்ற பெயரில் சிறப்புக் குழந்தைகளுக்கான மையத்தை நடத்தி வருபவர் வானதி. சமைப்பதில் தனித்துவம் கொண்டவர். குறிப்பாக அம்மி, உரல், விறகு அடுப்பு என முன்னோர்கள் வழியைப் பின்பற்றி பாரம்பரிய உணவுகளை விதவிதமாக சமைப்பவர். அவர் தரும் சில சமையல் குறிப்புகள் இங்கே…

பனங்கிழங்கு அல்வா

பொதுவாக, தைப்பொங்கல் காலம்தான் பனங்கிழங்கு சீசன். இதனை அவித்து கிழங்காக சாப்பிடுகிறோம். இதில் அல்வா செய்தும் சாப்பிடலாம். இதற்கு முதலில் பனங்கிழங்குகளை நன்றாக அவித்து, தோல் நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, தனியாக அரை மூடி தேங்காய் மற்றும் ஏலம் சேர்த்து பாலெடுத்து வடிகட்ட வேண்டும்.

இந்தத் தேங்காய் பாலுடன் அரைத்து வைத்துள்ள கிழங்கு விழுதினை சேர்த்து கரைத்து அடி கனமான பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பின்பு, தேவையான அளவு வெல்லம், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் நெய் சேர்த்து விடாமல் கிளற வேண்டும். இறுதியாக நெய் தனியாக பிரியத் தொடங்கும். அதில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளற சுவையான பனங்கிழங்கு அல்வா கிடைக்கும். இது உண்மையில் ஆரோக்கியமான, சுவையான சிற்றுண்டி.

வாழை இலை அல்வா

வாழை இலையில் அல்வாவா எனக் கேட்கலாம். ஆம். வாழை இலையின் சுவையும் அந்த பச்சைய மணமும் சுவைத்தால் மட்டுமே உணர இயலும்.
நறுக்கிய வாழை இலையை ஒரு கைப்பிடி எடுத்து தண்ணீர்விட்டு அரைத்து இரண்டு பங்கு சாறு எடுத்து வடிகட்டிக் கொள்ளவும். கோதுமை அல்லது அரிசி மாவு ஒரு பங்கு எடுத்து அரைத்த சாற்றினை கலந்து மேலும் ஒரு பங்கு நீர் சேர்த்து கட்டியாகாமல் கரைக்க வேண்டும்.

பிறகு, தேவையான அளவு சர்க்கரை, ஏலம், சிறிது உப்பு சேர்த்து வாணலியில் ஊற்றி மிதமான தீயில் வைத்து நெய் சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும். நெய் பிரிந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கினால் சுவையான வாழை இலை அல்வா ரெடியாகி விடும்.

பதநீர் பேடா

பால் பேடாவை மிஞ்சும் சுவை கொண்டது பதநீர் பேடா. பதநீரை நன்றாக பாகுபதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். கம்பி பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஏலம், துருவிய தேங்காய், அரிசி மாவு சேர்த்து கிளறி, பிறகு ஆற விடவும். ஆறியதும் நெய் தொட்டு உருண்டையாக பிடித்து தட்டி முந்திரி வைத்து அலங்கரித்து இட்லி பானையில் அவித்தெடுத்தால் சுவையான பதநீர் பேடா கிடைக்கும். இதில், பானை மூடியை துணியால் சுற்றி மூட வேண்டும். அப்பொழுதுதான் வேகும் தண்ணீர் பேடாவில் படாது.

பதநீர் தவிர, பனம்பழம், நுங்கு இவற்றையெல்லாம் பயன்படுத்தி இதுபோன்ற பண்டங்கள் செய்யலாம். இதனால், ஆரோக்கியம் கூடும். பனைப் பொருட்களின் மதிப்பும், தேவையும் கூடும். அதை சார்ந்திருப்போரின் வாழ்வாதாரமும் மேம்படும்.

கண்டங்கத்திரி குழம்பு

சுவாச நோய், மூச்சிரைப்பு உட்பட்ட அனைத்து நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் அருமருந்து கண்டங்கத்திரி குழம்பு.
நல்லெண்ணெயை சட்டியில் ஊற்றி இரண்டு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், தலா ஒவ்வொரு கைப்பிடி அளவிற்கு வல்லாரை, முசுமுசுக்கை, சங்கு இலை, கண்டங்கத்திரி இலை இவற்றினைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு இதனுடன் கால் மூடி தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் 20, பூண்டு பல் 10 சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய கண்டங்கத்திரி காய் மற்றும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

இவை வதங்கியதும் அரைத்து வைத்துள்ள இலைகளைச் சேர்க்க வேண்டும். அதனோடு இரண்டு தேக்கரண்டி மல்லித்
தூளும், ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூளும், கொஞ்சம் கொடம்புளியும் சேர்த்து கொதிக்க வைத்தால் போதும். சுவையான கண்டங்கத்திரி குழம்பு
தயாராகிவிடும்.

பின்குறிப்பு… இதில், மிளகு காரமே முதன்மையானதாக இருக்க வேண்டும். சாதாரண புளி மூலிகையின் மருத்துவ குணத்தை அழித்துவிடும். அதனால், கொடம்புளி பயன்படுத்துவதே சிறப்பு. கண்டங்கத்திரி காய் மற்றும் இலையின் முட்களை கவனமாக நீக்கிய பிறகு பயன்படுத்தவும்.

சோற்றுக் கற்றாழை குழம்பு

சின்ன வெங்காயம் 10, பழுத்த தக்காளி 3, வரமிளகாய் 10, சீரகம், வெந்தயம், கடலைப் பருப்பு, மல்லி தலா ஒரு தேக்கரண்டி, கற்றாழை சோறு ஒரு கப் (கற்றாழையை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி ஆறேழு முறை அலச வேண்டும்), கொடம்புளி தேவையான அளவு. இவைதான் தேவையான பொருட்கள்.

முதலில் மல்லி, மிளகாய், சீரகம், வெந்தயம், கடலைப் பருப்பினை வெறும் வாணலியில் லேசாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இவை வதங்கியதும் தக்காளியும், அடுத்ததாக கற்றாழையும் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் பொடித்து வைத்துள்ள தூளையும், உப்பையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

இறுதியாக கொடம்புளி ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கினால் கற்றாழைக் குழம்பு தயாராகிவிடும். நிறைவாக, ஒரு தேக்கரண்டி சுத்தமான விளக்கெண்ணெய் ஊற்றி வைத்தால் சுவை மேலும் கூடும்.

அம்மியில் இடித்துவைத்த நாட்டுக்கோழி ரசம்

முதலில் வெடக் கோழியாக தேர்ந்தெடுத்து அதனை சுத்தப்படுத்தி கால் மற்றும் எலும்புகளை அம்மியில் வைத்து தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், வறுத்த பெருஞ்சீரகம், மல்லி மற்றும் வரமிளகாய் இவற்றை தனித்தனியாக அம்மியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து, ஒரு மண்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றுடன் அம்மியில் அரைத்த மசாலா வையும் சேர்த்து வதக்கவும். பிறகு, இதனுடன் இரண்டு தக்காளிப் பழங்களைச் சேர்க்க வேண்டும்.

இறுதியாக தட்டி வைத்துள்ள கறியினைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி 25 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் சுவையான நாட்டுக்கோழி ரசம் தயாராகிவிடும். வெடக் கோழியாக இருந்தால் மட்டுமே நல்ல சுவையும், சரியான வெந்த பதமும் இருக்கும்.எலும்பு முறிவு, மூட்டுவலி மற்றும் பலவீனமான உடல்நிலை கொண்டவர்களுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும்.

உளுந்து அடை

பருவமடைந்த நாளில் தொடங்கி மெனோபாஸை கடந்தபின்னும் பெண்களின் உடல்நலத்தை மேம்படுத்தி காக்கும் ஆற்றல் உள்ள ஒரே உணவுப்பொருள் உளுந்து மட்டுமே. முழு உளுந்தை கல், தூசி நீக்கி தோலோடு வெயிலில் நன்றாகக் காயவைத்து, மெஷினில் கொடுத்து பச்சை மாவாக அரைத்து வைத்துக்கொண்டால் அதில் நல்லெண்ணெய் சேர்த்து களி செய்யலாம். தேங்காய் சேர்த்து கூழ் காய்ச்சலாம். வாழைப்பழம், கருப்பட்டி சேர்த்து உருண்டைகள் பிடிக்கலாம். புளித்த மாவோடு சேர்த்து தோசை வார்க்கலாம். இதில் உளுந்து அடை முக்கியமானது.

இரண்டு பங்கு உளுந்துமாவுடன் ஒரு பங்கு அரிசி மாவு, பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் ஒரு கப், மகிலிக் கீரை ஒரு கப், சீரகம், உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பிசைய ேவண்டும். பிறகு, அடையாக தோசைக்கல்லில் தட்டி நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு வேக வைத்தால் சுவையான உளுந்து அடை தயாராகிவிடும். இதற்கு, பீர்க்கங்காய் தோல் துவையலும், பீர்க்கங்காய் பருப்புக்கூட்டும் சுவையாக இருக்கும்.

பேராச்சி கண்ணன்