லவ் ஸ்டோரி - ‘கயல்’ சந்திரமௌலி அஞ்சனா



குறைகளை முன்னிறுத்திப் பேசி வளர்ந்து நிறுத்திய நட்பு இது!

சந்திரமெளலி

ஐந்தாம் வகுப்பில் கூடப்படித்த வைஷ்ணவியை லவ் பண்ணினது ஞாபகம் இருக்கு. ஏதோ ஒரு விஷயம் அந்தப் பொண்ணை மனசில கொண்டு போய் நிறுத்துது. அவங்க இப்ப என்ன பண்றாங்க, எப்படி இருக்காங்கன்னுகூடத் தெரியாது. ஆனாலும் அவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன்.
ஒவ்வொரு வருஷத்திற்கும் அடுத்தடுத்து பெண்கள் பெயர்கள் ஞாபகத்திலிருக்கு. அது அப்படியான பருவம்தான். லவ் எல்லோருக்கும் வருகிற சமயம்தான். யார் மேலேயும் பிடிப்பு வந்திட்டால் அன்பு அதிகமாக பொங்கிப் பெருகும். நடுராத்திரியில் நல்ல ம்யூசிக் கேட்கிறதும், பார்த்த பெண்கள் எல்லாம் பிடிக்கிறதும் அந்த வயசுக்கு நடக்குறதுதான்.

லவ் என்கிற விஷயத்தை எல்லோர்கிட்டேயும் காண்பின்னுதான் வீட்டில் என்னை வளர்த்தாங்க. சென்னையில் பிறந்து வளர்ந்ததால், பெண்கள்கிட்டே பேசிப் பழகுவதில் பிரச்னை இருந்ததில்லை. எடுத்தவுடனே ஒரு பொண்ணு சிரிச்சு பேசிட்டால் அது லவ்தான்னு ஒரு நாளும் நினைச்சதில்லை.
இன்னும் பெண்கள் நெருங்கிக்கூட இருந்திருக்காங்க. யார் ஜாடையிலோ, மென்மையான குரலோடோ, அளவெடுத்த புன்னகையிலோ பெண்கள் கவர்ந்திருக்கிறார்கள்.

எப்ப அது சீரியஸ் ஆகி, நம்ம லைஃப் பார்ட்னராக இவங்க மாறணும்னு ஒரு மெச்சூரிட்டி வருதோ, அங்கே நிக்கும் இந்தக் காதல். நமக்கு பிடிக்கிறது இல்லை, இரண்டு பேருக்கும் பிடிக்குதுன்னு வருதில்லையா... காதல் அங்கேதான் அடுத்த இடத்திற்குப் போகுது.ஒவ்வொண்ணா கழிச்சுப் பார்த்தால் கடைசியில் நிக்கிறது இல்லையா, அதுதான் சரியான லவ்.

பால்யம் போல் அற்புதம் வேற இல்லைதான். ஆனால், அந்த இடத்திலேயே நின்னுக்கிட்டு இருக்க முடியாது. குழந்தைமை தவறும்போது அடுத்தகட்ட வயது அன்பைத் தேடித்தான் போகுது. இப்படியான சமயத்தில்தான் பார்த்த வேலையை விட்டுட்டு ஒரு நடிகனாகணும்னு என்னை தயார் பண்ணியிருக்கேன்.

அப்படி சிரமப்பட்டு கிடைத்த வாய்ப்புதான் ‘கயல்’. அந்த சினிமாவிற்காக அவார்டு வாங்கப் போகும்போதுதான் அஞ்சனாவைப் பார்த்தேன். ஏதோ ஜில்லுன்னு ஒரு குளிர்... நல்ல இருட்டில் வந்து கொண்டிருக்கையில் தெருவிளக்கு விழித்தால், தானே கும்பிட்டுக் கொள்கிற கை மாதிரி ஒரு மத்தாப்பு ஒளி.  

‘உங்கள் கயல் பிடிச்சது’னு சொல்றாங்க. நானும் ‘உங்களை சூரியன் எப்.எம்.மில் பார்த்திருக்கிறேன்’னு சொல்றேன். ‘மொழி’ படத்தில் பிரகாஷ்ராஜ் ‘பல்பு எரிஞ்சது.... பெல் அடிச்சது’னு சொல்லிட்டுப் போவார். அப்படித்தான் எனக்கும் இருந்தது.எனக்கு சொந்தம், உறவு, வயசு, வாழ்க்கை எல்லாமே அப்படியே ததும்பி நிற்கிற மாதிரியிருக்கு. அஞ்சனா அறிமுகமானது மாதிரி வாழ்க்கையில் அப்பப்போ ஏதாவது அற்புதம் நடந்துகிட்டேயிருக்கு.

அஞ்சனாவை அழைத்துக் கொண்டு என் வீட்டிற்குப் போனேன். நான் அஞ்சனாவிடம் வைத்திருக்கிற அன்பை பகிர்வ தற்கு முன்பே அப்பா, அம்மா ‘லவ் பண்றியாடா’னு கேட்டு விடுகிறார்கள். என்னிடம் கேட்பதற்கு முன்பே அஞ்சனாவிடம் அந்தக் கேள்வி வந்து சேர்ந்து விடுகிறது.

எங்களுக்கான ரசனைகளை தெளிவு படுத்தியிருக்கிறோம். கல்யாணத்திற்குப் பிறகும் காதல் இருக்கிற பக்குவமே இதில் அழகு. ஒவ்வொரு நாளும் புதிதாக இருக்க அன்பு செய்கிறோம். தனிப்பட்ட விருப்பங்களை அவரவர் தொகுப்பில் வைத்திருக்கிறோம்.

எங்கள் பேரன்பின் அடையாளமாக ருத்ராக்‌ஷ் இருக்கிறான். எங்க உலகமே அவன்தான்னு இருக்கு. அவனது கனிந்த பார்வையும், சிறு புன்னகையும் எங்களை மயக்கத்தில் வைத்திருக்கிறது. நான் காதலனாக அவளை ரசிச்சதைவிட கணவனாக உணர்ந்ததே அதிகம். காதல் நிறைந்து கிடக்கும் இடத்தில் வேறெதற்கும் இடம் கிடையாது.

அஞ்சனா முதல் கட்டத்தில் காதல் என்பது மேஜிக் உலகம் மாதிரிதான் தோணும். பட்டாம்பூச்சிகள் நிச்சயமாக பறக்கும். அப்படித்தான் சினிமாவில் பார்த்திருக்கிறோம். சிறுவயதில் காதல் குறித்து அறிவதற்கும், பிற்பாடு காதல் வயப்பட்டு பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதுதான் உண்மை. எல்லோரும் சொல்லிக் கொள்வது போல் காதல் மிருதுவானதில்லை. இருபாலர்கிட்டேயும் இருக்கிற புரிதல்தான் லவ் என்பது புரியவே வருஷங்களாகிவிடும்.

அப்படி ஓர் இடத்தில்தான் இவரைப் பார்த்தேன். அது எப்படி லவ்வாக மாறியது என்பது கூட எங்களுக்குத் தெரியாது. கொஞ்ச நாள்தான் நண்பர்களாக இருந்தோம். ஆறு மாதங்கள்தான் பழகியிருப்போம். அந்தப் புரிதல் நட்பின் இறுக்கத்தில்தான் ஆரம்பித்தது.எனக்கெதற்கு கோபம் வரும், அவருக்கு எதற்கு வருத்தம் வரும், எது என்னை பாதிக்கும், எது அவரை தொல்லைப்படுத்தும் என எல்லாம் அறிந்து தெரிந்து பொருத்தமாக வந்ததே காதல். திட்டம் போட்டு வரவழைத்தால் அது செட்டாகாது.

அவர் ‘கயல்’ படத்திற்காக விருது வாங்கிய விழாவை தொகுத்தளித்தேன். எனக்கும், தொகுத்தளித்த ஜெகன் அண்ணாவிற்கும் கை கொடுத்துவிட்டு அவர் மேடைக்கு விரைந்ததே மரியாதையாக இருந்தது. அவர் என் முகம் பார்த்து சிரிக்க அகம் பேசியது. வெளியே கூடிப் பேசினோம். இருவரின் குடும்பம்… மிடில் கிளாஸ்… கஷ்டப்பட்டு முன்னேறிய விதம்… என எல்லாமே ஒன்று போலிருந்தது.

நான் அவர் வீடு போக, அவரும் என்  இல்லம் வந்தார். அந்த நட்பும், புரிதலுமே அடுத்த முப்பது வருஷத்தை கொண்டு செலுத்த உதவுகிறது. எங்க பேஸ்மெண்ட் ரொம்ப ஸ்ட்ராங். எந்த தடங்கலும் இல்லாமல் எதையும் தாண்டுவோம். இவரோடு வாழ்க்கையை இணைத்துக்கொண்டு சந்தோஷமாக இருப்போம் என தெரிந்துவிட்டது.அவரோட பயணத்தையும், என்னோட விஷயங்களையும் எதையும் மறைத்துக்கொண்டதேயில்லை. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்துதான் எதுவும் நடக்கும். வெளியே சொல்லிச் சென்றால் ஏன் வரவில்லை? காரணம் என்ன... என நச்சரிப்பு இரண்டு பேரிடமும் கிடையாது.

ஒவ்வொரு சந்திப்புக்கும் இவ்வளவு நேரமும், முக்கியத்துவமும் இருக்கிறதென புரியும். ஒளிவு மறைவு கிடையாது. குறைகளை முன்னிறுத்திப் பேசி வளர்ந்து நிறுத்திய நட்பு இது. நிறைகள் பழகப்பழக தெரிந்ததுதான். நான் பையன் மாதிரி வளர்ந்த பொண்ணு. நண்பர்களே முக்கியத்துவமாக இருக்க, வீட்டிலிருந்த நேரங்கள் குறைவு. இப்போது வெளியே வேலையைத் தாண்டி செலவழிக்கிற ஒவ்வொரு நிமிடமும், ‘வீட்டு நேரம் குறையுதே’ என கவலை கொள்ள வைக்கிறது.

எங்களின் மகன் ருத்ராக்‌ஷ் உடன் இருக்கிற நிமிடங்கள் பேரானந்தமானவை. என் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டது என நினைக்கிறேன். மனசுக்கு சந்தோஷம் தருகிற விஷயம் எல்லாமே அழகானதுதான்.  
 
நா.கதிர்வேலன்