வர்த்தகப் போர்



பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த அடுத்த நெருக்கடி

கராச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் விமானம் மூலம் மும்பை வந்த 40 கிலோ எடையுள்ள நாளிதழ்கள், நாவல்கள் அடங்கிய பார்சல் கட்டினை வாங்க மும்பை தெற்கு பகுதியில் 70 ஆண்டாக பேப்பர் கடை நடத்திவரும் முகமது ஆசிப் (50) சென்றார்.

பாகிஸ்தானில் இருந்து வந்த அந்த கூரியர் பார்சலுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணத்தை அங்கிருந்த ஊழியரிடம் செலுத்த முயன்றார்.ஆனால் அந்த ஊழியர், ‘பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அடிப்படை சுங்க வரி 200% ஆக உயர்த்தப்பட்டுள்ளது! அதனால் 40 கிலோ எடையுள்ள இந்த பார்சலுக்கு ரூ.2 லட்சம் கொடுங்கள்!’ என்றார்.

திக்குமுக்காடிப் போன முகமது ஆசிப், வந்த பார்சலை மீண்டும் கராச்சிக்கே திருப்பி அனுப்பிவிட முடிவு செய்தார். ‘அதற்காக பத்து ரூபாய்க்கு விற்கக்கூடிய நாளிதழை 2,000 ரூபாய்க்கா விற்கமுடியும்? அப்படியே விற்றாலும் யார் வாங்கப் போகிறார்கள்?’ என்று குமுறியபடி வீட்டுக்குச் சென்றவர், நண்பர்களுடன் கலந்தாலோசித்தார்.  

கராச்சியில் இருந்து வந்த கூரியரை மீண்டும் அங்கேயே திருப்பி அனுப்பிவிட தினமும் கஸ்டம்ஸ் ஆபீசுக்கு நடையாக நடந்தார். ஆனால் அவர்கள், ‘தேர்தல் முடிந்த பின்புதான் எந்தவொரு பொருளையும் திருப்பி அனுப்ப முடியும்’ என்று கூறி முகமது ஆசிப்பை திருப்பி
அனுப்பிவிட்டனர்.

பாகிஸ்தானில் வெளியாகும் இந்தி / உருது பத்திரிகைகளும் இலக்கியங்களும் முகமது ஆசிப்பின் கடைகளில் கிடைக்கும் என்பதால் அவருக்கு கஸ்டமர்கள் அதிகம். இன்று, அவரது பிசினஸ் முடங்கிவிட்டது. பேப்பர் விற்கும் ஒருவருக்கே இந்த நிலை என்றால், இந்தியா - பாகிஸ்தான் இடையே வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் இப்போதைய நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.இது ஏதோ வர்த்தகர்களின் பிரச்னை என ஒதுக்கிவிட முடியாது. இதன் பின்னால், ஆறாத வடுக்களும், ேசாகங்களும், பழமைவாதங்களும், அரசியல் பழிவாங்கலும், சொல்லமுடியாத துன்பங்களுக்கான காரணிகளும் வரிசைகட்டி நிற்கின்றன.

ஆம்! கடந்த பிப்ரவரியில் புல்வாமாவில் 40 இந்திய வீரர்களைப் பலிவாங்கிய தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியிருந்த ‘வர்த்தக நட்பு நாடு’ என்ற சிறப்பு அந்தஸ்தை பிப்ரவரி 16ல் இந்திய அரசு ரத்து செய்தது.

அதன் தொடர்ச்சியாகவே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அடிப்படை சுங்க வரி 200% ஆக உயர்த்தப்பட்டது. இந்த வரி உயர்வு நடவடிக்கையை பாகிஸ்தான் மீதான இந்தியாவின் வர்த்தகப் போர் என்ேற சொல்லலாம். இருநாடுகளுக்கு இடையில் வர்த்தக நல்லுறவை மேம்படுத்தும் நோக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டு உலக வர்த்தக சபை ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இருநாடுகளுக்கிடையில் ஏற்படுத்திக் கொடுத்தது.

ஆனால், 2016ல் நடைபெற்ற உரி தாக்குதலுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதாகப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தெரிவித்தது. புல்மாவா தாக்குதலுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தத்திலிருந்து இந்தியா வெளியேறியது. இந்த ஒப்பந்தப்படி இந்தியா - பாகிஸ்தான் இடையில் சர்க்கரை, சிமெண்ட், ரசாயனங்கள், காட்டன், காய்கறிகள், பழங்கள், உப்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தன. ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் இரு நாடுகள் இடையிலும் நடைபெற்றது.

நிலைமை இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய அரசின் அடுத்த வர்த்தக தாக்குதல் பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த எல்லை வர்த்தகம் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.
அதாவது ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் உரியை அடுத்த சாலாமாபாத் மற்றும் பூஞ்ச்சை அடுத்த சக்கன் டா- பாக் ஆகிய இரு இடங்களில் இந்தியா - பாகிஸ்தான் எல்லை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. வாரத்துக்கு 4 நாட்கள் பண்டமாற்று முறையிலும் வரியில்லா பண்டமாற்று முறையிலும் வர்த்தகம் நடைபெறும்.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் விசாரணையில் ‘இந்தியா - பாகிஸ்தான் எல்லை வர்த்தகம் வழியாக பாகிஸ்தானில் இருந்து போதை மருந்துகள், சட்டவிரோத ஆயுதங்கள், கள்ள நோட்டுகள், தீவிரவாதிகள் பயன்படுத்தும் கலிபோர்னியா பாதாம் பருப்பு உள்ளிட்ட சட்டவிரோதப் பொருட்கள் இந்தியாவுக்குள் கடத்தப்படுகின்றன’ என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்ஐஏ) தெரிவித்ததால் எல்லை வர்த்தகம் காலவரையின்றி தடை விதிக்கப்பட்டது.

இதனால் சுமார் 280 வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.கடந்த 2008 முதல் நடைபெற்று வரும் எல்லை வர்த்தகம் கடந்த 2017ம் ஆண்டு வரை ரூ.6,900 கோடி லாபத்தை எட்டியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பல கோடி ரூபாய் எல்லை வர்த்தகத்துக்கு மத்திய அரசு காலவரையின்றி தடை விதித்ததற்கு, ஜம்மு - காஷ்மீர் வணிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு எடுத்துள்ள வர்த்தகத் தாக்குதல், இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா... என்றால், இல்லை என்றே கூறலாம்.
பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் பொருளாதார நிலைமை ஸ்திரமாகவும், வளர்ச்சியடைந்து வருவதாகவும் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் உலகில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா திகழ்கிறது.

சர்வதேச அளவில் அவ்வப்போது ஏற்படும் பொருளாதாரச் சரிவின்போதும் இந்தியப் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை. பொருளாதார இழப்புகளை நீண்ட காலத்துக்குத் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், பாகிஸ்தானின் பொருளாதார நிலை அப்படியில்லை. கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால் இந்திய அரசுக்கு எதிரான எவ்வித நடவடிக்கை
களுக்கும் எதிர்விளைவுகளை ேயாசித்தே பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. அதில், கடந்தகால பிரதமர்களைவிட இன்றைய பிரதமர் இம்ரான்கான், இந்தியாவின் விஷயத்தை மாற்றுக் கண்ணோட்டத்தில் அணுகுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கடந்தகால வரலாற் றைப் பார்த்தால், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபின், இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே எல்லைத் தகராறு, காஷ்மீர் பிரச்னை, தண்ணீர்ப் பங்கீட்டுப் பிரச்னை, நிலப் பிரச்னை போன்ற காரணங்களுக்காகப் பலமுறை மோதியுள்ளன. 1947, 1965, 1971 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இருநாடுகளுக்கிடையே போர் நடந்தாலும், முடிவில் பாகிஸ்தானுக்குக் கிடைத்தது தோல்வி
களும், இழப்புகளும்தாம்.

‘பாகிஸ்தான் ராணுவத்தைத் தோற்கடித்து விட முடியும்’ என்ற நம்பிக்கை எப்போதுமே இந்திய ராணுவத்துக்கு உண்டு. அதனால்தான், இந்தியாவுடன் நேரடியாக மோதாமல் தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு, நிழல் யுத்தத்தை நடத்தி வருகிறது பாகிஸ்தான். ‘இருநாடுகளுக்கிடையே சுமுகமான உறவைப் பேண வேண்டுமானால் தீவிரவாத சித்தாந்தத்தை ஒதுக்கிவிட்டு வாருங்கள்’ என அழைப்பு விடுக்கிறது இந்தியா.

ஆனால், அதை செயல்படுத்த முடியாமல் பல நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறது பாகிஸ்தான். இருநாடுகளுக்கான உறவு வெறும் வர்த்தகத்தில் அடங்கிவிடுவது அல்ல; அது விசாலமானது. காலம் மனதை  விசாலமாக்க வேண்டும். மக்களும் அதைத்தான் விரும்புகின்றனர்.

1,209 இந்திய பொருட்களுக்கு தடை!

இந்தியா - பாகிஸ்தான் இடையே 3,700 கோடி டாலர் வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையில் நீடித்து வரும் அரசியல் பகைமை ஏற்பட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், தெற்காசிய அளவிலான வர்த்தக ஒப்பந்தங்களிலும் இதன் தாக்கம் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் இயல்பான வர்த்தக உறவில் சிக்கல் இருப்பதால், பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த சங்கிலித் தொடர் உத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து வாகா வழியாக 138 பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அனுமதிக்கிறது. இந்த வழியில் பொருட்களைக் கொண்டு செல்லும் டிரக்குகள் எல்லைக் கோடு வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அதன்பின் வேறு டிரக்குகளுக்கு பொருட்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இதனால் நேரமும், செலவும் அதிகரிக்கிறது.

தெற்காசிய வர்த்தகத்தில் பாகிஸ்தான் 82.1% பொருட்களை வர்த்தகக் கட்டுப்பாடுகளுடன் இறக்குமதி செய்கிறது. ஆனால், இந்தியா பொருட்களை இறக்குமதி செய்வதில் அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவிலிருந்து 1,209 பொருட்கள் இறக்குமதி செய்வதை பாகிஸ்தான் நீண்ட காலமாகவே தடை செய்துள்ளது.

- இவ்வாறு உலக வங்கி கடந்தாண்டு செப்டம்பரில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செ.அமிர்தலிங்கம்