பெருகும் மக்கள் தொகை…



திணறும் இந்தியா! அலறும் உலகம்!

நம் நாட்டின் தலையாய பிரச்னை மக்கள் தொகைதான். இதோ இந்தக் கட்டுரையைப் படித்து முடிப்பதற்குள்ளாக இங்கு இருபதாயிரம் குழந்தைகளுக்கு மேல் பிறந்திருப்பார்கள்! ஆம். ஒவ்வொரு விநாடியும் நம் நாட்டில் முப்பத்தி நான்குக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்து கொண்டிருக்கின்றன. சீனாவோடு ஒப்பிட்டால் இது இரண்டு மடங்கு வேகம்.

இப்படி அசுர வேகத்தில் குழந்தைகைளப் பெற்றுத் தள்ளாடிக் கொண்டிருப்பதால் பொருளாதார வளர்ச்சி தொடங்கி ஒவ்வொரு துறையிலும் நாம் தொடர்ந்து பின் தங்கியிருக்கிறோம். நாட்டின் நலன் கருதி உருவாக்கப்படும் எந்தத் திட்டத்தையும் மக்கள் தொகை வளர்ச்சியின் விகிதத்தைக் கணக்கிட்டே உருவாக்க வேண்டி இருப்பதால் ஒரு திட்டம் வெற்றி பெற கணக்கிடுவது என்பதே நிரந்தர சவாலாக மாறியுள்ளது.

1955ம் ஆண்டு நாற்பது கோடியாக இருந்த மக்கள் தொகை இன்று 136 கோடியே 68 லட்சமாக விண்ணைத் தொட்டு நிற்கிறது. ஒவ்வோர் ஆண்டும் இதன் வளர்ச்சி விகிதம் 1.2% எனப்பெருகிக்கொண்டிருக்கிறது. இந்த அபாயத்தை ஐநா சபையின் மக்கள் தொகை நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐநாவின் பாலியல் மற்றும் மக்கள் பெருக்க நல முகவாண்மையம் ‘நாடுகளின் உலக மக்கள் தொகை’ என்ற 2019ம் ஆண்டுக்கான அறிக்கையில் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 1994ல் 94 கோடியாக நாம் இருந்தபோது சீனா 123 கோடியாக இருந்தது. இன்று அவர்கள் 142 கோடி மட்டுமே உயர்ந்திருக்க நாமோ 136 கோடியைக் கடந்து அவர்களை நெருங்கியிருக்கிறோம்.

இந்த வளர்ச்சி விகிதம் மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் சமூகவியல் அறிஞர்கள். சீனா தன் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கியிருக்க நாமோ மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கிறோம். மறுபுறம் பொருளாதார முன்னேற்றத்தில் ஒப்பிடும்போது சீனாவின் வளர்ச்சியில் பாதிகூட இல்லை நாம்.

இத்தனைக்கும் கடந்த 1969ல் நமது இந்தியப் பெண்களின் தாய்மையுறும் விகிதம் நபர் ஒருவருக்கு ஐந்துக்கு மேல் இருந்தது. 1994ல் நான்காக இருந்த இது இப்போது இரண்டாகக் குறைந்துள்ளது. அப்படியிருந்தும் எகிறிக்கொண்டிருக்கிறது பிறப்பு விகிதம்.பிறப்பு விகிதம் அதிகரிப்பதைப் போலவே இறப்பு விகிதம் குறைந்து கொண்டிருப்பதும் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஒரு முக்கியமான காரணம். 1969ல் நாற்பத்தி ஏழாக இருந்த சராசரி இறப்பு வயது 1994ல் அறுபதாக உயர்ந்தது. இப்போது இது அறுபத்தொன்பதாக மேலும் வளர்ந்துள்ளது.

நமது வாழ்க்கைமுறை மாற்றம், மருத்துவ வசதிகள் பெருகியிருப்பது ஆகியவை மனித வாழ்வை நீட்டிப்பதில் கணிசமான வெற்றியை ஈட்டியிருப்பதால் மனிதனின் சராசரி ஆயுள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது நாளாக நாளாக மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இந்த ஆண்டுக்கான மக்கள் தொகை விகிதத்தைப் பார்க்கும்போது 0 - 14 மற்றும் 10 - 24 வயதுக்கு உட்பட்டவர்கள் சராசரியாக இருபத்தேழு சதவீதமாக உள்ளார்கள். 15 - 64 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் அறுபத்தேழு சதவீதமாக உள்ளார்கள். அறுபத்தைந்துக்கும் மேற்பட்ட வயதுடையோர் மொத்த மக்கள் தொகையில் வெறும் ஆறு சதவீதம் மட்டுமே.

பிரசவகால இறப்பு விகிதம் குறைந்து வருவதும் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு முக்கியக் காரணம். கடந்த 1994ம் வருடம் ஒரு லட்சம் பிரசவங்களில் 488 மரணங்கள் நிகழ்ந்தன. அது இப்போது நூற்று எழுபத்தி நான்காகக் குறைந்துள்ளது. உண்மையிலேயே இது பெருமைப்பட வேண்டிய விஷயம்தான்.
அதனால்தான் ஜெனீவாவில் உள்ள ஐநா மக்கள் தொகை நிதியத்தின் அதிகாரி மோனிக்கா ஃபெர்ரோ ‘மக்கள் தொகை பெருகினாலும் பிரசவ கால மரணங்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டியது. அதே சமயம் மக்கள் தொகை கட்டுப்பாட்டையும் நாடுகள் சிந்திக்க வேண்டும்’ என்கிறார்.

இந்த ஆண்டுக்கான ஐநாவின் நாடுகளின் மக்கள் தொகை அறிக்கையில் முதல் முறையாகப் பெண்களைப் பற்றி தனியாகச்சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மக்கள் தொகைப் பெருக்கத்தில் பெண்களின் பங்கு, பார்ட்னருடனான பாலியல் உறவு குறித்த அவர்களின் சுதந்திரத் தேர்வுக்கான வாய்ப்பு, கருத்தடை சாதனங்கள், மருத்துவ வசதி ஆகியவை பற்றி சொல்லப்பட்டுள்ளது.

பாலியல் உரிமை, உறவுகொள்வதற்கு மறுப்பதற்கான உரிமை, கருத்தடை சாதனத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை ஆகியவை பெண்களுக்கு கணிசமாக மறுக்கப்படுவது உலகம் முழுதும் உள்ளது. இதற்கு பெண்களுக்கு கல்வியறிவு வழங்கப்படாமல் இருப்பது ஒரு முக்கிய காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெண்கள் இன்னமும் பல பகுதிகளில் ஆண்களை நம்பி வாழ்பவர்களாக, சொந்தக் காலில் நிற்க வாய்ப்பற்றவர்களாக, பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதும் இதற்கு இன்னொரு காரணம். குழந்தைத் திருமணம், இளவயதிலேயே திருமணம் போன்றவை இன்றும் ஆரோக்கியமான பாலியல் மறு உற்பத்திக்குத் தடையாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

சிறு வயதில் திருமணமாகும் ஒரு சிறுமிக்கு கல்வி வலுக்கட்டாயமாக மறுக்கப்படுகிறது. இதனால் அவள் தனக்கான விஷயங்களைக் கேட்டுப் பெறுவதற்கும், உரையாடுவதற்கும் வாய்ப்பற்றவளாக இருக்கிறாள். இது அவள் செய்யும் தொழிலில் வழங்கப்படும் கூலியைக் கேட்டுப் பெறுவதில் தொடங்கி தனக்கான பாலியல் சுதந்திரத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது வரை தடையாக இருக்கிறது. கிராமங்களில் ஒடுக்கப்பட்ட சமூகங்களில் வறுமையான சமூகங்களில் இத்தகைய சூழல் உலகம் முழுதுமே இருக்கிறது.

உலக அளவில் இந்த அறிக்கையைப் பார்க்கும்போது ஒரு பெண்ணின் குழந்தைப் பேறு சராசரியாக இரண்டுக்கும் அதிகமாக இருந்தாலும் கடந்த காலங்களோடு ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. 1969ல் இது ஐந்துக்கும் மேலாக இருந்தது. தொடர்ச்சியான மக்கள் தொகைக் குறைப்பு பிரசாரங்களுக்கு கிடைத்த வெற்றிதான் இது என்றாலும் இன்னமும் விழிப்புணர்வு போதாது என்பதையே கள நிலவரம் காட்டுகிறது.

இப்போது நூற்று முப்பத்தாறு கோடியாக உள்ள மக்கள் தொகை இதே விகிதத்தில் வளர்ந்தால் எதிர்வரும் 2020ல் நூற்று முப்பத்தெட்டு கோடியாக இருக்கும். இரண்டு கோடிதானே என்று நினைக்க வேண்டாம். 2050ம் வருடத்தின்போது இது நூற்று அறுபத்தாறு கோடியாக எகிறியிருக்கும். அப்போது நாம் சீனாவை முந்தியடித்து உலக மக்கள் தொகை மிகுந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்போம்.

நம்முடைய பொருளாதாரமோ நினைத்துப்பார்க்க முடியாத பின்னடைவுக்கோ தள்ளாட்டத்துக்கோ போயிருக்கும். இன்று ஐநா உட்பட உலக நாடுகள் முழுதும் நம்மை வருத்தத்துடன் பார்ப்பது நம் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கண்டுதான். நம் நாட்டில் மக்கள் தொகை பெருகுவது உலகளவில் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தும்.ஏனெனில் இப்போது உலக மக்கள் தொகையில் நாம் மட்டுமே இருபத்தேழு சதவீதத்துக்கு மேல் இருக்கிறோம்!                

இளங்கோ கிருஷ்ணன்