தலபுராணம் -மெட்ராஸ் கிளப்!



‘‘மெட்ராஸுக்கு வரும் பயணிகள் அங்குள்ள ஹோட்டலைவிட மெட்ராஸ் கிளப்பில் வசதியாகத் தங்கிக் கொள்ளலாம். கவுரவ உறுப்பினராக மாதம் ஆறு ரூபாய் கட்டினால் போதும். அறை வாடகை நாளொன்றுக்கு ஒரு ரூபாய்தான்!’’
- 1879ம் வருடம் வெளிவந்த ‘Handbook of the Madras Presidency’ நூலில் மெட்ராஸ் கிளப் பற்றி இப்படி சிலாகித்துக் குறிப்பிடுகிறார் ஜான் முர்ரே!  

1832ம் வருடம் ஐரோப்பிய ஆண்களுக்காக மட்டுமே தோற்றுவிக்கப்பட்ட கிளப் இது. தவிர, கல்கத்தாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் இரண்டாவதாக உருவாக்கப்பட்ட பழமையான கிளப்பும் கூட. என்றாலும், அன்று கிளப்களின் ராஜாவாகத் திகழ்ந்தது மெட்ராஸ் கிளப்பே! இந்தியாவின் சிறந்த கிளப் என வெகுவாக வர்ணிக்கப்பட்டது.

இன்று சென்னையில் அடையாற்றின் ஆற்றுப்படுகையில் மரங்கள் சூழ ரம்மியமாகக் காட்சியளிக்கும் மெட்ராஸ் கிளப் ஆரம்பத்தில் எங்கிருந்தது தெரியுமா? அண்ணா சாலையில்! ஆம். இன்று எக்ஸ்பிரஸ் அவின்யூ மால் இருக்கும் இடத்தில் இருந்தது இந்தக் கிளப். 1809ம் வருடம் வெறும் மரங்களாக இருந்த இடத்தை ஜே.டி.வொயிட் என்பவர் அரசாங்கத்திடமிருந்து பெற்றார். அந்த இடத்தில் தன்னுடைய தோட்ட இல்லத்தை அழகாக அமைத்தார். இதனாலேயே அந்தப் பகுதி இன்றும் வொயிட்ஸ் ரோடு என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

பின்னர் அந்த வீடு வெப்ஸ்டர் என்பவருக்குக் கைமாறியது. இந்த வெப்ஸ்டரிடம் இருந்து வீட்டை 1832ம் வருடம் மே 15ம் தேதி கிளப் வாங்கியது. அதற்குமுன் கிளப்பின் முதல் கூட்டம் தலைமை நீதிபதி சர் ராபர்ட் கமின் தலைமையில் நடந்தது.இந்தக் கூட்டத்திலே அப்போது வெப்ஸ்டரின் தோட்ட வீடாக மாறியிருந்த இடத்தை வாங்கத் தீர்மானிக்கப்பட்டது. மொத்தம் ஏழு ஏக்கர். முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டது. இதனால், அதையொட்டிய சாலைக்கு கிளப் ஹவுஸ் ரோடு எனப் பெயர் வந்தது.

அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சர் ஹென்றி சேமியர், கிளப்பின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்தனர். இன்னும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கிளப்பிற்கு இடம் போதவில்லை.

இதனால், 1852ம் வருடம் மேற்குப் பக்கம் இருந்த நான்கு ஏக்கர் பரப்பளவு உள்ள வாலர்ஸ் தோட்டம் வாங்கப்பட்டது. அடுத்த வருடமே அருகிலிருந்த ெடவனிஷ் என்பவரின் தோட்டமும், பின்னர் அவரின் நான்கு ஏக்கர் இடமும் வாங்கப்பட்டது. இத்துடன் நிற்கவில்லை இடம் வாங்கும் படலம்.
அந்தப் பகுதியில், கவர்னரின் பாடிகாட் ஆக இருந்த கர்னல் ஆர்ச்சிபால்ட் பட்டுல்லாவின் இடத்தையும் வாங்கியது. இந்த இடம் ஹிக் என்பவருக்குச் சொந்தமாயிருந்தது.  அதை பட்டுல்லா 1822ம் வருடம் வாங்கியிருந்தார்.

இருந்தும் ஹிக் பங்களா என்றே அழைக்கப்பட்டு வந்தது. 1898ம் வருடம் பங்களாவையும் ஐந்து ஏக்கர் நிலத்தையும் பட்டுல்லாவிடம் இருந்து வாங்கியது கிளப். இப்படியாக, 1832 முதல் 1898ம் வருடம் வரை இருபது ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு கிளப் விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே 1865ல் மெட்ராஸ் வந்த கட்டட வடிவமைப்பாளர் ராபர்ட் சிஸ்ஹோம் கிளப்பின் வடிவமைப்பிற்குத் துணை நின்றார். பாந்தியன் பாணி முகப்புடன் கட்டடத்தைக் கட்டினார்.

உணவுக்கூடத்திற்கு, நூலகத்திற்கு, வெளிநபர்கள் தங்குவதற்கு, புகை பிடிப்பதற்கு எனப் பல்வேறு அறைகள் ேநர்த்தியாகக் கட்டப்பட்டன. பின்னர், பில்லியர்ட்ஸிற்கும், சீட்டாட்டத்திற்கும் அறைகள் அமைக்கப்பட்டன. தவிர இதில், ‘‘1855ம் வருடம் நீச்சல் குளம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அதுவே, மெட்ராஸின் முதல் நீச்சல்குளம். பிறகு, 1876ம் வருடம் இங்கே தென்னிந்தியாவின் முதல் டென்னிஸ் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது...’’ என வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா தன்னுடைய ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ நூலில் குறிப்பிடுகிறார்.

அன்று இந்தக் கிளப்பில் இந்தியர்களுக்கும், ஆங்கிலேயப் பெண்களுக்கும் உள்ளே நுழைய அனுமதி கிடையாது. ஐரோப்பிய ஆண்கள் மட்டுேம பொழுதுபோக்கலாம். 1898ம் வருடம் ‘ஹென் ஹவுஸ்’ என்ற கட்டடம் கட்டப்பட்டது. ஆங்கிலேயப் பெண்களுக்கு மெயின் கட்டடத்தினுள் நுழைய அனுமதி கிடையாது என்பதால் இந்தப் பகுதி உருவாக்கப்பட்டது.

இந்தக் கட்டடம், ஆங்கிலேயப் பெண்கள் தங்கள் கணவர்களுக்காகக் காத்திருக்கும் இடமானது. சில நாட்களில் கணவன், மனைவி இருவரும் சந்திக்கும் இடமாகவும் மாறியது. இதற்கிடையே 1890ம் வருடம் அடையாறு கிளப் உருவானது. அடையாற்றின் ஆற்றங்கரையில் இருந்த மௌப்ரேவின் தோட்ட வீடே அடையாறு கிளப்பாக செயல்பட்டது.

இந்தக் கிளப், அன்றைய மெட்ராஸ் கிளப்பின் நோக்கத்திற்கு முற்றிலும் மாறாக இந்தியர்களுக்கும், பெண்களுக்கும் இடம் அளித்தது.
1771ம் வருடம் அரசாங்கக் கணக்காளராக மெட்ராஸ் வந்த ஜார்ஜ்  மௌப்ரே அடையாற்றின் கரையில் 105 ஏக்கர் நிலத்தை 80 பகோடாக்களுக்கு வாடகைக்கு எடுத்தார். அங்கே தனக்கென அழகான தோட்ட வீட்டை அமைத்துக் கொண்டார். 1790களில் காணப்படும் ஆவணம் இதை உறுதி செய்வதாக ‘Vestiges of Old Madras-Vol3’ நூலில் கர்னல் லவ் கூறுகிறார்.

இந்த வீடு, ‘Moubray’s Cupola’ என அழைக்கப்பட்டது. Cupola என்றால் கூம்பு வடிவ விதானமாகும். நேர்த்தியான கூம்பு வடிவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட இந்தத் தோட்ட வீடு ஐரோப்பிய பாணி கட்டடக் கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது.‘‘இது மௌப்ரேவின் கூட்டாளியான கட்டடக்காரர் பால்பென்ஃபீல்டால் கட்டப்பட்டிருக்கலாம்...’’ என ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ நூலில் குறிப்பிடுகிறார் எஸ்.முத்தையா.

பின்னர், முதல் தலைமைக் கணக்காளராகப் பதவி உயர்வு பெற்ற மௌப்ரே, 1792ல் ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பிவிட்டார். 1798ல் ராயப்பேட்டையிலிருந்து மௌப்ரே தோட்டத்திற்குச் செல்லும் வண்டிப்பாதை மரங்களால் சூழப்பட்டு அழகுற விளங்கியது. இந்தச் சாலையைப் பற்றி அவ்வளவு அழகாக தன்னுடைய கட்டுரையில் விவரித்திருப்பார் தமிழறிஞர் திரு.வி.க. சமீபகாலம் வரை இந்தச் சாலை மௌப்ரேஸ் சாலை என்றே அழைக்கப்பட்டது. இப்போது டிடிகே சாலையாக மாறியிருக்கிறது.

பின்னர், இந்த இடம் 1810ம் வருடம் ஜான் டி மாண்டி என்ற வர்த்தகர் கைக்குச் சென்றது. இவர், 1821ம் ஆண்டு மரணமடைந்த போது வாரிசுகள் யாரும் இருக்கவில்லை. இதனால், டி மாண்டி இறக்கும் முன்பே தன் சொத்துகளை மயிலாப்பூர் கத்தோலிக்க மறைமாவட்டத்திற்கு அளித்தார்.

இந்தக் கத்தோலிக்க மறைமாவட்டத்திடம் இருந்த அந்தப் பரந்து விரிந்த சொத்துகளை 1890ல் குத்தகைக்கு எடுத்தது அடையாறு கிளப். இப்படியாக இரண்டு கிளப்களும் தனித்தனியாகச் செயல்பட்டு வந்தன.

தொடர்ந்து இரண்டாம் உலகப் போருக்குப் பின் இரண்டு கிளப்களிலும் பணப் பிரச்னையால் ெநருக்கடியான சூழல் உருவானது.இதனால், 1947ம் வருடம் மவுண்ட் ரோடு கிளப் ஹவுஸ் ஏரியாவில் 20 ஏக்கரில் ஜொலித்த மெட்ராஸ் கிளப், 13 லட்சம் ரூபாய்க்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் உரிமையாளர் ராம்நாத் கோயங்காவிடம் விற்கப்பட்டது.

அங்கிருந்து ெமட்ராஸ் கிளப், மவுண்ட் ரோட்டில் சர்ச் பார்க் பள்ளி எதிரிலிருந்த பொப்பிலி ராஜாவுக்குச் சொந்தமான பிரான்சன் பாக் என்ற பகுதிக்கு நகர்ந்தது. ஐந்து ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த இடம் இரண்டு லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டது.பிறகு, அது மறுசீரமைப்பு செய்யப்பட்டு 1948ம் வருடம் ஏப்ரல் மாதம் உறுப்பினர்களுக்குத் திறக்கப்பட்டது. மெட்ராஸ் கிளப்பின் இரண்டாம் வீடு இது.

1950களில் நிதிநிலைமை மோசமடைய, மீண்டும் இரண்டு கிளப்களும் செயல்பட ரொம்பவே சிரமப்பட்டன. மெட்ராஸ் கிளப்பில் இருந்தவர்கள், அடையாறு கிளப்பிலும் உறுப்பினர்களாக இருந்ததால் இரண்டிலும் அவர்களால் சந்தா செலுத்த முடியவில்லை.தொடர்ந்து ஏழு வருடங்கள் நடந்த விவாதத்திற்குப் பிறகு இரண்டு கிளப்களும் ஒன்றிணைவது என முடிவானது. 1963ம் வருடம் மெட்ராஸ் கிளப் பெயரில் இரண்டும் ஒரே குடையின் கீழ் வந்தன.

பிறகு, மௌப்ரேஸ் தோட்டத்தில் இருந்த Moubray’s Cupola உடன் சேர்த்து 12.7 ஏக்கர் இடம் கத்தோலிக்க மறைமாவட்டத்திடம் இருந்து சொந்தமாக வாங்கப்பட்டது. தற்போது இங்கிருந்தே மெட்ராஸ் கிளப் செயல்பட்டு வருகிறது.

இன்று பதினான்கு தங்கும் அறைகள், இரண்டு ரெஸ்டாரன்ட்கள், பேக்கரி, நூலகம், ஐந்து டென்னிஸ் கோர்ட்கள், நீண்ட நீச்சல் குளம், வாக்கிங், ஜாக்கிங் செல்லும் டிராக், 120 கார்கள் பார்க்கிங் செய்யும் வசதி, ஜிம், பில்லியர்ட்ஸ், ஸ்குவாஷ், பேட்மின்டன் கோர்ட்கள், சீட்டாட்ட அறை, குழந்தைகள் விளையாட்டு மைதானம் என சகல வசதிகளுடன் காட்சியளிக்கிறது.  

அதன் பழமையைத் தக்க வைத்துக்கொண்டது மட்டுமில்லாமல் 187 வருடங்களைக் கடந்தும் அதன் உறுப்பினர்களுக்கு தேவையான நவீன வசதிகளை வழங்கி வருகிறது மெட்ராஸ் கிளப்!  

பேராச்சி கண்ணன்

ராஜா