ஒவ்வொரு புத்தகமும் ஒரு மனுஷன்!



கம்பீரமாக அறிவிக்கிறார் சிறந்த வாசகரான ஸ்டண்ட் சில்வா

இயக்குநர்கள் லிங்குசாமி, விஜய் மில்டனைச் சந்திக்கும்போதெல்லாம் அவர்களின் தீராத படிப்பு ஆறுதலளிக்கும். ‘‘அட நீங்க ஒண்ணு, ஸ்டண்ட் சில்வா அவ்வளவு படிப்பார். ஏதோ ஃபைட் மாஸ்டர்னு அவரை லேசில நினைச்சிடக்கூடாது...’’ என்பார்கள். இதோ, ‘கூகை’ திரைப்பட இயக்கத்திற்குத் தமிழ் இலக்கியம் சார்ந்த முக்கிய புத்தகங்களை சில்வா பரிசளித்த செய்தி கொஞ்சமாய் வைரலாகி பரவியது. நமக்கு வியப்பு மேலிட சில்வாவிடமே சந்திப்பு நடந்தது. முரட்டு உயரமும், இறுகிய உடம்புமாக இருந்தவரிடமிருந்தது அழகிய மறு பக்கம்.

அவரவருக்கு ஒரு ரசனை, ஒரு தேடுதல் எப்பவும் இருக்கும். பிடிச்சதைப் பண்ற சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கு. நான் இங்கே சென்னைக்கு வந்ததெல்லாம் தனிக்கதை. தூத்துக்குடியிலிருந்து இங்கே பிழைக்க வந்தேன். ஹோட்டலில் வேலை பார்த்து, பேனர் கட்டி, போஸ்டர் ஒட்டியிருக்கேன். அப்புறம் டான்ஸரா வரணும்னு ஆசைப்பட்டேன். அப்புறம் திசை மாறி ஃபைட் மாஸ்டராகிட்டேன்.

பீட்டர் ஹெய்ன் மாஸ்டரிடம் மூணு வருஷம் அஸிட்டெண்ட்டா இருந்து, எழுபது படங்களுக்கு மேல் எல்லா மொழியிலும் வேலை பார்த்திருக்கேன். ஒரு நாள் மாஸ்டர், ‘உனக்குத் தனியா தொழில் செய்ற அளவுக்கு திறமை வந்திருச்சு, வெளியே போய் முயற்சி பண்ணு...’னு அனுப்பி வைச்சார். ஷங்கர் சார் என்னை அறிமுகப்படுத்தி பயணத்தை ஆரம்பிச்சு வைச்சார்.

என்னை படிப்புத்தான் வரைமுறைப்படுத்தியிருக்கு. முன்னாடியெல்லாம் பாட்டிகள் கதை சொன்னாங்க. ஆனால், இப்ப இருக்கிற பாட்டிகளுக்கு கதை தெரியாது. பள்ளிக்கூட புத்தகத்தில் மயிலிறகை வைச்சு குட்டி போடும்னு நினைச்ச காலத்திலேயே புத்தகங்கள் மீது எனக்கு ஆர்வம் வந்துருச்சு. ‘அம்புலி மாமா’வில் விக்ரமாதித்தன் சலிக்காமல் முருங்கை மரம் ஏறி வேதாளத்தை தோளில் சுமக்கும்போது சொல்லும் கதையெல்லாம் படிச்சுக்கிட்டுத்தான் வளர்ந்தேன்.

அப்புறம் ‘முத்து காமிக்ஸ்’ போட்ட ‘இரும்பு கை மாயாவி’ வரும் 2 புத்தகங்களும், கை மட்டுமே பறந்து வந்து சாகசம் செய்யும் காட்சிகளும்தான் எனக்கு படிப்பாக அமைந்துவிட்டது. 007 ‘துப்பறியும் தங்கத்தீவு’களில் நானும் அவரோடு போயிருக்கிறேன்.

இப்படிப்பட்ட அனுபவங்களையெல்லாம் இப்போதிருக்கிற குழந்தைகள் இழந்து வருவது வருத்தமாயிருக்கு. சேனல்களும் கம்ப்யூட்டரும் தரும் வேடிக்கைகளைப் பார்த்துவிட்டு இன்றைய குழந்தைகள், மாணவர்கள் புத்தங்களை இழந்து விடுவார்களோ என எனக்கு பயமாக இருக்கு.  

வீட்டு முற்றத்தில் பெய்கிற மழையில் கை நனைக்கிறது வேறே. தீம் பார்க்குல செயற்கை அருவியில் கை நனைக்கிறது வேறே. இதை இன்றைய தலைமுறையைப் புரிஞ்சுக்கணும் என்பது என் ஆசை.

நம்ம பிள்ளைகளுக்கு புழுதி வாசத்தையும், புத்தக வாசத்தையும் கண்டிப்பாக அறிமுகப்படுத்த வேண்டியது நம்மோட கடமை.முதலில் நாஞ்சில் பி.டி.சாமியில்தான் ஆரம்பிச்சேன். அப்புறம் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, பாலகுமாரன்னு அடுத்தடுத்து போனது. பாலகுமாரன் என்னை ரொம்பவும் கட்டுப்படுத்தினார்.

எனக்கு இவங்க எல்லோரையும் நேரில் பார்க்கணும்னு ஆசையாக யிருக்கும். ஆனால், சந்திப்பு நல்லபடியாக அமையணும்னு பயம். யாரையும் போய்ப் பார்த்திட்டு ‘எழுத்தே தேவலை’னு இருந்திருக்கலாம்னு  நினைச்சு யாரையும் பார்க்கப் போகலை. அதை விடுங்க, முரட்டு ஆளாக தோற்றமளிக்கிற என்னைக்கூட பிடிக்காமல் போகலாம்!

ரா.கி.ரங்கராஜன் என்னை ரொம்ப கவர்ந்தார். அவரோட ‘பட்டாம்பூச்சி’யெல்லாம் மொழிபெயர்ப்பு மாதிரி கரடுமுரடா இருக்காது. படிக்கும்போது அப்படியே வழுக்கிட்டுப் போகும். அந்த மாதிரி சாகசம் எல்லாம் ஒரு ஃபைட் மாஸ்டரா எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும். அதே மாதிரி ‘பொன்னியின் செல்வன்’ யுத்தக்காட்சிகள் எல்லாம் வீரதீரமாக இருக்கும். ‘கடல்புறா’ கொள்ளைக்காட்சிகள் எல்லாம் எத்தனை தடவை படிச்சாலும் ‘துறுதுறு’னு இருக்கும்.

எனக்கு வரலாறு பிடிக்கும். நமக்கு அப்பாவிற்கு அப்பா பேரைத்தவிர யாரையும் தெரியலை. நம்மோட மூதாதையர்கள் யாரு யாருன்னு புகுந்து போனால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். பாலகுமாரன் சோழர்களைப் பற்றி எழுதின ‘உடையார்’ நாவலைத் தொடர்ந்து படிச்சிருக்கேன்.

படிப்பது விட்டேத்தியாக இருந்த என்னைப் பக்குவப்படுத்தியிருக்கு. பிறந்ததற்கு அர்த்தம் புரிய வைச்சிருக்கு. ஒருத்தன் பசியோடு நம்மை கடந்து போனால் கூப்பிட்டு விசாரிக்க வைச்சிருக்கு. சோர்வா, வருத்தமா, கோபமா இருந்தால் ஒருத்தனை உட்கார வைச்சு சரி பண்ண வைச்சிருக்கு.

ஒவ்வொரு புத்தகமும் ஒரு மனுஷன். 1000 புத்தகம் படிச்சா ஆயிரம் மனுஷனைத் தெரியும்னு அர்த்தம். சுஜாதா எதிர்காலம் பற்றி சொன்னதெல்லாம் படிப்பேன். அறிவியலை தெரியாத எனக்கு கூட ஊசி மருந்து ஏத்துற மாதிரி எழுதுவார்.எனக்கென்னவோ இந்த  ஸ்கூல் வாத்தியார்கள் நிறைய படிக்கணும்னு தோணுது. அவங்ககிட்டேதான் நம்ம பிள்ளைங்க பாதி நாளைக்கு மேல இருக்கு.

இப்ப நிறைய வீடுகளில் புத்தக அலமாரியே இல்லை. இன்னிக்கு மாதச் சம்பளமும், இதர வசதிகளும் பெறும் நடுத்தர குடும்பங்கள் படிப்பால் அந்த நிலையை அடைந்தவர்கள்தான்.

பூர்வீக சொத்து களால் அல்ல! படிப்பால் வசதியை அடைந்துவிட்டு, படிக்கும் பழக்கத்தை முதல் வேலையாக மூட்டை கட்டி பரணில் போட்டது ஏன்? புத்தகங்களை மட்டும்தான் இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ள முடியும். நீங்க பார்த்த சினிமா, சாப்பிட்ட சுவையான உணவு இவற்றையெல்லாம் இன்னொருவரிடம் சொல்லத்தான் முடியும்.

என்னை மாதிரி முரட்டு ஆட்களையே புத்தகம் மாத்தி போட்டிருக்கு. பிள்ளைங்கிட்டே இருந்து செல்போனை பிடுங்கிப்போட்டுவிட்டு, புத்தகம் கையில கொடுக்குற காலம் வரணும். நானும் நல்ல புத்தகம் படிக்கிறதோடு, கேட்டவங்களுக்கும் வாங்கிக் கொடுப்பேன். பசி, தூக்கம், பணம் மாதிரி புத்தகங்களைத் தேடுறதும் கட்டாயமாகணும்.

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்