ஆடை வாங்கவே சிரமப்பட்டவர்தான் இன்று இந்தியாவின் டாப் மோஸ்ட் காஸ்ட்யூம் டிசைனர்!



ஃபேஷன் படிப்பில் சேர விண்ணப்பம் வாங்கவே பணம் இல்லை. வீட்டில் இருந்த தனது புத்தகங்களை விற்றுத்தான் ஃபேஷன் கல்லூரியில் விண்ணப்பம் வாங்கினார்.
அப்படிப்பட்டவர் இன்று வடிவமைக்கும் உடைகளை வாங்க வேண்டுமென்றால் சராசரியாக ஒரு வீட்டில் பணிபுரியும் மூவர், தங்கள் ஒரு மாத சம்பளத்தை அப்படியே தூக்கிக் கொடுக்க வேண்டும்!  அதுவும் மேல்தட்டு நடுத்தரக் குடும்பத்தின் வருமானமான ரூ.25,000 - ரூ.30,000 வரை இருந்தால்தான் ஒரு சாதாரண புடவையே வாங்க முடியும்!

பாலிவுட் நடிகர்களின் ஆஸ்தான டிசைனர் இவர்தான். இந்தியாவில் எந்த மொழி டாப் நடிகர் / நடிகைகள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாலும் மண்டபத்தை புக் செய்வதற்கு முன் இவரைத்தான் புக் செய்கிறார்கள்!சமீபத்தில் கோலாகலமாக திருமணம் செய்துகொண்ட ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் ஜொலித்ததும் இவரது ஆடை வடிவமைப்புடன்தான்! ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய் முதல், நம்ம ஊர் சமந்தா வரை என இவரது டிசைனுக்கு அடிமை.

இவ்வளவு பெருமைக்கும் சொந்தக்காரர், சப்யாசச்சி. கொல்கத்தாவிலுள்ள பெங்காலி குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர் சப்யாசச்சி முகர்ஜி. ஒரே தங்கை இப்போது இவரது பிசினசை பார்த்துக்கொண்டிருக்கிறார். இதெல்லாம் இன்றைய நிலை. அன்று? வறுமைதான்.

திடீரென்று ஒருநாள் அப்பா சுகுமார் முகர்ஜிக்கு வேலை பறிபோனது. அரசு கல்லூரியில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வந்த அம்மா சொந்தியா முகர்ஜியின் வருமானத்தில்தான் மொத்தக் குடும்பமும் ஒரு வேளை பசியாறியது. உடுத்த சரியான ஆடைகளின்றி பல வருடங்கள் மொத்தக் குடும்பமும் திண்டாடியிருக்கிறது!  

இந்த சூழலில்தான் சப்யாசச்சி ஃபேஷன் கல்லூரியில் சேர்ந்தார். பகுதி நேரமாக வேலை பார்த்துக்கொண்டே 1999ல் பட்டம் பெற்றார். 2001ல் இவர் செய்த புராஜெக்ட்டுக்கு ஃபெமினா பிரிட்டிஷ் கவுன்சில் சார்பாக தேசிய அளவில் சிறந்த இளம் டிசைனருக்கான விருது கிடைத்தது. இதன் மூலம் உலகப் புகழ்பெற்ற லண்டன் டிசைனர் ஜியார்ஜினா வோன் எட்ஸ்டார்டிடம் பயிற்சியாளராக சேர்ந்தார்.

அன்று தொடங்கிய முன்னேற்றம் இன்றுவரை நான் ஸ்டாப்பாக கிராஃபில்ஏறியபடி இருக்கிறது. கலிபோர்னியா, அட்லாண்டா, லண்டன், மற்றும் துபாயில் பிரமாண்டமான ஷோரூம்ஸ் இவருக்கு இப்போது இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இவரது அயராத உழைப்பும் நாள்தோறும் கூர்மையடையும் கிரியேடிவ் சென்ஸும். அதுமட்டுமா இத்தாலியில் வருடா வருடம் நடக்கும் உலகப் புகழ் மிலன் ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்ட ஒரே இந்திய டிசைனர் என்ற பெருமையும் சப்யாசச்சிக்கு உண்டு.

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பிளாக்’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர், ‘பாபுல்’, ‘ராவண்’, ‘குஸாரிஷ்’, ‘பா’, ‘இங்லீஷ் விங்லீஷ்’, ‘நோ ஒன் கில்ட் ஜெஸிகா’ உட்பட பல படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணிபுரிந்திருக்கிறார்.என்றாலும் நடிகர்களின் ஃபேஷன் டிசைனராக இருப்பதே சப்யாசச்சிக்குப் பிடித்திருக்கிறது. வித்யாபாலனின் திருமணத்துக்கு இவர் கொடுத்த 18 வகை பட்டு கைத்தறி புடவைகள் உலகின் கவனத்தை ஈர்த்தன.

சப்யாசச்சி டிசைன் செய்த சாதாரண பெல்டின் விலை என்ன தெரியுமா..? ரூ.10 ஆயிரம்! அதனால்தான் -
‘அனுஷ்கா (அ) விராட்?
தீபிகா (அ) ரன்வீர்?
பிரியங்கா (அ) நிக்?
யார் இவர்களில் மகிழ்ச்சியானவர்?
வேறு யார்... இவர்களுக்கெல்லாம் திருமண உடைகளை டிசைன் செய்து கொடுத்த சப்யாசச்சிதான்! இதில் கிடைத்த வருமானத்தில் இவர் கேலக்ஸி டூரே போகலாம்..!’ என வாட்ஸ் அப்பில் சற்றே பொறாமையுடன் கலாய்க்கிறார்கள்!
                     
ஷாலினி நியூட்டன்