எம்ஜிஆர்Vs சந்திரபாபு



மாடி வீட்டு ஏழை

போஸ்ட் மார்ட்டம்-1


இன்றுவரை மர்மமாக இருக்கும் பல விஷயங்களில் சந்திரபாபு இயக்கத்தில் எம்ஜிஆர் நடிப்பதாக இருந்த ‘மாடி வீட்டு ஏழை’ திரைப்படமும் ஒன்று. பூஜையும் போடப்பட்டு சில நாட்கள் ஷூட்டிங்கும் நடந்த நிலையில் ஏன் அந்தப் படம் டேக் ஆஃப் ஆகவில்லை? கோடீஸ்வரராக இருந்த சந்திரபாபு எதனால் வறுமைக்குத் தள்ளப்பட்டார்..? விடை தெரியாத இக்கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சியே இந்த போஸ்ட்மார்ட்டம்...

அது ஒரு முகூர்த்த நாள். காலை ஆறு மணி முதலே பரணி ஸ்டூடியோ பரபரப்பாக இருந்தது. திரையுலகப் பிரமுகர்கள் ஒவ்வொருவராக வந்தபடி இருந்தார்கள்.நடிகை பானுமதிக்குச் சொந்தமான ஸ்டூடியோ. என்றாலும் தயாரிப்பாளரும் கவிஞர் கண்ணதாசனின் மூத்த சகோதரருமான ஏ.எல். சீனிவாசன் அதை குத்தகைக்கு எடுத்திருந்தார்.எனவேதான் அதிகளவு பதற்றத்துடனும் காணப்பட்டார்.

இத்துணைக்கும் இது இவர் தயாரிப்பில் உருவாகும் படத்துக்கான பூஜை அல்ல. நியாயமாகப் பார்த்தால் ஹாய் ஆக தன் அறையில் அமர்ந்தபடி வேடிக்கை பார்க்க வேண்டும். அவ்வப்போது வெளியே வந்து முக்கிய பிரமுகர்களுக்கு கை குலுக்க வேண்டும். புன்னகையைச் சிந்த வேண்டும். ஆனால், அப்படி இருக்க முடியவில்லை.

காரணம், இவரது மனம் கவர்ந்த நடிகரான சந்திரபாபு முதல் முறையாக எழுதி, இயக்கும் படத்தின் பூஜை அது.

சும்மாவா?1944ல் சென்னையில் காலடி எடுத்து வைத்து, 47ல் ‘தன அமராவதி’யில் நடிகராக அறிமுகமாகி, 59ல் தனது நகைச்சுவை இயக்கத்தால் ‘சகோதரி’க்கு உயிர் கொடுத்து, 60ல் வெளியான ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தில் ஹீரோவுக்கு சமமான அந்தஸ்தைப் பெற்று...சிறுச் சிறுக வளர்ந்து தனி ஆளுமையாக மாறியிருந்த சந்திரபாபு முதல் முதலாக எழுதி, இயக்கும் படமல்லவா அது?

எனவேதான் இந்தப் பரபரப்பு. படபடப்பு. பம்பரம் போன்ற சுழற்சி. வெற்றி பெற வேண்டும். இயக்குநராகவும் சந்திரபாபு ெஜயிக்க வேண்டும்.நேரம் ஊர்ந்து செல்லவில்லை. பரபரவென ஓடிக் கொண்டிருந்தது. ஏழு மணிக்கு பூஜை. கடிகார முள்ளோ ஏழரையைக் கடந்து எட்டு மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது.இன்னமும் ஹீரோ வரவில்லை.

சேரில் அமர்ந்திருந்தவர்கள் அவ்வப்போது திரும்பி சந்திரபாபுவைப் பார்த்தார்கள். கும்பல் கும்பலாக நின்றிருந்தவர்களோ பார்வையை விலக்காமல் பாபுவையே விழுங்கிக் கொண்டிருந்தார்கள்.ஒருவேளை ஹீரோவின் ஒப்புதல் இல்லாமலேயே படத்துக்கு பூஜை போடுகிறாரா?

கேள்விகள் முளைத்தன. வேர்விட்டு படர்ந்து விருட்சமாகின.ஆனால், வாய்விட்டுக் கேட்கும் தைரியம் மட்டும் அங்கிருந்த யாருக்கும் வரவில்லை.
ஒருவரைத் தவிர.

‘‘சின்னவர் வருவார் பாபு...’’ காதருகில் ஏ.எல்.சீனிவாசன் கிசுகிசுத்தார்.சந்திரபாபு புன்னகைத்தார். ‘‘மிஸ்டர் எம்.ஜி.ராமச்சந்திரனைத் தானே சொல்றீங்க?’தூக்கி வாரிப் போட்டது. ‘‘சத்தமா சொல்லாதயா...’’ ஏ.எல்.சீனிவாசன் படபடத்தார். ‘‘Why? அதுதானே அவர் பேரு? ஏன் சின்னவர்னு சொல்லணும்...?’’ சந்திரபாபு தோளைக் குலுக்கினார்.அவருக்கு எந்த பதிலும் தராமல் பெருமூச்சுடன் ஏ.எல்.எஸ். என்கிற ஏ.எல்.சீனிவாசன் நகர்ந்தார்.

இப்படி ஒளிவு மறைவில்லாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவதுதான் சந்திரபாபுவின் குணம்; அடையாளம். எந்த சூழ்நிலையிலும் தன் போக்கை அவர் மாற்றிக் கொண்டதில்லை.

மாற்றிக் கொள்ள முற்பட்டதுமில்லை.இந்த ப்ராஜெக்ட் டேக் ஆஃப் ஆகும் நிலையிலும் அப்படித்தான் நடந்து கொண்டார்.‘மர்ம வீரன்’ (1936), ‘அன்பு எங்கே’ ஆகிய படங்களைத் தயாரித்தவரும், பிரபல விநியோகஸ்தருமான வி.ஜி. என்கிற வி.கோவிந்தராஜும் சந்திரபாபுவும் நல்ல நண்பர்கள். அடிக்கடி தன் தோழனைப் பார்க்க சந்திரபாபு செல்வார்.

அப்படி 1961ம் ஆண்டில் ஒருநாள் சென்றார். அடுத்து ஒரு படத்தை தயாரிக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாகவும், அதை சந்திரபாபுேவ இயக்க வேண்டும் என்றும் வி.ஜி. கேட்டுக் கொண்டார்.சிம் கார்ட் நழுவி செல்போனில் விழுந்ததுபோல் சந்திரபாபு துள்ளிக் குதித்தார். ஏனெனில் டைரக்டராகும் கனவு அவருக்குள் இருந்தது. அதற்காகவே ஒரு கதையை உருவாக்கியிருந்தார். அதை அப்படியே தன் நண்பரான வி.ஜி.யிடம் சொன்னார்.

அப்போது அந்த இடத்தில் கே.டி. சுப்பையாவும் இருந்தார். இவரும் பிரபலமான விநியோகஸ்தர்தான்.சந்திரபாபு சொன்ன கதை இவரையும் கவர்ந்தது. தயாரிப்பில் பங்குதாரராக, தானும் இணைந்துகொள்வதாகச்  சொன்னவர் அதற்காக ஒரு நிபந்தனையையும் விதித்தார்.மார்க்கெட் வேல்யூ நன்றாக இருப்பதால் கதாநாயகனாக எம்ஜிஆர் நடிக்க வேண்டும்! ‘‘நோ ப்ராப்ளம்...’’ என்று வழக்கம் போல் தன் தோளைகக் குலுக்கினார் சந்திரபாபு.

பிறகென்ன... மூவரும் தோட்டத்துக்குச் சென்று எம்ஜிஆரைச் சந்தித்தனர். விருந்தோம்பலில் எந்தக் குறையையும் ‘சின்னவர்’ வைக்கவில்லை.விஷயத்தைச் சொன்னார்கள்.மகிழ்ந்த எம்ஜிஆர் மறுநாள் மாலை கதை கேட்பதாகச் சொன்னார்.அதன்படி குறித்த நேரத்துக்கு தனியாக சந்திரபாபுவும் சென்றார். திரையுலக விஷயங்களை இருவரும் பேசி மகிழ்ந்தார்கள்.அப்போதுதான் எம்ஜிஆர் அந்த விஷயத்தைக் ேகட்டார்.

‘‘ஒரு பத்திரிகைல என்னைப் பத்தி அவதூறா எழுதியிருந்தீங்க இல்லையா?’’
சட்டென பல விநாடிகள் அமைதியாக இருந்த சந்திரபாபு, ‘‘உங்களைப் புண்படுத்தணும்னு நான் நினைச்சி அப்படி எழுதலை. அதையும் மீறி நான் எழுதினது உங்களைக் காயப்படுத்தியிருந்தா அதுக்காக வருத்தப்படறேன்... ரியலி சாரி...’’ என வருத்தம் தெரிவித்தார்.‘‘அதெல்லாம் ஒண்ணுமில்ல...’’ புன்னகைத்த எம்ஜிஆர், ‘‘கதையைச் சொல்லுங்க...’’ என்றார்.

மகிழ்ச்சியுடன் சந்திரபாபுவும் சொன்னார். ம்ஹும். ஒரு வரியில் அல்ல. ஷாட் பை ஷாட் ஆக பாடலுக்கான சூழலுடன் முழுத் திரைக்கதையாக! கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம்!அசையாமல் பொறுமையாகக்  கேட்டார் எம்ஜிஆர். ‘‘நல்லா இருக்கு பாபு... எனக்கு பிடிச்சிருக்கு... சரி. படத்துக்கு என்ன பேரு..?’’சந்திரபாபுவுக்கு மகிழ்ச்சி. ‘‘மாடி வீட்டு ஏழை...’’‘‘பொருத்தமான தலைப்பு...’’ உதட்டோரம் புன்னகைத்த
எம்ஜிஆர், ‘‘எனக்கு நீங்க ரெண்டு சத்தியம் பண்ணித் தரணும்...’’ என்றார்.

‘‘என்ன?’’
‘‘ஒண்ணு, இந்தக் கதையை யார்கிட்டயும் நீங்க சொல்லக் கூடாது...’’‘‘டன்...’’ சந்திரபாபுவின் கண்கள் பிரகாசமடைந்தன.‘‘அடுத்தது, பொறுமையா இருக்கணும்...’’ சந்திரபாபுவின் புருவங்கள் சுருங்கின. ‘‘அது என் இயல்புக்கு சரிப்படாது. எதுக்கும் எல்லை உண்டுன்னு நினைக்கிறவன் நான்...’’

எம்ஜிஆர் எதுவும் பேசாமல் படங்களில் தனது டிரேட் மார்க் ஆக இருக்கும் செயலைச் செய்தார். அதாவது தன் நாசியைச் சுண்டினார். சந்திரபாபுவுக்கு என்ன தோன்றியதோ... ‘‘உங்களுக்காக முயற்சிக்கிறேன்...’’ என்றார்.

அடுத்து சம்பளம் பேசப்பட்டது. ஆறு இலக்கங்கள் கொண்ட தொகையை எம்ஜிஆர் கேட்டார்.எதுவும் பேசாமல் சந்திரபாபு ஒப்புக் கொண்டார்.படப்பிடிப்புக்கு முன் ரூ.25 ஆயிரம் அட்வான்ஸ்! பூஜைக்கு முன் கொடுப்பதாக வாக்கு கொடுத்தார். கால்ஷீட்?இரண்டு நாட்களை எம்ஜிஆர் ஒதுக்கிக் கொடுத்தார். பூஜை அன்றும் அதற்கு மறுநாளும். மற்றவற்றை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.சந்திரபாபு இதை ஏற்றார்.

விஷயத்தை அறிந்த கோவிந்தராஜும், சுப்பையாவும் மகிழ்ந்தார்கள். அத்துடன் ஒரு திட்டத்தையும் முன்வைத்தார்கள்.
‘‘மூணு பேருமா சேர்ந்து படத்தைத் தயாரிக்கலாம்...’’
சந்திரபாபுவுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘‘எப்படி?’’
‘‘நாங்க ரெண்டு பேரும் பணம் போடறோம்...’’
‘‘ம்...’’

‘‘நீங்க நடிப்பு, கதை, திரைக்கதை, டைரக்‌ஷனைப் பார்த்துக்குங்க...’’
‘‘சரி...’’‘‘ஆனா, அதுக்கு சம்பளமா ஒரு தொகையை நிர்ணயிக்க வேண்டாம். பதிலா லாபத்துல ஒரு பங்கை எடுத்துக்குங்க...’’சந்திரபாபு அமைதியாக வி.ஜி.யைப் பார்த்தார்.நெளிந்த கோவிந்தராஜு, ‘‘இது சுப்பையாவோட யோசனை....’’ என்று இழுத்தார்.

எதுவும் சொல்லாமல் கண்களை மூடி சில நிமிடங்கள் பாபு யோசித்தார். ‘சகோதரி’ மூலம் காஸ்ட்லியான நடிகராக அவர் மாறியிருந்தார். ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தில் சிவாஜியைவிட அதிக சம்பளம் வாங்கியிருந்தார்!

அதாவது அன்றைய முன்னணி நடிகர்களைவிட ஒருபடி உயரே இருந்தார். கதாநாயகர்களைவிட விநியோகஸ்தர்கள் மத்தியில் முக்கியமானவராகக் கருதப்பட்டார்.இந்நிலையில் சம்பளம் வாங்காமல் இப்படியொரு விஷப் பரீட்சை தேவையா?யெஸ். தேவைதான்.

இயக்குநராகவும் மாறுகிறோமே...‘‘நோ ப்ராப்ளம்...’’ வழக்கம்போல் தோளைக் குலுக்கினார்.தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘ஜூபிலி ஆர்ட்ஸ்’ எனப் பெயரிடப்பட்டது.அன்றைய மவுபரீஸ் ரோட்டில், நாரதகான சபாவுக்கு எதிரில், சற்றே தள்ளி, 5ம் நம்பர் விலாசம் கொண்ட கட்டடத்தின் மாடியில் அலுவலகத்தைத் திறந்தார்கள்.வசனம் எழுதும் பொறுப்பு, எம்ஜிஆருக்குப் பிடித்த ஆரூர்தாஸிடமே ஒப்படைக்கப்பட்டது.

கதாநாயகி?

சாவித்திரி. ‘மகாதேவி’க்குப் பிறகு இருவரும் இணையும் படம் என்பதால் விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏக வரவேற்பு.கே.பாலாஜி, எஸ்.வி.ரங்காராவ், சோ, டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா, ஜி.சகுந்தலா, மணிமாலா ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் நடிக்க கமிட் ஆனார்கள். பாடல்கள் கண்ணதாசன். இசை எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி.பூஜைக்கு நாள் குறித்தபோது -முதல் இடி இறங்கியது.

அட்வான்ஸ் தொகையான ரூ.25 ஆயிரம்!
அதைக் கொடுக்கும் நிலையில் வி.கோவிந்தராஜும் சுப்பையாவும் இல்லை. இருவருமே கையை விரித்துவிட்டார்கள்.திகைத்த சந்திரபாபு அதைப் புரட்ட பட்ட பாடு இருக்கிறதே...

(7 நாட்கள் காத்திருக்கவும்)

கே.என். சிவராமன்